சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

18 December 2014

[சிறுகதை] சடலம்

சூரியக் கதிரில் மின்னும் கற்கள் பதித்த தரைகள் கொண்ட தெரு செங்குத்தாக சரிந்த வண்ணம் இருந்தது. மரங்கள், கட்டிடங்கள், மனிதர்கள் என எல்லாம் செங்குத்தாக இயங்கிக்கொண்டிருந்தது. யாரும் எதுவும் பேசிக் கொண்டது போல் தெரியவில்லை. மயான அமைதி. இவ்வளவு அழகான வண்ணமயமான இடத்தில் ஏன் இந்தப் பேரமைதி என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லோரும் அழகாக இருக்கின்றார்கள். சந்தோஷமாகவும். அந்தத் தெருவினூடாக நடந்து செல்கிறேன். இது போன்ற ஒரு கிராமத்தில் என் வாழ்நாள் தொடராதா என்ற ஏக்கம் மேலிடுகின்றது.

எதிரில் தென்படுபவர்களிடம் 'இந்தத் திரைப்படத்தை இயக்கியது யார்?' என்று கேட்கிறேன். ஏதோ புரியாத பெயரைச் சொல்கிறார்கள். தலையில் கூடை வைத்தபடி செல்லும் சிறுமியிடமும் அதே கேள்வியைக் கேட்கிறேன். கொத்து கொத்தாகக் கிடக்கும் பிரண்டைச் செடியினை நோக்கி கை நீட்டுகிறாள். அடர்ந்த பிரண்டைச் செடிகளுக்கிடையில் அந்த இயக்குனரின் பச்சைப் பெயர் சிக்கிக் கிடக்கின்றது. அந்தப் பெயரை ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் எடுத்து ஒரு தேவாலயத்தினை நோக்கிச் செல்கிறேன். தேவாலயத்திற்குள் நுழைந்த அடுத்த நொடியில் அந்த செங்குத்தான கட்டிடம் கிடைமட்டமாக மாறியதை வியந்து நெஞ்சில் சிலுவை போட்டுக் கொள்கிறேன். திடீரென கையிலிருந்த இயக்குனரின் பெயர் ஒரு பாம்பாக மாறியிருப்பதைக் கண்டு பயத்தில் தூக்கி எறிகிறேன். அங்கிருந்தவர்கள் எல்லோரும் கலைந்து ஓடுகிறார்கள். இப்போது அங்கே பேரிரைச்சல். அந்தப் பாம்பை அடித்துக் கொன்ற பிறகே அந்த இடம் மீண்டும் அமைதி பெறுகின்றது. இந்தக் குழப்பத்திற்கு காரணம் நான் என்று ஏதேனும் என்னை செய்துவிடுவார்களோ என்ற பயம் விலகி பெருமூச்சு விடுகிறேன். குனிந்து கீழே பார்க்கையில் எண்ணற்ற பாம்புகள் என்னைச் சுற்றி இருக்கின்றது. அதில் ஒன்று என் வலது கையின் பெருவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையே இருக்கும் சதையைக் கவ்வுகின்றது.

மகளே, தினமும் கொடுங்கனவினால் ஆட்கொள்ளப்படுகிறேன். நன்றாக உறங்கிய நாளை என் நினைவில் கொண்டுவரமுடியவில்லை. உறங்கவில்லை என்றால் உயிர் வாழ முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உறங்கச் செல்கிறேன். எது என் உறக்கத்திற்கு தடையாக இருக்கின்றது என்பதை இன்றளவும் கண்டுகொள்ள முடியவில்லை மகளே. பல நேரங்களில் இது கனவு தானா என்ற குழப்பமுமிருக்கின்றது.

என் கனவில் பாம்புகள் அதிகமாக வருகின்றது. விதவிதமான பாம்புகள். மஞ்சள் நிறத்தில் நீண்டு தடித்த பாம்பு. தளிர்விட்ட இலையை விட அழகிய பச்சை நிறத்தில் பாம்பு. விரலை விட சிறிய தேன் நிறத்தில் பாம்பு. முடியின் அடர்த்தியில் வேகமாக ஓடும் பாம்பு. தலை மட்டும் தடித்த பாம்பு. இன்னும் வித விதமாக. ஏதோ ஒரு பாம்பு என்னைக் கொத்தும் வேளையில் விழித்துவிடுகிறேன் மகளே. விழிக்கையில் என் அறையெங்கும் பாம்புகள் நிறைந்திருக்கின்றது. அவற்றின் மேல் என் கால்கள் படாமல் எட்டு வைத்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் அதே போல் நடந்து வந்து படுத்துக்கொள்கிறேன். அதன் பின்பு தூக்கம் நன்றாக வருகின்றது. இப்போதும் தூக்கம் வருவது போல் தோன்றுகிறது. உறங்கச் செல்கிறேன் மகளே. நாளை எழுதுகிறேன்.

·

உன் முகம் என் நினைவில் இல்லை மகளே. பிறந்து சில நிமிடங்களில் உன்னை என்னிடமிருந்து பிரித்து சென்றுவிட்டார்கள். நீ எப்படி இருப்பாய் என்று நானே கற்பனையில் வரைந்து வைத்திருக்கிறேன். ஒரு கவிஞனான என்னை ஓவியனாக மாற்றியது நீ தான் மகளே. இப்பொழுதெல்லாம் கவிதை எழுதுவதில்லை. இணையம் வந்த பின்பு கவிதைக்கான மதிப்பு மலிந்துவிட்டது. கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே கவிதை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கவிதைகளை உணர்ந்துகொள்ள முடியாதவர்களே தங்களைக் கவிஞன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஒரு கவிஞனாக என்னைக் காட்டிக்கொள்ள துளியும் விருப்பமில்லை. தீவிரவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் மத்தியில் சுகவாசியாக வாழ்ந்து கொண்டு கவிதை எழுதி என்ன சாதித்து விடப் போகிறேன்.

நான் வரைந்த உன் ஓவியமும் கவிதை போல் தான் இருக்கின்றது என்கிறார்கள் நண்பர்கள். உன்னை வரைந்தால் பின் அதை கவிதையென்று அழைக்காமல் வேறென்னவென்று அழைப்பது? அவர்களுக்கு அது கவிதையென்று தோன்றலாம். எனக்கு உயிர். உயிர் எங்கே இருக்கிறதென்று யாரேனும் காட்ட இயலுமா மகளே? என் உயிர் நீ என்பதை நீ அறிவாயா மகளே? உன் வயதை நாட்களில் எண்ணினால் அதை விட அதிகமான எண்ணிக்கையில் உன் ஓவியம் என்னிடம் இருக்கின்றது. எப்போது இதைப் பார்க்க வருவாய்? இப்போது நண்பர்கள் யாரும் என்னைத் தேடி வருவதில்லை. எதனால் என்னை விட்டு விலகிப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

உன் பெயர் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. உனக்கு நான் என்ன பெயர் வைத்திருக்கிறேன் தெரியுமா? இது வரை யாரும் அப்படி ஒரு பெயரை வைத்ததில்லை. மகள்! உன்னை மகளே என்று ஒவ்வொரு முறை அழைக்கும் போது தான் என் இதயம் இயல்பாகத் துடித்துக் கொண்டிருக்கின்றது. என் மகளைத் தான் நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். நீ எப்படி இருப்பாய்? உன் முகம் என் நினைவில் இல்லை மகளே. நீ எப்படி இருப்பாய்? இம்முறையேனும் ஏமாற்றாமல் ஒரு புகைப்படம் அனுப்பித் தருவாயா?

·

உன்னை இனி என் வாழ்வில் பார்க்கவே முடியாது என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. இந்த சிந்தனை வரும் போதெல்லாம் என்னை நானே துன்புறுத்திக்கொண்டு அச்சிந்தனை மேலும் வர விடாமல் தவிற்க முயற்சிக்கிறேன். விடாமல் என் தூக்கம் கலைக்கும் கொடுங்கனவினைப் போல இந்த நினைவும் என்னை வாட்டி எடுக்கின்றது மகளே. எனினும் உன்னைப் பார்த்து விடுவேன் எனும் ஒரு துளி நம்பிக்கையில் தான் இன்னும் இந்தக் கொடிய நரகத்தில் இருக்கிறேன்.

நேற்று இன்னொரு மகள் வேண்டுமென்று உன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன் மகளே. உன்னை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். உன்னை என் மடியில் கிடத்தி என் முகம் பார்த்து நீ சிரிப்பதைப் பார்க்க வேண்டுமென்று பேராசை மகளே. உன்னைப் போன்றே இன்னொரு மகளைப் பெற்றுக் கொடு என்று கெஞ்சினேன். துப்பாக்கி முனையில் உயிருக்காக இறைஞ்சுபவனைப் போல கெஞ்சினேன். சில வாரங்கள் உணவருந்தாமல் கையேந்துபவனைப் போல கெஞ்சினேன். இன்னொரு மகளைப் பெற்றுக் கொடு.

இது நாள் வரை பேசாமல் தான் இருந்தாள். உன்னை என்னிடமிருந்து பிரித்துச் சென்ற அந்த நாள் முதல் அவள் என்னிடம் பேசியதில்லை மகளே. நாளை எப்படியும் பேசிவிடுவாள் என்ற நம்பிக்கையிலேயே என் இரவு விடிகிறது. இன்னொரு மகள் பெற்றுக் கொடு என்று கேட்ட பின் என்னைப் பார்ப்பதைக் கூட தவிர்க்கிறாள் மகளே.

உன்னைப் பெற்றெடுப்பதில் உன் அன்னைக்கு துளியும் விருப்பமில்லை. நீ வேண்டாம் என்ற எண்ணத்தில் இல்லை. குழந்தை பிறப்பதை எண்ணிய பயம். நீ அவள் வயிற்றில் கருவுற்ற பின்னும் கூட அதை கலைத்திடத் துணிந்தாள். எவ்வளவு பேசியிருப்பேன். நான் பேசிய வார்த்தைகளையெல்லாம் சேர்த்தால் இந்த உலகத்தை நான்கு தடவை சுற்றி விடலாம். பிரசவ வலி எடுக்கும் வரை என் பேச்சில் நம்பி வாழ்ந்திருந்தாள். பிரசவ நேரத்தில் பதுங்கியிருந்த பயம் மீண்டும் எட்டிப் பார்க்க நான் ஏதோ வன்கொடுமை செய்தது போல் அலறினாள். அன்று என் முகத்தை பார்க்க கூட அவள் விரும்பவில்லை.

எனக்கென்று இங்கு யாருமில்லை என்ற எண்ணத்தை விதைக்கிறாள் மகளே. இவ்வெண்ணம் வளர்ந்து நான் நலிந்து போகும் முன் என்னைக் காண வருவாயா? நீ என்னுடனிருந்தால் உன் முகம் பார்த்தே என் வாழ்க்கையை நகர்த்திவிடுவேன். பிறந்த குழந்தையைக் கையில் வைத்து தாங்கும் அதே உற்சாகத்துடன் என் வாழ் நாள் முழுதும் உன்னைப் பேணிப் பாதுகாப்பேன் மகளே. உன் அம்மாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இனி இது போன்று இன்னொரு மகள் வேண்டும் என்று அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன். என்னிடம் பேசச் சொல்வாயா?

·

தூக்கம் வராமல் நள்ளிரவில் உலாவிக்கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றேன். மெர்குரி விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு பெண்ணை நான்கைந்து பேர் சிதைத்துக் கொண்டிருந்தனர். நான் இருப்பதை யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் வேலையை சாவகாசமாக முடித்துவிட்டு இருளில் மறைந்தனர். நானும் அங்கிருந்து நகர்ந்துவிடவே எத்தனித்தேன். திடீரென மீண்டும் அவள் அலறும் ஓசை, என்னை அவளை நோக்கி நகர்த்தியது.

வயிறு பெருத்திருந்தது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். வன்புணர்ந்து கொண்டிருக்கும் போது எழுப்பிய சத்தத்தைக் கூட சகித்துக்கொள்ளலாம் போல. இப்போது அவள் அலறலில் பூமி ஒரு முறை குலுங்கி சமநிலைக்குத் திரும்பியது. மீண்டும் அங்கிருந்து நகர்ந்துவிட எத்தனிக்கும் வேளையில் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்திருந்தாள். ஈன்ற மறு நொடி சிரித்த வண்ணம் குழந்தை என்னை நோக்கி தவழ்ந்து வந்தது. நானும் வாரி அணைத்துக் கொண்டேன். நான் அக்குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பேரானந்தத்தில் நடந்தேன்.

·

      உன் தங்கை அழகாக சிரிக்கிறாள் மகளே. உன் தங்கைக்கும் மகள் என்றே பெயர் வைக்கவிருக்கிறேன். உனக்கேதும் ஆட்சேபனை இல்லையே? என் ஓவியங்களில் இருக்கும் முகத்தோற்றத்தை அப்படியே உரித்து வைத்திருக்கிறாள் மகளே. அவளை சரியாக பார்த்துக்கொள்ள தெரியவில்லை. தன் குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்பதை ஒரு அன்னை அறிந்து கொள்ளும் வித்தையை எப்படி நான் கற்றுக்கொள்வது? ஒரு பெண்ணாகப் பிறக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்துகிறேன் மகளே. நீ இப்போது வளர்ந்துவிட்டாய். உன் தங்கையைப் பார்த்துக் கொள்ளவேனும் நீ வருவாயா?

இன்றோடு நீயும் உன் அம்மாவும் இறந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாம். வருடா வருடம் தீபம் ஏற்ற வந்துவிடுகிறார்கள். நினைவு நாளை நினைவு கூர்ந்து உங்கள் நினைவுகளை அழிக்க விரும்புகிறார்கள் மகளே. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இந்தப் பைத்தியங்களுக்கு எப்படி புரிய வைப்பது?

- த.ராஜன் 

பின்குறிப்பு: ரமேஷ் பிரேதன் எழுதிய 'அவன் பெயர் சொல்' என்னும் நாவல் வாசித்தேன். பேரனுபவமாக இருந்தது. அதே போன்று எனக்கொரு மகள் இருந்தால்’ என்று ரமேஷ் பிரேதனாக வாழ்ந்து பார்க்க நினைத்ததன் விளைவே இந்த சிறுகதை.

13 November 2014

[சிறுகதை] நெகிழி

என் குழந்தைகள், இதற்கு முன் குரங்குகளைப் பார்த்ததில்லை போலும்.

"அம்மா அங்க பாருங்கம்மா. குரங்கு வாழப்பழத்தை நம்மள மாதிரியே சாப்புடுது" என்றான் இளையவன். அதை ஆச்சரியமாகப் பார்த்தவள் என் பக்கம் திரும்பி "என்னங்க. அங்க பாருங்களேன். குரங்கு வாழப்பழத்தை நம்மள மாதிரியே சாப்புடுது" என்றாள்.

என் மனைவியும் இதற்கு முன் குரங்கைப் பார்த்ததில்லை போலும்.

சிரித்துவிட்டு, என் கையைப் பிடித்து நடந்து வந்த மகளிடம் தம்பியுடன் செல்லச் சொல்லிவிட்டு என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டேன்.

காதல். இதற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அர்த்தங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன அர்த்தம் தந்தாலும் அவரவருக்கு அவரவர் வரையறை. என்னைப் பொருத்த வரை காதலினால் காயமடைந்தவர்களே அதிகம் - காதலுடன் கை கோர்த்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.

காதல் செத்து நீர்த்த பின்னும் ஏனோ காயம் இன்னும் ஆறவில்லை. அன்றிலிருந்து இன்று வரை காயம் ஆறாப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கோழையாக இருப்பதிலும் பயனிருக்கத்தான் செய்கின்றது; இல்லையெனில் இந்நேரம் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.

என் காதலின் பெரும்பகுதி தாமிரபரணி ஆற்றில் தான் கலந்திருக்கிறது - யாருக்கும் தெரியாமல் ஆற்றின் அடியில் படர்ந்திருக்கும் மணல் போல கரைந்திருக்கிறது - கரைய முடியாமல் படர்ந்திருக்கிறது மௌனமாக. பல வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறேன். இந்த ஆற்றைப் பற்றி பலமுறை பலரிடம் வியந்து பேசியிருக்கிறேன். பேசி வியந்திருக்கிறேன். திருமணமான நாள் முதலே இங்கே கூட்டிச் செல்லுமாறு பலமுறை இவள் நச்சரித்திருக்கிறாள். ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணம் சொல்லித் தவிர்த்திருக்கிறேன். அவ்வாறு தவிர்க்கவில்லையெனில் ஏதேதோ நினைவுகளில் ஏங்கித் தவித்திருப்பேன். இப்போதைப்போல.

காதல் நினைவுகளுக்கு
மனம்
வழி
மறப்பதேயில்லை

பகலும்,
இரவும்,
அவள் நினைவும்
மாறி மாறி வரும்
என் உலகின்
நிறங்கள்
மூன்று

மூச்சுவிட முடியவில்லை. இங்கே வரவும் என்னவளின் நினைவுகள் பெருமழையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் போல் என்னிலிருந்து வெளியேற வழியின்றி திக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. என்னவள் என்றா சொன்னேன்? அதுவும் என் மனைவியைக் கண் முன்னே வைத்துக்கொண்டு. எனக்கு முன்னால் குழந்தைகளுடன் இன்னொரு குழந்தையாய் சென்று கொண்டிருக்கிறாள். என் கண்களைப் பார்த்தால் கண்டு கொள்வாள். புதைந்திருந்த என்னவளின் ஞாபகங்கள் இங்கே வரவும் புத்துயிர் பெற்று வெறி கொண்டு எட்டிப் பார்க்கின்றது ஒரு வெரூஉப் பூனையைப் போல. மறுபடியும் என்னவள் என்று சொல்லிவிட்டேன். இதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. நகுலனின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘நான் கூட’. இறந்தகாலத்தில் என்னவள்.  நான் இறக்கும் வரை என்னவள். ஆனால் அப்படிச் சொல்வது முறையாகுமா? தெரியவில்லை. இருந்தாலும் அவள் எப்போதும் என்னவள் தான்.

மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டேன். கைவிடப்பட்ட அல்லது கைவிடப்பட்டதாகக் கருத்தப்படும் ஒவ்வொருவருக்காகவும் படைக்கப்பட்ட கை! என்னை ஏறிட்டு ஒரு முறை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் நடக்க ஆரம்பித்தாள். நான் எப்போதும் போல் இல்லையென அவளுக்குத் தெரிந்திருக்கும். எதுவும் கேட்கவில்லை. சந்தோஷமாக குழந்தை போல் இருந்தவளை தேவையில்லாமல் சங்கடப்படுத்திவிட்டேன். எல்லாம் என் சுயநலம். இங்கே ஒருவரின் சந்தோஷத்தைப் பறித்து தான் மற்றொருவர் சந்தோஷமாக இருக்க வேண்டி இருக்கின்றது. இந்த மனநிலையில் அவள் என் அருகில் வேண்டும் போல தோன்றியது. நான் எதுவும் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவும் கூட. எதுவும் பேசாமல் குழந்தைகளை வெற்றுப் பார்வை பார்த்த படி நடந்து வந்தாள்.

"ஏன் என்னை இவ்வளவு நாள் இங்க கூட்டிட்டு வரல?" என் கண்களைப் பார்த்தபடி கேட்டாள்.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் என் 'இறந்த'காலம் முழுவதையும் திருப்பிப் பார்க்க வேண்டும். பெரிதாக யோசிப்பதற்கு எதுவும் இல்லை. அந்த நினைவுகள் எல்லாம் மறந்தால் தானே?

"இப்போ இந்த கேள்விக்கு கண்டிப்பா பதில் தெரியணுமா?" என்றேன்.

"என்னைப் பத்தி நீங்க புரிஞ்சி வச்சிருக்றது அவ்வளவு தானா. இல்லனா இந்தக் கேள்விய கேட்ருக்கவே மாட்டீங்க. நானும் நிறய தடவ கேக்கணும்ன்னு வந்து கேக்காமலே போய்ருக்கேன். உங்களுக்கே எப்போ சொல்லணும்ன்னு தோணுதோ அப்ப சொல்லட்டும்ன்னு விட்டுட்டேன். ரெண்டு புள்ள பெத்தாச்சு. ஆனா இன்னும் உங்க காதல் கதைய என் கிட்ட சொல்லணும்ன்னு தோணலயா. ஒவ்வொரு தடவ இங்க கூப்டும் போதும் அபத்தமா காரணம் சொல்லி இங்க வர விடாம பண்ணிடுவீங்க. நான் என்ன அவ்வளவு மக்காங்க? இப்போ கூட கேட்டிருக்க மாட்டேன். ஆனா உங்க முகத்த பாத்ததும் கேக்கணும் போல தோணுச்சு".

இதில் ஒரு வார்த்தை கூட என்னைப் பார்த்து பேசவில்லை. நேரே பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வேளை என்னைப் பார்த்து பேசியிருந்தால் நான் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். அவள் மனதில் ஊறிக் கிடந்த கேள்விகள். இது வெறும் கேள்விகளா என்ன? கணவன் தன்னிடம் மறைக்கும் அளவிற்கு நாம் இருந்துவிட்டோமே என்னும் வலி. அவள் பேசும் போது என் காதல் கதை என்று சொன்னாள். அது வெறும் கதையா? என் வலி அது. ஏனோ யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றியதில்லை. இவள் யாரோ ஒருத்தியா? என் மனைவி தான். யாரோ ஒருத்தியுடன் கூட சொல்லிவிடலாம். மனைவியிடம் சொல்வது சரியாகுமா? வலியை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது. அடி பட்டக் காயத்தை பிய்த்துக் கொடுக்க முடியுமா என்ன? பின் மனதின் காயத்தை மட்டும் எங்கே பகிர்ந்து கொள்வது?

திரும்பிப் பார்த்தாள். மௌனமாகவே இருந்தேன். அவளுக்கு கோபம் வந்திருக்கக்கூடும். கோபம் என்பதை விட வலித்திருக்கக்கூடும். கைகளை விடுவிக்க எத்தனித்தாள். அவள் கைகளை விட்டுவிட வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை. இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். லேசாக அவள் கண் கலங்குவது போல இருந்தது. குழந்தைகளைக் கண் காட்டி வேண்டாமென்று தலையசைத்தேன்.

கண்களில் நீர் வழிய "ஐ லவ் யூ" என்றாள். சப்தமே இல்லாமல்.

~~OO~~

பாபநாசம் என்று டிக்கெட் எடுத்தால், சிவன் கோவிலின் இடப்புறம்தான் இறக்கிவிடுவார்கள். ஊர்க்காரர்களை விட சுற்றுலாப் பயணிகளையே இங்கு அதிகம் பார்க்கமுடியும். சொந்த ஊரின் அருமை யாருக்குத்தான் தெரிகிறது! மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த சிவன் கோவிலின் நடை வாசலுக்கு பேருந்திலிருந்து இறங்கி இரண்டடி எடுத்து வைத்தால் வந்துவிடலாம். கோவிலின் நடைக்கு முன்னே ஒரு மடம் இருக்கும். அங்கு கழுத்தில் ருத்திராட்ச்சையுடனும் கையில் திருவோட்டுடனும் இருக்கும் காவி உடைச் சாமியார்களை  உள்ளூர்காரர்கள் பண்டாரம் என்று அழைப்பார்கள். அந்த மடத்திற்கே ‘பண்டார மடம்’ என்றுதான் பெயர். சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்த்து, இழுவையாக 'இப்படியே சுத்திக்கிட்டு இருந்தன்னா, பண்டாஆஆஆர மடத்துல போயி பண்டாஆஆஆரமா தான் உக்காரணும்' என்று சொல்வார்கள். ஆனால் அந்த சிவன் கோவில், மடம், பிரம்மாண்டமான மரங்கள், படித்துறை இதையெல்லாம் பார்க்கும் பொழுது பண்டாரமாகவே போய்விடலாம் என்று எண்ணத் தோன்றும்.

நாவல் மரங்களிலிருந்த குரங்குகள் நாவல் பழங்களை குழந்தைகளுக்காக உதிர்த்துப் போட்டுக் கொண்டிருக்கும். இந்த நாவல் மரத்தினடியிலமர்ந்து நாவல் வாசிப்பதே பரம சுகம்.

காட்டைக் கிழித்து தாமிரபரணி சீறிப் பாய்ந்து கொண்டிருப்பதை போலவே, காட்டை சிதைத்துக் கட்டிடங்களும் சாலைகளும் அமைக்கப்பட்டிருக்கும் - நாம் அந்த ஆற்றின் எழிழை ரசிப்பதற்காக!

இந்தக் கோவிலிருந்து சிறிது தொலைவிலே இருக்கும் திருவள்ளுவர் கல்லூரியில் தான் பிஏ சேர்ந்தேன். முதல் நாள் வகுப்பிற்கு தாமதமாக வர நேர்ந்தது. உள்ளே நுழையவும் எல்லோரும் 'ஊ' என்று ஊளையிட, அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். முதல் வரிசை மட்டும் காலியாக இருந்தது. எல்லா கண்களும் என்னை மொய்ப்பதாகத் தோன்றியது. வலப்புறம் ஒரு முறை ஏறிட்டு பார்த்தேன். அந்தப் பார்வை தான் என் வாழ்வைப் புரட்டிப் போடப் போகிறதென்று அன்று நான் நினைத்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. உதட்டில் புன்னகையுடன் முட்ட முட்டக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். இவ்வளவு வருடம் நான் இந்த ஊரில் தான் இருந்திருக்கிறேன், ஆனால் அவளை இதற்கு முன் வரை ஒரு நாள் கூட எங்கள் ஊரில் பார்த்தது கிடையாது. இது தான் விதியோ? ஏதேர்ச்சையாகப் பார்க்கவும் இருவரின் விழிகளும் சந்தித்து சில நொடிகள் நிலைத்து நின்று, என்ன செய்வதென்று புரியாமல் எங்கெங்கோ பார்த்து, அவ்வப்போது சந்தித்து, அதை எண்ணி தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் பிழைத்து…

இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
என்று
உன்னைப் பார்த்துக்கொண்டே
இருக்கும் கண்களைச்
சமாதானம் செய்து
அழைத்துச் செல்கிறது
கனவு

இயந்திரம் போல வேறெதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம்.  இயந்திரம் பழுதடையாமல் ஓடியது. சில பல நாட்கள் ஊர்ந்தன.

கல்லூரியில் நடந்த இலக்கிய விழாவிற்காக சுத்திக் கொண்டிருக்கையில் 'நானா வந்து பேச முடியும். நீ தான்டா எரும வந்து பேசனும்' என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்; அவளது கண்ணாடித் தோழியுடன். நேரில் பேச தைரியம் வரவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளிடம் பேசுவது போல் போய்க் கடந்து சென்று விடுவேன். அன்று மட்டும் பலமுறை இது நடந்தது. பலமுறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அந்த விழா முடிந்து அவள் செல்கையில் வீடு வரை பின்னாலேயே சென்றேன். அதைத் தவிர என்னால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. என் மேல் எனக்கே உச்சக்கட்ட வெறுப்பு வந்தது அன்றுதான்.

நான் கோழை என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு நாள் என்னைக் கடந்து செல்கையில் என் கையிலே சிறு காகிதத் துண்டை தந்துவிட்டுப் போனாள்.

‘9894967434’

அன்று நண்பர்களுக்கு என் செலவில் வடை.

அவ்வளவாக மொபைல் ஃபோனின் ஆதிக்கம் இல்லாத காலம் என்பதால் அந்த எண்ணை அழைத்தாலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் வேறு. என் கோழைத்தனத்தை...

‘ஹாய்…’

'யாரு?'

'நான் தான்…'

'நான் தான்னா?'

'ப்ரியா தான?'

'இல்ல. நான் அவளோட அண்ணன். நீங்க யாரு?'

'என்ன பதிலே காணும்?'

'ஹலோ'

'நான் ப்ரியாவோட ஃப்ரண்ட் சுமதி… நான் மெஸேஜ் பண்ணேன்னு சொல்லிடுங்க…'

'ஹே. நான் ப்ரியா தான். சும்மா விளயாடினேன் :P பயந்துட்டீங்களா?'

'இல்லயே... நானும் விளயாட தான் செஞ்சேன்…'

'நம்பிட்டேன் :D'

':) என்ன பண்றீங்க?'

'சும்மா தான் இருக்கேன். நீங்க?'

'நான் பாட்டு கேட்டுட்டு இருக்கேன்... ஏ ஆர் ரஹ்மான் சாங்ஸ்...'

'ஓ. எனக்கும் ரஹ்மான் சாங்ஸ் ரொம்ப புடிக்கும்'

'அப்படியா? எனக்கு ரஹ்மான்னா உயிர்...'

'வேற என்னலாம் உங்களுக்கு புடிக்கும்?’

'நீங்க வாங்கலாம் வேண்டாமே... சும்மா நீ வான்னே பேசலாமே...'

'நீங்களும் நீங்க வாங்கன்னு தான பேசுறீங்க?'

'சரி இனி பேசல... டீல்?'

'டீல் டீல் :)'

':)'

'உன் வைஃப் நீ வான்னு கூப்ட்டா பரவாலயா 'டா' :)'

'அவ என்ன விட எவ்வளவு சின்ன வயசா இருந்தாலும் அப்படி தான் கூப்டணும்ன்னு நினைக்கிறேன்'டா' :D'

'ம்ம்ம்ம் குட் டா :)'

எங்களுக்குள்ளான உறவு குறுஞ்செய்தி வழியே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் 'நேரில் சந்தித்து பேசலாமா' என்று அவள் தான் கேட்டாள். மறுபடியும் மறுபடியும் நான் கோழை என்பதை பல இடங்களில் நினைவூட்டிக்கொண்டிருந்தாள். கல்லூரியில் பேச வேண்டாமென்றும் நாம் பேசிக் கொள்வதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமென்றும் சொல்லியிருந்தாள்.

காலை 8 மணிக்கு வந்து விடுவதாகச் சொன்னாள். பாபநாசம் தலையணை அருகே காத்திருந்தேன். மனதிற்குள் இப்படியெல்லாம் பேச வேண்டுமென பலமுறை ஒத்திகை பார்த்தவாறே இருந்தேன்.

நீல நிறச் சுடிதாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். தூரத்திலேயே அவள் முகம் சிரிப்பது தெரிந்தது - கொஞ்சம் பயம் கலந்து. சுடிதார் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. ஒருவரின் உடையை வைத்தே அவர்களின் ரசனையைத் தெரிந்து கொள்ள முடியுமென்பது என் எண்ணம். சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பதில் கெட்டிக்காரி என்றே தோன்றியது. ‘பிறகு எப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தாள்?’ என்று கேட்காதீர்கள். அதற்கான விடை எனக்கே தெரியாது. நிச்சயம் எங்கள் திருமணத்தின் போது 'இவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா?’ என்று யாரும் கேட்காமல் இருக்க முடியாது. கேட்க மனமில்லாமல் போனாலும் கூட அப்படி நினைக்காமல் யாராலும் இருக்க முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த அழகிற்காக அவளை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த அழகைப் பற்றிய கர்வம் துளியும் அவளிடத்தே கிடையாது. அது தான் என்னைக் கவர்ந்ததாக நினைக்கிறேன்.

இவ்வளவு நேரம் எதுவும் தோன்றவில்லை. அவளைப் பார்க்கவும் மூத்திரம் முட்டிக் கொண்டுவந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. இதை அடக்கிக் கொண்டே எப்படி அவளுடன் நேரத்தை செலவிடப் போகிறேன் என்கிற பயம் வேறு இப்போது சேர்ந்து கொண்டது.

ஆற்றை வெறித்துப் பார்த்த படி வெகு நேரம் உட்கார்ந்திருந்தோம். ஏற்கனவே தயார் செய்த எதுவும் வெளி வரவில்லை. ஒத்திகையெல்லாம் காலை வாரிவிட்டது.

இருவரும் இதுவரை காதலைச் சொன்னதில்லை. ஆனால் காதலிப்பதாகவே உணர்ந்திருந்தோம்.

காதல் தெய்வமென்று ஏதும் இருக்குமென நினைக்கிறேன். எங்கள் மௌனத்தை கலைத்து பேச வைப்பதற்காக பூக்காரி அங்கே வந்தாள்.

"கட்டிக்க போறவளுக்கு பூ வாங்கி கொடுங்க தம்பி" என்றாள்.

அவள் என்னைத் திரும்பி பார்க்கவும் பூக்காரியைப் பார்த்து "அதெல்லாம் வேணாம். கிளம்புங்க" என்றேன். 'ஒரு வேளை அவளுக்கு பூ பிடிக்கலாம் அல்லவா' என்ற எண்ணம் தோன்றவும் அவளை நோக்கி "வேண்டுமா?" என்றேன்.

வேண்டாமென அவசரமாகத் தலையாட்டினாள்.

இனி பூக்காரி சும்மா விடுவாளா? "விஜய் மாதிரி இருக்கிறீங்க. பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கு. பூ வாங்கிக் கொடுங்க தம்பி".

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். இப்போது அந்த பூக்காரியின் மனத்தில் என்ன ஓடியிருக்கும்? 'அவள் மகாலட்சுமி சரி. இவனையெல்லாம் விஜய்ன்னு சொல்ல வேண்டி இருக்கே. என்ன மானங்கெட்டப் பொழப்பு?' என்று நினைத்திருப்பாள்.

"இரும்மா, நான் வச்சி விட்றேன்" என அவள் அனுமதி இன்றி பலவந்தப்படுத்தினாள்.

இந்த வன் கொடுமையை எப்படி எதிர் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. "அக்கா தயவுசெஞ்சு கிளம்புங்க. கடுப்பேத்தாதீங்க" என்றேன் ஆவேசமாக.

"என்ன தம்பி கோவபட்றீங்க?"

அவள், "விடு விடு" என்று சொல்லி பூவிற்கு காசு கொடுத்தாள்.

"நீங்க காசு கொடுங்க தம்பி" என்றாள் பூக்காரி என்னைப் பார்த்து.

"இல்ல இருக்கட்டும்"

பூக்காரி செல்லவும் "கோவப்படாத" என்று சொல்லி புன்னகைத்து "வா, தண்ணில கால் நனச்சிட்டு வரலாம்" என்றாள்.

சுடிதார் நனையக் கூடாது என்பதற்காக இரு கைகளாலும் இழுத்துப் பிடித்து நடந்து வந்தாள் ஒரு சிறுமியைப் போல. அவளது ஆடை லேசாக என் மேல் படவும் ஒரு வித சிலிர்ப்பு. மனதிற்குள் சாரல். அந்த இன்பத்தில் திளைத்து முடிப்பதற்குள் கால் வழுக்கி விட என் கைகளை ஒரு நொடி பிடித்துச் சென்றாள்.

அவள் ஆடை என் மேல் பட்ட - விரல்கள் என்னைத் தொட்ட நிமிடங்கள் என்னை எரித்தாலும் அழியாது.

மீண்டும் பழைய இடத்திற்கு வந்து ஏதேதோ ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.

ஊரில் காதல் ஜோடிகளைப் பார்ப்பதெல்லாம் அபூர்வம். எல்லாருடைய கவனமும் எங்கள் மேலே இருப்பதாக உணர்ந்தேன். நாலைந்து இளைஞர்கள் எங்களைக் கடந்து செல்லும் போது ஒருவன் மட்டும் 'மணி என்ன?' என்றான்.

“ஒம்போது” என்றேன்.

"டேய், ஒம்போதாம்டா" என்று சிரித்துச் சென்றார்கள்.

இந்த தர்ம சங்கடமான நிலையை எப்படி எதிர் கொள்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். இனி இங்கே வரவே கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அந்தத் பாபநாசம் தலையணையிலுள்ள மரத்தின் நிழலில் தான் எங்கள் காதல் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது.

‘சரி டா... தூங்கு... குட் நைட்.... உம்ம்மா...’

'எங்க கொடுத்த?'

'விரலால உன் உதட்ட வருடிட்டே நீ சிரிக்கும் போது, கீழ் உதட்டுல கொடுத்தேன்…’

'இப்படிலாம் சொன்னா எனக்கு நிஜமாவே வேணும் :('

'நான் ரெடி டா...'

'போ அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் :D'

'ஹ்ம்ம்ம் :('

'கோவப்படாதடா. உம்ம்ம்ம்ம்ம்ம்மா'

':):):) நீ எங்க கொடுத்த? :)'

'ஒரு கை விரல்களால உன் கை விரல்களோட கோர்த்து இன்னொரு கையால உன் தல முடிய லேசா வருடி, உன் காதுல இருக்கமா ஒரு முத்தம். அப்புறம் லிப்ஸ்ல மூச்சு விடாம அழுத்தமா ஒரு லாங் கிஸ்'

முத்தம் -
ஒரு அழகிய
முரண்
குடுக்க குடுக்க
நாமே கடனாளியாகிறோம்

'நீ செம்ம ரொமான்டிக் டா!'

'ரொமான்ஸ் ஒரு மாஜிக் டா. சீக்கிரமே நான் பைத்தியம் ஆயிடுவேன்னு நினைக்கிறேன்'

'நான் ஏற்கனவே அப்டி ஆயிட்டேன்... எல்லாம் உன்னால...'

'நாளை உன்னைப் பார்க்க எதிர்பார்ப்போடு உறங்கச் செல்லும் முன்... குட் நைட் :)'

'சீக்கிரம் விடியனும்... குட் நைட்...'

எவ்வளவோ கவனமாக இருந்தும் அவள் தந்தையின் காதிற்கு இந்த விஷயம் போயிருக்கிறது. ஒரு மாலை வீட்டிற்குச் செல்லவும் கையில் நான் கொடுத்த வாழ்த்து அட்டையுடன் அவள் தந்தை நின்றிருக்கிறார்.

"என்ன இது?"

“….”

அதைக் கிழித்து அவள் முகத்தில் எறிந்து விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

அவள் அம்மா, "என்னடி இப்படி பண்ணிட்டு அலையுற? வயசுக்கு வந்து மூனு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள உனக்கு ஆம்பள சுகம் கேக்குதோ? என்னத்த காட்டிடி அவன் உன்ன மயக்குனான்? இல்ல நீ என்னத்த காட்டி அவன மயக்குன? இதுக்கு தான் உன்ன காலேஜிக்கு அனுப்புறமா? ஆம்பள சுகம் கேக்குது வாரிய கொண்டைக்கு"

சில நாட்களில் எதிர் பார்த்ததைப் போல அவள் கல்லூரி வருவது நின்றது. மாப்பிள்ளை பார்ப்பதாகவும் செய்தி வந்தது.

தினம் தினம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். என்னால் என்ன ஆறுதல் கூற முடியும்? 'உன்னத் தவிர வேற யாரயும் நெனச்சி கூட என்னால பாக்க முடியாது. நான் வீட்ல பேசுறேன். நீயும் உங்க வீட்ல சொல்லு' என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.

என் வீட்டில் இதைப் பற்றி பேசும் வயதில்லை. ஒரு அண்ணன் இருக்கிறான். தங்கை இருக்கிறாள். என் கோழைத்தனத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டிய வண்ணமிருக்கிறாள். அவளுக்கும் திருமணமாகாத ஒரு அக்கா இருக்கிறாள். அவளுக்கிருக்கும் தைரியம் எனக்கு ஏன் இல்லை?

எங்கேயாவது போய் செத்து விடலாமா என்று தோன்றியது. இதற்கே தைரியம் இல்லை. அதற்கு எங்கே? கோழைப் பிறவி.

ஆனால், சில நாட்களில் அவள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாகவும் மருத்துவமனையிலிருப்பதாகவும் நண்பன் சொன்னான். நானும் அவனும் அவளைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.

என்னைப் பார்த்ததும் சிரிக்கிறாள்.

என்னால் எப்படி அந்த சூழலைக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பிக் கலங்கிப் போயிருந்தேன். நான் எதிர் பார்த்தது போல் அவர்களின் பெற்றோர்கள் நடந்து கொள்ளவில்லை. அமைதியாகவே பேசினார்கள். வீட்டிலிருந்து வந்து பேசும் படி சொன்னார்கள். அவள் முகத்தை திரும்பிப் பார்த்தேன். நான் என்ன சொல்ல போகிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் குணமாகி வந்த பின் வீட்டிற்குச் சென்று பேசினோம். அவள் தந்தை, "கல்யாணத்த உடனே முடிக்கணும். அவ அக்கா இருக்கிறா. இருந்தாலும் இவளுக்கு முன்னாடி முடிக்கிறத பத்தி எனக்கு கவல இல்ல. நான் பெருசா ஏதும் அவளுக்கு சேக்கல. அதனால எதும் போடுவோம்ன்னு எதிர் பாக்காதீங்க"

எவ்வளவு பேசிப் பார்த்தும் அவர் சமாதானம் கொள்வதாக இல்லை. எப்படியும் நாங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று நினைக்கிறார் போலும்.

நான், "நான் இப்போ தான் படிச்சிட்டு இருக்கேன். மூணு வருஷம் டைம் கொடுங்க. அதுக்கு மேல நீங்க ஒரு நாள் கூட பொறுத்துக்க வேண்டாம்" என்றேன்.

மூன்று வருடத்தில் அவளைத் திருமணம் செய்து கொள்வதென்பதும் சாத்தியமே இல்லை தான். இருந்தாலும் அதற்குள் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நப்பாசை.

அவர் அந்த வரிகளில் ஒரு வரி கூட மாறாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். பேசிவிட்டு சொல்கிறோம் என்று அங்கிருந்து கிளம்பினோம்.

அப்பா, "என்னப்பா சொல்ற?"

"தெரியலப்பா"

"அவங்க எப்படியாவது கழட்டி விடனும்னு பேசுற மாதிரி தான் இருக்கு. எனக்கென்னமோ சரியா வரும்ன்னு தோணல"

"இல்லப்பா. அவ இல்லனா என்னால முடியாது. இப்போவே வேலைக்கு போக ஆரம்பிச்சிடம்னா நல்லா இருக்கும்ப்பா. நான் படிகிறத நிப்பாடிட்றேன்"

"எலேய், சினிமா வசனம்லாம் பேசிகிட்டு அலயாத சரியா? நீ சொல்றன்னு தான் அங்க வந்து பேசினேன். அதுவே ஜாஸ்தி. இத பத்தி பேசுறத இத்தோட விட்ரு. வயசுக்கு வந்த தங்கச்சி இருக்கா, அண்ணன் இருக்கான். மனசுல வச்சிக்க" கூறிவிட்டு எனக்கு முன்னால் வேகமாகச் சென்று விட்டார்.

அவளோ படாத பாடுபட்டுக்கொண்டிருந்தாள். ‘நீ மட்டும் தான் தற்கொலை செய்து கொள்வாயா? நானும் செய்து கொள்கிறேன்’ என்று அவள் அம்மா ஆவேசமாகவும், தந்தையோ அவள் காலில் விழுந்து கெஞ்சியும் மூளைச்சலவை செய்தார்கள். பாவம் அவள் என்ன செய்வாள். ஓரிரு நாட்களில் குடும்பத்தோடு வேறொரு ஊருக்கு சென்று விட்டார்கள். அதன் பின் எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவள் இருந்த ஊர், வீடு, மொபைல் நம்பர் எல்லாமே தெரிய வந்தது. மீண்டும் அவள் வாழ்வில் குறுக்கிட்டு சீரழிக்க விரும்பவில்லை. ஏற்கனவே சீரழித்தது போதும்.

அதன் பிறகு வெகு நாட்கள் பாபநாசம் தலையணைக்கு வந்து தனியே நின்று கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில் இங்கு வருவது சரி அல்ல என்று முடிவு செய்து நிறுத்திக்கொண்டேன்.

மணலால் பிண்ணப்பட்ட
வலையை விரித்து
எனக்காய் காத்திருக்கிறது
இவ்வாற்றின் அருகே
என் காதல் நினைவுகள்
வலையோடு
பறக்க வல்ல
இறகுகளோடு
இம்முறை வந்திருப்பதையறிந்து
காதல் நதி
என்னை
மீனாய்
மாற்றிக்கொண்டிருக்கிறது

~~OO~~

பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் வருகிறேன் மனைவியுடன். அவளுடன் இருக்கும் பல நேரங்களில் நான் ப்ரியாவை நினைக்காமலிருந்ததில்லை. இதையெல்லாம் என் மனைவியிடம் சொன்னால், சொன்ன அடுத்த நொடியிலிருந்து நடை பிணமாகத் தான் அலைந்து கொண்டிருப்பாள், என்னைப் போல. ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு செய்த துரோகம் போதாதா?

'இதற்கு மேலும் சொல்லாமல் இருப்பது சரி அல்ல. எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்' என்பது போல முக பாவனையை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"காதல் கதை அது இதுன்னு சொன்னியே, அதெல்லாம் எதுவும் கிடையாது. என்ன யாராவது காதலிப்பாங்களா?” என்று சொல்லி பெருமூச்சு விட்ட படி “என்னோட ஃப்ரண்ட் முத்து தெரியும்ல. அவனோட ஃப்ர்ண்ட்ஸ் கொஞ்ச பேர் வெளியூர்ல இருந்து நம்ம ஊர சுத்தி பாக்க வந்துருந்தாங்க. முத்துக்கு நீச்சல் தெரியாது. என்ன நம்பி தான் அவங்கலயெல்லாம் கூட்டிட்டு வந்தான். பல தடவ என் கிட்ட கேட்டான். அப்படி என்ன நம்மள மீறி ஆயிட போகுதுன்னு நான் தான் உறுதியா வர சொன்னது. ஆனா விதி சும்மா விடுமா? யாரோட விதியோ அது. அந்த நாள நெனச்சா இப்பவும் எனக்கு நடுங்குது. அந்த இடத்துல தான்..."

"நீங்க அழாதீங்க ப்ளீஸ். என்னால தாங்கிக்க முடியாது "

இதுவும் என் வாழ்வில் நடந்த சம்பவம் தான். ஆனால் இதற்கு தான் நான் இங்கே வருவதற்கு தயங்கினேன் என்று அவள் நம்பியிருப்பாளா என்பது சந்தேகம் தான். ஆனால் நம்பியது போல் அவள் இனி நடந்து கொள்வாள்.

தாமிரபரணியிலே நீராடி விட்டு மகிழ்ச்சியோடு கிளம்பினோம். தள்ளு வண்டியில் சூடாக வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் இருந்தது.

"சின்ன வயசுல குளிச்சி முடிச்சிட்டு போகும் போது வடை போண்டா சாப்டாம போக மாட்டோம். அது ஒரு தனி ருசி தான்" என்றேன்.

"அப்பா அப்பா எனக்கும் வாங்கி கொடுங்கப்பா"

ஆளுக்கொரு போண்டா வாங்கி சாப்பிட ஆரம்பிக்கவும் வழக்கம் போல குரங்கு அதைப் பிடுங்க வந்ததது. என்னைத் தவிர மீதி மூவரும் அதற்கு பயந்து கீழே போட்டுவிட்டனர். குரங்கு வந்தால் அதை வாயில் போட்டுக் கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அனிச்சை செயலாய் நான் முழு முட்டை போண்டாவையும் வாயில் போட்டிருந்தேன்.

என்னைப் பார்த்து இளைய மகன் பெருங்குரலெடுத்து சிரித்தவாறு "அப்பா குரங்கு மாதிரியே இருக்கீங்க" என்றான்.

- த.ராஜன்

1 November 2014

மணல் இரவுகள்

சென்னையின் மணல் இரவுகள்...

சுமார் பதினொன்றரை மணியளவில் அனைத்து கடைகளையும் ஏரைக்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒன்றிரண்டு கடைகளில் மட்டும் கடைசிக் கட்ட வியாபாரங்கள் அவசரகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில்தான் நான் மெரினாவை அடைவேன்.

ஆண் பெண் பேதமின்றி புகைபிடித்துக் கொண்டிருக்கும் குழுவினூடே கலங்கரை விளக்கச் சாலை வழியாக நுழைந்தால் மெரினாவின் தெற்கு எல்லையை அடையலாம். இங்கு திருவல்லிக்கேணி பட்டினப்பாக்கம் பகுதியிலிருக்கும் சாமானிய மக்கள் கூட்டமொன்று பாய் தலையணை மற்றும் போர்வையுடன் கடலை நோக்கி படையெடுப்பதைக் காணமுடியும். குறைந்தது இருநூறு பேராவது கடற்கரையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எவ்வித பயமோ தயக்கமோ இருப்பதில்லை. சொந்த ஊரில் அமைந்திருக்கும் ஒரு அழகிய சூழலை அனுபவிக்க யார்தான் தயக்கப்படுவார்கள். கடைகளை மூடச்சொல்லியும் பொதுமக்களை கிளம்பச்சொல்லியும் காவலர்கள் செய்கின்ற அறிவிப்பை கண்டும்காணாமல் ஒரு கூட்டம் ஐஸ்கிரீமையும் பானிபூரியையும் சுவைத்தபடி தத்தமது பிள்ளைகள் ஸ்கேட்டிங் செய்வதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். இக்கூட்டத்தில் பலர் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். எவ்விதக் கவலையுமின்றி எதையோ கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களும் அதே திருவல்லிக்கேணி மற்றும் அடையார் சாந்தோம் பகுதி மக்கள்தான்.

ஒரு குல்ஃபி ஐஸ் விற்பவரிடம் பேசியதிலிருந்து, “இங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்திருப்பவர்கள் வெள்ளிக்கிழமையை விடுமுறையாகப் பெற்று அதனைக் கொண்டாட இங்கு குழுமியிருக்கிறார்கள்” என்ற தகவல் கிடைத்தது.

இந்த இருவேறு நிலைப்பாடுகள் கொண்ட மக்களை ஒரு சேரக் காணமுடியும் நிகழ்வு சாதாரணமாதென்றாலும் இவ்விரு வகை வாழ்க்கையையும் வாழ்ந்துவிட நினைக்கும் உன்னத நிலை மெரினாவில் எனக்கு கிட்டியதுண்டு. அழகழான பெண்கள் ஒருபுறம், கவலையை மறந்து உல்லாசமாய் கடல் மணலில் தூங்குபவர்கள் மறுபுரம் என இருவகைக் கூட்டத்தில் மூன்றாவதாய் இருப்பது கடற்கரைப் பூங்கா பெஞ்சுகளில் தூங்கும் பெரியவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் தான். இவர்கள் எதையோ எதிர்நோக்கிய வண்ணம் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பர்.

ஒருமுறை தடைகளை மீறி கடலில் கால் நனைக்கச் சென்றதில் புதுமணத்தம்பதிகள் பலரைக் கடலோரத்தில் காணமுடிந்தது. இதுபோக கடைசி சவாரி பேரம் பேசும் ஆட்டோக்காரர்கள், இரவுணவை முடிக்கும் ஹோட்டல் வேலையாட்கள், பணி முடிந்து திரும்பும் பரத்தைகள், காவலர்கள், இரவுப் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என பல்வேறு மக்களின் சங்கமத்தினிடையில் மெரினாவை விட்டுக் கிளம்பி பெசண்ட் நகரை அடைவேன்.

பணக்காரர்களின் கடற்கரை என ஒற்றை வரியில் பெசண்ட் நகரை சொல்லிவிட முடியும். இங்கு வந்து சேர்கையில் மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். இங்கு நடைபெற்ற ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டு வாழ்த்திவிட்டு வந்திருக்கிறேன். பெசண்ட் நகர் கடலின் தெற்கு மூலையில் மீன்க் கடைகளும் கருவாட்டுக் கடைகளும் இரவென்பதை மறந்துவிட்டு அனல்பறந்து கொண்டிருக்கும். மெரினாவிலிருந்து பெசண்ட் நகரை அடைய நான் தேர்தெடுக்கும் வழி பட்டினப்பாக்கம் சாந்தோம் அடையாறு.

பட்டினப்பாக்கத்தில் பொட்டிப் பொட்டியாக வீடுகள், மூடப்பட்டிருக்கும் மீன்க்கடைகள், மாதா கோவில்களைத் தாண்டினால் கடல் மிக அருகில் வரும். ஜெயமோகன் எழுதிய இரவு நாவல் பின்னட்டைப் படத்தில் இருக்கும் ’நீலக்கடல் மேல் வெண்ணிலா’ தரிசனத்தை நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறேன். மிக அழகான தருணமது. அதனை ஃபோட்டோவாலும் எழுத்துக்களாலும் படம்பிடிக்க முயன்று தோற்றுப்போய் இறுதியில் மனதில் படம்பிடித்து வைத்திருக்கிறேன். யாருமில்லாக் கடற்கரையின் மெல்லிய அலைகளுக்கு மத்தியில் தன்னை மட்டுமே பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருக்கும் நிலாவை தரிசிப்பது மகோன்னத நிலை என்பது என் துணிபு. காணவொன்னா வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் பகுதிகளைத் தாண்டிய உடனே மிகப் பிரம்மாண்டமான ஐடி பார்க்குகள் வருவது சென்னையின் சாபக்கேடு.

பழவந்தாங்கலிலிருந்து கிளம்பி மவுண்ட் ரோடு வழியாக ஸ்பென்சர் ப்ளாசாவைக் கடந்து ஓமந்தூரார் சட்டமன்றம் (இப்போது அரசு பல்கலை மருத்துவமனை) வழியாக பீச் ரோடு கடந்து ராயபுரத்தை அடைவதுதான் முதல் இலக்கு. பயணப் புறப்பாட்டின் முதற்கட்டமாக எங்களது குலதெய்வம் கோவில் எனப்படும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரவுருவ தரிசனம் இருக்கும். எதற்காகச் செல்கிறேன் எதைத்தேடிச் செல்கிறேன் இருபத்தி நான்கு வயதே ஆன எனக்கு ஏன் இந்த வாழ்வின் மீது இவ்வளவு ஆர்வம் என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருந்ததேயில்லை. வெவ்வேறு விதமான நண்பர்களுடன் பல்முறை சென்றிருக்கிறேன். சென்னை இரவுகளைக் குறித்தும் எனது இரவுலாவைக் குறித்தும் அவர்களது எண்ணங்கள் என்னை வியக்க வைக்கத் தவறியதில்லை.

ராயபுரம் பாலத்திலிருந்து சென்னை துறைமுகத்தின் அம்பேத்கர் கப்பற்துறையின் சுமையேற்ற இடங்களைப் பார்வையிடுவதில் எனது இரவுலா தொடங்குகிறது. சென்னை கடற்கரை ரயில்நிலைய வாசற்கடைக் காபியுடன் மெரினா பெசண்ட் நகர் கடந்து நான் அடையும் இடம் திருவான்மியூர்.

பகலின் இயலாமையை இரவில் தீர்த்துக்கொள்ளும் பணிகளில் மிகமுக்கிய ஒன்று காலியான மவுண்ட் ரோட்டில் பயணிப்பது; இரவுக்காற்றைக் கிழித்துக் கொண்டு அந்தரங்கம் பேசியபடி நண்பனுடன் செல்வது அலாதிசுகம். மவுண்ட் ரோட்டில் பல்வேறு வகை மனிதர்கள் வாழ்க்கைகள் வழக்கங்களைத் தாண்டி சிந்ததிரிப்பேட்டைக்கு அருகிலிருக்கும் ஒரு குப்பத்து முனையில் ஓரங்கட்டி டீ, புகை சாக்கில் அம்மக்களது பேச்சுக்களை ரசித்திருக்கிறேன். கலப்படமற்ற சென்னைத் தமிழ் விளையாடிக் கொண்டிருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.

திருவான்மியூரில் தொடங்கும் ராஜீவ் காந்தி சாலையில் என் சகாக்களைக் காண்பேன். இவர்கள் ஐடிகார்டு ஹெல்மெட்டுடன் பைக்கை விரட்டிக்கொண்டு செல்லும் மென்பொருள் அலுவலர்கள். ஏதோ ஒரு ஏக்கம் இவர்கள் முகத்தில் குடியிருக்கும். இதுபோக அரைடவுசருடன் பெண்களும் ஆண்களும் ஒன்றாக வீடு திரும்பிக்கொண்டிருப்பார்கள். ஐடி மக்களுக்கே உரிய வெள்ளியிரவின் சிறப்பம்சமான இரண்டாமாட்டம் சினிமாவைக் களித்து திரும்பிவரும் பலரும் இதே பாணியில் உடைகளை அணிந்திருப்பார்கள். நைட் ஷிஃப்டில் வேலை பார்க்கும் மக்களும் இதில் அடக்கம். டீ, புகை வியாபாரம் விளாசிக்கொண்டிருக்கும் இடங்களைத்தாண்டியதும் காலியான ஓயெம்மார் சாலையில் நூறு கிமீ வேகத்தில் வண்டியை செலுத்துவது எனது பொழுதுபோக்கு.

துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சாலையில் திரும்பும்போது துணைக்கு நிறைபேர் வந்துவிடுவார்கள். டீக்கு நிறுத்தும்போது வடநாட்டு கட்டிடப் பணியாளர்கள், நூறு கிமீ வேகத்துக்கு சக மென்பொருளாளர்கள், ரோட்டோர குற்றோய்வின் நிறுத்தத்தில் பரத்தைகள், சந்திச் சாலை சமிக்ஞைகளில் காவலர்கள் என வேளச்சேரி ரயில் நிலையம் வரையிலும் துணைக்கு பஞ்சமே இருக்காது. வேளச்சேரி கிண்டி உள்வட்டச்சாலையில் நான் தினம் இரவில் தேநீர் பருகும் சைக்கிள்காரரின் கடையை அடைய எனக்கு சில நிமிடங்களே ஆகும்.

அவர் பெயர் தினகரன். நள்ளிரவு பனிரெண்டு முதல் அதிகாலை நான்கு மணிவரையிலும் கால்கடுக்க சைக்கிளில் நின்று வியாபாரம் செய்பவர் எனக்கு (எங்களுக்கு) குறுகிய காலத்திற்குள்ளாக தோஸ்த்தாகிப் போனார். இறுதியாக விமான நிலையம். இரண்டரை மணியளவில் விமான நிலையம் அடைந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மக்களைக் காண்பதில் அலாதி பிரியம் எனக்கு. இதுவும் ஒருவித போதை தான்.

சென்னை சென்ட்ரல், ராயபுரம் பாலம், எல்ஐசி கட்டிடம், ஓமந்தூரார் தோட்ட சட்டமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சாலை, திருவான்மியூர் ரயில் நிலையம், பள்ளிக்கரணை ஏரி – இவைகளின் மீது தேவையான அளவு மட்டும் நிலவொளியை வீசி அதில் பாதியை பிரதிபலித்துவிடும் அழகை ரசிகப்பதற்காகவே சென்னை இரவுகளை தரிசிக்கவேண்டும்.

ப்ளாட்ஃபாரத்தில் உறையுள் கொண்ட மக்கள், இரவு பாராது உழைக்கும் மெட்ரோ மற்றும் கட்டிட பணியாளர்கள், உடலின் ஒரு பகுதியான வயிற்றுக்காக உடலையே விற்கும் பரத்தைகள், வியாபாரிகள், சரக்கு கப்பல் பணியாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், நைட் வாட்ச்மேன்கள், பணக்காரப் பெண்கள், டிநகர் கேண்டி க்ளப்பின் வாசலில் துணைக்காக காத்துக்கிடக்கும் யுவ யுவதிகள் என அனைவரிடமும் பேசிவிட்டு அவரவர்களின் வாழ்வைத் தாண்டி நள்ளிரவு மூன்று மணியளவில் மயான அமைதியில் தூங்கும் பழவந்தாங்கல் வீடுவந்து சேர்ந்து கொஞ்சம் கதைபேசி அதிகாலையில் உறங்கப்போகும் போது உற்சாகமும் மனநிறைவும் மட்டுமே மிஞ்சியிருக்கும்.
சென்னை இரவுகள் பேரின்பத்தின் தரிசனங்கள்.

- ஷா