சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

14 February 2014

அவள் எனக்கு எழுதிய காதல் கவிதை


’ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்று அதிர்ந்துகொண்டிருந்தது வீடு.

குதூகலாமாக இருந்த நண்பர்கள் எனது முதுகைப் பதம்பார்த்துவிட்டு கேக்கைப் பிய்த்து எனது முகத்தில் அப்பியவண்ணம் இருந்தனர். அம்மாவிற்கோ ஆனந்தத்தில் கை கால்கள் கொள்ளவில்லை. என்னை விதவிதமாக படமெடுத்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் என் அம்மாவிடம் அதைக்காட்ட உவகைகொண்ட அவள், எனது பழைய புகைப்பட நினைவுகளைப்பற்றிப்பேச, பழைய ஃபோட்டோ ஆல்பங்கள் வெளியே எட்டிப்பார்த்தது.
பார்த்து சிரித்து முடிக்கப்பட்ட ஆல்பங்களையும் ஓய்ந்து முடிந்த ஆர்ப்பரிப்புகளையும் விழுங்கிவிட்டிருந்த வீட்டினை அம்மா சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளையே பார்த்தவண்ணம் சோபாவிலேயே படுத்திருந்தேன். கண்களை லேசாக மூடி தூங்க முயற்சிக்க, திடீரென பதறிக்கொண்டு எழுந்தேன்.

ஒரு கனவு.

ஒரு பெரிய வெள்ளம் அணை உடைத்துக்கொண்டுவிட்ட ஒரு நீர்த்தேக்கத்தின் பெருக்கம் வந்துகொண்டேயிருக்கிறது. எப்போதும் வரும் கனவுதான் என்றாலும். இந்தக்கனவு இப்பொழுது ஏன் வந்தது?

இந்திரா

நண்பர்களுக்கு காண்பித்துக்கொண்டிருந்த ஆல்பங்களில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த அம்மா தற்செயலாக அதில் அவளைப்பார்த்த பின் உச்சரித்த பெயர். அவளால்தான் இந்தக்கனவு.

ஒரு பெரிய வெள்ளம் அணை உடைத்துக்கொண்டுவிட்ட ஒரு நீர்த்தேக்கத்தின் பெருக்கம் வந்துகொண்டேயிருக்கிறது. இந்த நீர்ப்பரப்பிலிருந்து மீண்டு எழுந்து ஒற்றைச்செடியைக் காப்பாற்ற விழைந்த குரங்கின் வாலைப்பிடித்து நீரிலிருந்து மேல் எடுத்து, கரை நோக்கி வரும்போது நீர்க்கொந்தளிப்பில் சிதறும் மீன்களைப்பிடிக்க முற்பட்டு தோல்வியுற்று நீந்தி நீந்தி நான் மீண்டுவந்து கரையில் நிற்கிறேன். அந்த இடமே அழிந்துவிட்டது. நானும் பாதி அழிந்துவிட்டேன். இனிமேல் ஒன்றுமேயில்லை. எவ்வளவோ கனவுகளுடனும் ஆசைகளுடனும் என் வாழ்வின் சிறு சிறு பகுதிகளைக் கட்டி வளர்த்திக்கொண்டு அதனை கனவுக்கு விலையாகக்கொடுத்துவிட்ட பின்னர் அந்த குரங்கை மட்டும் காப்பாற்றிவிட்டேன். அது ஒரு மலையின் மீது ஏறி நின்று ஓவென அழுகிறது. அப்போது ஒரு தேவதை தோன்றுகிறாள். நீர்நிலை அமைதியாகிறது. மீண்டும் பூ பூக்கிறது. மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன. அந்த தேவதை என் அருகில் வருகிறாள். சற்று உற்றுப்பார்த்தால் அது நீ. எனக்கெனப் பிறந்தவள் இந்த தேவதை’ என்று நான் கண்ட கனவைச் சொல்லும்போதெல்லாம் முத்துப்பற்கள் தெரிய கண்கள் மூடி வெட்கிச்சிரிக்கும் அழகான தேவதை அவள். பெயர் இந்திரா.

என் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என்னை முழுவதுமாக நம்பிய ஒரே ஜீவன் அவள். ஒரே ஊரில் பிறந்து மழலைகளாக ஒன்றாக வளர்ந்தவர்கள் என்றாலும் பருவமெய்திய பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட இடைவெளிதான் காதலை உருவாக்கியிருந்தது. பிழைப்புக்காக மாமன் வெளியூருக்கு குடிபெயர்ந்து சென்றதிலிருந்துதான் இந்தப்பிரச்சனை. அவளது ஸ்பரிசத்துக்காகவே ஆண்டுமுழுவதும் காத்திருந்து விடுமுறைக்கு மாமன் வீட்டிற்குச்செல்வேன். வா மருமகனே என்று அத்தை கூப்பிடும்போதெல்லாம் அவள் வெட்கப்படுவாள்.
எங்கோ படித்த வாசகம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொன்றையும் நன்றாகப்பார்க்க அதற்கான இடைவெளிகள் வேண்டும். சிலசமயம் காலத்திலும் சிலசமயம் தூரத்திலும். தினம் கிடைத்த தேவதை தரிசனம் இனி ஆண்டுக்கு ஒருமுறைதான் என்றபோது அதன் அருமை புலப்பட்டது. காலத்திலும் தூரத்திலும் உருவான இடைவெளிதான் என்னை அவள் மீது பைத்தியமாக்கியது.

அந்த ஆண்டு விடுமுறையில் அவளைப்பார்க்க தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். வெட்டாந்தரையில் நான் உருவாக்க விரும்பிய ஒரு பூங்காவனத்தின் இளவரசியாக அவளை அமரவைக்கவேண்டும். அதற்கேற்ப என்னை மாற்றி வெடித்துச் சிதறவிருக்கும் இந்தக் காதலை அவளிடம் ஒப்படைக்கவேண்டுமென்ற தீர்மானத்துடன் தான் வந்திருந்தேன்.

மாமா சென்னைக்கு சென்றிருந்தார். அங்கேயே தொழில் அமைந்துவிட்டதாம். வாரத்துக்கு ஒருமுறைதான் வருவார். நாளை நான் ஊருக்கு கிளம்பியாகவேண்டும். அவர் வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என்பதால் நானும் அவளும் மட்டும் பெரியகோவிலுக்கு சென்றோம்.

அங்கிருந்த புல்தரையில் அமர எத்தனிக்கையில் அவளது தாவணி என் கையை உரசிச்சென்றது. அவளருகில் அமர்ந்ததும்  அவளது ஸ்பரிசம் என்னை சொர்கத்தில் இருப்பது போல உணரச் செய்தது. எங்களைக்கடந்து செல்லும் ஒருவராவது எங்களை ’காதலர்கள்’ என்று நினைக்கமாட்டார்களா என மனம் ஏங்கியது. வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடிய நான் மெதுவாக பேசத்தொடங்கும் முன் அவள் கைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தாள்.

‘இது சரியான்னு தெரியல, நீ என்னைய பிரிஞ்சிருந்தப்போ உன்ன நெனைச்சு எழுதின கவிதை இது’ என்றாள். ஆனந்தத்தில் நிதானிக்கமுடியாமல் காலத்தையும் சூழலையும் மறந்து அந்த கவரைப் பிரித்தேன். சட்டென என் கையைப்பிடித்துக்கொண்டு இப்ப வேண்டாம்’ என்றாள். என் கண்களில் நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

மௌனத்தின் மொழியில் காதலைப்பூசிக்கொண்டே இருக்கும் பொழுது சரஸ்வதி மஹாலுக்கு போலாமா என்றாள். தலையை மட்டும் அசைத்தேன். செல்லும் வழியெல்லாம் அவள் என் கைகளைப் பற்றியிருந்தாள். நீ மேல போ நான் டிக்கெட் எடுத்துட்டு வரேன் என்றேன். சரஸ்வதி மஹாலுக்கு பின்னால் உள்ள அந்த அரண்மனை கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு அவள் அஸ்தமனமாகும் சூரியனின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். சுற்றியாருமே இல்லை. தர்பார் மூடப்படும் நேரம் என்பதால் எல்லோரும் கிளம்பிவிட்டிருந்தார்கள். இன்னும் பத்து நிமிடம்தான். நாளைக்கு ஊருக்குப்போறேன் என்று காவல்காரனிடம் கெஞ்சி இந்தத் தனிமையை பெற்றிருக்கிறேன். மெல்ல அவளருகில் நெருங்கி அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, அந்த மாலைக்காற்றிலும் அதன் வெளிச்சத்திலும் மின்னி மின்னி அவள் முகத்தில் படர்ந்திருந்த அவளது கூந்தலை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களைப்பார்த்தேன். ‘உன் கவிதைய படிச்சேன்’ என்றதும் வெட்கத்தில் அவள் தன்னையே உள்ளிழுத்துக்கொள்ள முற்பட்டாள். அவள் கைகளை நான் விடவில்லை. வெட்கத்தில் கன்னங்கள் சிவந்திருந்தன. ‘கவிதை சுமார்தான், ஆனா இந்த கவிதை எழுதின கைக்கு என் பரிசு’ என்று மெல்ல அவல் கையை எடுத்து என் கன்னங்களில் ஒற்றி, அவளது உள்ளங்கையில் முத்தமிட்டேன். இந்த அகண்ட நிமிடத்திற்குள்ளேயே இருந்துவிடவேண்டும் எனத்தோன்றியது. சட்டென துள்ளியெழுந்து என்னைக்கட்டிக்கொண்டாள். இந்தப் பெருவெளியில் இவ்வளவு சிறிய இடத்தைப் பிடித்துக்கொண்டு எவ்வளவு பெரிய அழகியலை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைத்து சொக்கிக்கிடக்கையில் சட்டென விலகி என் கன்னத்தில் முத்திமிடத்தொடங்கினாள்.

‘என்னடா ஆச்சு’ என்று அம்மா பதற, சோபாவுல இருந்து வழுக்கிட்டம்மா என்று சமாளித்தபடியே என் அறைக்குள் நுழைந்துகொண்டேன். என் கண்களில் இருந்த கண்ணீர்த்துளியை அவள் பார்த்திருக்கமாட்டாள். இந்த தேவதைக்கனவு இனியது. இது ஒரு இனிய துன்பம். அறைக்கு உள்ளே சென்று தாளிட்டு என் பெட்டியைத்திறந்தேன். அதில் அவள் எழுதிய கவிதை இருந்தது.

அந்த முத்தங்களுக்குப்பிறகு நான் தஞ்சாவூருக்கு போகவே இல்லை. என்னை போகவிடவில்லை என்பதே உண்மை. கல்லூரியில் சேரவேண்டும் கார் ட்ரைவிங் ஸ்பெஷல் கோர்ஸ் படி என்றேல்லாம் ஏமாற்றி காலம் தள்ளி, என்னை அங்கு விடவே இல்லை. கல்லூரி விடுதியில் இருந்து அப்பாவை ஏமாற்றி ஒருநாள் அத்தை வீட்டிற்குச் சென்றபொழுதுதான் உண்மை என் உச்சந்தலையில் ஆணியடித்தது.

சென்னைக்கு சென்ற மாமன் அங்கேயே ஒரு குடும்பம் அமைத்துவிட்டதாலும் இங்கு பல பிரச்சனைகளை தாங்கவொண்ணா அத்தை இந்திராவை ‘வரதட்சனையே வேண்டாம், கடன் எல்லாத்தையும் நானே கட்டிடுறேன், உங்க பிள்ளைய கட்டிக்குடுங்க’ என்ற தூரத்துச் சொந்தக்காரனுக்கு மணமுடித்துவிட்டாளாம். இந்த கோபத்தில்தான் என் தந்தை அவர்கள் வீட்டிற்கே செல்லவிடாமல் தடுத்திருக்கிறார். அவள் தற்போது மாயவரத்தில் இருப்பதாகச் சொன்னாள். ஓராண்டுக்குப்பின்னரே இது எனக்குத் தெரியவந்தது. முன்னும் பின்னும் குறுகி கபடமான அசைவுகளன்றி எனது கனவுகளையும் என் ஆழத்துக்குறிய கம்பீரத்தையும் தின்றுவிட்ட காலத்தை எண்ணி வழி நெடுக அழுதுகொண்டே கல்லூரிக்கு வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நானல்லவா அவளை மணந்திருக்கவேண்டும். தொலைபேசியில்லாக்காலம் என்றாலும் ஒரு கடிதமாவது போட்டிருக்கலாமே என்ற குற்ற உணர்வு வதைக்கிறது. அன்றைய முத்தங்களால் அவளைக் கொஞ்சமாக காதலித்தபோதும் காதலித்துவிட்டேன் என்பதே போதுமாக இருந்தது. என் கனவை நிறைவேற்றமுடியாமல் போனதை எண்ணியும் அவள் முத்ததிற்கு ஏங்கியுமே காலம் கழிகிறது!

அவளுக்குப் பிடித்தமான இந்த வெள்ளத்தின் கனவைக் வரவிடாமல் தடுக்க முயல்கிறேன். பயப்படுகிறேன்.  அதற்கு காரணம் உண்டு.  இனி அந்தக் குரங்கு மலையின்மீது ஏறி கத்தும் பொழுது, என் தேவதை வரமாட்டாள். அப்படியே வந்தாலும் அவள் என் காதலியாக அல்லாமல் இன்னொருவனின் மனைவியாக வருவாள். என் தேவதையை இன்னொருவனின் மனைவியாக என்னால் பார்க்கமுடியாது. அந்த மனதைரியம் என்னிடம் இல்லை. அந்த நொடியின் ரணத்தை என்னால் தாங்கமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் இந்தக்கனவு வரும்போதெல்லாம் அவளது கவிதையைப் பார்ப்பேன். இப்பொழுது என் கையில் அவள் கவிதை இருக்கிறது. கண்களில் கண்ணீருடன் அதைப்படிக்கத் தொடங்கினேன்.

உன்னில் நானும்
என்னில் நீயும்
கலந்ததை நாம்
உணர்ந்தபோது வந்தது – பிரிவு!
பிரிந்தாலும் அன்பே
நீ என்னிடமும்
நான் உன்னிடம் வாழ்கிறோமே
நம் கனவுகளில்…
என்றாவது ஒருநாள்
நீயும் நானும்
’நாம்’ ஆகிவிடுவோம்
என்ற எண்ணமே என் உயிராகியதடா…
அந்த நாளை எண்ணி
தேய்கிறேன் தேய்பிறையாய்
நம் காதல்
வளர்வதோ வளர்பிறையாய்…
முன்னே வருவது
முழுநிலவா வெறும் இரவா’
என்பதை காலம் தீர்மானிக்கட்டும்
அதுவரை
கனவுகளில் காதலிக்கலாம் வா’
-    இந்தி்ரா….