சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

28 January 2015

கன்னி - ஒரு அனுபவம்

அமலா.

இந்தப்பெயருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என்னை வடிவமைத்த பள்ளியின் பெயர் அமலா. அதில் ஒரு குருவாக என்னை வழிப்படுத்தி நெறிப்படுத்தியவரது பெயரும் அமலா. முழுப்பெயர் அந்தோணி ஜெபாஸ்டியன் அமலா.

எனக்கு உடன் பிறந்த அக்கா இல்லை என்ற கவலையை அதிகப்படுத்தியதும் இவர்.அதனை மறக்கச்செய்தவரும் இவர்.

நாயகன் சந்தனப்பாண்டி அவனது பெரியம்மா பெண்ணான அமலா அக்காவுடன் பேசுவதெல்லாம் எனக்கு எனது அமலாவைப்பார்த்தது போலிருந்தது. அமலாவுக்கு என்ன ஆனாரென்று எனக்கும் தெரியவில்லை பாண்டிக்கும் தெரியவில்லைஇதுவே இந்த நாவலை எனக்கு மிக மிக அருகில் கொண்டுவந்து விட்டது.

கன்னி’ – ஜெ. ஃப்ரான்சிஸ் கிருபா

தீக்குள் விரலை வைக்கும் காதல் இன்பம் இப்புதினம்

நான் படித்தவரை, காதலை இவ்வளவு ரணமான வலியுடன் சொல்லும் புதினம் வந்ததில்லை. குறிப்பாக இறுதியாக வரும் மழைஅத்தியாயம். அதன் பேரழகான காதல் காட்சியின் பின்புலத்தில் ரணம் ஒளிந்துகொண்டிருப்பது ஆகப்பெரிய வலி.

இந்த ஒரு நாவலையே, நான்கு நாவல்களாகப் பார்க்கலாம்.

அமலாவின் அன்பு, சாராவின் மீதான காதல், பாண்டியின் மனப்பிறழ்வு மற்றும் பாண்டியின் மனவோட்டங்கள்.

பாண்டியின் மனவோட்டக்காட்சிகள், குறிப்பாக சூழல் வர்ணனைகள் எல்லாம் தனி ரகம். சூழ்நிலைக்கு ஏற்ப சுற்றியிருக்கும் பொருட்களை வைத்து காட்சி அமைப்பு ஏற்படுவது அபாரம். உதாரணமாக, சங்கிலிக்கட்டுண்ட பாண்டி மணலில் புதைவதாய் அமையும் காட்சியில்

// முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

*

கன்னி போன்ற நாவல்களில் முக்கியமானது எழுத்து நடைஉண்மையான காதலைக்கொண்டு மனக்கிளர்ச்சி ஏற்படுத்தி அத்துடன் வலியுடன் கண்ணீரையும் கலந்து வடிக்கச்செய்யும் இந்நாவலுக்கு ஃப்ரான்சிஸ் கிருபா சலிப்பூட்டாத வகையில் எழுத்துநடை அமைத்திருக்கிறார். வாசிப்பின் போக்கில் மூழ்கியிருக்கும்பொழுது சில இடங்களில் நம்மையும் மீறி ஒரு நிமிடம் நின்று, அந்த நடையை ரசிக்கும் தருணம் இந்நாவலில் நிறைய ஏற்படுகின்றது. பிறழ்வின் விளிம்பில் நிற்கும் நாயகனின் அமானுஷ்யமான கற்பனைகளை அந்த வட்டார மொழியிலேயே விவரித்திருப்பது எனக்கு பிடித்த மிகமுக்கியமான ஒன்று. மேலும் எனக்குப் பிடித்திருந்தவைகளுள் சில.

// விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

// சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதைகிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

*

கவிதைகள்: கன்னியில் தேவதேவன் கவிதைகள் ஆங்காங்கே இடம்பெறுகின்றனபிரக்ஞையின் ஊசிமுனையில் நிற்கும் போதையை இன்னும் ஏற்றிவிடுவதாக இருக்கிறது. தேவதேவன் நாவலிலும் வருகிறார். அவரது பகுதிகளில் நிகழ்பவையெல்லாம் பாண்டியின் உள்ளுணர்வுப் பரவசத்தை ஊக்குவிக்கும் இடங்களாக உள்ளது. அமலாவும் சாராவும் விலகுமிடத்தில் முறையே மஞ்சள் நிற ஆடையை அணிகிறார்கள். அவர்களின் விலகலில் உண்டாகும் மனப்பிறழ்வினை மஞ்சளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். ஏலாதி ஆசாரியின் நினைவுக்கு என்று எழுதப்பட்டிருக்கும் முதல் பக்கம், பாண்டியின் நிலை என்னதான் ஆனது என்பதற்கு விடை தருகிறது.

*

கன்னியின் உள்ளட்டைப்படம்


*

சராசரி பந்தபாசத்துக்கு உட்பட்டு காதலில் விழுந்து தவிக்கும் மிகச்சாதாரண இளைஞனான பாண்டியின் வாழ்வில் வரும் தேவதைகளைப் பற்றி:

அமலா

இவள் ஒரு தேவதை.

அமலாவின் நிழல் போல வளரும் பாண்டி அவள்மீது அளவற்ற பாசம் கொள்கிறான். அமலாவை பழித்தவனை வதைக்கிறான். தனது புனைப்பெயரைஅமலா தாஸ்என மாற்றிக்கொள்ளுமளவு அது தீவிரம் பெறுகிறது.

அமலா கர்த்தரின் குழந்தை என்ற புனிதம் பற்றிய எந்த உயர்ந்த அபிப்ராயமும் அவளுக்கில்லை. லௌகீக உலகின் மீது சிறு சலனம் அவளுக்கு உண்டென்றாலும் அதை இறையியல் மூலம் கடந்து சென்றுவிடுகிறாள்.

// பியூரிடிக்கு ஒருபவர் இருக்கு, எல்லா விதத்திலயும் வணங்கித்தான் ஆகணும். வேற வழியேயில்ல குறிப்பா ஆண்களுக்க” – அமலா 

பாண்டியின் மீதான அமலாவின் அன்பு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. அவை பிரதிபலிக்கும் காட்சிகளாகடீச்சர் குளியல்’, ‘கடற்கரை நடைமற்றும் ஒவ்வொருவரிடமும்இவன் என் தம்பி’. என ஆவலுடன் அறிமுகம் செய்யும் காட்சி என சித்தரிக்கப்படுகிறது. மிகமுக்கியமாக, அந்தோனியார் கோவிலில் பாண்டியை ஏலம் எடுக்கும் காட்சிகளில் அமலாவின் அன்பு உச்சம்.
பாண்டியின் மீது ஆர்வம் கொண்டுள்ள விஜிலா, மரியபுஷ்பம் ஆகிய இருவரும் அழகான பாத்திரப்படைப்பின் உதாரணங்கள்.

*

சாரா

பாண்டியின் கண்களுக்கு தேவைதையாக உருவெடுத்து  யட்சியாக மாறி பின் தேவதையாகவே மாறிவிடும் கன்னி.

// கண்ணீர்த் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியும் அழுவதைச் சட்டென்று நிறுத்திவிட்டான். கண்ணில் நிறுத்தப்பட்ட நீர் நெஞ்சில் நெருப்பாக எரியத் தொடங்கியது.”

நெஞ்சில் எரியும் நெருப்புக்குச் சொந்தக்காரி. பாண்டியால் வீசப்பட்ட காதல் அலைகளை சாரா பெற்றுக் கொண்டாளா என்பதன் வர்ணனை:

// உன் வாசனை காற்றில் இதோ என்னைக் கடந்துகொண்டிருக்கிறது. கனிந்த மஞ்சள் மாம்பழங்களில்இன்று குதிரை முகங்கள் தோன்றுகின்றன. மனதில் முளைத்த சிறகின் வன்மைக்கு கனவின் திசைகள்போதவில்லை. சுவடுகள் பறந்தோடும் புழுதிக்காட்டில் என் பாதையில் நடந்தே வருகிறேன்.எதிர்த்திசையில் நீ வந்துகொண்டிருக்கிறாயா சென்றுகொண்டிருக்கிறாயா?

அலட்சியத்தின் கத்திகளை சாரா ஒவ்வொரு முறை வீசும் பொழுதும் அது பாண்டியை விட வாசகனாகிய என்னையே அதிகம் தாக்குகிறது. கடைசி ஆணி இறங்குகையில் நான் காணமல் போகிறேன்.

*

சாரவும் அமலாவும் நெஞ்சை விட்டு விலக மறுத்து படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதீத காதலும் தீராத பாசமும் ஒருவனுக்கு நிகழும் அற்புதத்தருணம் இந்த நாவல். முதல் நாவல் என்ற எந்தவொரு சலுகையுமில்லாமல், தனதான அங்கீகாரங்களை அடையும் தகுதிகளோடு மிகச்சிறப்பாக இதனைப் படைத்திருக்கிறார் ஃப்ரான்சிஸ் கிருபா.
அன்பு முத்தங்கள்.

பரிந்துரைத்த நண்பர் ராஜனுக்கு ஆழ்ந்த நன்றிகள்

*

கன்னிதீக்குள் விரலை விட்ட காதல் இன்பம் இப்புதினம்

- ஷா