சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

14 February 2014

அவள் எனக்கு எழுதிய காதல் கவிதை


’ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்று அதிர்ந்துகொண்டிருந்தது வீடு.

குதூகலாமாக இருந்த நண்பர்கள் எனது முதுகைப் பதம்பார்த்துவிட்டு கேக்கைப் பிய்த்து எனது முகத்தில் அப்பியவண்ணம் இருந்தனர். அம்மாவிற்கோ ஆனந்தத்தில் கை கால்கள் கொள்ளவில்லை. என்னை விதவிதமாக படமெடுத்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் என் அம்மாவிடம் அதைக்காட்ட உவகைகொண்ட அவள், எனது பழைய புகைப்பட நினைவுகளைப்பற்றிப்பேச, பழைய ஃபோட்டோ ஆல்பங்கள் வெளியே எட்டிப்பார்த்தது.
பார்த்து சிரித்து முடிக்கப்பட்ட ஆல்பங்களையும் ஓய்ந்து முடிந்த ஆர்ப்பரிப்புகளையும் விழுங்கிவிட்டிருந்த வீட்டினை அம்மா சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளையே பார்த்தவண்ணம் சோபாவிலேயே படுத்திருந்தேன். கண்களை லேசாக மூடி தூங்க முயற்சிக்க, திடீரென பதறிக்கொண்டு எழுந்தேன்.

ஒரு கனவு.

ஒரு பெரிய வெள்ளம் அணை உடைத்துக்கொண்டுவிட்ட ஒரு நீர்த்தேக்கத்தின் பெருக்கம் வந்துகொண்டேயிருக்கிறது. எப்போதும் வரும் கனவுதான் என்றாலும். இந்தக்கனவு இப்பொழுது ஏன் வந்தது?

’இந்திரா’

நண்பர்களுக்கு காண்பித்துக்கொண்டிருந்த ஆல்பங்களில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த அம்மா தற்செயலாக அதில் அவளைப்பார்த்த பின் உச்சரித்த பெயர். அவளால்தான் இந்தக்கனவு.

ஒரு பெரிய வெள்ளம் அணை உடைத்துக்கொண்டுவிட்ட ஒரு நீர்த்தேக்கத்தின் பெருக்கம் வந்துகொண்டேயிருக்கிறது. இந்த நீர்ப்பரப்பிலிருந்து மீண்டு எழுந்து ஒற்றைச்செடியைக் காப்பாற்ற விழைந்த குரங்கின் வாலைப்பிடித்து நீரிலிருந்து மேல் எடுத்து, கரை நோக்கி வரும்போது நீர்க்கொந்தளிப்பில் சிதறும் மீன்களைப்பிடிக்க முற்பட்டு தோல்வியுற்று நீந்தி நீந்தி நான் மீண்டுவந்து கரையில் நிற்கிறேன். அந்த இடமே அழிந்துவிட்டது. நானும் பாதி அழிந்துவிட்டேன். இனிமேல் ஒன்றுமேயில்லை. எவ்வளவோ கனவுகளுடனும் ஆசைகளுடனும் என் வாழ்வின் சிறு சிறு பகுதிகளைக் கட்டி வளர்த்திக்கொண்டு அதனை கனவுக்கு விலையாகக்கொடுத்துவிட்ட பின்னர் அந்த குரங்கை மட்டும் காப்பாற்றிவிட்டேன். அது ஒரு மலையின் மீது ஏறி நின்று ஓவென அழுகிறது. அப்போது ஒரு தேவதை தோன்றுகிறாள். நீர்நிலை அமைதியாகிறது. மீண்டும் பூ பூக்கிறது. மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன. அந்த தேவதை என் அருகில் வருகிறாள். சற்று உற்றுப்பார்த்தால் அது நீ. எனக்கெனப் பிறந்தவள் இந்த தேவதை’ என்று நான் கண்ட கனவைச் சொல்லும்போதெல்லாம் முத்துப்பற்கள் தெரிய கண்கள் மூடி வெட்கிச்சிரிக்கும் அழகான தேவதை அவள். பெயர் இந்திரா.

என் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என்னை முழுவதுமாக நம்பிய ஒரே ஜீவன் அவள். ஒரே ஊரில் பிறந்து மழலைகளாக ஒன்றாக வளர்ந்தவர்கள் என்றாலும் பருவமெய்திய பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட இடைவெளிதான் காதலை உருவாக்கியிருந்தது. பிழைப்புக்காக மாமன் வெளியூருக்கு குடிபெயர்ந்து சென்றதிலிருந்துதான் இந்தப்பிரச்சனை. அவளது ஸ்பரிசத்துக்காகவே ஆண்டுமுழுவதும் காத்திருந்து விடுமுறைக்கு மாமன் வீட்டிற்குச்செல்வேன். வா மருமகனே என்று அத்தை கூப்பிடும்போதெல்லாம் அவள் வெட்கப்படுவாள்.
எங்கோ படித்த வாசகம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொன்றையும் நன்றாகப்பார்க்க அதற்கான இடைவெளிகள் வேண்டும். சிலசமயம் காலத்திலும் சிலசமயம் தூரத்திலும். தினம் கிடைத்த தேவதை தரிசனம் இனி ஆண்டுக்கு ஒருமுறைதான் என்றபோது அதன் அருமை புலப்பட்டது. காலத்திலும் தூரத்திலும் உருவான இடைவெளிதான் என்னை அவள் மீது பைத்தியமாக்கியது.

அந்த ஆண்டு விடுமுறையில் அவளைப்பார்க்க தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். வெட்டாந்தரையில் நான் உருவாக்க விரும்பிய ஒரு பூங்காவனத்தின் இளவரசியாக அவளை அமரவைக்கவேண்டும். அதற்கேற்ப என்னை மாற்றி வெடித்துச் சிதறவிருக்கும் இந்தக் காதலை அவளிடம் ஒப்படைக்கவேண்டுமென்ற தீர்மானத்துடன் தான் வந்திருந்தேன்.

மாமா சென்னைக்கு சென்றிருந்தார். அங்கேயே தொழில் அமைந்துவிட்டதாம். வாரத்துக்கு ஒருமுறைதான் வருவார். நாளை நான் ஊருக்கு கிளம்பியாகவேண்டும். அவர் வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும் என்பதால் நானும் அவளும் மட்டும் பெரியகோவிலுக்கு சென்றோம்.

அங்கிருந்த புல்தரையில் அமர எத்தனிக்கையில் அவளது தாவணி என் கையை உரசிச்சென்றது. அவளருகில் அமர்ந்ததும்  அவளது ஸ்பரிசம் என்னை சொர்கத்தில் இருப்பது போல உணரச் செய்தது. எங்களைக்கடந்து செல்லும் ஒருவராவது எங்களை ’காதலர்கள்’ என்று நினைக்கமாட்டார்களா என மனம் ஏங்கியது. வார்த்தைகள் கிடைக்காமல் திண்டாடிய நான் மெதுவாக பேசத்தொடங்கும் முன் அவள் கைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தாள்.

‘இது சரியான்னு தெரியல, நீ என்னைய பிரிஞ்சிருந்தப்போ உன்ன நெனைச்சு எழுதின கவிதை இது’ என்றாள். ஆனந்தத்தில் நிதானிக்கமுடியாமல் காலத்தையும் சூழலையும் மறந்து அந்த கவரைப் பிரித்தேன். சட்டென என் கையைப்பிடித்துக்கொண்டு இப்ப வேண்டாம்’ என்றாள். என் கண்களில் நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

மௌனத்தின் மொழியில் காதலைப்பூசிக்கொண்டே இருக்கும் பொழுது சரஸ்வதி மஹாலுக்கு போலாமா என்றாள். தலையை மட்டும் அசைத்தேன். செல்லும் வழியெல்லாம் அவள் என் கைகளைப் பற்றியிருந்தாள். நீ மேல போ நான் டிக்கெட் எடுத்துட்டு வரேன் என்றேன். சரஸ்வதி மஹாலுக்கு பின்னால் உள்ள அந்த அரண்மனை கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு அவள் அஸ்தமனமாகும் சூரியனின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். சுற்றியாருமே இல்லை. தர்பார் மூடப்படும் நேரம் என்பதால் எல்லோரும் கிளம்பிவிட்டிருந்தார்கள். இன்னும் பத்து நிமிடம்தான். நாளைக்கு ஊருக்குப்போறேன் என்று காவல்காரனிடம் கெஞ்சி இந்தத் தனிமையை பெற்றிருக்கிறேன். மெல்ல அவளருகில் நெருங்கி அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, அந்த மாலைக்காற்றிலும் அதன் வெளிச்சத்திலும் மின்னி மின்னி அவள் முகத்தில் படர்ந்திருந்த அவளது கூந்தலை ஒதுக்கி விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி, கண்களைப்பார்த்தேன். ‘உன் கவிதைய படிச்சேன்’ என்றதும் வெட்கத்தில் அவள் தன்னையே உள்ளிழுத்துக்கொள்ள முற்பட்டாள். அவள் கைகளை நான் விடவில்லை. வெட்கத்தில் கன்னங்கள் சிவந்திருந்தன. ‘கவிதை சுமார்தான், ஆனா இந்த கவிதை எழுதின கைக்கு என் பரிசு’ என்று மெல்ல அவல் கையை எடுத்து என் கன்னங்களில் ஒற்றி, அவளது உள்ளங்கையில் முத்தமிட்டேன். இந்த அகண்ட நிமிடத்திற்குள்ளேயே இருந்துவிடவேண்டும் எனத்தோன்றியது. சட்டென துள்ளியெழுந்து என்னைக்கட்டிக்கொண்டாள். இந்தப் பெருவெளியில் இவ்வளவு சிறிய இடத்தைப் பிடித்துக்கொண்டு எவ்வளவு பெரிய அழகியலை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைத்து சொக்கிக்கிடக்கையில் சட்டென விலகி என் கன்னத்தில் முத்திமிடத்தொடங்கினாள்.

‘என்னடா ஆச்சு’ என்று அம்மா பதற, சோபாவுல இருந்து வழுக்கிட்டம்மா என்று சமாளித்தபடியே என் அறைக்குள் நுழைந்துகொண்டேன். என் கண்களில் இருந்த கண்ணீர்த்துளியை அவள் பார்த்திருக்கமாட்டாள். இந்த தேவதைக்கனவு இனியது. இது ஒரு இனிய துன்பம். அறைக்கு உள்ளே சென்று தாளிட்டு என் பெட்டியைத்திறந்தேன். அதில் அவள் எழுதிய கவிதை இருந்தது.

அந்த முத்தங்களுக்குப்பிறகு நான் தஞ்சாவூருக்கு போகவே இல்லை. என்னை போகவிடவில்லை என்பதே உண்மை. கல்லூரியில் சேரவேண்டும் கார் ட்ரைவிங் ஸ்பெஷல் கோர்ஸ் படி என்றேல்லாம் ஏமாற்றி காலம் தள்ளி, என்னை அங்கு விடவே இல்லை. கல்லூரி விடுதியில் இருந்து அப்பாவை ஏமாற்றி ஒருநாள் அத்தை வீட்டிற்குச் சென்றபொழுதுதான் உண்மை என் உச்சந்தலையில் ஆணியடித்தது.

சென்னைக்கு சென்ற மாமன் அங்கேயே ஒரு குடும்பம் அமைத்துவிட்டதாலும் இங்கு பல பிரச்சனைகளை தாங்கவொண்ணா அத்தை இந்திராவை ‘வரதட்சனையே வேண்டாம், கடன் எல்லாத்தையும் நானே கட்டிடுறேன், உங்க பிள்ளைய கட்டிக்குடுங்க’ என்ற தூரத்துச் சொந்தக்காரனுக்கு மணமுடித்துவிட்டாளாம். இந்த கோபத்தில்தான் என் தந்தை அவர்கள் வீட்டிற்கே செல்லவிடாமல் தடுத்திருக்கிறார். அவள் தற்போது மாயவரத்தில் இருப்பதாகச் சொன்னாள். ஓராண்டுக்குப்பின்னரே இது எனக்குத் தெரியவந்தது. முன்னும் பின்னும் குறுகி கபடமான அசைவுகளன்றி எனது கனவுகளையும் என் ஆழத்துக்குறிய கம்பீரத்தையும் தின்றுவிட்ட காலத்தை எண்ணி வழி நெடுக அழுதுகொண்டே கல்லூரிக்கு வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நானல்லவா அவளை மணந்திருக்கவேண்டும். தொலைபேசியில்லாக்காலம் என்றாலும் ஒரு கடிதமாவது போட்டிருக்கலாமே என்ற குற்ற உணர்வு வதைக்கிறது. அன்றைய முத்தங்களால் அவளைக் கொஞ்சமாக காதலித்தபோதும் காதலித்துவிட்டேன் என்பதே போதுமாக இருந்தது. என் கனவை நிறைவேற்றமுடியாமல் போனதை எண்ணியும் அவள் முத்ததிற்கு ஏங்கியுமே காலம் கழிகிறது!

அவளுக்குப் பிடித்தமான இந்த வெள்ளத்தின் கனவைக் வரவிடாமல் தடுக்க முயல்கிறேன். பயப்படுகிறேன்.  அதற்கு காரணம் உண்டு.  இனி அந்தக் குரங்கு மலையின்மீது ஏறி கத்தும் பொழுது, என் தேவதை வரமாட்டாள். அப்படியே வந்தாலும் அவள் என் காதலியாக அல்லாமல் இன்னொருவனின் மனைவியாக வருவாள். என் தேவதையை இன்னொருவனின் மனைவியாக என்னால் பார்க்கமுடியாது. அந்த மனதைரியம் என்னிடம் இல்லை. அந்த நொடியின் ரணத்தை என்னால் தாங்கமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் இந்தக்கனவு வரும்போதெல்லாம் அவளது கவிதையைப் பார்ப்பேன். இப்பொழுது என் கையில் அவள் கவிதை இருக்கிறது. கண்களில் கண்ணீருடன் அதைப்படிக்கத் தொடங்கினேன்.

உன்னில் நானும்
என்னில் நீயும்
கலந்ததை நாம்
உணர்ந்தபோது வந்தது – பிரிவு!
பிரிந்தாலும் அன்பே
நீ என்னிடமும்
நான் உன்னிடம் வாழ்கிறோமே
நம் கனவுகளில்…
என்றாவது ஒருநாள்
நீயும் நானும்
’நாம்’ ஆகிவிடுவோம்
என்ற எண்ணமே என் உயிராகியதடா…
அந்த நாளை எண்ணி
தேய்கிறேன் தேய்பிறையாய்
நம் காதல்
வளர்வதோ வளர்பிறையாய்…
முன்னே வருவது
முழுநிலவா வெறும் இரவா’
என்பதை காலம் தீர்மானிக்கட்டும்
அதுவரை
கனவுகளில் காதலிக்கலாம் வா’
-    இந்தி்ரா….

14 February 2013

காதலும் So - Called காதலும்



"காதலைப் பத்தி என்னடா தெரியும் உனக்கு?”

பெத்த அப்பா அம்மா  செத்தாக்கூட  கண்ணீர்தான்  விடுறான்.  ஆனா  காதலோ காதலியோ  செத்தாத்தான்  உயிரவிடுறான்!

எவனாவது அப்பா  செத்துட்டாருன்னு  உயிரவிட்டானா?  அம்மா  செத்துட்டாங்கன்னு உயிரவிட்டானா? தம்பி செத்துட்ட்டானேன்னு  ‘தம்பீஈஈன்னு’  போய்  உயிரவிட்டானா? கெடையாது!  காதல் டா காதல்!”

 என்று "மன்மதன்" திரைப்படத்தில் வரும் காதலைப் பற்றிய வசனம் கொண்டு துவங்குகிறது  இந்த  பதிவு!
 (குறிப்பு: தூக்குத்தண்டனை பற்றி பேசவேண்டுமானால் தூக்கில் தொங்கியிருக்கத் தேவையில்லை  என்பது போலத்தான்  காதலைப் பற்றி  பேச, காதலித்திருக்க வேண்டிய அவசியமில்லை)

Infactuation எனத் தொடங்கி  எதிர்பாலின  ஈர்ப்பில்  ஒருவித  மகிழ்ச்சியை  உணர்ந்து, அந்த  உணர்வை  மீண்டும்  மீண்டும்  பெற  ஆர்வம்  கொண்டு  அலைவதுதான்  இன்றைய பல காதலின் நிலை!

இன்றைய  காதலில்  முக்கியமான  ஒன்று,  செல்ஃபோனில்  பேசுவது – அதுவும்  விடிய விடிய பேசி  விடிந்தும்  பேசி  மறுபடியும்  இருட்டும்  வரைகூட  பேசி, நண்பர்களுடன் வெளியே  சென்றாலும்  அங்கு  தனியாகப்போய்  பேசி, கல்யாண  மண்டபக்களில்  பேசி, கல்லூரிச் சுற்றுலா  போனாலும்  பேசி  என  எங்கு  போனாலும் பேசித்த்த்த்த்த்த்த்தள்ளுவது என  நீள்கிறது பட்டியல்!


இதில் கணவன் –மனைவியாக  எண்ணிக்கொள்வது,  குழந்தைக்கு  பெயர் வைப்பது முதற்கொண்டு  சகலத்தையும்  பேசிப்பார்ப்பது,  தத்தம்  பிரச்சனைகள்  குறித்து  பேசுவது என்று  செல்ஃபோனில்  பேசுவதில்  மட்டுமே  இவ்வளவு  இருக்கிறது!  இதில் மணிக்கொருமுறை,  கிட்டதட்ட  ஸ்டேட்டஸ்  அப்டேட்  போல  அடிக்கடி  எஸ்.எம்.எஸ் வேறு! மேலும் அங்கங்கு மீட்டிங் போடுவது. ஒரு  சினிமா  பாடலை தங்களுக்குள்  டெடிகேட்  செய்துகொள்வது,  ஒன்றாக  சினிமாவுக்கு  போவது – ஊர்சுற்றுவது. இன்னும் பற்பல!

இதுவெல்லாம்தான்  காதல்  செய்கிறோம்  என்ற  பெயரில்  பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது.

ஆனால், அன்றைய காதலில் இதெல்லாம் இருந்ததாய் தெரியவில்லையே!

ஒரு  பெண்ணைப்  பார்த்தவுடனே  காதல்  வருவது – “இவ  இல்லைன்னா  நான்இல்லடா”  என்று  அருகில்  இருப்பவனை  வெறுப்பேற்றுவதெல்லாம் இன்றைய ட்ரெண்டில்  மட்டுமே  நடக்கிறது!  இதில்  உச்சகட்ட  கடுப்பு  என்னவென்றால், "லவ்  பண்றியாடா"  என்று  கேட்டால், "இல்லடா  சும்மா  ஃப்ரெண்டுதான்"  என்பவன் நாலு மாதம் கழித்து., "விட்டுட்டு  போயிட்டா  மச்சி"  என்று  அழுதுகொண்டு  அஞ்சல பாட்டு  போட்டுக்கொண்டு ,  செத்த  எலியை  முகர்ந்து  பார்த்தவன்  போல  முஞ்சியை வைத்துக்கொண்டு  திரிவார்களே  ஷ்ஷ்ஷப்ப்பா! வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை!
பின்பு,  அதிமுக்கியமான  டார்ச்சர்களில்  ஒன்று "கவிதை"! ஒரு ஹைக்கூ மேய்ப்பவன் என்பதால், என்னால் ஏற்படும் கடுப்புகள் என்னவென்று எனக்கே தெரியும்!
சர்வசாதாரணமாக  முத்தத்தில்  தொடங்கி,  சில  சினிமாக்களின்  பாதிப்பால் உந்திவிடப்பட்டு  உணர்ச்சிகளை  வரைமுறையற்று  வெளிக்காட்டி  அலப்பறை செய்வதுதான்  இன்றைய  நிலையில்  பலரின்  காதல்.  அதாவது நான் வரையறுத்ததில்  So Called காதல்!

 (1) காதலித்து  என்ன  செய்யப் போகிறோம் – கல்யாணம்  தான் – ஆனால்  இன்று விவாகரத்து  பெறுபவர்களில்  பெரும்பாலனோர்  காதல்  திருமணம்  செய்தவர்தானே –ஏன்?

(2) அந்தக்காலத்தில்  செல்ஃபோன்கள்  இல்லையே  – ஃபேஸ்புக்  இல்லையே – 24x7 சாட்டிங்  இல்லையே!  அப்படியானால்  அவை  காதலே  இல்லையா?
லவ்  பண்றியாடா  என  கேட்டதற்கு,  சேச்சே  சும்மா  டைம்பாஸ்  மச்சி  என்றவனையும் பார்த்திருக்கிறேன்!

என்  வீட்டிற்கு  முன்,  தினமும்  எட்டு மணிக்கு  மீட்டிங் போடும்  பள்ளிக்குச்செல்லும்  என் ஜூனியர்  பெண்ணொருத்தியின்  பின்னால்  காதல்  என்று  அலையும்  ஒருவன்,  அவள் பள்ளியிக்கு  விஷயம்  தெரிந்ததும்  அவன்  காதலை(! )  மறந்து ஓடிவிட்டதும் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறாக  இன்னும்  எத்தனையோ  விஷயங்களை  சொல்லமுடியும்.

சிலர்  காதலிக்கிறார்கள் – சிலர்  காதலிப்பதாய்  நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள் –இன்னும்  சிலர்  காதல்  என்பதை  கொச்சைப்படுத்திக்  கொண்டிருக்கிறார்கள்  என்பதே உண்மை!

பள்ளிக் காலத்திலிருந்தே  (கிட்டதட்ட  10  ஆண்டுகளுக்கும்  மேலாக)  காதலித்து, போராடி  மணம்  முடித்து, இன்று  ஒற்றுமையாக  ஒன்றாக  வாழும்  தம்பதியினையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம்  பேசியதிலிருந்து  தெரிந்தது – அவர்கள்  ஃபோனில் இவ்வளவாக  பேசியதில்லையாம் – வெளியில்  அவ்வளவாக  சுற்றியதில்லையாம்! இன்னும்  எத்தனையோ அழகிய விஷயங்கள் அவர்கள் காதலில் உண்டு!
இது  ஒரு  காதல்  என்றால்,  இன்னொரு  காதலையும்  சொல்ல  வேண்டியிருக்கிறது –தன்  அண்ணன்,  பெற்றோருக்கும்  குடும்பத்திற்கும்  எதிராக  சென்று  காதல் திருமணம் செய்துகொண்டதால்,  மனமுடைந்த  பெற்றோரை  மீண்டும்  அழவைக்கவேண்டாம் என்று  முடிவெடுத்த  தம்பியும்  (காதலன்)  இதேபோல  தன்  குடும்பத்தின்  ஒரு பிரச்சனைக்காக  காதலை விட  முடிவெடுத்த  இன்னொரு  அக்காவின்  தங்கையான காதலியும் ‘எங்கள்  காதலில்  எங்களுக்கு  நம்பிக்கை  உண்டு  அது  சேர்த்து  வைக்கும்’ என்று நம்பி பிரிந்துவிட்டனர்.

இருபத்தி  மூன்று வயதான  எனக்குத்  தெரிந்தவரையிலேயே,  காதலில்  இவ்வளவு வேறுபாடு  உண்டு  எனும்  போது –  இன்னும்  எத்தனை  கொடுமைகள் அரங்கேறுகின்றனவோ?  யாரறிவார்!

ஒரு  காதலின்  பிரிவையே  ஏற்க முடியாமல்  உடைந்தவரும்  உண்டு  – ஒன்னு  போனா இன்னொன்னு  என்ற  வகையும்  உண்டு!  இவ்வளவு  ஏன்?  நீதானே  என்  பொன்வசந்தம் வகை  கதைகளைவிட  அட்டகத்தி  கதைகளுக்குத்தானே  இன்று  வரவேற்பு  அதிகமாய் இருக்கிறது!  காதல்  என்ற  உணர்வுக்கே  அர்த்தம்  மாறிவிட்டதாய்  உணர்கிறேன்!
பெண்களை விளையாட்டுப் பொருளாக பார்க்கும் சிலராலும், ”காதல்” என்பதை எண்டர்டெய்ன்மெண்ட்டாக  பாவித்துத்  திரிபவர்களாலும்,  காதலில்  வன்மையை ஆயுதமாய்  கையிலெடுப்பவர்களாலும்,  பலரின்  வாழ்க்கையே சீர்குலைத்து/சீரழித்துவிடுகிறது.  காதலை  ஏற்க  மறுத்த  வினோதினிக்கு  நடந்தகொடுமையும்  இதற்கு ஒரு உதாரணம்!

இன்றைய  சில  காதலில், ஒழுக்கச்  சீரழிவு  நிகழ்திருப்பதே  உண்மை!

எது எப்படியோ..

காதலையும்  So  Called  காதலையும்  வேறுபடுத்திப்பார்க்கும்  பக்குவம்  எனக்கு வந்திருப்பதை  என்னால்  உணர  முடிகிறது  என்றாலும்,  என்னால் – காதலுக்கு விளக்கம்  கொடுக்க  முடியாது  – காரணமும்  சொல்ல  முடியாது. என்னால்  மட்டுமல்ல எவனாலும்  முடியாது.
நல்லது  நடந்தால்  சரி  என்ற எண்ணத்தில்  முடிக்கிறேன்…

பின்குறிப்பு 1: என் ஜூனியரின்  பின்னால்  காதல்  என்று  அலைந்தவனை  வேறு  ஒரு பெண்ணுடன்  வேறு  ஒரு  இடத்தில்  அதே எட்டு மணிக்கு பார்த்தேன்

- இது காதலா??

பின்குறிப்பு 2: பெற்றோர்  மனதை  புண்படுத்த  விரும்பாத  அந்த  காதலர்கள்,  பற்பல முயற்சியால்,  இன்று  பெற்றோர்  சம்மதத்துடன்  மனமுடித்து  வாழ்ந்து  வருகிறார்கள்

– இது தான் காதல்!

-          நஸ்ருதீன் ஷா

மடலிட NASRUDHEEN@MINNALGAL.IN