சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

18 August 2015

[சிறுகதை] அலைவளையல்



அந்த மாலைநேரத்து மழையில் அனு வளையல்களைக் கப்பல்களாக அனுப்பிக்கொண்டிருந்தாள். கன்னியாகுமரியில் ஏற்பட்ட பழக்கம் அது. கடலலையில் வளையல் மின்னிச் சுழல்வதைப்பார்க்க அவளுக்கு அலாதி பிரியம். வீட்டுவாசலில் ஒதுங்கிச்செல்லும் மழைநீரைக் கடலாக்கி அவளது பழைய வளையல்களை மிதக்கவிட்டுக்கொண்டிருந்தாள். வளையல்களும் மழைநீர்ச்சுழலில் அலையாடிக் கொண்டிருந்தன. அவளுடன் இளஞ்சேற்றினை கடலாக்கி வலையல்களுக்கு வழிவிட்டு மழையும் விளையாடிக்கொண்டிருந்தது. ரேணுகா அக்கா வந்துசென்றதிலிருந்து விளையாட்டு மெருகேறி இன்னும் அழகாக்கிவிட மென்மேலும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தாள்.

ரேணுகா வீட்டுக் காம்பவுண்டில் புல்லட்டுப்பாண்டி எனப்படும் சாரதியின் முகத்தை அன்றுதான் ரேணு முதன்முதலாகப் பார்த்தாள். வெள்ளியிரவுகளில் கேட்கும் புல்லட் சத்தம் மீண்டும் திங்கள் காலையில்தான் கேட்கும். மற்றபடி முகத்தையெல்லாம் ரேணுவால் பார்க்கமுடிந்ததேயில்லை.

ஆனால் அனு அவனைப்பார்த்திருக்கிறாள். அக்காவின் பிறந்தநாளன்று எதேர்ச்சையாக வெளியில் வந்த அனு காம்பவுண்ட் பார்க்கிங்கில் நின்றிருந்த புல்லட்டினைப் பார்த்தாள். கரிய காட்டெருமையைக் குறுக்கி வண்டியாக்கியது போலிருந்தது. பிரமிப்பில் தொட்டுப்பார்த்தாள். இதுபோன்ற ஒன்றினை கல்லூரிக்காலத்தில் பார்த்திருக்கிறாள். இவ்வளவு பளபளப்பாய் இல்லை. ”இதுல ஒருநாள் ரொம்ப தூரம் போகனும்” என்றெண்ணித் திரும்பியபோது எதிரே அவன் திடமான உடல், வெண்ணிற முகத்தில் கருப்புதாடி சகிதம் நின்றிருந்தான். வழிவிட்டு “உங்களுதா” என்றாள். “ஆமாங்க” என்றவனிடம் “நல்லா இருக்குங்க” என்றாள். அவன் சிரித்துவிட்டு புல்லட்டை இயக்கி நகர்ந்தான்.

அன்றைய மழையில் ரேணு ஜன்னலைச்சாத்த முற்பட்டபோது, அவன் பூட்டப்பட்ட வீட்டைப்பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டாள். பின்னர் அவள் கணவன் முழுவதுமாய் நனைந்து வரும்போது உடனே அவனும் வந்தான். டவல் இருவருக்கும் வழங்கப்பட்டது. பரவால்லங்க என்கிட்டயே கர்சீப் இருக்கு என்றான். விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு காபிக்குப் பிறகு ”நீங்க கனரா பேங்க்ல இருக்கீங்கன்னு அம்மா சொல்லிருக்காங்க” என்றார் ரேணுவின் கணவர்.

ஆமாங்க திருப்பூர்ல என்றான் புல்லட். ”நீங்க?”

”நானும் கிட்டத்தட்ட பேங்க் தான். அமெரிக்கா பேங்க். நான் ராஜசேகரன். சாஃப்ட்வேர்ப்பா.” என்று கைகுலுக்கிச் சிரித்தார். ஏற்கனவே அறிமுகப்பட்டவர்கள் என்பது போலில்லாமலிருந்தார்கள்.

ராஜு தொடர்ந்தார் “வாரவாரந்தான் வருவீங்களா”

”ஆமாங்க. தெனம் போய்ட்டுதான் வந்தேன் செட் ஆகல”

“அங்கயே செட்டில் ஆகப் பாக்கலாம்ல”

“அதாங்க அப்பாவும் ப்ளான் பண்ணாரு. ஆனா இங்க ஆபீஸ் ஃபார்மாலிட்டிஸ் இன்னும் இருக்கு. செட்டில்மெண்ட் இன்னும் வரனும். அதுவர இங்கயே அம்மா இருக்கட்டும்ன்னு” “ம்ம்ம்” “எப்ப புல்லட் வாங்குனீங்க” “போன வருஷம். எம்பிஏ முடிச்சதும் வாங்கினதுங்க...” “மைலேஜ் எல்லாம்..”

ரேணுவுக்கு சலித்தேவிட்டது. என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்? மழை நிற்கக்கூடாதா அல்லது இவனது அம்மாதான் வந்துவிடக்கூடாதா என்றே எண்ணிக்கொண்டிருந்தாள். வண்டியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை ”அம்மா கடைக்கு போயிருக்காங்களாப்பா” என்று இடைமறித்தாள். “ஆமாங்க்கா. அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க. நான் பாப்பாவுக்கு பால் வாங்கி வெக்க வந்தேன் ஆனா சாவிய மறந்துட்டேன்”என்று சிரித்தான். எங்கோ எப்படியோபோய் கடைசியில் அப்பாவுக்கே வந்தார்கள்.

“அப்பா போனதுக்கு அப்பறம் இப்பதான் அம்மா கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர ஆரம்பிச்சிருக்காங்க. மொதல்ல நான் அம்மா கூட இருந்தேன். மாடப்புரத்துக்கோ இல்ல இங்கயோ ட்ரான்ஸ்ஃபருக்கு மூவ் பண்ணிட்டிருக்கேன். மோஸ்ட்லி காரைக்குடிக்கு போகத்தான ஐடியா. ஆறுமாசத்துல வந்துரும்ன்னு சொல்றாங்க. அதுவர அங்க இருக்கறதாத்தான் ப்ளான். அக்கா கூட இப்ப அடிக்கடி வந்துபோறது அம்மாவுக்கு கொஞ்சம் சப்போர்ட்டிவா இருக்கு. மாமா கேம்ப்ல இருந்து வரவரைக்கும் அக்கா இங்கிருப்பா. பெரிய ஆறுதல் சனா தான். யாருக்கு தெரியும் அப்பாவுக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வரும்னு...” அடுத்த சில நிமிடங்களுக்கு மௌனம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தது. “இப்ப இந்தக் காம்பவுண்டுன்னால பரவால்லைங்க. சின்ன சின்னக் கொழந்தைங்க அக்கம்பக்கத்து ஆளுங்க கூட பேச்சுன்னு அம்மாவுக்கு நெறைய ரிலாக்சேஷன் இருக்கு” இன்னபிற பேசிமுடிக்கையில் மழை நின்றிருந்தது.

அன்றைய இரவில்தான் ராஜசேகரன் “சாரதிய அனுவுக்கு பேசலாமா?” என்றார். ரேணுவுக்கு புரியவில்லை. “என்னங்க பேசறீங்க?”

”இல்லம்மா சாரதி ரொம்ப நல்லபையனா பொறுப்பா தெரியறாப்ல அதான் கேக்கலாமான்னு நெனைச்சேன்.”

”என்னங்க பேசறீங்க. நாலுவரி சிரிச்சு பேசினவண்ட்ட என்னத்த நல்லது ஒழுக்கம் பொறுப்பக் கண்டீங்க. ஏதோ சாவியில்லாம மழையில நடுங்கிட்டு நிக்கறான்னு உள்ள வரச்சொன்னா இப்ப பொண்ணுதரேன்னு சொல்றீங்க” ராஜு இதனை எதிர்பார்க்கவில்லை.

“இப்பென்ன உடனே போய் கல்யாணமா பண்ணச்சொல்றேன். விசாரிப்போம்ங்கறேன். பாரு அப்பன எழந்துட்டு இப்ப தனியாளா குடும்பத்த தாங்கறான். பொறுப்பா பேசறான். அவங்களும் நம்மாளுங்கதானே. பையனப்பத்தி மொதல்ல விசாரிக்கலாம். பெரியாச்சிகிட்ட நாம்பேசறேன்”

சாரதி, 26, எம்பிஏ ஃபைனான்ஸ், திருச்சி செயிண்ட் ஜோசப்பில் படித்தவர், கனரா வங்கியில் ஆபிசர் மாதம் நாற்பதாயிரத்திச் சொச்சம் சம்பளம், சொந்த ஊர் காரைக்குடியருகே மாடப்புரம். அங்கே சொந்தமாய் ஒரு வீடு. புல்லட் வைத்திருக்கிறார். பிறந்ததிலிருந்தே கோவையில் இருக்கிறார். அப்பா முத்துக்குமரன் மின்சார வாரியத்தின் மேலாளராக இருந்தவர். காலமாகி எட்டு மாதங்களாகிறது. அம்மா மாதவி ப்ளஸ்டூ வரை படித்திருக்கிறார். அக்கா அனிதா. டாக்டர். உடன் படித்த ஆதி என்கிற வேற்று ஜாதிப்பையனை காதலித்து மணமுடித்தவர். அவருக்கு இரண்டு வயதில் மகள் பெயர் சனா.

கடைசி இருவரிகள்தான் ரேணுவை உலுக்கிக்கொண்டிருந்தன. இதுநாள் வரையிலும் தெரிந்த ஒன்றாகவே இருந்துவந்த ஒன்று தன் ஜன்னலை அடையும்போது அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ”அவங்கக்கா வேறாளுங்கள லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணவ. ஆரம்பத்துல போக்குவரத்து இல்லைன்னாலும் இப்ப ஒன்னா இருக்காங்க. நாம சீர்செனத்தி மொறை செய்யறப்ப வேறாளுங்க வந்து நின்னுக்கிட்டிருந்தா நம்ம சனம் என்ன நெனைக்கும் சொல்லுங்க”.

இதற்கும் ராஜசேகரனிடம் பதில் இல்லை. அன்று ரேணுவின் சித்தப்பா வந்தார். ”விசாரிச்சேன் மாப்ள முத்துக்குமரன்னாலே பர்ஃபெக்‌ஷன்ங்கறாங்க. ஆளு கை சுத்தம். பெரிய தலக்கட்டு. சின்ன ஆபீசரா சேர்ந்து படிப்படியா மேனேஜர் ஆனவரு. பையனும் சளைச்சவனில்ல. வேலபாக்கற பேங்க்க சுத்தி விசாரிச்சாச்சு. பையனுக்கு தம்மு தண்ணின்னு ஒன்னுமில்லையாம். பொறுப்பான ஆள்ன்னும் சொல்றாங்க. புல்லட்டு கூட சொந்தமா காச சேத்திவெச்சு வாங்கிருக்கான்னா பாத்துக்குங்க. பெரிய கைய்யி. அவங்கக்கா பண்ணதுக்காண்டி இந்த மாப்ளைய விடவேணாம்ன்னு தோணுது பாத்துக்கங்க” என்றார்.

ஆச்சிக்கு தகவல் சொல்லப்பட்டது. “என்ன ஆச்சி சொல்றீங்க” என்றார் ராஜசேகரன்.

“விசாரிச்சுப் பாப்பம்யா. இவளுக்கு அங்கதான் முடிச்சுன்னா யாரு என்னத்த மாத்தமுடியும்? பேசுங்க” என்றாள் ஆச்சி. தாத்தாவிற்கு மனம் சற்று குழம்பிப்போய் இருந்தது. ஆச்சியிடமே விசாரித்தார். “நீயா இப்பிடி பேசற” என்றார். “புரோக்கரு ஜோசியன்கீது வரன் சொன்னா பரவால்ல. மருமவப்புள்ள சொல்றாப்ல. என்னன்னு கேட்டுதான் பாப்பமே” என்றாள் ஆச்சி.

திடீரென்று வீட்டிற்கு சம்மந்த அழைப்புக்குப் பேசவந்த ரேணுவிடம் என்ன சொல்வதென்றே மாதவிக்கு தெரியவில்லை. கணவரின் கடைசி ஆசைப்படி அடைப்பு முடிந்து ஈபி குவார்ட்டர்ஸைக் காலிசெய்து இங்கு வந்த இரண்டாவது மாதத்திலேயே பெண் அமைந்திருப்பதன் நல்லநேரத்தை எண்ணி மகிழ்வுற்றாள். ஆனால் நம்மைவிட கொஞ்சம் மேல்சாதிக்கு பெண் கொடுத்திருப்பதை இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் அவளை  அலைக்கழித்துக்கொண்டிருந்தது. ராஜசேகரன் “அதெல்லாம் இந்தக் காலத்துல இருக்கறதுதானங்க” என்றார். மாதவி சற்று ஆசுவாசப் பட்டுக்கொண்டாள்.

அனுப்பிரியா, செல்லமாக அனு. வயது 21. தேவகோட்டை. மதுரையில் பிசிஏ முடித்து ஓராண்டாகிறது, வேலைக்குப் போகவில்லை. அப்பா துரைசாமி அரசு போக்குவரத்துக்கழத்தில் ஆபீசர். அம்மா செண்பகராணி. வீட்டம்மா. இரண்டு மகள். மூத்தவள் ரேணுகப்பிரியா. சாஃப்ட்வேர் இஞ்சினியரை மணந்திருக்கிறார். இவள் இளையவள்.

ஜாதகம் பெற்றுவந்த ராஜு எதிர்ப்பார்த்தபடியே பொருத்தம் அமைந்துவந்தது. ராசி லக்கனம் ஒத்துபோய் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு வரை பொருந்திவருவதாக ஆச்சியின் நலவிரும்பி ஜோதிடர் சொன்னார்.  ”அப்பனாத்தாளுக்கு ஒரு பாதகமும் இல்லை யோக பொருத்தம்தான்” என இன்னொருவ ஜோசியர் சொன்னார். ஜாதகப் பொருத்தம் ஒத்துவர ஆச்சியின் மனது இளகிவந்தது. பேசித்தான் பாப்பமே என்று ரேணுவிடம் சொல்லியனுப்பினாள்.  

பேசியபடி அவர்கள் பெண் பார்க்க வருவதாய் தகவல் வந்ததும் அனு கொண்டாட்ட மனநிலையினை அடைந்தாள். அக்காவின் கல்யாணம் முடிந்து ஒருவருடம்தான் ஆகியிருக்கிறது. அன்று பட்டுச்சேலையில் வலம்வந்தபோது ‘அடுத்து நீதான்டி’ என்றவர்களிடமெல்லாம் வராதவெட்கம் இப்போது வந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். கன்னியாகுமரியில் ஆசையாக வாங்கியிருந்த வெள்ளி மோதிரத்தை எடுத்துப் பார்த்தாள். “இது பசங்க போடுறதுடி” என்ற தோழிகளிடம் “அதுனால என்ன, அழகாயிருக்குல்ல, நாம்போடாட்டி எம்புருஷனுக்கு போடுவேன்” என்று சொன்னதை நினைத்துச் சிரித்தாள். மாப்பிள்ளையின் ஃபோட்டோவும் பயோடேட்டாவும் அனுவை அடைந்தது. அனுவின் புகைப்படம் சாரதிக்கு மெயில் அனுப்பப்பட்டது.

அன்றும் அனு வளையலை மழையாற்றில் வீசிக்கொண்டிருந்தாள். “கல்யாணமாகிப் போறவளுக்கு இன்னும் என்னடி வளையல வெச்சி வெளையாட்டு” என்று ரேணுகா சொன்னதும், அனுவின் வெட்கத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட மின்னலொன்று வெட்டியது.

அனுவின் புகைப்படத்தைப் பார்த்ததும், இன்னொருவரின் வீட்டில் தனது குடும்பசோகத்தைச் சொல்லிக்கொண்டிருந்த மடத்தனத்தை எண்ணி வருந்திக்கொண்டிருந்த சாரதிக்கு அதன் மூலமே தனக்கொரு அதிர்ஷ்டம் வந்ததை எண்ணி ஆசுவாசமடைந்தான்.

அனுவை முதல் முதலாக சாரதி அவன் வீட்டு பார்க்கிங்கில் வைத்துதான் பார்த்தான். “பக்கத்துவீட்டுப் பொண்ணு ரேணு இருக்காள்ல அவ தங்கச்சி” என்று அம்மா மறுநாள் சொன்னாள். ரேணு அழகிதான் இவள் பேரழகி, அனு புல்லட்டைத் தொட்டுப்பார்ப்பதை தன் கண்ணத்தில் கைவைப்பதாய் ரசித்து நின்றிருந்தான். மெலிந்து வளைந்து நெளியும் தேகம். பின்னிடை வரையிலும் அருவியாய்க் கொட்டும் கூந்தலுடன் நின்று அவள் புல்லட்டை ரசிப்பதை இவன் ரசித்துக்கொண்டிருந்தான். சட்டெனத்திரும்பிய அவளது கண்களைப் பார்த்துவிட்டான். ஈடுகொடுக்க முடியவில்லை. சில்லென்ற குரல் அவன் காதுகளை வருடியது. உங்களுதா என்று கேட்ட அவளது குரல் காதுகளிலிருந்து மூளைக்குப் போவதுவரை ரசித்துவிட்டு ஆமாங்க என்றான். நல்லாருக்குங்க என்றதும் அவனுக்கு ரெக்கை முளைத்தது. பறப்பவனுக்கு புல்லட் எதுக்கு என்றெல்லாம் எண்ணினான். இவ்வளவு அழகான பெண்ணிடம் அவன் பேசியதே இல்லை. அவளை புல்லட் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வண்டியை இயக்கி நகர்ந்தான்.

புல்லட்டில் தான் வருவேன் என்று அடம்பிடித்து, அம்மா சித்தப்பா சித்தி மாமா அத்தை சகிதம் சாரதி காரைக்குடியைடைந்தான். நாயகியம்மன் கோவில். அனுவின் குலதெய்வம். துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கும் அம்மன் சன்னிதியில் வைத்துச் சந்திக்கலாம் என்பது ஆச்சியின் வாக்கு.

காரில் மாதவி இறங்க பின்னால் புல்லட்டில் சாரதி வருவதை அனு பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வளவு பெரிய புல்லட்டை அவ்வளவு தூரத்துக்கும் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டுவந்தவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.
எத்தனையோ முறை வந்திருந்தாலும் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி குதிரையில் அமர்ந்தபடியிருக்கும் இடம் அவளுக்கு இன்றுமட்டும் புதிதாய் தெரிந்தது. வாண்டுகள் சூழ சிலைக்குப்பின் நின்றவளின் இதயம் வேகமாய்த்துடித்தது. மெலிந்த தேகம், சீராய் நிற்கும் தலைமுடி, வெண்ணிறமாய் பளிச்சென்று சவரம்செய்யப்பட்ட முகம். “செம்ம மேக்கப்போல அக்கா” என்ற வாண்டுகளை அவள் கவனிக்கவேயில்லை. ‘முதலில் எல்லாம் உறுதியாகட்டும்’ என்று மனவோட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றாள். முடியவில்லை. இவனா என் ஆளுமை? இவனுடனா நான் பயணிக்கப்போகிறேன்? இவனது விரல்களைத்தான் இனி நான் பிடிக்கவேண்டுமா? எனது ஆசை மோதிரத்தை இவனுக்கு அணிவிக்கவேண்டுமா? என்றெல்லாம் அவளது சிந்தனை பறந்துகொண்டிருந்தது.

அதுவரை சுடிதாரில் சிரித்த அனுவின் புகைப்படத்தையும் புல்லட் அருகே நின்றிருந்த பிம்பத்தை மட்டுமே பார்த்திருந்த சாரதிக்கு அலங்கரிக்கப்பட அனுவை பட்டுசேலையில் பார்த்ததும் அளவளாவிய ஆசை உண்டானது. பூப்போடும் சம்பிரதாயங்களுக்குப் பிறகு பேசத்தொடங்கினார்கள். ”அனு படிச்ச பொண்ணுன்னாலும் நம்ம கலாச்சாரத்த விட்டுக்குடுக்காம வளர்ந்தவ. சமையல்லாம் பிண்ணியெடுப்பா, சைவமாகட்டும் அசைவமாகட்டும் அனு சமையலே தனி” என்றார் துரைசாமி. “நம்ம பொண்ணு சமைக்கலன்னாதானே அதிசயம். சாரதியும் நல்லா சாப்ட்டு வளர்ந்த பையன். நல்ல ஜோடிதான்” மாதவி கொளுத்திப்போட தனக்கும் வெட்கப்படத்தெரியும் என்று சாரதி கண்டுகொண்டான்.

எல்லாரும் சிரித்துக்கொண்டிருக்க, அம்மன் சன்னதியில் அனிதாவின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததை ஆச்சி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறத்திமகள் அம்மனிடம் விளையாடுவதை அவளால் ஏற்கமுடியவில்லை. ”அவங்க புள்ள அப்பிடிப்போனா போயிட்டுப்போவுது நாம நம்ம பிள்ளைய ஒழுங்காத்தான வளத்தியிருக்கோம். அதெல்லாம் சரி பண்ணிக்கலாம்” என்று தான் ஆச்சி சம்மந்தம் பேசவே ஒப்புக்கொண்டாள். இன்று பிஞ்சுக் குழந்தையின் மூலம் வெளிவந்த பிறத்தி பிம்பமும் அதன் மூலம் பின்னாளில் ஏற்படும் பங்கங்களின் விளைவுகள் என்னவாய் இருக்குமென்பதன் எண்ணம் அவளை மெல்ல மெல்ல அரிக்கத்தொடங்கியது. அனிதாவிடம் “பிள்ளையத் தூக்கிக்கம்மா விழுந்து வெச்சிடப்போவுது” என்று ஜாடை காட்டினாள். அந்தக் குழந்தை அவளைவிட உயர் சாதியின் விழுது. அந்தக் குழந்தையின் இருப்பு ஆச்சிக்கு நான் தாழ்ந்துவிட்டேனா என்ற எண்ணைத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. 

அதனை அக்கறையாகக் கண்ட மாதவி “பொண்ணு மாப்ள பேசிக்கட்டுமே” என்றாள். “நாம குறுக்க ஒக்காந்திருந்தா சின்னஞ்சிறுசுங்க என்ன பேசுவாங்க அப்படிப்போயி பேசட்டும்” என்றார் அனுவின் தாத்தா. ஆச்சியின் கண்கள் சுட்டெரிக்கத் தொடங்கின. இவையேதுமறியாது சாரதியும் அனுவும் நவக்கிரத்தை ஒட்டி மெல்ல நடக்கத்தொடங்கினார்கள்.

அவர்களுக்கிடையில் நாணமும் மௌனமுமே பேசிக்கொண்டிருந்தது. இருவரின் கண்களும் மோதிக்கொண்ட தருணத்தில் சிரிப்பு மட்டுமே எஞ்சியது. பேசமுற்பட்ட சாரதிக்கு வார்த்தைகள் வராது தவித்தான். தன் முழுசக்தியையும் திரட்டி,”நான் சாரதி, கனரா பேங்க்ல..... சொல்லிருப்பாங்கன்னு நெனைக்கறேன்.” என்றான். அவனது குரலில் தென்பட்ட தழுவலை அனு உணர்ந்து “ம்ம்ம்” என்றாள். அனுவுடன் வந்திருந்த குழந்தை அவனுக்கு அசௌகரியத்தை அளித்தது. அனுவின் புடவையை வாண்டு இழுக்க அந்த ஓரிரு கணம் மட்டும் எட்டிப்பார்த்த பாதங்களைப் பார்த்தான். மிகச்சுத்தமாக இருந்தன. “நான்…. நீங்க எதாவது கேக்கனும்ன்னா...” ”நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கலையா” சாரதி முடிப்பதற்குள்ளாக அனு கேட்ட முதல்கேள்விலேயே ஆச்சரியமானான். “இல்ல உங்க அக்கா லவ் மேரேஜ்ன்னு சொன்னாங்க” தொடர்ந்தாள். “இல்லைங்க. எனக்கு அந்த சான்ஸ் கெடைக்கல. ஐ மீன் அந்தமாதிரி யாரும் என் லைஃப்ல வரல.” “யாரும் அவ்வளவு அழகா இல்லையா” “அப்படியில்லைங்க. அழகப்பாத்துதான் லவ் வரணும்ன்னு இல்லியே அழகுங்கறது பொண்ணோட குணத்துலயும் அவள நாம பாக்கற பார்வையிலயும்தான் இருக்கு” சாரதியின் பேசுவது அவளுக்கு சிரிப்பை வரவைத்தது. ”கல்யாணத்துக்கு அப்பறம் லவ் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்” என்றதும் சிரித்த அவள் “நான் சும்மாதான் கேட்டேன். உங்களுக்கு என்ன புடிக்கும்” என்றவளிடம் “உங்க நம்பர் தரீங்களா” என்றான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

“சாரதி எல்லாத்தையும் இப்பவே பேசிடாத”என்று குரல் கொடுத்தாள் அத்தை. அதைத்தொடர்ந்து உண்டான கலகலப்புச் சிரிப்புகள் ஒலித்துமுடிக்கும்முன் ”தருவேன்” என்றுமட்டும் சொல்லிச்சென்றாள் அனு. “எல்லாம் நல்லபடியா அமஞ்சிருக்கு. மிச்சத்த வீட்ல பேசிக்குவம்” என்றார் சாரதியின் சித்தப்பா. “நமக்குதான் அமையனும்னு விதியிருந்தா அமையும்ங்க” என்று விடைபெற்றாள் மாதவி. ஆச்சி ஒன்னும் சொல்லலைங்களா? என்றாள் ரேணு. ஆச்சி சிரித்துக்கொண்டே வீட்லா பேசிக்கலாம்யா என்றாள்.

புல்லட்டை உதைத்த சாரதி ஒருமுறை திரும்பிப்பார்த்தான். அனுவைக் காணவில்லை. அவன் கண்கள் தன்னைத்தான் தேடுகிறது என்பதை அனு உணராதில்லை.  எப்படியாவது அவளிடம் ‘இதுவும் லவ் மேரேஜ் தான்’ என்று சொல்லிவிட நினைத்தான்.

அனுவின் வீட்டில் பேச்சுவார்த்தை முடியும்வரையிலும் வீட்டில் காத்திருந்த சாரதிக்கு இருப்பு கொள்ளவில்லை. மாதவி வந்திறங்கியவுடனே அவளைப் பற்றிக்கொண்டான்.

”பெரியவளுக்கு நூறு பவுன் ரெண்டு லட்சம் ரொக்கம் ஒரு கார் குடுத்தாங்களாம்” மாதவி சொல்லச்சொல்ல “எனக்கு கார் வேண்டாம். அவள நான் புல்லட்லயே கூட்டிகிட்டு போவேன்” இடைமறித்தான் சாரதி. ”அட முழுசாச் சொல்லவுட்றா. அவங்கக்காவுக்கு மாப்ளவீட்ல நாப்பது பவுன் போட்டு கல்யாண செலவுல பாதிய எடுத்துக்கிட்டாங்களாம். நம்மளையும் நாப்பது பவுன் போடச்சொல்றாங்க”. “அதுசரி நாம அக்காவுக்கு எழுவத்தஞ்சு தான் போட்டோம். இவங்க நூறுன்னா அங்கயும் இருவத்தஞ்சு போடனுமேம்மா கணக்குப்போட்டு பாத்தா நகைக்கே இருவது லட்சம் தாண்டுமேம்மா” என்றான் சாரதி.

“இதுபோக நம்ம முறைப்படி வைர அட்டிகை போடனும். அத போட்டுக்கலாம். நானும் யோசிச்சு, முப்பதுதான் போடுவேன்னேன். நம்ம வழக்கம் அதானே. அனிதாவுக்கு அவ்வளவுதான செஞ்சாங்க. இதுக்கு அவங்க கலந்து பேசிட்டு சொல்றேன்னாங்க” என்றாள் மாதவி. “ம்ம்ம்” என்று தலையசைத்தான்.

”துணியெடுக்கறதுல்லாம் இந்த தடவ பிரமாதப் படித்திடனும். நம்ம வீட்டு கடசீக் கல்யாணம்ல. அடுத்து இருக்கறதெல்லாம் பொடுசுங்க வேற. துணியில ஆரம்பிச்சி அரசாணிக்கால் நடுறதுல இருந்து காப்புக் களைச்சு சம்பந்தம் கலக்கற வரைக்கும் எல்லாமே முறையா பெருசா செய்யனும்டா. தண்ணி வாக்கறது சோறு படைக்கறதெல்லாம் நம்ம செலவுதான். ஆனா…” மாதவி இழுக்க சாரதி பதட்டமானான்.

“என்னம்மா?”

”ஒன்னுமில்லடா அவங்க தொங்குத்தாலி போடச்சொல்றாங்க. நாங்க கொம்புதான் போடுவோம்ன்னேன். அதான் அவங்க யோசிக்கறாங்க. நான் பெரியவங்க கிட்ட கலந்துகிட்டு சொல்றேன்னேன்” என்றாள் மாதவி.

”அதென்னமா கொம்புத்தாலி தொங்குத்தாலி? தாலியில என்ன வெரைட்டி?”

”கொம்புங்கறது சாதாரணமா இருக்கும்டா. நான் போட்டிருந்தேன்ல அது. தொங்குத்தாலின்னா தாலிக்கொம்ப சுத்தி காசுமாலை மாதிரி ரெண்டு பக்கமும் வடிச்சு போடுவாங்க.”

”அவ்வளோதானே அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் இருந்திடப்போகுது. இப்பொ இதெல்லாம் யாரு பாக்கறா”

”இருக்குடா இதெல்லாம் உனக்கு மெல்ல மெல்லத்தான் புரியும்”

தயக்கத்துடனே “ம்ம்ம்” என்றான் சாரதி. புரிந்துகொண்ட மாதவி “கவலப்படாதடா எல்லாம் இருக்கறதுதான் பாத்துக்கலாம்” என்றாள். சாரதி சிரித்துவைத்தான். கல்யாணச் செலவாய் ஆகவேண்டிய எல்லாவற்றையும் ஏற்கக்கூடிய சக்தி அவனுக்கு உண்டென்பதை அவன் அறிந்திருந்தான்.

அனுவிற்கு இருப்பு கொள்ளவில்லை. இந்த மோதிரத்தை அவனுக்கு அணிவிக்கவேண்டும். அந்தக் காட்சியினை கற்பனை செய்து பார்த்தாள். கோவிலில் அவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் சுமிக்குட்டி தனது புடவை இழுத்தபோது வெளியே தெரிந்த இடையைப் பார்த்திருப்பானா என்ற எண்ணம் அவளை மொய்த்துத் தின்றுகொண்டிருந்தது. பார்த்தானா இல்லையா? இதை யாரிடம் எப்படிப்போய் கேட்பது? அவனது பார்வை தன் இடையின் மீது விழுவதை கற்பனை செய்து பார்க்கையில் அவள் உடலெங்கும் நாணம் பரவசமாய்ச் சிலிர்த்தெழுந்தது.  என்னையப் பிடிச்சிருக்கா என்று சாரதி கேட்ட கணத்தை மீளமீள எண்ணத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

தன்னளவிற்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்த காதல் என்ற உணர்வு தன்னை ஆட்கொண்டு உண்டான நெகிழ்வை வெகுநாள் கழித்து சாரதி உணர்ந்தான். ‘அனு ஏன் அப்படிக்கேட்டாள்’ என வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருந்தான். என்னைக் காதலிக்கிறாயா என்பதைத்தான் அப்படிக்கேட்டாளா? எனக்குதான் புரியவில்லையா. நம்பர் தருவதைவிட தருவேன் என்று மட்டும் சொன்னது மிகப்பிடித்திருந்தது. இவளை எப்படியாவது மண்முடிக்கவேண்டுமென்று ஆவல் கொண்டான். எக்கணத்தில் இம்முடிவை அடைந்தான் என அவனால் யூகிக்கமுடியவில்லை. அவளை முதல்முதலாக பார்த்தபோதா அவளது ஃபோட்டோவை மணிக்கணக்கில் ரசித்தபோதா அல்லது அவள் லவ் பண்ணலையா என்று கேட்டபோதா. இவ்வெண்ணங்கள் அரித்துக்கொண்டிருக்க, அன்றாடத்திலிருந்து மீள தனியே மேற்கொள்ளும் புல்லட் பயணங்களுக்கு துணை கிடைக்கப்போவதை எண்ணினான். இவள் வந்துவிட்டாள் இனி புல்லட் எதற்கு என்றெல்லாம் எண்ணி புரண்டு புரண்டு படுத்தான். தனியே சென்ற இடங்களுக்கு மனைவியை அழைத்து வரவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறப்போவதை எண்ணியே உறங்கிப்போனான்.

இரண்டாம் நாள் மழை பெய்தது அன்று அனு வெளியே வரவேயில்லை. பெண்பார்த்துச் சென்ற மறுநாள் காலை அவள் குளிக்கும்போது நாணம் அவளைத் தின்றதை நினைத்துக்கொண்டிருந்தாள். அது இவ்வளவு ஏமாற்றமாய் முடியும் என அவள் நினைக்கவில்லை. பக்கத்து வீட்டுப்பையனை சகலையாக்க நினைத்த ராஜசேகரனுக்கும் அது இடியாய்த்தான் இருந்தது. “என்னால அந்தம்மா மூஞ்சியிலயே முழிக்கமுடியாது. நீயே போய்ச் சொல்லிட்டு வா போடி” என்று உள்ளே சென்றுவிட்டார். ரேணு தேற்றிக்கொண்டு மாதவியிடம் பேசிவிட்டுவந்தாள். ரேணு வெளியே செல்லச்செல்ல மாதவியின் கண்களிலும் நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

”எங்க ஆச்சிக்கு இஷ்டமில்லைங்கம்மா. நம்ம வழக்கத்தமீறி வேறாளுங்கள கல்யாணம் பண்ணி சேத்துவெச்சுக்கிட்டிருக்கறது அவருக்கு புடிக்கல. மீறி கல்யாணம் பண்ணா நான் வரமாட்டேங்கறாங்க. நாங்களும் சமாதானபடுத்திப்பாத்தோம். ஜாதகப் பொருத்தம் கவர்மெண்ட்டு உத்தியோகம்ன்னு எவ்வளவு சொல்லியும் கேக்கல. அவங்கக்காவ தள்ளிவெச்சுட்டு பண்ண சொல்லட்டான்னு தாத்தா கேட்டுங்கூட விடாப்பிடியா மறுத்துட்டாங்க.” மாதவிக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது. கணவர் இருந்தவரை தான் அவமானப்பட்டதேயில்லை என்பதை நினைக்கையில் மீண்டும் மீண்டும் வலித்தது. “பையன் ஃபோட்டோ இதுல இருக்கு. பொண்ணு ஃபோட்டோவ குடுங்கம்மா” என்றாள் ரேணு.

“இங்க பாரேன் பொண்ண. எவ்வளவு அழகா இருக்கா பாரு. சாரதிக்கு கேக்கறாங்க. குடுத்து வெச்சவன்ல. இவனுக்கு வெக்கத்தப் பாரேன்” என்று ஒவ்வொருவரிடமும் ஆசையாய் காண்பித்த கணங்களை எரிக்கமுயன்று தோற்றுப்போய் மாதவி ஃபோட்டோவை திருப்பிக் கொடுத்தாள்.

தன்னால் தனது அம்மா அழுவதைத் தாங்கமுடியாமல் “நான் வேணா போயிடவாம்மா” என்றாள் அனிதா. மடியில் தூங்கிக்கிடந்த சனாவின் கண்ணத்தில் மாதவியின் கண்ணீர் சுட்டது. சாரதியிடமிருந்த புகைப்படத்தை டெலிட் செய்யச்சொன்னாள். வைத்திருக்க உரிமையில்லையென்றாலும் சாரதியால் அது முடியவில்லை.

அனிதாவால் எதையுமே ஜீரணிக்கமுடியவில்லை. விஷயம் தடம் மாறுவதையறிந்ததும் அசாம் மெடிக்கல் கேம்பிலிருந்து அவசரமாய் வந்தார் அனிதா கணவர் ஆதி. அதுவும் சாரதிக்கு மகிழ்வளிக்கவில்லை. அவர் ராஜசேகரிடம் பேசினார்.

“என்ன சார் கூப்ட்டு வெச்சு அவமானப்படுத்திருக்கீங்க. எங்க கல்யாண விசயம் தெரிஞ்சுதானே பொண்ணு பாக்க கூப்ட்டீங்க இப்ப அதையே காரணங்காட்டி மறுத்தா என்ன சார் அர்த்தம். செவனேன்னு நின்னுட்டிருந்தவனக் கூட்டிவெச்சு ஆசகாட்டி அவமானப்படுத்தறீங்களா சார். ஏற்கனவே நொந்திருந்தவனக்கூப்ட்டு இப்படி பண்ணாக்க என்ன சார் அர்த்தம்” என்றார் ஆதி.

“இல்லைங்க நான் மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன். நானும் முடிஞ்சளவு சமாதானப்படுத்திக்கிட்டிருக்கேன்ங்க” என்றார் ராஜசேகரன்.

“என்ன சார் சமாதானம்? எதுக்கு? இவ்வளவு ஆயிருக்கு. சாதி சம்பிரதாயம்ன்னு பேசறீங்க நீங்க சம்மந்தம் பேச வந்தப்ப பக்கத்துவீட்டு ஜோதி அக்காவத்தான கூப்ட்டு வந்தீங்க. அவங்க உங்க ஆளுங்களா? அப்ப எங்கபோச்சு உங்க சம்பிரதாயம்? இந்தக்காலத்துல இதெல்லாம் ஒரு பிரச்சனையா சார்”

“சார் நீங்க பெருந்தன்மையா பேசுறீங்க. ஆச்சி பேச்ச மீறமுடியாது, நகையும் கம்மிங்கறதால பேசமுடியல. நாப்பது பவுன் போடுவீங்கன்னு எதிர்பாத்தோம் அதான்”

”அட நகையெல்லாம் ஒரு விஷயமா சார். மாப்ளைக்கு இருக்க்ற வசதிக்கு உங்களவிட அதிகம் போடமுடியும். அதுவா முக்கியம்? இந்த தாலி விஷயம்கூட ஒத்துப்போனமே”

“உங்களுக்கு புரியலைங்க. ஆச்சி சொல்றதெல்லாம் மறுக்க முடியல. மூணாவது முடிச்சு மாப்ள அக்காதான் துணைநின்னு போடுவாங்க. பிறத்திவீட்டுக்கு போனவள வெச்சு போடனுமான்னு ஆச்சி கேக்குது. முதல் விருந்தும்கூட அங்கதான் அனுப்பனும். இது தேவையான்னு கேக்கறாங்க. என்ன சொல்லுவீங்க” என்றார் ராஜு.

ஆதிக்கு சட்டென்று உறைத்தது. இவர்கள் எதைநோக்கி வருகிறார்கள் எனத்தெள்ளத்தெளிவாய் புரிந்தது. தனது காதல் சாரதிக்கு வில்லங்கமாய் அமைந்ததை எண்ணியபடி பெரும் மௌனத்திற்குப்பிறகு ”உங்களுக்கு நகைதான் பிரச்சனைன்னா சொல்லுங்க. நகை அம்பதா போடுறோம். இல்ல வேற எதுவும் பிரச்சனைன்னாலும் பேசிட்டு சொல்லுங்க. நாம மறுபடியும் பேசுவோம்“ என்று சொல்லி ஏமாற்றமாத்துடன் திரும்பினார் ஆதி.

மீண்டும் தொடங்கிய பேச்சுவார்த்தை ஆச்சியை ஈர்க்கவில்லை. ”அவங்கக்கா புருசன் என்னப் பெரிய இவனா? நம்மள விட பெரிய தலக்கட்டுன்னு காட்றானா” என்றாள் ஆச்சி. முப்பதுக்கும் ஐம்பதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அவளுடைய நினைப்பெல்லாம் பிறத்திமகளின் மீதுதான். நல்ல பையன் வசதியான இடம் அம்பதுக்கு ஒப்புக்கொண்டது எல்லாவற்றையும் அனிதா ஒருத்திக்காக நிறுத்த எண்ணமின்றி துரைசாமி வம்படியாய்ப்பேச ஆச்சி வேறு திட்டங்களை தீட்டத்தொடங்கினாள்.

மறுபுறம் நடப்பதை எண்ணிச் சிரித்த அனு, “இவர்கள் செய்தது சரி நான் சாரதி மீது ஆசைவளர்த்தது தான் தவறா” என்றெண்ணியபடி வளையலை வைத்துக்கொண்டு மழைக்காகக் காத்திருந்தாள்.

ஆச்சி ஒப்புக்கொண்டதாய் ரேணு சொல்லியது மாதவிக்கு ஆறுதலாய் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து சொல்லப்பட்டதை மாதவியால் நம்பவேமுடியவில்லை. சாரதியும் அவளும் ஒருவரையொருவர் மாற்றிமாற்றி பார்த்துக்கொண்டார்கள்.

“பாதி செலவ நீங்க ஏத்துக்கணும். பதினோரு பட்டுப்பொடவ வெக்கனும். இது என் கல்யாண சிடி. இதுல பாத்து இதுமாதிரி செய்ங்க. ஏன்னா மொதக்கல்யாணம் அவனக்க முறையில செஞ்சிருப்பீங்க. இதுதான் நம்ம முறை பாத்துருங்க. அப்பறம் மாப்ள திருப்பூரு கோயமுத்தூரு இல்ல நம்ம ஊருன்னா இந்த சுத்துலயேதான் இருக்கனும். வெளியூர் வெளிநாடுன்னுல்லாம் போனா சரிப்படாது. முக்கியமா அக்கா வந்துபோறது பிரச்சனையில்ல ஆனா பொண்ணு மாப்ள அக்காவீட்டுக்கு வராது. இதெல்லாம் சரின்னா பேசலாம். அப்பறம் அப்பாவுக்கு புரமோஷன் வருது இன்னும் நாலஞ்சு மாசத்துல. ரிட்டயர் ஆக ஒருவருஷந்தான் ஆனாலும் எந்த ஊருன்னு தெரில. அதனால கல்யாணம் ஒருவருஷம் கழிச்சு வெச்சுக்கலாம். அதுக்கு ஒரு ரெண்டு மாசம் முந்தி பரிசம் போட்டு நிச்சயம் பண்ணிக்கலாம்” என்றாள் ரேணு.

ஆதி மாதவி உட்பட யாருக்குமே இதில் உடன்பாடு இல்லை. சாரதிக்கும் கூட, “கல்யாணக் கேசட்டக் குடுத்து செய்யச்சொல்றாங்க. ஏன் நாம எதுவுமே பண்ணதில்லையா?” மாதவிக்கு கோபமாய் வந்தது.

”அத்தை, உடனே நிச்சயம் பண்ணனும். இவங்க மாத்தி மாத்தி பேசறத நம்பமுடியாது. அதனால பரிசம் மட்டுமாவது இப்போதைக்கு போட்டே ஆகனும்” என்றார் ஆதி.

மாதவிக்கு சற்று தயக்கம். ஐம்பது என ஒப்புக்கொண்டதில் செலவுகள் அதிகமாவதைப்பற்றிய கவலை அவளைச் சூழ்ந்தது. கணவரின் செட்டில்மெண்ட்டாக இதுவரை பத்துலட்சம் வந்திருக்கிறது. இன்னமும் வருமென்பதில் ஐயமில்லை. அதை நம்பிக் காத்திருக்கமுடியாது கையிலிருப்பதையும் சேமிப்பையும் வைத்து திட்டமிடத்தீர்மானித்தாள். எல்லாவற்றையுமே சமாளிக்கமுடியும் எனப்பட்டது. ஆனால் அனிதா விஷயத்தில் உடன்படமுடியவில்லை. சாரதியும் ஒப்புக்கொண்டான். ”கல்யாணம் ஒருவருஷம் தள்ளின்னா நான் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிடுவேன். அப்ப அம்பதாயிரம் வர சம்பாதிக்கலாம். சொந்த வீட்டுக்கே போயிட்டா போக்குவரத்து அலச்சல்ல ஆகற சில்ற செலவெல்லாம் மிச்சம்மா. அவள ராணி மாதிரி பாத்துக்குவேன். ஆனா அக்கா இல்லாம... அது கஷ்டம்மா” என்றான்.

வெகுநேரம் யோசித்த மாதவி “பேசாம நீயும் லவ் பண்ணித்தொலஞ்சிருக்கலாம்டா” என்று எழுந்து சென்றாள்.

“நானும் அவள லவ் பண்றேம்மா” என்று சொல்லமுற்பட்ட சாரதிக்கு தோல்வியே மிஞ்சியது.

அன்றிலிருந்து இரண்டாவது வாரம் சாரதி வீட்டில் வீடு வாடகைக்கு என்ற குறிப்புக் கொண்ட அட்டை தொங்கியது. சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாய் பேசிக்கொண்டார்கள். “ஆபீஸுக்கு வந்துபோறதையெல்லாம் நாம்பாத்துக்கறேன். இனி தனியா இருக்காத” என்று மாதவியை ஊருக்கு அனுப்பிவிட்டான் சாரதி.

“நல்ல சம்மந்தம். கவர்மெண்ட் வேலயில நல்லபையன். எல்லாத்துக்கும் மேல யோகப்பொருத்தம். இதுல மாப்ள வீடு யாரு பொண்ணு வீடு யாருங்கறத மறந்துட்டு இப்படி ரூல்ஸ் போட்டா எவந்தான் ஒத்துக்குவான்.” என்று அனுவின் அம்மாவைக் கடிந்தார் துரைசாமி அவரால் கூட ஆச்சியை எதிர்த்துப்பேச முடியவில்லை. 

“இனிமே மாப்ள விஷயமா எங்கிட்ட கலந்துக்கவேணாம். நீங்களே முடிவுபண்ணிக்கோங்க. தேதி சொல்லுங்க வந்து நிக்கறேன்” என்றார் ராஜசேகரன்.

துரைசாமி தாளவாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். “இந்த வயசுல, அதுவும் வயசுக்கு வந்த பொண்ண வெச்சுக்கிட்டு காட்டுக்குள்ளலாம் போகமுடியாது. அங்க ஒக்காந்துகிட்டு அதுக்கு கல்யாணம் காச்சின்னா என்ன செய்யறது, ரிட்டயர்மெண்ட் வாங்கிடலாம்ன்னு இருக்கேன்” என்றார் துரைசாமி.

”படிக்கவெக்கறேன்னு சொல்லிதானப்பா சம்மந்தம் வேண்டாம்ன்னு சொன்னீங்க. இப்ப எதுக்கு கல்யாணத்தப்பத்தி பேச்சு ரிட்டயர்மெண்ட்டப்பத்தி. எந்தக்காட்டுக்கு போனா என்ன” என்றாள் ரேணுகா.

அன்றிரவு ஆதியும் சாரதியும் தனியாக இருந்தனர். ஆதி குடித்துக்கொண்டிருந்தார். “நாம விசாரிச்ச வரைக்கும் ராஜு அவங்கம்மா வீட்டுக்கு போறதே இல்லியாம். கல்யாணமாகி ஒரே மாசத்துல பொண்ணு தனியா பிரிச்சிட்டு வந்திருச்சு. அம்மா வீட்டுக்குப்போனா அரை நாளு மாமியார் வீட்டுக்குப்போனா ஆறு நாளுன்னு டேரா போட்றாப்ல.” சிறிது மௌனம். ஆதியின் போலிச்சமாதானத்தை அவன் மனம் ஏற்கவில்லை.

ஆதி தொடர்ந்தார். ”உங்கக்கா வீட்டுக்கு வராத பொண்டாட்டி உனக்கு தேவையாடா? நாளைக்கு எம்புள்ளைக்கு எதுன்னா நல்லது செய்யனும்ன்னா நீதான் தாய்மாமன். நீ வந்து உம்பொண்டாட்டி வரலைன்னா அதுதான்டா அவமானம். இது உனக்கு செட்டாகுமாடா? உன்னையும் அந்தமாதிரி பிரிச்சிட்டு போயிட்டா அம்மா என்ன பண்ணுவாங்க. இந்த வயசுல என்ன பண்ணுவாங்க. என் வீட்ல வந்து ஒக்காருவாங்கன்னு நெனைக்கறியா? சான்ஸே இல்ல. பொண்ணு நல்ல பொண்ணுதாம்ப்பா. ஆனா இப்படி பேசினா? எதுக்கும் நீ அம்மாவையும் அக்காவையும் நெனைச்சுக்கோ. அப்பறம் முடிவெடு” மௌனமாக எழுந்து உள்ளே சென்ற சாரதியைப் பார்த்தபடியே சிகரெட்டைப் பற்றவைத்தார்.

உள்ளே ஷவரில் நின்றபடி சாரதி அழுதுகொண்டிருந்தான். மன்னித்துவிடு அனு. எனது எல்லைகளைப்பற்றி எண்ணாமல் உன்மீது ஆசை வைத்ததைத்தவிர நான் பிழையேதும் செய்யவில்லை. அன்புக்கும் அரவணைப்புக்கும்தான் நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் எதிர்பார்த்ததும் அதைத்தான். இதுவும் லவ் மேரேஜ் தான் என்று சொல்ல எத்தனைமுறை தவித்தேன். உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா? ஆனால் என் எண்ணம் முழுவதும் நீதான். இப்போதுகூட என்னை நீ ஆட்கொண்டிருக்கிறாய். ஆம் அனு நான் அன்று உன் இடையை நான் பார்த்திருக்கக்கூடாது. பார்த்திருக்கவே கூடாது.”

ஈரமாக வெளியே வந்த சாரதி “மாமா எனக்கும் ஒரு ரவுண்டு ஊத்துங்க” என்றபடி மதுக்கோப்பையை கையிலெடுத்தான்.

மழை பெய்துகொண்டிருந்தது. ரேணு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பூட்டிய எதிர்வீட்டையும் அவளது மோதிரத்தையுமே மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள் அனு. மழைநீர் அவள்முன் மெல்லியதொரு வரியாய் ஓடிக்கொண்டிருந்தது. சிலநாள் முன்புவரை அந்த இடத்தில் கண்ட அந்த புல்லட்டும் இல்லை அவனும் இல்லை.

போலிச் சமாதானக்களை எதிர்கொள்ளத் துணிவின்றி அனு கண்களை மூடிக்கொண்டாள். ”யார் நீ சாரதி? எதற்காக என் வாழ்வில் வந்தாய்? என் கைகளைப்பிடிக்க உனக்கு ஆசையில்லையா. நாந்தான் எல்லைமீறி உன்மீது ஆசைகொண்டுவிட்டேனா? என்னிடையை நீ பார்த்திருப்பாய் என்று நான் நாணியதெல்லாம் எதற்கு? என் குளியலறைவரை எண்ணங்கள் வரையும் நீ புகுந்தது நியாயமா சாரதி? இரண்டே வாரத்தில் என் வாழ்வில் எல்லாவுமாக என் எண்ணத்தில் குடிபுகுந்து அவசரமாக விலகிச்சென்றது ஏன்? நாம் ஒன்று சேர்ந்து வாழ்வதைப்பற்றித்தானே சிந்தித்திருந்தேன். நம்மால் நிகழ்த்த முடியவில்லை. இனி வேறொருவனை ஏற்கமுடியுமா அல்லது நினைக்கவாவது முடியுமா? உன்னாலது முடியுமென்றால் எனக்கும் அதைச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கலாமே. என் நினைவுகளிருந்தும் நாணங்களிலிருந்தும் உன்னை நான் விலக்க முயற்சிசெய்வதைத் தவிர இப்போதைக்கு நான் செய்ய ஒன்றுமேயில்லை. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்பதையாவது அறிவாயா சாரதி?” அனு அழத்தொடங்கினாள்.

அனுவின் அழுகையை அறியாத ஆச்சி பேசினாள் ”இப்பிடி மூஞ்சிய தூக்கிவெச்சிருந்தா என்னம்மா அர்த்தம். குடியா போயிடுச்சு. யாருக்கு யாருன்னு நாமளா முடிவு பண்ணமுடியும். அப்பறம் மேல ஒருத்தன் எதுக்கு இருக்கான். நமக்கென்ன வேற ஆளா கெடைக்காது? என்ன சொல்லி என்ன செய்ய, நீ ஆசப்பட்டது இப்படி நின்னு போயிடுச்சு” என்றாள்.

சட்டென நிமிர்ந்த அனு “நின்னுடுச்சுன்னு சொல்லாத ஆச்சி. நிறுத்திட்டேன்னு சொல்லு” என்றபடி மோதிரத்தை மழையில் வீசி எழுந்து வேகமாக உள்ளே சென்றாள். அந்த மோதிரமும் அலைவளையலாய் மழையில் மிதந்துகொண்டிருந்தது.


-                            
                                                       - ஷா

14 August 2015

நிராகரிப்பின் முத்தம்

நிராகரிப்பின் முத்தம்

பாதி அணைந்துவிட்ட
லாந்தர் வெளிச்சத்து
இரவுகளில்
இந்தப் புன்னைமரத்தினடியில்தான்
நான்
பைசாசங்களை சந்தித்தேன்

அவை மெல்ல மெல்ல
நெருங்குகின்றன
முத்தமிட்டன

யாருமறிந்திராத
தமது தற்கொலைக்
கதைகளைச்
சொல்கின்றன

நாங்கள் வாழ்ந்த காலங்கள்
ஆண்ட தேசங்கள்
இழிவுகள்
காதல்கள் என
எல்லாவற்றையும்
பேசுகிறோம்

நிராகரிப்பின் கணத்தில்
அவை இறந்தவிதத்தை
சொல்லச் சொல்ல
நயவஞ்சகத்து
நாய்கள் விழித்தெழுகின்றன

அந்தப் பற்களின் நறநறப்பிற்கு
அஞ்சிய நாங்கள்
கலைந்துபோகிறோம்

நான்
பைசாசங்களின் மரணங்களைப்பற்றி
நினைத்துக்கொண்டு

அந்த முத்தங்களுக்கு ஏங்கிக்கொண்டு
லாந்தர் அணையக்
காத்திருக்கிறேன்

தவிர
பேசவோ
நினைக்கவோ எனக்கு
வேறொன்றுமே இல்லை
வேறாரும் இல்லை


- ஷா