சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9 March 2013

எங்களால் முடிந்தது..!

லயோலா மாணவர்களைப்பற்றியோ அவர்களின் போராட்டம் பற்றியோ நான் பேசப்போவதில்லை ஆனால் எங்களைப்பற்றி பேசியே ஆகவேண்டும். நான் ஒரு வெத்துவேட்டு தான். இருப்பினும், ஒரு எட்டு பேரின் குழு ஒன்றை நிறுவியவன் என்ற பெயர் எனக்கு உண்டு. என் பெயர் நஸ்ருதீன் ஷா. இயந்திரமின்னணுவியல் பட்டதாரி.

எட்டு பேர் கொண்ட குழு - சமூக அக்கறை கொண்டவர்கள் என எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக்கொள்வோம். ‘தானே’ புயல் நிவாரணத்திற்காக ஒரு வாரகாலமாக இருந்த வேலையெல்லாம் விட்டு, அலைந்து திரிந்து எங்கள் கல்லூரியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி அனுப்பி வைத்தோம். இதுவே எங்கள் முதல் களப்பணி.

இதைச்செய்த எட்டுபேரும் இணைந்து ஒரு குழுவாக செயல் படத்தொடங்கினோம்.அப்படி உருவானதுதான் ”தமிழ்த் தோழர்கள் தன்னார்வக்குழு" இது நிறுவப்பட்டபோது (ஒன்றரை ஆன்டுகளுக்கு முன்) நாங்கள் இறுதி ஆண்டு மாணவர்கள். தானே நிவாரணத்திற்குப் பின் கூடங்குள போராட்டதிற்காக விழிப்புணர்வு நோட்டீஸை ஆயிரம் A4 தாளில் ப்ரிண்ட்-அவுட் எடுத்து ஊர் முழுவதும் உள்ள கடைகளில் ஒட்டினோம், இணைய பிரச்சாரம் - கருத்தரங்கம் என பலவும் நடத்தினோம். யாரும் கவணிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

சாதி மறுப்புக்காக பெரியார் திராவிட கழக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் பேசி, அங்கு இருந்தவர்களிடம் பல கருத்துக்களைப்பெற்று அதை பிரச்சாரம் செய்தோம். எதுவுமே நுழைய முடியாத எங்கள் இஞ்சினியரிங் வகுப்புகளுக்குள் சாதி மறுப்பு போன்ற புரட்சி விதைகளை விதைத்தோம்.

கடைசியாக ஈழத்தமிழர்களுக்காக ஈரோட்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டோம்.

இத்தனையும் பெருமை பீற்றிக்கொள்ளச்சொல்லவில்லை.
இத்தனையும் செய்த நாங்கள் கல்லூரிக்காலம் முடிந்த பின்பு சிதறினோம். எங்களுக்கு இணையத்தை தவிற வேறெதுவும் இணைந்து செயல்பட சாத்தியப்படவில்லை. பெருங்கோபம் இருந்தாலும் இணையத்தில் பத்தோடு பதினொன்றாகவே இருந்தது. அது பலரைச்சென்றடைய வேண்டுமானால் ஒன்று கேளிக்கையாக இருக்கவேண்டியிருந்தது அல்லது நாங்கள் பிரபலமாக இருக்கவேண்டியிருந்தது. இரண்டுமே எங்களிடம் இல்லை! எங்களுக்குப்பிறகு எங்கள் கல்லூரியில் இதைச்செய்ய யாருமில்லை. இப்படியொரு குழுவை உருவாக்காதது எங்கள் தவறு.

இன்று ஆளுக்கு ஒரு மூலையில் இருக்கிறோம். உடைந்து போயிருந்த எங்கள் குழு மீண்டும் ஒன்று சேரவே இல்லை. ஆரம்பகட்டமாக இருந்த எங்கள் முயற்சியெல்லாம் காற்றோடு காற்றாகிவிட்டது.

இந்த லயோலா மாணவர்களின் போராட்டம் அவ்வாறு எளிதில் முடிந்து விடக்கூடாது என்று ஆதரவு பெருகுவது கண்டு மெய்சிலிர்க்கிறோம். இந்த தொடக்கத்தை ஒரு பெரிய பலமாக ஆக்க வேண்டும் இல்லையெனில் இதுவும் சிதறிவிடக்கூடும்.ஆயிரம் சொல்லைவிட ஒரு செயல் சிறந்தது! நம்மால் முடிந்தவரை ஆதரவு தருவோம். வாழ்க தமிழ்.

எட்டில் ஒருவர் டெல்லியில் மனித உரிமைக்கல்வி பயில்கிறார். இன்னும் 5 பேர் வேறு வேலையில் இருக்கின்றனர் - ஒருவர் சென்னையில் படிக்கிறார்  - வேலை வெட்டி இல்லாத நான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்!

ஆதரவு தாருங்கள் - ஊக்கம் தாருங்கள் - மாணவ சக்தி வீண்போகக்கூடாது.