சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

24 March 2015

[சிறுகதை] இன்னொருத்தி

 சோளகம்பட்டி ஜமீன்தாருக்கு மான்கறியென்றால் அவ்வளவு பிரியம். ஜமீன் குடும்பத்தின் கடைசி வாரிசு.

ஜமீன்குட்டிக்கு வேட்டை ஆர்வம் குறைந்ததேயில்லை. ஒத்தசாதிக்காரன் என்பதால் அதிகாரிகளும் தத்தமது பங்குகளை பெற்றுக்கொண்டு காட்டை ஏலம்விட்டதாய் குற்றச்சாட்டுகள் உண்டென அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன்.

ஒருமுறை பெரியஜமீன் காட்டில் யானை வேட்டைக்குப் போய் ஜீப்பீருந்து தவறி விழுந்ததால் பின்மண்டையில் அடிபட்டு கைகால்கள் இழுத்துக்கொண்டு போனதை காட்டு மாரியாத்தா தண்டித்துவிட்டாள் என்று பாட்டி சொன்னாள். முற்றிலுமாக இழுத்துக்கொண்டதற்கு அவரது நரம்புத்தளர்வும் ஒரு காரணம் என்று ஊர்ப்பெண்கள் பேசிக்கொண்டதையும் பாட்டி சொல்லத்தவறவில்லை.

சோளகம்பட்டி ஜமீன் எல்லையிலிருந்த பல்வேறு வைத்தியர்கள் முயன்றும் ஜமீன் குணமடையவில்லை. காட்டுமுல்லைவாயிலில் புகழ்பெற்ற நம்பூதிரித்தோட்டத்தில் சித்த வைத்தியர் அனந்தலிங்கம் வரவழைக்கப்பட்டார். அவரது வரவேற்ற விதத்திலேயே ஜமீன் குடும்பத்தினர் எதையும் செய்யத்தயாராக இருந்ததை அறிந்துகொண்ட அனந்தலிங்கம், ஜமீனுக்கு வந்திருப்பது பக்கவாதம் என்பதைக் கண்டுபிடித்தார்.

காட்டுநெல்லிச்செடி வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்குமுன் அவரை ஒற்றை சந்தனமரக்கட்டிலில் வைத்து வைத்தியம் பார்க்கவேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்ற சின்ன ஜமீன் காட்டிற்குள் சென்றிருந்தார். உத்திரமேரூர் எல்லையில் காட்டாற்றை திருப்பிவிட அணைக்கட்டு கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் சந்தனமரத்தை வெட்டிக்கொண்டு அந்த ஊர் வழியாகக் கொண்டுவருவது சாத்தியமன்று என்று குண்டேரிக்குளத்தின் தலைப்பகுதியை ஒட்டிய மேட்டில் ஒரு ஒற்றையடிப்பாதையை சின்ன ஜமீன் அமைத்தார். அதில் கொண்டுவரப்பட்ட சந்தன மரத்தில் படுக்கவைத்த இரண்டாம் மாதத்தில் பெரிய ஜமீன் எழுந்து நடமாடியது வரலாறு.

சந்தன மரத்தைக் கொண்டு வந்தவர்களில் மூன்று பேர் அடுத்ததுத்த நாட்களில் மூச்சடைத்து இறந்தனர். அதை பொருட்படுத்தாத ஜமீன் நம்பூதிரிதோட்டத்தை அழகுபடுத்த யானைத் தந்தத்தை பரிசளிப்பதாய் உறுதியளித்தார்.

அன்றிலிருந்து இரண்டாம் பௌர்ணமியில் தட்டாம்பாறைகளுக்குப் பின் யானை ஒன்று கொல்லப்பட்டுக்கிடந்தாக உத்திரமேரூர் அணைப்பணிக்குச் சென்ற வேலையாட்கள் பேசிக்கொண்டனர்.

யானைத்தந்தமும் அன்று சமைந்த கன்னியொருத்தியையும் நம்பூதிரித்தோட்டத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது. உண்டு களித்து திரும்பிவரும் வழியில் ஜமீன் வலிப்பு வந்து செத்துப்போனான்.

அதேநாளில்தான் நானும் பிறந்தேனாம். சில ஆண்டுகள் கழித்து கருவுற்றிருந்த சின்ன ஜமீன் மனைவிக்கு கால்வரை முடியுடன் கருத்த பெண்குழந்தை பிறந்தது.

மீண்டும் அனந்தலிங்கம் வரவழைக்கப்பட்டார். வெட்டப்பட்ட சந்தனமரத்திற்காக யட்சினிப்பிரியை என்னும் வனதேவதை கோவில் இடிக்கப்பட்டதும் காவல் யானையை பலிகொடுத்து தந்தம் எடுத்ததும் குடும்பத்தின் மீதான சாபத்தை உண்டாக்கிய காரணியாய் அவர் அடுக்கினார்.

ஜமீன் பரிசளித்த கன்னி வனதேவதை வம்சாவளியோ என ஐயம் கொண்டார். இதற்கான 
பரிகாரப்பூசையில் ஆறு எருமை மாட்டுத்தலையும் இரண்டு பன்றித்தலையும் வைக்கப்பட்டு ஏழாம் நாள் காய்ந்துபோன ரத்தத்தை வனதேவதையின் கோவில் எல்லையில் தெளிக்கப்பட கட்டளையிட்டார். பூசையின்போது எருமையின் கண்கள் உருண்டதாக மயங்கிவிழுந்த குமரப்பன் நான்கு நாள் கழித்து எழுந்தபோது சொன்னான். நரபலி ஒன்றும் கொடுக்கப்பட்டதாய் பேச்சு உண்டு.

யானை பலிகொடுக்கப்பட்ட இடத்தில் போடப்பட்டிருந்த எருமை மற்றும் பன்றித்தலைகளை காட்டுநாய்கள் குதறிக்கொண்டிருப்பதைப் பாறையில் அமர்ந்து பார்த்தபோது எனக்கு குடல்பிறட்டியது. வாந்தியெடுத்து பாறையிலிருந்து சரிந்து விழுந்தேன்.

அப்போது எனக்கு வயது ஆறு. 

இருபத்தியெட்டு வருடம் கழித்து மீண்டும் உத்திரமேரூர் அணைக்கட்டின் காட்டுப்பாதையில் வந்தவனுக்கு பாதிகுதறப்பட்ட காட்டுப்பன்றியின் ரத்தம் குமட்டலைக் கொடுத்தது. இம்முறை மல்லாந்து விழவில்லை. விழுந்தாலும் அன்று வேலை செய்துகொண்டிருந்த தாய் தந்தை காப்பாற்றியதுபோல் இப்போது காப்பாற்றப்பட வாய்ப்பில்லை. இருந்த ஒரே துணையை இழந்து வழிதவறி புதரில் உருண்டுதான் இவ்விடத்தை அடைந்தேன். விழுந்து இரண்டு மாதமாகிறது.

என்னுடைய பெயரையே மறந்துவிட்டேன். வெளியே செல்ல பயமாய் இருக்கிறது. இதே ஊரின் இன்னொரு இடத்தில் என்னைப் போலவே ஒருவன் இருக்கிறான். என்னைப்போல் சிரித்துக்கொண்டு, விளையாடிக்கொண்டு.

அவன் இன்னொரு நானாக இருக்கலாம் அல்லது எனது இரட்டையாக இருக்கலாம். என் நிழலின் பிம்பத்தில் நான் ஒளிந்துகொள்ளும் போது அவன் என்னிடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறான். அவனது தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்து விழுங்கிக்கொண்டிருக்கிறான்.

அப்படித்தான் அன்றொரு நாள் மேலத்தெருவின் ஒரு வீட்டில் சண்டை நடந்து கொண்டிருந்தது. அன்று  சினிமாவுக்குப்போய் வரும்வழியில் ஆத்தங்கரையில் ஒருத்தியைப் பார்த்தோமல்லவா? எனக்கு கூட முறுக்கு சீடை முத்தம் எல்லாம் கொடுத்தாளே! அவள் வீடுதான்.

மனைவியின் நடத்தையை சந்தேகித்த கணவனின் கோபக்கனலில் குளிர்காய ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. திடீரென அந்த ஆளின் மண்டையில் விழுந்த கல் என்னைப்போன்றவனிடமிருந்து வந்தது என்பதை சொல்லவா வேண்டும். சத்தியமாக நான் தூங்கிக்கொண்டிருந்தேன். கல் எறிந்தது அவன். அவனைப்போலவே இருந்தேனோ என்னவோ என்னைப் பிடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள்.

இன்னொருநாள் நான் குளித்துக்கொண்டிருந்தேன். அங்கு வந்த அவன் எனது ஆடைகளை உருவப்பார்த்தான்.  போராடித்தான் என்னை நானே காப்பாற்றினேன். ஆனால் எதிர்வீட்டுப் பெண்ணிடம்  என்ன சொன்னானென்று தெரியவில்லை. அவள் முன் நான் ஏதேதோ காட்டி ஏதேதோ செய்யமுயன்றேன் என்று புகார் செய்துவிட்டாள். மீண்டும் சம்மட்டியடி விழுந்தது. அப்பொழுதும் நான் தூங்கிக்கொண்டுதானிருந்தேன்

அவனிடமிருந்து காப்பாற்றும்படி அப்பாவிடம் அழுது புலம்பினேன். என்னை இங்கு அனுப்பிவைத்தார். இது எந்த இடமென்றே தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கேன். மூன்று நாளாக தனியாகத்தான் சாப்பிடுகிறேன். எனக்கு பேச்சுத்துணைக்கு கூட யாருமில்லை. முதல் நாள் அவன் வரவில்லை.

ஆனால் இரண்டாவது நாளே எப்படி என்னைக் கண்டுபிடித்தான் எனத்தெரியவில்லை. எனக்கு சாப்பாடு கொடுக்க வந்தவனின் கையைப்பிடித்து கடித்துவிட்டானாம். ஒரே ரகளை. இப்பொழுது அடிக்கடி என்னை வந்து பார்க்கிறான். இவன் மட்டுமே அவ்வப்போது பேசுகிறான். திடீரென தொற்றிக்கொள்ளும் வெறுமைக்கு ஊரில் ஆயிரமாயிரம் நிவாரணிகள் இருந்தது. இங்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தங்கும் இடமும் எனது பள்ளியைப்போல ஒரு தனிமையிடம்தான். நினைத்துப்பார்த்தாலே பீதியாகிறது. 

தெரியுமா? இங்கு ஒரு பெண் துணைக்கு கிடைத்திருக்கிறாள். பக்கத்து அறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு அடிக்கடி பேய்பிடித்துக் கொள்ளுமாம். பேய் என்றால் சாதாரண பேய் அல்ல. ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ஏதேதோ பெயர்சொல்லிக்கொண்டு கத்தும் பேய். அவள் யட்சி யட்சி என்று அலறிய காவலாளி ஒருவனையும் அவன் அடித்தானாம்.

நேற்று அவளுடன் சகஜமாகத்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவள் பெயர் பிரியா. திடீரென அலற ஆரம்பித்தாள்.  எனக்கு இன்னமும் பயமாக இருக்கிறது. நேற்றிரவே அவன் அவளிடம் வம்பு செய்திருக்கிறான். மீண்டும் என்னையே அடித்தார்கள். ஊசியும் போட்டார்கள்.

என்னைப் பழிவாங்க நினைக்கும் அவன் யாரென்று தெரியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதேதோ செய்துவிட்டு என்னை மாறிவிடும் அவனிடமிருந்து நான் தப்பிக்க வழியே இல்லை. எனவே நான் இங்கிருந்து கண்காணாத இடத்துக்கு ஓடிவிடலாம் என்று முடிவெடுத்து ஓடினேன். குறுக்கே வந்த காவலாளியை அடித்தேன். பக்கத்து அறைப் பெண்ணை எட்டி உதைத்துவிட்டு ஓடுகிறேன். என்னை அடித்தவர்கள் எல்லாரும் பயப்படும் அளவுக்கு ஓடுகிறேன். இந்த ஊசிகளிடமிருந்து நெடுந்தூரம் ஓடுகிறேன். அப்பாவின் கைப்பிடியை விட்டுவிட்டு ஓடுகிறேன். என்னை நிர்வாணமாக்கி வதைத்தவனைத்தாண்டி ஓடுகிறேன். என்னைப் பைத்தியம் என்பவர்களைத் தாண்டி ஓடுகிறேன். சோளகம்பட்டி காடு வழியாக ஓடுகிறேன்.  வேறு ஊர் வேறு உலகம் வேறு காலம் என எல்லாம் தாண்டி இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறேன். 

ஆனாலும் அவன் என் பின்னால் வந்துகொண்டுதான் இருக்கிறான்.


- ஷா