சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8 May 2014

ஓர் ஆண் ஒரு பெண் ஓர் இரவு


என்னுரை:

நிலவினைக் கொண்டாடிய அளவிற்கு இரவினைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. இரவு கிராமத்தில் வேறு மாதிரியாகவும் நகரத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கின்றது. இரவு ஒன்று போல தான் இருக்கின்றது என்று கொண்டாலும் இரவில் உலாவும் ஜீவ ராசிகள் ஒவ்வொரு இரவையும் வெவ்வேறு மாதிரி தோன்றச் செய்கின்றது. இரவு, நிலா, கடல் என்று பேசுபவர்களைப்/எழுதுபவர்களைப் பார்க்கும் போது 'யாரடா இவர்கள் பைத்தியக்காரர்கள்' என்று தோன்றும். அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் நிலவின் ஒளியைக் சலனமில்லாக் கடல் அலைகளின் மீது கண்டு வியந்த போது புரிந்து கொண்டேன். இதுவரை ஓவியங்களில் மட்டுமே கண்டு ரசித்தக் காட்சி அது.

ஜெயமோகனின் இரவு நாவல் படித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்து ரசித்த சென்னையின் இரவைப் பற்றி எழுதலாம் என்று தோன்றியது. அது பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருந்தேன். சங்கரநாராயணன் எனது பதிவு ஒன்றில் கதை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அவர் கே(கெ)ட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை அன்றிரவே கதைக்கான ஸ்பார்க் கிடைத்தது. இந்தக் கதையை நீங்கள் ரசிப்பீர்கள் என்றும் சென்னையின் இரவை உங்கள் கண் முன் காட்டும் என்றும் நம்புகிறேன்.

இந்த ஸ்பார்க் தோன்றக் காரணமான சங்கரநாராயணனுக்கும் ஜெயமோகனுக்கும் இந்தக் கதையைச் சமர்பிக்கிறேன்.

- த.ராஜன்

 
~~OO~~

ஓர் ஆண் ஒரு பெண் ஓர் இரவு

இரவு எனது சோகத்தை அதிகரிப்பதாகத் தோன்றியது. சிந்தனை முழுவதும் வேறெதிலும் சிதறாமல் அவளையே நினைத்துக்கொண்டிருந்ததால் தான் என் சோகம் இப்போது அதிகமாவதாகத் தோன்றியது. பத்து மணியைத் தாண்டியிருந்தது. மொட்டைமாடியில் நான், சிகரெட், இரவு மூவரும் தனியாக இருந்தோம். காற்று எங்கள் தனிமையைக் கலைக்க விரும்பாமல் எங்கோ சென்றுவிட்டது போலும். கோடைப் பகலின் தாக்கம் இரவிலும் குடிகொண்டிருந்தது. கதறி அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் யாரேனும் எந்த சமயத்திலும் இங்கு வரக் கூடும் என்பதால் தொண்டை வரைக்கும் வந்த அழுகையை கீழே போகச் சொன்னேன். அது சொல் பேச்சு கேட்காமல் தொண்டைக்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. இந்தச் சமூகத்தில் ஆண்களுக்கு நிம்மதியாக அழ கூட வழி இல்லை!

எனது அறையில் என்னுடன் மூன்று பேர் இருந்தாலும் கூட நான் தனியாக இருப்பதாகவே உணர்ந்தேன். அவர்கள் எனது அலுவலகத்தில் பணி புரிபவர்கள், எனது அறையைப் பங்கிட்டு கொள்பவர்கள் என்பதைத் தவிர அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தான் நடந்து கொண்டார்கள். இப்படி நான் தனிமையை உணரும் சமயங்களில் தான் என் வீட்டின் ஞாபகம் தலைவிரித்து ஆடும். குறிப்பாக அம்மாவின் ஞாபகம். இது போன்ற சமயங்களில் மனம் அடையும் சஞ்சலத்திற்கு அளவே இல்லை. தனிமையின் வலி. என் வீட்டில் இருக்கும் போது ஒரு நாள் ஒரு நொடி கூட நான் இவ்வாறு உணர்ந்ததில்லை. சீக்கிரமே தனியாக அறை எடுத்து தங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இவர்களுடன் இருப்பதற்கு தனியாக இருப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றியது. தனியாக இருக்கிறோம் என்பதை விட தனிமையை உணர்வது தான் கொடுமை!

அம்மாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவர்களுக்கு எவ்வளவு சோகம் இருந்தாலும் கூட என்னிடம் அன்போடு பேசும் ஒரே ஜீவன். இப்போது இவ்வளவு வலியிலும் நான் வாழ வேண்டும் என்று நினைக்க வைக்கும் ஜீவன். அம்மா! அவரிடம் பேசினால் இந்த வலி குறைந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த வலி குறையக் கூடாது. அம்மாவிடம் பேசக் கூடாது. இந்த வலி வேண்டும் எனக்கு. எனது அம்மாவிற்கு பிறகு என்னை அரவணைக்கும் இன்னொரு ஜீவன் இரவு. எந்தத் தொந்தரவும் இல்லாமல் இரவோடு தனியாக இருக்க விரும்பினேன். சட்டையை மாட்டிக் கொண்டு வண்டியில் சுத்தலாம் என்று கிளம்பினேன். விபத்தில் அடி பட்டு சரியாக இன்னும் குணமாகாத நிலையில் வண்டியில் வெளியே கிளம்பும் என்னைப் பார்த்து 'ஏன்டா வண்டிய எடுத்துட்டு போற' என்று பேச்சிற்கு கூட கேட்கவில்லை என் அருமை அறைத் தோழர்கள். என்னைப் பற்றிய அக்கறை துளி கூட இல்லை. யாரைப் பற்றிய அக்கறையும் இவர்களுக்கு இல்லை. கெட்ட கெட்ட வார்த்தைகளில் மனத்திற்குள்ளாகத் திட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்.

~~OO~~

இரவு இரவாக இல்லை. தெருவிளக்குகளிலிருந்து கசிந்த மஞ்சள் நிற ஒளி இரவை அலங்கோலப்படுத்தியது. இரவு விரும்பி உடுத்தியிருந்த கருப்பு நிற சேலையைக் கிழித்தெறிந்திருந்தன தெருவிளக்குகள். ஆனால் இப்போதையக் காலகட்டத்தில் வாழும் நாம் நிஜமான இரவில் நடமாட முடியாது என்றே தோன்றியது. பயம் நம்மை ஆட்கொண்டுவிட்டது. ஆங்காங்கே தனித் தனியே வெள்ளாடுகளும் மாடுகளும் அசை போட்டுக் கொண்டிருந்தது. எதைப் பற்றியோ பலமாக யோசித்துக் கொண்டிருப்பது போல இருந்தது அவற்றின் முகபாவனை. சென்னையில் ஆடுகளையும் மாடுகளையும் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது. பகலில் ஒரு நாளும் அவைக் கண்ணில் பட்டதாக ஞாபகம் இல்லை.

அறைத் தோழர்கள் மீது இருந்த கோபத்தையும் என் காதலின் மீது இருந்த வெறுப்பையும் வண்டியில் காட்டினேன். வண்டி எழுப்பிய சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாய் வெடுக்கென்று எழுந்து ஓடி சிறிது தூரம் சென்று என்னையே பார்த்துவிட்டு அதே இடத்தில் வந்து படுத்துக்கொண்டது. காற்று காதைக் கிழிக்கும் அளவிற்கு வண்டியின் வேகம் இருந்தது. கண் முன்னே காதலியின் உருவம் வந்து வந்து போனது. தொண்டைக்குள் சிக்கியிருந்த துக்கம் கண்களில் நீராக வந்தது.  வாய்விட்டு சத்தமாக அழ வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். வண்டியின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே சப்தமிட்டு அழுதேன். கண்ணீர் வற்றிய நிலையில் இன்னும் உக்கிரமாகக் கதறி அழுதேன். நேரே அந்த மரத்தின் மீது மோதி விடலாமா என்று தோன்றியது.

டைடல் சிக்னலின் அருகே வண்டியை நிறுத்திவிட்டு திண்ணை போன்ற சுவற்றில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பற்ற வைக்க முடியவில்லை. கை விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருக்கிறேன் என்பதை வெகு நேரம் கழித்தே உணர்ந்தேன். ஒரு வழியாக பற்ற வைத்து இழுக்கும் போது இதயம் வேகமாகத் துடிப்பதாக உணர்ந்தேன். வண்டி ஓட்டியதால் அடி பட்டிருந்த மணிக்கட்டு வலித்தது. விபத்து என்று சொன்னேன் அல்லவா. விபத்து இல்லை. காதலின் பரிசு. அவளுக்காக நான் வாங்கிய பரிசு. அதைப் பார்க்கப் பார்க்க இன்னும் ஆத்திரமாக வந்தது. கூர்மையான திண்ணையின் நுனியில் அடிப்பட்ட மணிக்கட்டை ஓங்கி அடித்தேன். வின்னென்று தெரித்தது. மனதில் இருந்த வலியை விட இது பெரிதாகப் படவில்லை. அது போக அப்போது அந்த வலி தேவையாக இருந்தது.

இப்போது மனம் கொஞ்சம் லேசாக இருப்பதாகப்பட்டது. யாரும் என்னைப் பார்க்காத படி, வெளிச்சம் இல்லா, இரவின் அழகு மாறாமல் இருக்கும் இடத்தில் போய் அமர வேண்டுமென வண்டியைக் கிளப்பினேன். வண்டியை மெதுவாக ஓட்டினேன். எண்ணங்கள் முழுவதும் அவளே குடிகொண்டிருந்தாள். அவளோடு இருந்த இனிமையான காலங்கள் இனி என் வாழ்வில் வரப் போவதில்லை. சொர்க்கம்! எல்லாம் ஒரு நொடியில் முடிந்துவிட்டது. நரகம்! இனி அவள் என் எண்ணத்திலிருந்து செல்லும் வரை எனக்கு நரகம் தான். அவளுக்கும் நரகம் தான். அவள் மேல் நான் வைத்திருந்த காதலை விட என் மேல் அவள் கொண்ட காதல் தான் அதிகம். நரகம் தான் அவளுக்கும். பெண்களைப் போல் பாசம் வைக்க ஆண்களால் நிச்சயம் முடியாது. அதையும் மீறி ஆண்கள் அவ்வாறு பாசத்தைப் பொழிந்தால் அது நடிப்பது போல தான் வெளியே தோன்றும்.

~~OO~~

அடையாறு பாலத்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளைக் கடக்கையில் ஏறிட்டுப் பார்த்தேன். ‘வரியா?’ என்பது போல புன்னகைத்வாறே தலையசைத்தாள். செயற்கையான புன்னகை. சிரித்துக் கொண்டே நின்றிருந்தாலும் அவளது புன்னகையை மீறிய சோகம் அவள் முகத்தில் படிந்திருந்தது. எதுவும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு கடந்து போனேன். முப்பது வயது இருக்கும் அவளுக்கு. தலை நிறைய பூ - வெள்ளைத் தோல் - முகத்தில் கூடுதல் நிறம் - உதட்டில் அவளுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாதச் சாயம் - வெள்ளையில் இளம் பச்சை நிறத்தில் பூ போட்ட சேலை - அது பூவா அல்லது வேறு ஏதும் டிசைனா என்று சரியாகத் தெரியவில்லை. இவர்களுக்கு இது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது யார் என்ற எண்ணம் வந்தது. நான் பதில் சொல்லாமல் வந்தது மனதை உறுத்தியது. எனக்குள் ஆயிரம் கவலை இருக்க அவளைப் பற்றி ஏன் கவலைப் படுகிறேன் என்று தெரியவில்லை. வண்டியைத் திருப்பி அவள் அருகே சென்று நிறுத்தினேன்.

'எழுநூரூபா குடுத்துடனும்' என்றாள். 'சரி' என்றேன். 'ஒரு மணி நேரத்துல விட்டுடணும்'. வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள். அவளது கை எனது தோளையோ வயிற்றையோ தொடையையோ பிடிக்கும் என்று எதிர் பார்த்தேன். அவளது சேலை நுனி கூட என் மேல் படாமல் அமர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. என்னவளின் ஞாபகம் வந்தது. அவள் முதல் முறை என் வண்டியில் ஏறி அமர்ந்தது, என் மேல் அவள் உடல் தெரியாமல் படும் போதெல்லாம் பதற்றமானது, அதை ரசித்து அவளைத் தெரியாமல் இடிப்பது போல் வேண்டுமென்றே இடித்துச் சீண்டியது நினைவில் வந்தது.

சீரான வேகத்தில் சென்றேன். குளிர்ந்த காற்று முகத்தை வருடிச் செல்வது இதமாக இருந்தது. சென்னையின் பகலை எனக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு அப்படியே எதிர்மாறானது இரவு. சென்னையின் இரவு! அகன்ற சாலையில் தனியாக இரவில் செல்வது ஏனோ மனதைச் சாந்தம் கொள்ளச் செய்தது. நல்ல  வேலையைச் செய்ததாக எண்ணிக் கொண்டேன். வெளியே வராமல் என் அறையிலேயே இருந்திருந்தால் தற்கொலை அளவிற்கு செல்லவும் என் மனம் எண்ணியிருக்கும். பின்னால் இருப்பவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இடப்புறக் கண்ணாடியைத் திருப்பிப் பார்த்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயமாக அவள் அதை ரசிக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது. எதையோ யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். வீட்டை விட்டு கிளம்பும் வேலையில் தெருவில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்த ஆடு மாடுகளின் ஞாபகம் வந்தது. கிட்டத்தட்ட அதன் முக பாவனையும் இவளுடைய முக பாவனையும் ஒன்று போல தான் இருந்தது.

'பேரென்ன?' என்று கேட்டேன். அவள் ஒரு முறை தலையை என் பக்கம் திருப்பி விட்டு பதிலேதும் சொல்லாமல் மறுபடியும் அதே போல பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளிடமிருந்து பதிலை எதிர் பார்க்கவில்லை. எதையாவது பேசி மௌனத்தைக் கலைக்க வேண்டுமென்று தோன்றியது. அவ்வளவு தான். பட்டினப்பாக்கம் அருகில் சிறிய கடை திறந்திருந்தது. ரேடியோவிலிருந்து இளையராஜாவின் கல்யாணத் தேனிலா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கடையைத் தாண்டி வண்டியை நிறுத்திவிட்டு, 'இரு வரேன்' என்று சொல்லிவிட்டு கடையை நோக்கி நடந்தேன். அவள் 'என் கிட்ட காண்டம் இருக்கு' என்றாள். அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு 'காத்திரு' என்பது போல சைகை செய்து விட்டு கடையை நோக்கிச் சென்றேன். அந்தக் கடையின் அருகில் ஏழெட்டு வாலிபர்கள் ஏதோ கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள் அங்கொருவரும் இங்கொருவருமாக. இவர்களுக்காகவே வண்டியைச் சிறிது தூரம் தள்ளி நிறுத்தினேன். ஆனால் அவர்கள் யாரும் எங்களைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏனோ என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. ஏதேனும் திட்டம் போட்டு வண்டியையும் கையில் இருப்பதையும் பிடுங்கிக் கொள்வார்களோ என்று தோன்றியது. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு காலி டப்பாவில் நாலு சிகரெட் போட்டுத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டேன். கூடவே ஒரு வாட்டர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு விரைந்தேன்.

நான் பயந்ததைக் கண்டு கொண்டாள் போல. 'அவங்களாம் ஒன்னும் பண்ண மாட்டாங்க. பயப்படாத'. அவளே தொடர்ந்தாள் 'லோக்கலு, குப்பத்துல இருக்காங்க. அதுக்காக அவங்க திருடங்கன்னு நெனச்சிடாத. உங்கள மாதிரி ஆளுங்கள தான் நம்ப முடியாது. இவங்கள நம்பலாம்' என்றாள். புகையை அவள் பக்கம் விடாமல் வலப்பக்கம் உதட்டை திருப்பி, புகையைப் பறக்க விட்டபடியே வாட்டர் பாட்டிலை அவளிடம் நீட்டினேன். 'எனக்கு தாகம் எடுக்கல. வேணாம்' என்றாள். 'முகத்த கழுவிக்கோ' என்றேன். 'ஏன்?' 'கழுவிக்கோ சொல்றேன்' கோபமாக 'இது சரியா வராது. நான் கிளம்பறேன்' என்று நடக்க ஆயத்தமானாள். 'ஹே இங்க பாரு. ஒரு மணி நேரத்துல போய்டு. கழுவிக்கோ'. தலையை அங்குமிங்கும் முடியாது என்பது போல் அசைத்து விட்டு 'நான் கிளம்பறேன். சரியா வராது' என்றாள். இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை அவளிடம் நீட்டினேன். 'இந்தா வாங்கிக்கோ. காசு தராம ஏமாத்திட மாட்டேன். இல்லைனா தான உனக்குப் பிரச்சன. இந்தா வாங்கிக்கோ.  ஒன் ஹவர்ல விட்டுட்றேன்'. சில நொடிகளின் மௌனத்திற்குப் பிறகு முகத்தை கழுவியவாறே 'எங்க போறோம்?' என்றாள். 'மெரினா போலாம்'. 'ஹ்ம்ம்ம். கொஞ்சம் சீக்கிரம் வந்துருந்தா அங்கயே சீப்பா கிடச்சிருப்பாங்களே?'. புகையைத் தலைக்கு மேலே பறக்க விட்டு 'நீ சும்மா பேசிட்டு இருந்தா போதும்'. என்னை வெடுக்கென ஏறிட்டுப் பார்த்துவிட்டு முகத்தை முந்தானையில் துடைத்தவாறே 'போதுமா' என்றாள். புன்னகைத்தேன்.

~~OO~~

மெரினா! இரவில் மெரினா புதுப் பெண் போல ஜொலித்தது. என்னால் நம்ப முடியவில்லை. இந்நேரத்தில் இவ்வளவு பேர் இருப்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. குடும்பம் குடும்பமாக இரவைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு நாள் இதை இழந்து விட்டோமே என எண்ணி அவர்கள் மீது கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. சிமெண்ட் திண்டு வரை வெளிச்சம் பட்டப் பகலாக இருந்தது. அதை அடுத்த மணல் ஆரம்பிக்கும் பகுதியிலிருந்து இருண்ட இருள். மணல்களில் அங்குமிங்கும் மனிதர்கள். இரண்டடி மனிதர்கள் நாலடி மனிதர்கள் ஆறடி மனிதர்கள். மனிதர்கள் மனிதர்கள் நாய்கள் மனிதர்கள் மனிதர்கள் நாய்கள் மனிதர்கள் மனிதர்கள். இங்கிருந்து பார்கையில் ஆண்களா பெண்களா குழந்தைகளா துணி மூட்டைகளா என்ற வித்தியாசம் தெரியவில்லை. இவ்வளவு பேரின் வீடு இந்த மெரினா கடற்கரை தான் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். இவ்வளவு பேர் இங்கே படுத்திருப்பதைக் கண்டவுடன் மனது என்னவோ பண்ணியது. நீண்ட பெரு மூச்சு விட்டபடி கண்ணகி சிலைக்குப் பின்புறமிருந்த இடத்தில் வண்டியை நிறுத்தினேன். வெளிச்சத்தில் பணக்காரர்கள் இருளில் ஏழைகள்! ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம் இல்லை இல்லை. பணக்காரர்கள் ஏழைகள் என்பது தவறு. பணம் இருப்பவர்கள் பணம் இல்லாதவர்கள் என எண்ணிக் கொண்டேன்.

'குல்ஃபி சாப்பிடலாமா?' 'சரி' என்றாள். குல்ஃபி காரரிடம் இரண்டு குல்ஃபி சொல்லிவிட்டு ‘உள்ளே கடல் பக்கம் போகலாமா?’ என்று கேட்டேன். அந்த இருளை ரசிக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. குழந்தையைப் போல உணர்ந்தேன். 'போகலாம் தம்பி. ஆனா பதினோரு மணிக்கு போலீஸ் வந்து சத்தம் போடுவாங்க. அது வரைக்கும் போகலாம். ஆனா வண்டிக்கு உத்தரவாதம் இல்ல தம்பி. போன வாரத்துலயே நாலு வண்டி காணமா போய்டுச்சு' என்றார். குல்ஃபியை வாங்கி அவளிடம் கொடுத்து விட்டு 'இந்த திண்டுலயே உக்காந்துப்போமா' என்றேன். தலையசைத்தாள். நாங்கள் அமர்ந்த திண்ணையின் எதிரே ஒரு அம்மா தன் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளும் எதையுமே பேசிக் கொள்ளவில்லை. எங்கள் கால்களின் அருகே ஒரு எலி எங்கே செல்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைக் குழந்தைகள் மரித்து எதிர் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தனர். 'எலி கடிச்சிடும். சும்மா இரு' என்று குழந்தையை அதட்டிக் கொண்டிருந்தாள் தாய். அது ஓடாமல் குதித்துக் குதித்துச் செல்வதைப் பார்க்கவும், அது தத்தளிக்கவில்லை குழந்தைகளுடன் விளையாடுகிறது என்று தோன்றியது. குழந்தைகளால் துரத்தப்பட்ட எலி, நான் உட்கார்ந்திருந்த திண்ணைக்குப் பின்னே இருந்த மணலில் குப்புறப் படுத்திருந்தது. புதிதாக அதைப் பார்ப்பவர்களுக்கு அது செத்துவிட்டது என என்னும் படியாகக் கிடந்தது. அதைச் சுற்றி இருந்த எல்லோருக்கும் இப்போது எலி தான் வேடிக்கைப் பொருளாக இருந்தது.

எனக்குப் பின்னால் கிடந்த எலியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே குல்ஃபி சாப்பிட்டேன். வெடுக்கென்று எழுந்து ஓட ஆரம்பிக்கவும் நான் பயந்து எழுந்தேன். 'இதுக்கு போய் பயப்பட்றியே' என்று சிரித்தாள். அவள் சிரிப்பது மீண்டும் என் காதலியை நினைவூட்டியது. எதுவும் பதில் சொல்லாமல் அவள் சிரிப்பதையேப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கலைக்கும் வண்ணம் 'என்ன' என்பது போல் குல்ஃபியைச் சுவைத்தவாறே தாடையை உயர்த்தினாள். 'இல்ல எலி அப்படியே ஓடி வந்து முதுகு வழியா சட்டைக்குள்ள போய்டுச்சுனா?' என்றேன். வெடித்துச் சிரித்தாள். நானும் முகத்தைத் திருப்பி சிரித்துக் கொண்டேன்.

போலீஸ் சிறிய மைக்கில் எல்லோரையும் கிளம்பும் படி அறிவித்துக் கொண்டிருந்தார். மிகவும் மரியாதையாகவே கிளம்பச் சொன்னார். மேலும் இரண்டு காவல் துறையினர் ஜீப்பிற்கு முன், கையில் லத்தியுடன் நடந்தபடியே அங்கிருந்த எல்லோரையும் கிளம்பச் சொன்னார்கள். அவர்களும் மரியாதையுடனே நடந்து கொண்டார்கள். நடு இராத்திரியில் வந்து ஆட்டம் போடுகிறவர்களைக் கிளம்பி போகச் சொல்வதற்கு போலீஸ். அவர்கள் மேல் ஒரு வித பாச உணர்வு வந்ததை உணர முடிந்தது. இவளுடன் இருப்பதைப் பார்த்தால் ஏதும் சொல்வார்களோ என்று கொஞ்சம் பயமாக இருந்தது. சீக்கிரமாக வண்டியை எடுத்துக் கிளம்ப வேண்டும் என்பதற்காக குல்ஃபியைக் கடித்துச் சாப்பிட்டேன். வாயில் குளிர் தாங்க முடியாமல் ஊதிக் கொண்டிருந்தேன். வண்டியை உயிர்ப்பிப்பதற்கு முன் மணலில் படுத்திருந்தவர்களை மொபைலில் புகைப்படம் எடுத்துவிட்டு அவளையும் ஏறிக் கொள்ளச் சொல்லிச் கிளம்பினேன்.

~~OO~~

'உனக்கு பீச்சுக்கு கண்டிப்பா போணுமா?' என்றாள். 'ம்ம்ம் போனா நல்லா இருக்கும்' என்றேன். 'நான் நினச்சது என்ன நடந்துருக்கு. கொஞ்ச நேரம் என் கூட பைக்குல வரியா? அப்படியே ரைட் போய்டு உன்ன எங்க விடணுமோ விட்டுட்றேன்?' என்று கூறிக்கொண்டே வலப்பக்கம் திருப்ப எத்தணிக்கையில் 'இந்தப் பக்கம் போ' என்று இடப்புறமாக திரும்பச் சொன்னாள். 'ஏன்?' 'போ சொல்றேன்'. அவள் சொன்னபடியே இடப்பக்கம் திருப்பி வலப்பக்கம் வளைந்தால், கரடு முரடான வேறொரு சாலை. நான் இதுவரை மெரினாவிற்கு பல முறை வந்து சென்ற போதிலும் இப்படி ஒரு சாலை உள்ளது என்று அறிந்தது இல்லை. மீன் சந்தையாம். மீனின் மணம் அந்தச் சாலை முழுவதும் படர்ந்திருந்தது. சிறு சிறு ஓலைக் குடிசைகளின் முன்பு எண்ணற்ற ஐஸ் பெட்டிகள். அதில் இப்போதும் மீன் இருக்குமென்றே தோன்றியது. இங்கே இருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது அங்கே வரிசையாக நிறுத்தியிருந்தக் கார்களின் ஞாபகம் வந்தது. ஒரு காரின் அளவே உள்ள வீடுகள். சில நிமிடங்கள் அறையில் மின்சாரம் இல்லையென்றால் வெளியே உலாத்த ஆரம்பித்துவிடுவேன் மின்சாரம் வரும் வரை. இது போன்ற இடங்களில் வசிப்பவர்களைப் பார்க்கும் போது நான் எவ்வளவு பாக்கியசாலி என்று நினைத்துக் கொண்டேன்.

குடிசையிலிருந்துக் கண்களைத் திருப்பி இடப்புறம் பார்கையில் ஸ்தம்பித்துப் போனேன். இரவு, நிலா, கடல், அலை இவற்றின் ஒட்டு மொத்த அழகையும் இன்று தான் கண்டு கொண்டேன். இதுவரை ஓவியங்களில் பார்த்திருந்தக் காட்சியைக் கண் முன் கண்டதும் இவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று தோன்றியது. அழகியப் பெண்ணைப் பார்க்கும் போது ஏற்படும் பரவச உணர்வு கிடைத்தது. நிலா தன் ஒளியைக் கடல் அலை மீது தெளித்திருந்தது. அறை நிலவிற்கே இவ்வளவு அழகு என்றால் பௌர்ணமிக்கு! அடுத்த பௌர்ணமிக்கு இங்கு வர வேண்டுமென  முடிவு செய்து கொண்டேன். 'இங்க இருக்கலாமா' என்றாள். 'என்னது? இங்க போகலாமா?' 'போகக் கூடாது தான். ஆனா யாரும் வர மாட்டாங்க' 'பைக்?'. வண்டியை நிறுத்துவதற்கு ஒரு வீட்டின் அருகே இடம் காண்பித்தாள். வண்டியை நிறுத்திவிட்டு கடலை நோக்கி நடந்தோம். அலை வா வா என்று இரு கை நீட்டி அழைத்தது. அரை நிலா, பல் விழுந்த குழந்தையைப் போலச் சிரித்தது, இரவு அணைத்துக்கொண்டது!

'ஹே இந்த இடத்துக்கு என்ன கூட்டிட்டு வந்ததுக்கு உனக்கு எவ்வளவு தாங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தேன். கடவுள் எனக்காகவே உன்ன அனுப்பிருக்கான் போல. இல்ல கடவுள் தான் நீயா?' பெருங்குரலெடுத்து சிரித்தாள். 'நிஜமா சொல்றேன். இயற்கை, நிலா, வானம்னு பேசுறவங்கள பாத்து யாருடா இவனுங்க லூசு பசங்களா இருக்கிறானுங்கனு நான் நினச்சது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்ன்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்'.

'எனக்கு இதெல்லாம் ரசிக்க தெரியாதுப்பா. நிறய தடவ இங்க வந்துருக்கேன். நீ கூட்டிட்டு வந்த மாதிரி தான் நிறய பேரு கூட்டிட்டு வந்துருக்காங்க. ஆனா யாரும் உன்ன மாதிரி பேசிட்டு இருந்தது கிடையாது. எனக்கும் இதயெல்லாம் பாத்து ரசிக்கிற மன நிலையும் கிடையாது' என்றாள் முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல். 'உன்ன பாத்தா நல்லவ மாதிரி தெரியுது. ஏன் இந்தத் தொழிலுக்கு வந்த?' திரும்பி என் கண்களைப் பார்த்தவாறே 'இந்த தொழில் பண்றவங்களாம் கெட்டவங்கன்னு யார் சொன்னது?'. அவள் கண்களிலிருந்து என் முகத்தைக் கடல் பக்கம் திருப்பினேன். அவள் 'நல்லவங்கனா யாரு? கெட்டவங்கனா யாரு?' என்று கேட்டாள். என்னால் அதை சரியாக வரையறுக்க முடியவில்லை. 'ஒவ்வொருத்தரோட அகராதிலயும் ஒவ்வொரு வரையறை இருக்கும்' என்றாள். எனக்கும் அவள் சொல்வது சரி என்றே பட்டது.

'சரி விடு. என்னோட புராணம் எதுக்கு உனக்கு. ஏன் உன் முகம் இப்படி வீங்கி இருக்கு? அழுதியா? ஆம்பள புள்ள அழலாமா?' என்று கேட்டாள். 'அழுகாத ஆம்பள பசங்கள நான் பாத்ததே கிடையாது. பொண்ணுங்கள விட நாங்க தான் பலவீனமானவங்க'. 'இப்படி சொல்லி நான் இப்போ தான் கேள்விபட்றேன்' நான் சிரித்துக்கொண்டே 'உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்குற எல்லா ஆணும் நிச்சயமா அழுவான். நான் பலவீனம்ன்னு சொன்னேன். ஆனா அழுறதுக்கு பலம் வேணும்னு தோணுது' அவளும் நான் சொன்னதை ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தாள். 'சரி ஏன் அழுத?' 'காதல்-தோல்வி-வலி' என்றேன்.

அதற்கு பின் வெகுநேரம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். என் காதலைப் பற்றி அவள் கேட்டுக் கொள்ளவில்லை. அவள் வாழ்க்கையைப் பற்றியும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றியது. அவள் கதையும் நான் எங்கோ கேட்ட ஒரு சோகக் கதையாகத் தான் இருக்கும். எனது கதையும் வழக்கமான ஒரு காதல் கதையாகத் தான் இருக்கும். அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது?

'சரி ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்' 'ம்ம்ம்ம் சரி. உன் பேரு என்னனு சொல்லவே இல்லயே' என்றேன். 'அதான் நீங்க எங்களுக்கு நிறய பேரு வச்சிருக்கீங்களே' என்றாள். அவள் கண்களையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். 'நான் கொண்டு விட்டுட்றேன். அடையாறுலயே விட்றட்டுமா?' 'ச்சே ச்சே அதெல்லாம் வேணாம். நீ கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போ. நான் அப்படியே ரோட்டுல போய் பௌடர் பூசிட்டு நிக்க வேண்டி தான். நிக்கணும் படுக்கணும் இதான என்னோட வேலை' என்றாள். என் கண்கள் என்னை அறியாமலேயே கலங்கியது. அவளைப் பார்ப்பதைத் தவிற்க விரும்பி முகத்தைத் திருப்பினேன்.  'இது வரைக்கும் நிறய ஆம்புளைங்க கூட இருந்துருக்கேன். யாருக்கும் முத்தம் கொடுத்தது கிடையாது' என்றாள். அவளைப் பார்த்தேன் கலங்கிய கண்களுடன். என் நெற்றியில் முத்தமிட்டு நடக்க ஆரம்பித்தாள்!

- த.ராஜன்