சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12 January 2016

புத்தக வாசிப்பில் ஒரு ஏபிசிடி

புத்தகம் எழுத்து மற்றும் எழுத்தாளர்கள் பற்றி ஏபிசிடி வரிசையில் 26 கேள்விகளுக்கு எனது பதில்கள். எனது அலுவலக வலையில் சுற்றிக் கொண்டிருக்கும் விளையாட்டு இது!


1. Author you’ve read the most books from:

ஜெயமோகன்

2. Best Sequel Ever:

படிச்சது ஒன்னே ஒன்னுதான். வெண்முரசு – முதற்கனல்/மழைப்பாடல். அடுத்து எனக்கு தெரிஞ்ச சீக்வல் கோபல்ல கிராமம் – கோபல்லபுரத்து மக்கள். இதுல முதல் நாவல் மட்டுமே படித்திருக்கிறேன்.

3. Currently Reading:

ஜே. ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

4. Drink of Choice While Reading:

டீ. ஆனா வாசிக்கறப்ப, சென்னை ரூம்ல டீயே போடத்தெரியாம டீன்னு சொல்லி ஒன்னு போட்டுக்குடுப்பானுங்க பாருங்க.

5. E-reader or Physical Book?

ஈ ரீடர் வெறும் வார்த்தை – புத்தகம் ஒரு எமோசன் (இதத்தான் 55 Question Book MeMe-லயே இங்கிலிஷ்ல சொல்லிட்டியேன்னு கேக்காதீங்க)

6. Fictional Character You Probably Would Have Actually Dated In High School: .

சுசி – அனல்காற்று – ஜெயமோகன் மற்றும் நீலி – காடு– ஜெயமோகன்

(பின்குறிப்பு: கதாநாயகிகளின் வர்ணனை குறித்து ஜெமோ எழுதுவது இருக்கிறதே – அது ராஜபோதை)

7. Glad You Gave This Book A Chance:

மதில்கள் – பஷீர்

8. Hidden Gem Book:

ஸீரோ டிகிரி – சாரு

9. Important Moment in your Reading Life:

ஒரு சம்பவத்துல ரொம்ப அடி வாங்கி நொந்து போயிருந்தப்ப, கன்னி மறுவாசிப்பு ஆரம்பிச்சேன். கன்னி முடிக்கும்போது முழுசா கன்னி போதை தான் இருந்துச்சு. அது மெதுவா கரையும்போது எல்லாத்துலயும் இருந்து விடுதலை கிடைச்சமாதிரி ஒரு உணர்வு வந்துச்சு பாருங்க

10. Just Finished:

கன்னி

11. Kinds of Books You Won’t Read:

மொன்னைத்தனமான த்ரில்லர்கள்

12. Longest Book You’ve Read:

தனிமையின் நூறு ஆண்டுகள்

13. Major book hangover because of:

காடு – ஜெயமோகன்

உணர்வுகளின் கொப்பளிப்பு. இந்த நாவல் அளவுக்கு வேறு எதுவுமே என்னைத் தொந்தரவு செய்யவில்லை. இந்நாவலின் முக்கிய சாராம்சம் அதன் அமைப்பு. கிரி யார் அவனுக்கு என்ன ஆனது என்பது முதலிலேயே தெரிந்து அதன் பின் விரியும் கதைக்களம் அல்ட்டிமேட். இரண்டாவதாக வர்ணனை, மிதமிஞ்சிய விவரிப்பு என்றல்லாமல் நம்மை அப்படியே உள்ளே இழுத்துச்சென்று நம்மையும் அதில் ஒரு அம்சமாக்கிக் காட்டிவிடும் பரவசம் இதற்கு உண்டு. மூன்றாவது பாத்திரப்படைப்பு ரெசாலத்தின் வேதாளச் சிறுத்தைச் சண்டை, குட்டப்பனின் அறிவு, நீலியின் காதல், அந்த ஆப்பீசர், கீரக்காதன் இன்னபிற. ஒருவர் தம் வாழ்வில் நிச்சயம் படித்திருக்கவேண்டிய நாவல் இது

14. Number of Bookcases You Own:

இரண்டு. கோபியில் வீட்டிற்கு ஒன்று கோவையில் ரூமில் ஒன்று

15. One Book You Have Read Multiple Times:

ஜே.ஜே சில குறிப்புகள் / ஸீரோ டிகிரி (இரண்டுமே ஐந்து முறை)

16. Preferred Place To Read:

வீட்டு சோஃபா

17. Quote that inspires you/gives you all the feels from a book you’ve read:

நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள் – ஆத்மாநாம்

18. Reading Regret:

உம்மத் – ஸர்மிளா செய்யத்

19. Series You Started And Need To Finish (all books are out in series):

சீரியஸாவே நான் ஒரே ஒரு சீரியஸ் தானுங்க படிச்சிருக்கேன். அதையும் முடிச்சே ஆகனும். (வெண்முரசு)

20. Three of your All-Time Favorite Books:

காடு – கன்னி – ஜே.ஜே / ஜெமோ – ஃப்ரான்ஸிஸ் கிருபா – சுரா

21. Unapologetic Fanboy For (author):

முன்ன சாரு நிவேதிதா இப்ப ஆசான் ஜெயமோகன்

22. Very Excited For This Release More Than All The Others:

வெண்முரசுல குருஷேத்ரப் போர் நடக்கற பகுதி. அத ஆசான் எழுத்துல படிக்கனும்.

23. Worst Bookish Habit:

படிக்க படிக்க தூக்கம் வந்தா அப்படியே தூக்கிப்போட்டுட்டு தூங்கிருவேன். காலையில பாத்தா அதுமேல உருண்டு அங்கங்க கசங்கிப்போய் கெடக்கும் L

24. X Marks The Spot: Start at the top left of your shelf and pick the 27th book:

ஆ! சல்மாவின் “சாபம்” சிறுகதைத் தொகுப்பு (அது ஏங்க 26ன்னு சொல்லியிருந்தா நக்கீரனின் என் பெயர் ஜிப்ஸி வந்திருக்கும், 28ன்னு சொல்லியிருந்தா – பாத்துமாவின் ஆடு – பஷீர் வந்திருக்கும்)

25. Your latest book purchase:

கோணங்கியின் மதினிமார்கள் கதை

26. ZZZ-snatcher book (last book that kept you up WAY late):

ராஸலீலா!

இந்த லிஸ்டில் காடு – கானகன் – இரவு – அவன் பெயர் சொல் – கடல்புரத்தில் – பாத்துமாவின் ஆடு (இதுல காடு தவிர மத்த எல்லாமே தூக்கத்த விட்டு சிங்கிள் நைட்டுல முடிச்ச புத்தகங்கள்.) கானகன் வாசிக்கறப்ப சென்னை சென்ட்ரல்ல ஏறி ஆரம்பிச்சு சேலம் நெருங்கும்போது முடிச்சுட்டேன். அதுக்கப்பறம் தூங்கி, ஈரோட்டுல வண்டி நின்னு முக்கால் மணி நேரமா அதுலயே நெனப்பில்லாம தூங்கி, பக்கத்துல ஒரு ட்ரெயினோட ஹாரன் சத்தம் கேட்டு எழுந்து பாத்தா, ஒரு மணிநேரம் ஆகி ட்ரெயின் ஷெட்டுக்கு போக மெதுவா ப்ளாட்ஃபார்ம்ல இருந்து வெளிய வந்துருச்சு. அப்பறம் அந்த தண்டவாளக் கல்லுல மெதுவா ரன்னிங்ல எறங்கி நடந்து ஸப்ப்பா. மறக்கவே முடியாது.

 -ஷா

11 January 2016

புத்தகங்களுடன் எனது 2015


2015-ம் ஆண்டு நான் வாசித்தவற்றை வெறுமனே பட்டியலிடாமல், இவ்வரிசையைக் காணும்பொழுதினில் எனது நினைவுக் குறிப்பிலிருந்து எழும் முதற்சிந்தனையை இங்கே பகிர விழைகிறேன்.
கடந்த ஆண்டில் நான் வாசித்தது மிக மிகக்குறைவு என்பதே எனது எண்ணம். இரண்டு மூன்று மாதங்கள் வாசிக்காமல் எழுதாமல் இருந்திருக்கின்றேன். இது நான் வாசித்த நாவல்களின் மிகச்சிறிய குறிப்புகள் தாம்.

இனி புத்தகங்கள்:

ஆத்துக்கு போகணும் – காவேரி அவருக்கு கிருஷ்ணப் பிரபு என்று பெயர். ஒவ்வொரு சென்னை புத்தகக் கண்காட்சியிலும் அவர் காலச்சுவடு பதிப்பகத்தில் நின்று புத்தக அறிமுகங்களைச் செய்துகொண்டிருப்பார். பஷீரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரே! அவரது பரிந்துரைகள் சோடை போனதில்லை என்று பலபேர் (நான் உட்பட) சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு பெருநகரப் பெண்ணின் பார்வையில் ஒரு வீட்டுக் கனவும் அதன் தேடல் வலியுமே இந்நாவல். அழகான நாவல். 2015-ம் ஆண்டில் நான் வாசித்த முதல் நாவல்.

முதற்கனல் – ஜெயமோகன் முதற்கனல் – வெண்முரசு நாவலின் துவக்கம் இது. மஹாபாரத்தை நாவல் வடிவில் ஆசான் எழுதத் துவங்கி (10 ஆண்டுகள் தொடர்ந்து எழுதுவாராம் – இது எழுதப்பட்ட காலத்தில் நான் வாழ்ந்தேன் எழுத எழுதவே படித்தேன் என்பது எனது முதற்பெருமை) ஓராண்டு கடந்தே இதைப் படிக்கலானேன். இது நமது எல்லைகளுக்கு அப்பாற்பட்டதென்னும் மாய பிம்பம் எனக்குள் ஒளிந்திருந்தது. அதனால் நான் இதைச் சீந்தவே இல்லை. நண்பனொருவனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில் காலத்தில் நிற்கும் கம்பீர கதாபாத்திரங்களைப் பற்றி எழுதியபோது: “நண்பா, நீ காடு படித்திருந்தால் உனக்கு குட்டப்பனையும் நீலியையும் காண்பித்திருப்பேன். கன்னி கொண்டிருந்தால் இருக்கவே இருக்கிறாள் அமலா. ஒரு ஜோசப் ஜேம்ஸ் போல ஒரு சுசியைப்போல, நீ அறிந்த கதாபாத்திரங்களைக் கொண்டு….” என எழுதியிருந்தேன். அதற்கு அவன் “… நீ பாத்திரங்களைத் தேடத் தேவையில்லை. என்னருகே பீஷ்மர் வீற்றிருக்கிறார்….” என்றான். எனக்கு மஹாபாரதம் தெரியாது. மூலக்கதை மட்டுமே பரிச்சயம். நமக்கு எட்டுமா எட்டாதா என்றிருந்த சிந்தனை உடைந்து, எனது ஜோசப் ஜேம்ஸ் முணியாண்டி அமலாவை விட அப்படி என்ன செய்துவிட்டார் பீஷ்மர் என்று வாசிக்க ஆரம்பித்தேன். கருடர்களின் வாழ்வியலில் துவங்கும் நாவல் வாசிக்க வாசிக்க பெரும் மிரட்சியைத் தருகிறது. இதுவே பேரனுபவமாக இருந்தது. பீஷ்மருக்காக வாசிக்க ஆரம்பித்த என்னை, அவரை விட அம்பைதான் அதிகமாக ஆட்கொண்டார். மிகவும் முக்கியமான நாவல். பத்தாண்டு எழுதப்படும் ஒரு சரித்திரத்திற்கு இதை விட சிறப்பான துவக்கம் அமையாது.

மழைப்பாடல் – ஜெயமோகன் 
வண்ணக்கடல் – ஜெயமோகன் 
மழைப்பாடல் மற்றும் வண்ணக்கடல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள். இதில் தான் திருதராஷ்ட்ரன், சகுனி, துரியோதனன் போன்ற மிகப்பெரும் நாயகர்கள் உருவெடுக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புணர்த்தி அறிமுகம் செய்துவைக்கும் ஆசானின் நேர்த்தி மிகவும் அருமை. மிகமுக்கியமானது சகுனி பீஷ்மரின் முதல் சந்திப்பு, அதற்கு முன் நிகழும் ஓநாயினை கவனிக்கும் சகுனி நிமிடங்களும் உச்சம். இவரது எழுத்தில் குருஷேத்ரம் நடப்பதை வாசிக்க வேண்டுமென்பது எனது அவா. வெண்முரசின் நான்காவது நாவலான நீலம், முதல் அத்தியாயத்திலேயே என்னை மயக்கிவிட்டது. ஒரு பெண்ணை அவள் இளமையைப் பற்றிய வர்ணனை ஒன்று இடம் பெரும். அதுவே அடித்து துவைத்துவிட்டது. மீண்டால் அதைப் படிக்கவேண்டும்.

ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி ஒரு சகாப்தத்தை அதன் வீழ்ச்சியை அதனைச் சுற்றியிருந்த மனிதர்களின் வாழ்வு நிகழ்வுகளை மிக மெதுவாக ஆழமாக அழுத்தமாகச் சொல்லிக் கடக்கிறது இந்நாவல். ஒரு புளியமரத்தைப் பற்றிய நாவல். இதன் நிகழ்வுகளை கடந்துவிட்டாலும் அதன் தாக்கம் நமக்குள் தங்கிவிடுவது சிறப்பு. நண்பன் சொன்னான் நான் ஒரு புளியமரத்தின் கதையை வாசிக்கப்போவதில்லை என. ஏன் என்றேன். வாசித்தால் சுராவை வாசிக்க வேறொன்றும் இல்லை எல்லாமே முடித்துவிட்டேன். அதனால் இது இருக்கட்டும் என்றான். அவ்வளவு அழகான எழுத்துமுறையைக் கையாள்பவர் சுரா என்பதற்கான அழுத்தமான சான்று இந்நாவல்

நினைவுதிர்காலம் – யுவன் சந்திரசேகர் இசையைக் கேட்க முடியும். படிக்க முடியுமா? ஆம்! இந்நாவலைப் படித்தால் அது சாத்தியமே. ஒரு நேர்க்காணலின் ஆவண வடிவு கொண்ட இந்நாவல் எழுத்தால் இசையை மீட்டுகிறது. பரிந்துரைத்த நண்பர் த. ராஜனுக்கு நன்றிகள்

காடோடி – நக்கீரன் இந்த நாவல் வெளிவந்த உடனே வாங்கினேன். வெளிநாடு சென்றிருந்த நண்பரொருவர் இதை வாங்கி அனுப்பும்படி சொல்ல. அப்படி என்ன முக்கியத்துவம் இதற்கு என வெளியாகும்போதே வாங்கினேன். கவிஞரின் நாவல் என்பதால் நாவலே கவிதைத் தோற்றம் கொண்டிருக்கும். காடு, அதன் சீரழிவு, காதல் இவையாவும் கண்முன் தோன்ற வைத்துவிடுகிறது காடோடி, லதாமகனுக்கு நன்றிகள்.

உம்மத் – ஸர்மிளா செய்யத் இந்த ஆண்டில் நான் படித்த மிகச் சுமாரான நாவல். பெண்ணியம் என்ற பெயரில் சுய பெருமைப் பறைசாற்றல்களும் குறைசொல்லிகளின் மொத்த உருவாகவுமே இருக்கிறது இந்நாவல். ஆனால் சலிப்புறச் செய்யாத நடைக்கும் அடுத்து என்னவோ என்ற சுவாரஸ்யமும். பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளை அவள் எவ்வாறு மனதளவில் தாக்கப்படுகிறாள் என்பதைச் சொல்லியிருப்பது திருப்தி தரக்கூடிய ஒன்று. இருந்தும் இது பெண்ணிய நாவலில் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதைக்கு ஒரு படி கீழே தான் இருக்கிறது.

புனைவின் நிழல் – மனோஜ் அட்சற ஆழி, 857, சர்ப்பவாசனை ஆகிய மூன்று கதைகள் இச்சிறுகதைத் தொகுப்பில் எனது விருப்பமானவை. பின் நவீனத்துவம் என்பதை புனைவின் வாயிலாக எட்டியிருக்கும் தொகுப்பு. பல்வகைக் களத்தால் சிறுகதை விரும்பிகளுக்கு விருந்து இந்தத் தொகுப்பு. கதைக்குள்ளாக வாசகனை இழுத்து முடிவிலிகளை வாசகனிடமே கொடுத்துவிடுதல் இத்தொகுப்பின் சிறப்பு.

கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள்முருகன் பெருமாள் முருகன் கட்டுரைகள். கெட்ட வார்த்தைகளைப் பற்றியும் அதன் உருவாக்கம் அர்த்தம் உபயோகமுறை அதற்கான தர்க்க ரீதியான காரணிகள் அரசியல் வரலாற்றுப் பிண்ணனிகள் என பிரித்து மேய்கிறார். சென்ற ஆண்டு இதே நாளில் நான் எழுதியிருந்த ஒரு கருத்தினை நண்பரொருவர் மேற்கோளிட்டிருந்தார் அது இதன் சார்புடைமை கொண்டது என்பே. எனது கருத்து: ஒவ்வொரு மனிதனுக்கும் கோபதாபங்கள் இருக்கும். அதனை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதில் அவனது சுற்றமும் நட்புறவும் சார்புடையனவாய் உள்ளது. கோபத்தைக் காட்டாமல் பல்லிளித்து நல்லவன்போல் நடித்து வாழும் வாழ்க்கையை பல நேரங்களில் பல இடங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கோபம் ஏற்பட்டால் வசைபாடுவது மனிதனின் இயல்பு. ஆனால் அதனை பொதுவெளியில் முன்வைக்க தனி தைரியம் தேவைப்படுகிறது. மறுக்கமுடியாதது. நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய தொகுப்பு.

கவிதைகள்: பெரும்பாலும் கவிதைகளை ஒட்டு மொத்தமாக நான் படிப்பதே இல்லை. அப்படி படித்தால் எனக்கு விளங்காது என்பது வேறு கதை. ஒரு கவிதையைப் படித்து அதனை உள்வாங்க முயன்று (முடியாத பட்சத்தில் அதனை விட்டுவிடு அதுதான் உனக்கும் கவிதைக்கும் நல்லது என்று நண்பரொருவர் சொன்னார்). அப்படியான முயற்சிகளால் கவிதையின் சுவையை சுவைத்த பின்னரே அடுத்த கவிதைக்கு போவது வழக்கம். முடிந்த அளவு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று. இப்படித்தான் போகும் எனது கவிதை வாசிப்பு. அவ்வப்போது வாசிக்கப்படும் கவிதைகளில் நான் முழுவதுமாக வாசித்து முடித்த, எனக்குப் பிடித்த கவிதைத் தொகுப்புகள் இவை:

அதீதத்தின் ருசி – மனுஷ்யபுத்திரன் 
நகுலன் தேர்ந்தெடுந்த கவிதைகள் 
அயோனிகன் – ரமேஷ் பிரேதன் 
உலோகருசி – பெருந்தேவி 
ஹேம்ஸ் என்னும் காற்று – தேவதச்சன் 
கடைசி டினோசர் – தேவதச்சன் 
ஒவ்வா – ஸர்மிளா ஸெய்யத் 
பறவையிடம் இருக்கிறது வீடு – பாலைநிலவன் 
என் பெயர் ஜிப்ஸி – நக்கீரன் 
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு – மனுஷ்யபுத்திரன் 
ஆத்மாநாம் படைப்புகள்

இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். தனித்தனியாக ஒரு கவிதையினைச் சுட்டிக்காட்ட முடியாத அளவு நிறைந்திருக்கிறது கவிதைகள். இதில் என்னை பெருமௌனத்திற்குள் தள்ளிவிட்டது பின் வரும் கவிதை.

# சிதறிய நிலவு அல்லது ஆத்மாநாம் #

யாருமே கவனிக்கவில்லை
ஒரு குழந்தை
தத்தித் தத்தி நடந்து
கிணற்றை
எட்டிப் பார்த்தது
ஆழத்தில் மிதந்துக் கொண்டிருந்தது
அது தேடியப் பந்து
ஒரு கணம்
ஒரே கணம்தான்
தன்னை ஊடுருவிக் கடந்த
ஒரு பறவையால்
உடைந்து சிதறிய நிலவு
பின் மெல்ல மெல்ல
மீண்டுக் கொண்டிருந்தது

- நக்கீரன், என் பெயர் ஜிப்ஸியிலிருந்து.

மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா வாழ்ந்து கெட்ட வம்சத்தின் கடைசித்துளி சிதையும் ஒரு உயிரின் கதை. அதுவும் பெண்ணாசையால் என்பது இதற்கு மேலும் கனம் கூட்டுகிறது. மரபுகளை உடைப்பதில் அதீத ஆர்வமும் தேவையும் துணிபும் இருப்பதால் இவ்வகை இலக்கியங்கள் தமிழுக்கு அதிகம் தேவை எனவும் சமகாலத்து நண்பர்களால் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது இந்நாவல்.

திருடன் மணியன்பிள்ளை – ஜி.ஆர்.இந்துகோபன்
இது உண்மைக்கதை என்பதே பாதி படித்தபின் தான் சொன்னார்கள். மிக சுவாரசியமான வாழ்க்கையை இலக்கியப் படைப்புகளிலல்லாது நிஜத்திலும் வாழமுடியும் எனக்காட்டியிருக்கிறார் மணியன்பிள்ளை. அவரது வாழ்வின் சூழல்களும் நிகழ்வுகளும் அதைக் கையாண்டிருக்கும் மணியன்பிள்ளையின் திறனுமே இந்நாவலை சுவாரஸியமாக நகர்த்திச் செல்பவை. <இந்த ஆண்டு நடந்த கவிதைப்போட்டியின் வெற்றியாளர் காலீஸ் அண்ணனுக்கு இதைப் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது>

மௌனப்பனி ரகசியப் பனி – காலச்சுவடு மொழி பெயர்ப்புக் கதைகள் இந்த சிறுகதைகளின் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘மச்சம்’ என்னும் சிறுகதை. ஒரு பெண் தனது தோள்பட்டையில் இருக்கும் மச்சத்தை வருடிக்கொண்டே இருக்கிறாள். அப்பழக்கம் நெடுநாளாய்த் தொடர்ந்து ஒரு கட்டத்தில் நின்றுவிடுகிறது. அது ஏன் எதற்கு நின்றது என்பதன் உளவியல் காரணம் அல்டிமேட். அதைத் தொடர்ந்து அவள் கொள்ளும் உணர்ச்சிகளின் குவியல் இக்கதை. இதைப்போல மற்ற கதைகளும் உளவியல் ரீதியான உணர்வுகளைக் கொடுத்திருக்கிறது. உலகின் பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இக்கதைகளின் தொகுப்பை காலச்சுவடில் இலவசமாகக் கொடுத்தார்கள்.

மெனிஞ்சியோமா – கணேசகுமாரன் கணேசகுமாரன் முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல் ஐந்து பக்கத்தில் எழுதியிருக்கமுடிந்த ஒரு வலி தான். அதிக மெடிக்கல் டெர்மினாலஜியுடன் ரணவலியுடைய ஒரு குறுநாவல். மூளையைப் பற்றிய தகவல்கள் அபாரம். மெல்லிய சரடில் கோர்த்து வாசகனை உள்ளிழுத்து தக்கவைத்துக்கொள்ளும் நடை. நோயால் அவதிப்படும் சந்துருவின் வலியைவிட அதைப்பார்த்து கஷ்டப்படும் அப்பா காளிதாஸின் பாசம் கலந்த வலி கொடூரமானது. நீண்டநாள் தீராத நோயுடன் அவதிப்படும் மக்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது சங்கடங்கள் ரணம் விடியும் என்ற நம்பிக்கை என எல்லாவற்றையும் ஒரு சேர கண்முன் நிறுத்தியிருக்கிறார் வாழ்த்துக்கள்.

பைத்திய ருசி – கணேசகுமாரன் சென்னையில் இருந்தபோது ஒருநாள் நண்பர் ’வேதா’ அர்ஜுன் அவரது அறைக்கு சென்றிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டிருக்க திடீரென இத்தொகுப்பிலிருந்து “ஏவல்” என்ற கதையைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். தன்னைப் பைத்தியம் என ஒப்புக்கொள்ளமுடியாதவனின் கதை. பாதி எழுத்து வழக்கிலும் பாதி பேச்சு வழக்கிலும் இருக்கும் அதுவே இக்கதைக்கு மிகச்சரியானதாய் பொருந்தும். இத்தொகுப்பு முழுக்க வலியைப் படைத்துவிட்டு அதற்கு ருசி எனப் பெயரிடப்பட்டுள்ளது அழகியல்.

காடு – ஜெயமோகன் தி அல்டிமேட் ஆசான் டச். இந்நாவலை வாசித்த அனுபவமே மிக மிக அலாதியானது. படித்துவிட்டு ஒரு வாரம் இதே மிதப்பில் திரிந்தேன். கதாபாத்திரங்களாகட்டும் வர்ணனைகளாகட்டும் கதை அமைந்திருக்கும் கட்டமைப்பாகட்டும் எல்லாமே மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும் ஜெமோவின் மிக முக்கியமான படைப்பு இது. வாசகனுக்கும் கூட. இதைப்பற்றி மிக விரிவாய் எழுத எண்ணம்.

இரவு – ஜெயமோகன் மீள் வாசிப்பு. ஒருநாள் நள்ளிரவில் கோவையிலிருந்து ஊட்டிக்கு பைக்கில் சென்றேன். முழுக்க முழுக்க இருண்ட மலைப்பகுதியில் பயணித்த பொழுது இந்நாவலின் வாசிப்பு நினைவுக்கு வந்தது. (முந்தைய வாசிப்பும் இரவில் – ஒரே இரவில் நிகழ்ந்தது). திரும்பி வந்து நாவலை மீண்டும் வாசித்தேன். தேவையானவற்றின் மீது தேவையான அளவு வெளிச்சத்தைப் பரப்பி உபயோகித்துக்கொள்ளும் அழகு கொண்டது இரவு என்பதுபோல் வரும் வரிகள் எனது இரவுலாக்களில் எதிரொலிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆசானுக்கே உரிய வர்ணனை காதல் யட்சி தத்துவம் என எல்லாம் அமைந்திருக்கும் நாவல் இது.

கன்னி – பிரான்சிஸ் கிருபா (இந்த ஆண்டே மூன்று முறை) பிரான்சிஸ் கிருபாவை நேரில் பார்த்தால் கன்னத்தில் அறைந்து ஒரு கேள்வி கேட்கவேண்டும். ”அமலா பாண்டிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?” இந்நாவலைப்பற்றி முன்பு விரிவாக <இங்கு&gt; எழுதியிருந்தேன். சொற்கள் அர்த்தத்திலிருந்து மௌனத்திற்கு திரும்பும் வழி இது. மௌனத்தை உணரத்தான் முடியும். அதை எழுத முடியாது.

ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி மீள் வாசிப்பு. “இத ஒரு தடவ படிச்சிட்டா அப்பறம் நீ அடிக்கடி ரெஃபரன்ஸ்க்கு எடுத்துக்கிட்டே இருப்ப. இது இலக்கியத்துல பைபிள் மாதிரி” என்று ஒரு நண்பர் சொன்னார். 100% உண்மை. நான் அதிக முறை படித்த நாவல் இது என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

அவன் பெயர் சொல் – ரமேஷ் பிரேதன் பிறழ்வு. அன்றி வேறொன்றும் இல்லை. அது முழுதும் நிறைந்திருப்பினும் சலிப்படையச் செய்யாமல் வலியோடு ஊன்றி வாசகனுக்கு கடத்திவிடும் நாவல்.

பாத்துமாவின் ஆடு – பஷீர் ஒரு கவலையை சிரித்துக்கொண்டே வாசிக்கவைக்க முடியும் என்றால் அது பஷீரால் தான் முடியும். ஒரு எழுத்தாளனின் சிரமங்களை அவன் எதிர்க்கொள்ளும் இன்னல்களை கலகலப்பாக சொல்லப்பட்டிருக்கும் நாவல். ஓரிரு மணிநேரங்களில் வாசிக்க முடிந்தாலும் இந்நாவலின் பாத்துமாவும் அவளது ஆட்டுப்பால் திருட்டும் மனதில் தங்கிவிடுகிறது

ஆழி சூழ் உலகு – ஜோ.டி.க்ருஸ் டைம் மிஷினை எடுத்துக்கொண்டு போய் தலைமுறை தலைமுறையால் கடலோடு வாழ்பவர்களைப்போல் வாழ்ந்துவிட்டு வரும் அனுபவம் இந்நாவல் தந்தது. இது குறித்தும் எழுத நிறைய உள்ளது.

இந்த 2015-ல் நான் படித்தது மிகக்குறைவே என்றாலும் வாசித்தைவை யாவும் ஏமாற்றாமல் இருந்தது மகிழ்ச்சியே. 2016-ல் இன்னும் நிறைய வாசிக்கவேண்டும், நண்பரிருவர் நினைவூட்டிய ஆத்மாநாம் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

அழிவு:
என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு

தோன்றுதல் இயற்கை

- ஷா