சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

15 September 2015

[எனது சென்னை] - நினைவஞ்சலி

அதைப்பேலஸ்’ என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். இரண்டாவது மாடியில் பத்துக்குப்பத்து ஹால் ஒன்று. அட்டாச்ட் பாத்ரூமுடன் பத்துக்கு எட்டில் இரண்டு அறைகள். ஒரு குட்டிச் சமயலறை. ஒரு பால்கனி.

ஆனாலும் எங்களுக்கு அது மாளிகைதான். அதனாலே அதை பழவந்தாங்கல் பேலஸ் என்றே சொல்வோம். நாங்கள் எட்டு பேர். நான், நண்பன், எனது கார்டியன் என்று நான் அழைக்கும் கார்த்தி அண்ணனும் ஹாலில். அவ்வப்போதுடெவலப்பிங் லெஜண்ட்” முரளியும். தொழிலதிபர் முருகேஷ் மற்றும் வளரும் தொழிலதிபர் திருமணிராஜா ஒரு அறையில். எங்கள் அறைக் குடும்பத் தலைவரும் என் அண்ணனும் இன்னொரு அறையில். இந்தக் கணக்கு தூங்குவதற்கு மட்டும்தான்.

2012-ல்  நான் முதல்முதலாக சென்னைக்குச் சென்றபோது தங்கியது இங்கேதான். அவனவன் லேப்டாப்பை வைத்துக்கொண்டிருக்கையில் டெஸ்க்டாப்பை ஹோம் தியேட்டருடன் அறையில் இறக்கினான் பாரி. உலகப் படங்கள் ஹோம் தியேட்டரில் ஒருபுறமும் காய்கள் தட தடவென இடித்துத் தெறிக்கும் கேரம் ஒருபுறமும் பழைய கிரிக்கெட் மேட்சின் ஹைலைட்ஸ் டிவியிலும் போதாதென நாங்களும் பல்வேறு சத்தங்களை எழுப்பிக்கொண்டிருக்கும்போது 'டேய் *** மனுஷனத் தூங்கவிடமாட்டீங்களா' என்று எதிர்வீட்டுமொட்டை மாடியிலிருந்து எதிர்க்குரல் ஒலிக்கும். காலையில் ஹவுஸ் ஓனரக்கா வந்து 'ஒரு மணி வரைக்கும் என்னடா வெளயாட்டு. அந்தக் கதவ சாத்திட்டுதான் வெளையாடுங்களேன்டா' என்பார். இரண்டாவது மாடி அதுவும் அந்தப் பகுதியிலேயே உயரமான கட்டிடம் என்பதாலும் சக சத்தங்களும் சகல திசையில் சென்று சேரும்.

அந்த வீடு கட்டப்பட்டதிலிருந்து நாங்கள் தான் குடியிருக்கிறோம். இன்றுவரையிலும் கூட. அலுவலகத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்த்மில்லாத நண்பர்கள். வேறு வேறு தொழில் வேறு வேறு அலுவல் என எல்லாருமே ஒருவருக்கொருவர் வேறானவர்கள். இதில் நானும் பாரியும் போல, என் அண்ணன் மற்றும் குடும்பத்தலைவர் ஜீவா மட்டுமே ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். மாலை வீட்டுக்கு வந்தால் மறுநாள் காலையில்தான் ஆஃபீஸ் என்ற ஒன்றே நினைவுக்கு வரும்.

எங்களை ஹவுஸ் ஓனர் விட்டுக்கொடுத்ததே இல்லை. பக்கத்து வீட்டு கேஸ் சிலிண்டர் காணாமல் போய் எங்கள் மீது பழி விழுந்தபோது 'இவங்க ஒவ்வொருத்தனும் இருவதாயிரம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கறானுங்க. இந்த அளவுக்கு கேவலமா திருடவெல்லாம் வரமாட்டானுங்க' என்று ஆதரித்தார். நாங்கள் சமைக்க ஆரம்பித்த பின்னர் அவர் ஃப்ரிட்ஜில் அவர் பொருட்களைவிட எங்களது காய்கறிகள்தான் அதிகமிருக்கும். அவர்கள் எங்களிடம் எதிர்பார்த்ததெல்லாம் பெரும்பாலும் ஐந்தாம் தேதிக்குள் வாடகையும் “இந்தத் துணி டப்ப மாடிக்கு தூக்கிட்டு வந்து தாங்கடா” என்பதுதான். பிறந்தது முதலே வாடகை வீட்டில் வசித்துவரும் நான் இன்றுவரையிலும் இதுபோன்ற ஓனரைப் பார்த்ததில்லை. சமையல்க்கார பாட்டி தனி ரகம். அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் ஜெர்சி பிடிக்காது. ”என்னப்பா முரளி இந்தக்கலருல சட்ட போட்டிருக்கானுங்க” என்பார். பாட்டி படு லோக்கலாக சென்னைத் தமிழ் பேசுவார். 'நைட்டுக்கு இன்னாபா செய்றது. மாவ்வு வாங்கினு வந்து தோச சுட்டு வச்சிரவா' என்பார். இவரிடம்தான் நான் மெட்ராஸ் பாஷை பேசக் கற்றுக்கொண்டேன்.

நள்ளிரவு இரண்டு மூன்று மணிக்கெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருக்கும் பாரியை எழுப்பி தோசை சுட்றா பசிக்குது என்பேன். “முடியாது” என்பான். “உங்கள நம்பி எங்கண்ணன் என்னைய இங்க விட்டுட்டு போயிருக்கான். நீ என்னடான்னா தோசை சுட்டுத்தரமட்டேங்கற. இதான் உன் நட்பாடா” என்று சொன்னபிறகு, இரவு மீதமிருந்த மாவில் ஒன்றிரண்டு தோசைகளை சுடுவான். எனக்கு பிரியாணி செய்யத் தெரியும் ஆனால் தோசை சுட வராது. சட்னி சாம்பார் என ஒன்றுமே மிச்சமிருக்காது. இட்லிப்பொடி அல்லது சக்கரை. அவன் அடுப்பை அணைப்பதற்குள் தோசைகளில் ஒன்று காணாமல் போய்விடும். இரண்டாவது தோசைக்கு நடக்கும் அடிதடிகள் தனிக்கதை.

இடம் பழவந்தாங்கல் கண்ணன் காலனி. திருவான்மியூரில் ட்ராஃபிக் போலீஸிடம் சிக்கியபோது கூட கண்ணன் காலனி பசங்களா என்று ஏறெடுத்துப் பார்த்து பின் இருநூறை வாங்கிக்கொண்டுதான் விட்டார். கீழ்த்தட்டு சென்னைக்கே உரிய பிரத்யேக ஸ்டைல் ஏரியா அது. ஒன்றரை ஆண்டுகள் அங்கேதான் இருந்தேன்.

இரவுலாவிற்கு நான் வண்டியை எடுத்தால் நான் வரேன் நான் வரேன் என சண்டைபோட்டு என்னுடன் வருவார்கள் என்று சொல்ல ஆசைதான் ஆனால் உண்மையில் நான்தான் வலுக்கட்டாயமாக யாரையாவது இழுத்துச் செல்வேன். அப்படி ஒருநாள் ராஜன் அவர்களைக் கொண்டு சென்றதற்காக என்னையும் அவரது சில நண்பர்களையும் பரத்தையாக உருமாற்றி நல்லதொரு சிறுகதையை பரிசளித்தார். அன்றையதினம் இரண்டு குல்ஃபி ஐஸ் வாங்கிக்கொடுத்ததால் அவர் மன்னிக்கப்படுகிறார். ஒவ்வொருடனும் இரவுலா சென்றது புதுப்புது அனுபவங்கள். ராஜனின் கதை, நண்பரின் டைரிக்குறிப்புகள் (அதை நான் படிப்பேன் என்பது அவருக்கு தெரியாது) முரளியண்ணனின் வியப்புகள் தொழிலதிபரின் கனவுகள் என எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஒரு மனிதனின் ஆழ்மனது உணர்வுகளை வெளிக்கொண்டுவர இசையாலும் இரவாலும்தான் முடியும்.

எக்மோரில் கிளம்பும் எக்ஸ்பிரல் ரயில்கள் பழவந்தாங்கலைத் தாண்டும்போது ஒலியெழுப்பாமல் செல்லாது போலும். அதே போல் மீனம்பாக்கத்து ஃப்ளைட்டுகளும். ஆயுத எழுத்தில் பாரதிராஜா சொல்வதுபோல ‘பழவந்தாங்கல் வந்துட்டுதான் போகனும்” என்று வந்துசெல்லும். இவ்வொலிகளுக்கிடையில் இந்த மொட்டைமாடியில் நடந்த இலக்கியக் கூட்டங்கள் தனிக்கதை. ராஜன் சத்யா வைரம் அசோக் பாரி மற்றும் நான் இரவுகளில் மொட்டை மாடிக்கு வந்து பேசத்தொடங்கினால் முரளியண்ணனும் ராஜா அண்ணனும் கூடவே வருவார்கள் இவனுங்க பேசறது ஜாலியா இருக்கும்டா என்பார்கள். இதைக்கேட்டுக் கேட்டே முரளி புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.  ’லம’ தலைமையில் நடக்கும் அமர்வுகள் தனி. இது எங்கள் வட்டம். இந்த அறையைப்பற்றி நான் பேசாத ஆளில்லை பேசாத இடமில்லை.

பீச் ஸ்டேஷனின் காப்பி மெரினா வாக்கிங் உமர் பிரியாணிக்கடை நள்ளிரவுப்  பைக் ரைடு காலையில் பொரியலுக்கும் தட்டுக்கும் அடிதடி ஞாயிறுகளின் சிக்கனா மீனா என்ற குழப்பம் லேட்டானால் சாவியை கீழே போடச்சொல்வது கேட் ஏறிக் குதிப்பது வாட்டர் கேன் எடுப்பது யார் சேர்வா கலக்கி செய்வது எப்படி எதிர்வீ்ட்டு கங்கா யாரைப் பார்க்கிறார் கலைஞரின் இலவச டிவியில் தெரியாத ஸ்கோரை யார் பக்கத்தில் போய் பார்த்துச் சொல்வது. காந்தக் கண்ணழகியின் காய்கறிக்கடை எங்கும் குவிந்துகிடக்கும் ஜீன்சுகள் புத்தகங்கள் அடிக்கடி காணாமல் போகும் ஐடி கார்டும் பைக் சாவியும் வேலன் தியேட்டர் நைட் ஷோ போர்டிக்கோவில் மழை நங்கநல்லூர் பார்க் பானிபூரிக்கடை ஞாயிறு இரவு துணி துவைப்பு இரண்டு ரூபாய் ரஸ்னா பாக்கெட் ஹாலில் தூங்க ஃபேனுக்கடியில் இடம் பிடிப்பது தீர்ந்துபோகும் ஷாம்புகள் தேங்காய் எண்ணைகள் பிதுக்கி எடுக்கப்பட்ட பேஸ்ட்டுகள் அழுக்காகாத சட்டையைத் தேடுவது சென்ட் பாட்டில் ஒளித்துவைப்பது பல் போன சீப்பு ஓடாத ட்ரிம்மர் மங்கிப்போன ஆளுயரக்கண்ணாடி அஞ்சு ருபாய்க்கு சோடா இன்னும் எத்தனை எத்தனையோ என்னுடன் வாழ்ந்துகொண்டிருந்தது.

செப்டம்பர் 13. நன்றாக ஞாபகம் இருக்கிறது. சென்ற ஆண்டு இதே நாள்தான் சென்னையை விட்டு கிளம்பினேன். கோவைக்கு பணி மாற்றல். அனுக்கமான மரணத்தினால் பணிமாற்றாக வேண்டிய கட்டாயம். மரணம் தந்து சென்ற பேரிழப்பில் ஏற்கனவே உடைந்து சுக்குநூறாகியிருந்தேன்.

தங்கியிருக்கும் அறை என்றல்லாது முழுக்க முழுக்க எனது இன்னொரு வீடும் குடும்பமுமாகவே மாறிப்போன பழவந்தாங்கல் பேலஸை விட்டு வெளியேறிய வேண்டிய சமயம். நான் கிளம்பும்போது ரூமில் பாரி மட்டுமே இருந்தான். அவனை பழவந்தாங்கல் ஸ்டேஷன் வரை வரச்சொன்னேன். வந்தான். ஒரே ஒரு எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. இது ஒரு பேரிழப்பு. ஈடுகட்டமுடியாத பேச்சிலர் வாழ்க்கை. இனி சென்னை இல்லை நைட் ரைட் இல்லை மொட்டைமாடி ரெயின் டான்ஸ் இல்லை டிஎல்எஃப் ஆபிஸ் இல்லை 20 கிலோமீட்டர் தூரம் போய் பாலவாக்கத்தில் க்ரில் சிக்கன் சாப்பிடுவது இல்லை கூழ் ஊற்றும் நிகழ்ச்சிகள் இல்லை. சொல்லப்போனால் இனி எதுவுமே இல்லை. என்னென்னமோ பேசத் தோன்றியது. பேசவில்லை. அவனோ ஃபோன் பேசிக்கொண்டே வந்தான். எரிச்சலுடனே ரயில் நிலையம் வந்தேன்.

உடனிருந்த யாரையுமே பார்க்காமல் செல்வதா என்ற ஏக்கத்தில் வந்த எனக்கு எதிர்பாராத விதமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் எனக்காக ரூம் அண்ணன்கள் கேக்குடன் நின்றிருக்க, ஸ்டேஷனே எங்களைப் பார்த்து வியக்கும் அளவுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு ரயில் ஏறினேன். போரடிக்கும் போதெல்லாம் ஜாலியாக பயணிக்கும் இந்த ரயிலில் இதுவே கடைசி சொன்னபோது 'ஓவரா சீன் போடாத. நைட்டோட நைட்டா ஏறுனா சென்னையிலதான் விடியும். அடிக்கடி வந்துட்டு போ' என்று முரளி அண்ணா வழியனுப்பினார். சென்னை வந்தா ரூமுக்கு வாடா என்று ராஜா அண்ணன் சொன்னபோது 'எனக்கு இதவிட்டா வேற எடம் இல்லண்ணா' என்றேன்.

அப்போது என் அண்ணன் டெல்லியிலிருந்தான். ஒரு மாதம் கழித்து அவன் திரும்பி அறைக்கு வந்ததும் என் சட்டையை முரளியண்ணன் அணிந்திருப்பதைப் பார்த்து இது என் தம்பி சட்டை தானே எனக் கேட்டபோது அவன் ஞாபகார்த்தமா வெச்சிக்கிட்டேன் என்றாராம். அடுத்து ராஜா அண்ணனிடம் எனது ஜீன்ஸையும் பாரியிடம் எனது சில வஸ்துக்களையும் பார்த்ததைப்பற்றி என்னிடம் சொல்லி சொல்லிச் சிரிப்பான்.

செப்டம்பர் 15, 2014-ல் கோவை வந்தேன். கோவைக்கு தினமும் கோபியிலிருந்தே வருவேன். இன்டர்னல் ட்ரான்ஸ்பர் என்பதால்  எனது டீமின் மூலம் சென்னையிலிருந்தது. விநெட் வழியாகவே வேலை நடந்தது. சென்னை தோஸ்த்துகளான மஸ்தான் ராஜ் மற்றும் பாலா அடிக்கடிஎல்லாம் அப்படியே இருக்கு. நீ மட்டும்தான்டா இல்ல அதான் மிஸ் பண்றோம்” என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். பாலா மட்டும் “உன்னப்பாக்காம மூக்கழகி எளைச்சுப்போயிட்டா டா. சொல்ல்லிட்டு போகலையா நீ” என்பார். ஒருமுறை விநெட் ஸ்பீக்கரில் இருந்தபோது 'யாரு நஸ்ருவா? நஸ்ரூ மிஸ் யுவர் ஸ்மைல்' என்று ரேணுகா அக்கா கத்தியதெல்லாம் அல்டிமேட்.

கோவை டீமில் அப்போது யாரும் என்னுடன் அதிகம் பேசமாட்டார்கள். அனல்பறக்கும் வேலைகளில் ஒரு மூலையிலிருக்கும் புதியவனை யார்தான் கண்டுகொள்வார்கள். எனக்கு சிலரை சென்னையிலிருந்தபோதே தெரியும் அவர்கள் மட்டும் சிரித்துவைத்து நலம் விசாரிப்பார்கள்.

மதியம் தனியாகத்தான் சாப்பிடுவேன். இறங்கவே இறங்காது. கேஃபடீரியாவில் ஒருநாள் சாப்பாடு வாங்கிக்கொண்டு கால் மணிநேரம் இடம் தேடித்தேடி வெறுத்துப்போய் அப்படியே வைத்துவிட்டு வந்ததெல்லாம் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. இரவுகளில் சாப்பிடும்போது தோசைக்கு சட்னி தீர்ந்துபோனால் அனிச்சையாக பக்கத்தில் பாரியின் தட்டைத் தேடுவேன். முழுக்க முழுக்க என்னை வேறாகிவிட்ட மாற்றம். நான்கு மணி நேரப் பயணம். ஆறுமணி நேரத் தூக்கம் இடையே அலுவலகம். எதையாவது எழுதிக்கொண்டிருந்த நான் சி2வில் (சி2 - எங்கள் கம்பெனி வலைதளம்) காணாமல் போன காலகட்டம் இதுதான்.

மூன்றுமாதம் தொடர்ந்து தூக்கமில்லாப் பயணத்தால் உடல்நிலை மோசமாவதைக் கண்டு அம்மா என்னை கோவையிலேயே தங்கச் சொன்னார். வாங்க நஸ்ரு என்று எனக்கு இடம் கொடுத்தவர் யுவராஜ். பால்யகால நண்பர். மீண்டும் என்னை கல்லூரிக் காலத்திற்கு அழைத்துச் சென்றவர். இங்கும் ஒரு அறை. அவ்வளவாகப் பழக்கப்படாத வட்டம். சிறுவயது நண்பர்களான யுவாவும் ராஜ் சதீஷும் உடனிருப்பது ஆறுதல். பெரும்பாலும் தனியாகத்தான் இருப்பேன். சில நேரங்களில் அழுகையே வந்துவிடும். தொற்றிக்கொள்ளும் வெறுமையைப் பிய்த்து எறியமுடியாத இயலாமைகள் ஒருபுறமும் பேசக்கூட துணையில்லாத ஆபிஸ் நேரங்களும் என்னை சோதித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் ஆஃபீஸ் நண்பர் காந்திமதிநாதன் நீங்க தனியாத்தான் சாப்பிடுறீங்களா நானும் வரவா என்று உடன் வர ஆரம்பித்தான். பிறகு கே.கே விக்னேஷ். அவனும் சென்னையிலிருந்து மாற்றல் வாங்கி வந்தான். சென்னைக்குப் போகும்போது எனது பயணத் தோழன் அவன். மச்சி வா ப்ரேக் போலாம் என்பான். 'அம்மா இவன் வாய மூடவே மாட்டானா' என்று என் அண்ணன் திட்டிய காலம போய் பேசியே வெகுநாட்களாகிவிட்ட அவலத்திற்கு ஆளாகியிருந்த எனக்கு கிடைத்த முதல் பேச்சுத்துணை கே.கே தான்.

டீம் ஷஃப்பில் சூப்பர்வைஸர் சேஞ்ச் என ராகவன் வந்தார். மிக அருமையான நபர். அவரது நட்பும் வழிகாட்டுதலும் வேலையிலும் பர்சனலாகவும் என்னை மீட்க பெரிதும் உதவியது. ஒரு வேலை கொடுத்துவிட்டு முடிஞ்சுதா முடிஞ்சுதா என நச்சரிக்கமாட்டார். மாறாக நான் குறித்த நேரத்தில் முடித்துவிடுபவன் என்று நம்பினார். அந்த ஊக்கம் எனக்கு வேலையில் பல பெயரை வாங்கிக் கொடுத்தது. நூறு பேர் கொண்ட டீமில் நூறு பேரையுமே எனக்கு நண்பர்களாக்கிக் கொடுத்தவர்.

பிரபல சி2 ப்ளாக்கர் குமார் அவர்கள் கோவை வந்து அளித்த ட்ரீட் உட்பட, கோவை சி2 நண்பர்கள் ஒவ்வொரு கூடலுக்கு கூட போகமுடியாத அளவு வேலைகள் சூழ்ந்திருக்கையில் ராகவன் தான் எனக்கு துணை. அப்போதுதான் யுவா எம்எம்சியிலருந்து செஸ் ப்ளாக்கிற்கு வந்தார். அவரது நண்பர்களான விஷ்ணு சந்தோஷ் மற்றும் எனக்குப் பின்னால் சென்னையிலிருந்து வந்த மணி, ஜெயக்குமார். வெறுமைகளுடன் வாழப் பழகிக்கொண்டிருந்த சமயத்தில் எனக்கான நண்பர் கூட்டம் உருவானது. நண்பர்களுடன் நேரம் கழித்தல், பூபதியண்ணனுடன் அவ்வப்போது மீட்டிங் என மெல்ல நான் நானாக முயன்று கொண்டிருந்தேன். சென்னை எனக்குள் விதைத்தவையெல்லாம் முளைத்து எழும் முன் சென்னையை விட்டு விலகிவிட்டேன். இப்போது சென்னைக்கு அடிக்கடி செல்வதில்லை. ஆனால் எப்போதாவது போகும்போது உண்டாகும் நிறைவுக்கு எல்லையில்லை. நான் வருகிறேன் என்றால் அந்த வாரம் பேலஸ்க்காரர்கள் யாரும் ஊருக்கு போகமாட்டார்கள். நடக்கும் எல்லாவற்றையெல்லாம் அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. சென்னையிலிருந்த நஸ்ருதீன் ஷா இப்பொழுதுதான் திரும்பிக் கொண்டிருக்கிறான்.

நண்பனுக்கு கடிதம் எழுதுவது அவ்வப்போது முரளியண்ணனுடன் ஃபோன் பேசுவது தூக்கம் வராத இரவுகளில் பேலஸைப் பற்றி நினைப்பது ராஜன்-வைரம்-சத்யா கான்ஃபரன்ஸ் கால், இசை, என் மச்சான் அர்ஜுனுடன் நள்ளிரவில் ஊர் சுற்றல் என இவையெல்லாம் தான் இப்போது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நினைத்த நேரத்தில் பைக்கை எடுத்தால் ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்குப் போக முடியும் என்பது ஒன்றே இன்னும் என்னைக் கோவையில் கட்டிப்போட்டுள்ளது.

சென்னையில் இருந்திருந்தால் பேலஸ் வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்ராஜனுடன் சேர்ந்து பனுவலின் வாசகசாலைக்கு நிறைய பங்களித்திருப்பேன் - எனது நூற்றி முப்பது புத்தகங்களையும் சென்னை புக் பேங்கில் ஷேர் செய்திருப்பேன் என எவ்வளவோ சாத்தியக்கூறுகள் அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கும். மிகப் பெரிய இழப்பைச் சந்தித்திருந்த என் குடும்பத்திற்கு நான் தேவை. எனக்கு என் குடும்பம் தேவை. இந்த ஒரு காரணத்துக்கு முன்னால் சென்னை வாழ்க்கைப் பரஸ்பரங்கள் எல்லாம் வலுவிழந்து நிற்கின்றன.

இங்கும் அதேபோல் ஒரு பால்கனி. ஒருநாள் இரவில் தூக்கம் வராமல் பால்கனியில் அமர்ந்திருந்தேன் 'என்ன நஸ்ரு ரொமான்ஸா' என்றபடி யுவா வந்தார். சொன்னேன். ”புரியுது உங்களுக்கு இங்க என்ன இல்லை என்ன வேணும்ன்னு சொல்லுங்க” என்றார். இப்பொழுதெல்லாம் சென்னையைப் பற்றிய நினைப்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணம் யுவா தான். நண்பர்கள் இன்றி எவர் உலகும் இயங்குவதில்லை. என்னுடையதும் தான்.

எனது பழவந்தாங்கல் வாழ்க்கைக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. இழந்தவற்றையெல்லாம் மெல்ல மெல்ல மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மாற்று அளித்துக் கொண்டிருக்கும் யுவா சதீஷ் கே.கே சந்தோஷ் விஷ்ணு மணி காந்திமதி ஜீவிதா பூபதி மற்றும் ராகவன் அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடன் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது கோவையில் எனக்கென புது டீம் புது நண்பர்கள் புது உலகம். கூடவே இசையும் இலக்கியமும்.

- ஷா