சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

29 June 2014

சாமி டாலர்

மொட்டைமாடியில் நின்று புகைப்பதில் தனி சுகம் இருக்கிறது. சில்லென்று வீசும் மார்கழிக் காற்றில் புகையை கலக்கவிட்டு ரசிப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்காகவே அமைந்துவிட்டது. காதுகளில் ஐபாட் இசை ஒலிக்க, காற்றை ரசித்தபடி நின்றிருந்தேன். சுற்றியிருந்த தென்னைக்கீற்றுகள் கிரீச்சிடுவதும், சலசலப்பு கடந்த மௌனமும் ஒவ்வொரு பாடலை மாற்றும் இடைவெளியில் கேட்கின்றது. மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பும் விமானங்கள் யாவும் பழவந்தாங்கல் வந்துவிட்டுத்தான் போகுமென இருக்கிறதோ என்னவோ ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் விமானம் பறக்கும் சத்தம் வேறு இசையை கிழித்துக்கொண்டு ஒலிக்கிறது. விமானத்தை அண்ணாந்து பார்க்கையில், என் தனலட்சுமியைப்போல் வெட்கத்தில் மேகத்தினூடே ஒளிந்துகொள்ளும் நிலவு. இதற்கிடையே தனலட்சுமியின் காதலை உறுதிசெய்யும் வண்ணம் வந்துகொண்டிருக்கும் அவளது நினைவுகள். எதிர் வீட்டு சுவற்றில் ஏதோ சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. யாரோ மாரியப்பனாம், அவருக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

சிலுசிலுக்கும் காற்றில் ஏதோ ஒரு வாசம் கலந்து வருகிறது. மெதுவாக உடல் சிலிர்க்க ஆரம்பிக்கும் நொடியில் இசையை நிறுத்தினேன் ஒரு இனம் புரியாத மௌனம். நிலவை வேகமாக மேகங்கள் மூடிக்கொண்டிருந்தது. ஒரு மயான அமைதி உள்ளுக்குள் உலாவர மௌனத்தை கிழித்துக்கொண்டு ப்பே என்று படிகளில் எட்டிப்பார்த்தாள் அவள்.

அடி நாயே, பயந்துட்டேண்டி

நான் நாயின்னா நீ பேயிடாப் பன்னி, என்றாள்.

ஏய் உசுரு போயிருச்சுடி. ஆளையும் அவளையும்பாரு

நல்லா பயந்துட்டியா என்று சிரித்தாள் அவள். தேவதை வெண்ணிற ஆடை அணியும் என்பார்கள். இவள் விதிவிலக்காக கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தாள். காற்றிலாடும் அவள் கூந்தலையும் காதோரம் கவி பாடும் கூந்தலின் குட்டிக்குழந்தையையும் ரசித்தே என் ஆயுள் தீர்ந்துவிடுமோ என்ற பயம் அடிக்கடி ஆட்கொள்வதுண்டு. பொதுவாக இந்த புன்சிரிப்பிற்கு சிறகில்லா தேவதை உண்டா அது நீ! என்று ஒரு மொக்கை கவிதையை சொன்னாலே போதுமானது.

அழகான மொட்டைமாடி இரவு. காதலிக்க இதுபோல் ஒரு இடமும் நேரமும் அவ்வளவு எளிதில் அமையாது. ஆனால் அவளை நெருங்கவிடக்கூடாது. தப்பித்தவறிகூட புகைபிடித்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டாள் என்றால் தொலைந்தேன். ஆயிரக்கணக்கில் சத்தியம் செய்துவிட்டாயிற்று. இம்முறையும் சிக்கினால் என் கதி அவ்வளவுதான். சமாளித்தவாறே என் வார்த்தைகளை வீசத்தொடங்கினேன்.

எப்ப டீ வந்த

நான் ஃபோன் பண்ணப்ப எடுக்கல. இப்ப கேள்வியப்பாரு. பொறுத்து பொறுத்து பாத்தேன் அதான் நானே வந்துட்டேன். அப்படியே கெளம்பி போயிருப்பேன். நீ என்னத்த கிழிக்கறன்னு பாக்கத்தான் வந்தேன்.

ஏய் ஃபோன சார்ஜ் போட்டிருந்தேன்டி. பத்து மணிக்கு வர்றேன்னவ ஒம்போது மணிக்கு வந்து நிக்குற. இங்க எதுக்குடி வந்த? எவனாச்சும் பாத்தா என்னாகறது?

ஏன் நான் வரக்கூடாதா? வர்ற வழியில தாம்பரத்துலயே எறங்கிட்டண்டா செல்லம்’  என்றபடியே நெருங்கினாள். நான் சற்றே திரும்பிக்கொண்டேன்.

என்ன விலகுற? டேய் குடிச்சிருக்கியா என்றாள்.

ஏய் இல்லடி, நான் குடிக்கறத விட்டு ரொம்பநாள் ஆகுது

ம்ம்ம் பாத்தேன். கீழ குடிச்சுகிட்டு இருந்துச்சுங்க. மவனே நீ மட்டும் குடி அப்பறம் இருக்கு என்றபடியே அருகில் வந்தாள்.

யேய் வேணாம், ஆளுங்க இருக்காங்கடி என்று பக்கத்து மாடியைக்காட்ட அங்கே யாருமில்லை என்று தெரிந்ததும் என்னை முறைத்தாள்.

உன்ன எவண்டி இங்க வரச்சொன்னா. ஹவுஸ் ஓனரு பாத்தா அவ்வளவுதான். வா போலாம் என்றேன்.

மூணு நாள் கழிச்சு என்ன பாக்குற ஒரு ரியாக்‌ஷனும் காட்டமாட்டேங்கற நீயெலாம் லவ்வரா த்தூ என்றாள். அவளது செல்லக்கோபமும் ரசிக்கும்படியே இருப்பதால் நான் அடிக்கடி அவளை வெறுப்பேற்றுவதுண்டு. வெறுப்பேறிவிட்டால் நான் சமாதானப்படுத்தும் வரை அவள் நெருங்கமாட்டாள் என்னையும் நெருங்கவிடமாட்டாள். எனக்கும் ஆசை இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் ஒரு சிகரெட்டுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஊரிலிருந்து வருகிறவள் எக்மோர் வந்திறங்குவாள் என்றெண்ணினால் தாம்பரத்திலேயே இறங்கிவிடுவாள் என கனவா கண்டேன். கோபத்தில் அவள் அந்த சுவரொட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

டேய். நானும் ஒருநாள் செத்துட்டா என்னடா பண்ணுவ என்றாள்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை நான். ஏன் டீ லூசு இப்படி பேசுற என்றேன்.

இல்லடா என் ஃப்ரெண்டோட ஹஸ்பண்ட் எறந்துட்டாரு. அவ எபடி ஃபீல் பண்ணிருப்பாண்ணு நெனைச்சேன்

யாருடி?

அனிதா.

அய்யோ அவளா? செம ஃபிகராச்சே. அவளுக்கா இந்த கொடுமை. எப்ப டீ

அடி நாயே, மூஞ்சிய ஒடைச்சுடுவேன்.

சரி சொல்லு

ஆக்ஸிடண்ட் டா. ஆனா பேய் அடிச்சதுன்னு பேசிக்கறாங்க

பேயா. த்தூ.

ஏன் பேய் இருக்கக்கூடாதா?

ம்க்கும். இருந்துட்டாலும்

ஏன்டா என்றபடியே ஆர்வமான அவள் அந்த பேய்க்கதையை சொல்லத்தொடங்கினாள். அவள் சொல்லும் கதையைவிட ஆச்சரியத்தில் விரிந்திருந்த அவளின் கண்களின் அசைவையே நான் ரசித்துக்கொண்டிருந்தேன்.

அவ ஹஸ்பண்ட் காலேஜ்ல லவ் பண்ணாராம். அப்பறம் ஏதோ பிரச்சனைன்னு விட்டுட்டாரு. அதனால அவ செத்துட்டா

என்னடி செத்துட்டான்னு அசால்ட்டா சொல்ற

கதைய கவனிடா. இவரும் கொஞ்ச நாள் கழிச்சு மீண்டு வந்திட்டாரு. அப்பறம் அனிதாவ கல்யாணம் பண்ணி செட்டிலாயிட்டாரு. இத அனிதாகிட்ட சொல்லிருக்காராம். அன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வரும்போது ஒரு பொண்ணு லிஃப்ட் கேட்டிருக்கா. இவரும் நிறுத்திருக்காரு. அப்பறம் வண்டியில போகும்போது மவுண்ட் கிட்ட ஆக்ஸிடண்ட் ஆயிருக்கு. அவர கடைசியா பாத்தவங்க ஒரு பொண்ணோட பாத்ததா சொல்லிருக்காங்க. ஆனா அக்ஸிடண்ட்ல அந்தப்பொண்ணு என்ன ஆனான்னே தெரிலயாம்

அவள விட்டுட்டு போனதும் ஆக்ஸிடென்ட் ஆயிருக்கும். இதென்னடீ லாஜிக்கு என்றேன்.
சொல்றத கேளுடா. அவர் செத்தது அந்தப் பொண்ணோட பர்த்டேலயாம். அத அனிதா அவரோட ஸ்லாம் புக்குல பாத்திருக்கா. அதே மாதிரி அந்த பொண்ண மவுண்ட்லதான் அடக்கம் பண்ணிருக்காங்கன்னு அவரே சொல்லிருக்காராம்.

அதுவரை ஆச்சரியத்தில் விரிந்திருந்த அவள் கண்களின் குளுமையை ரச்த்துக்கொண்டிருந்தவன் சற்று திகிலானேன்.

என்னடி சொல்ற. அவள பாத்ததும் இவருக்கு பழைய லவ்வரு, பேயின்னு தெரியாதா என்ன?

ஏன். பேய் இன்னொருத்தர் மாதிரி வராதா?

இதே பழவந்தாங்கல்ல போன மாசம் ஒருத்தன் செத்தானே. நைட்டு தனியா வந்துகிட்டிருந்தவன்கிட்ட ஒரு பொண்ணு பேச்சுக்குடுத்து அப்பறம் அவன் காணாம போயி ரயில்வே ட்ராக்குல செத்துக்கடந்தான் தெரியும்ல என்றாள். பயத்தில் நான் சற்றே திரும்பிப்பார்த்தேன். சுற்றியிருந்த அமைதியும் அந்த காற்றும் என்னை சில்லென்று சிலிர்க்கச்செய்தது. அதுவரை ரசித்துக்கொண்டிருந்த இருளும் தென்னைக்கீற்றுகளின் சத்தங்களும் மேலும் மேலும் திகிலூட்டின.

போதும் நிறுத்துடி. வா கெளம்பலாம். எனக்கு பயமா இருக்கு. உன்ன ஹாஸ்டல்ல கொண்டுபோயி விடுறேன்னு சொன்னது தப்பா போச்சு. நீ நேரா அங்கயே போயிருக்கலாம். வா போலாம். உனக்கு ரூம காமிச்சது தப்பா போச்சு. பேச்சிலர் ரூமுக்கு பொண்ணு வருதுன்னு எவனாச்சும் பாத்து ஹவுஸோனர்ட்ட சொன்னா என்ன ஆவுறது என்றேன்.
என்னடா பயந்துட்டியா என்றாள்.

ஆமாண்டி. இனி இந்த சுடுகாட்டு ரோட்டுல நான் தனியா வரனும் தெரியுமா?

’’சரி  பயம் போக ஒரு கிஸ் குடு

அவளை நெருங்கினாலே புகைவாசம் அடிக்குமென விலகி நிற்கிறேன் இப்போது முத்தமென்றால் அவ்வளவுதான். எனக்கும் ஆசைதான்.

இப்ப வேணாம். வா போலாம் சமாளித்தேன்.

எனக்கு இப்பவே வேணும் என நச்சரிக்கத் தொடங்கினாள்..

பாரு, சாமி டாலர் போட்டிருக்கேன் இப்ப வேணாம் மொதல்ல வா கீழபோலாம். உன்னக் கொண்டுபோய் விடுறேன் என்று சொன்னபடியே வேகமாய் படியில் இறங்கினேன்.

அவள் என்னை நெருங்க முயற்சிப்பதற்குள் நான் இறங்கிவிட்டேன். முதலில் பல் விளக்கவேண்டும் பின் அவளை ஆசைதீர முத்தமிட்டு, நீ எதிர்பாக்காதப்ப குடுக்க நெனைச்சேன்டி என்று அளந்துவிட வேண்டும் என்றெண்ணியவாறே அறைக்குள் நுழைந்தேன்.
ஒரு முழுபோத்தல் கால்யாகி இரண்டாம் போத்தல் ஓடிக்கொண்டிருந்தது.

”த்தா டேய்  ஃபோன் அடிச்சிகிட்டே இருந்துச்சு பார்றா. தனான்னு நெனைக்கறேன் என்று புகையுடன் ரம்மை சீப்பியவாறே சொன்னான் எலும்பன்.

பாத்தேண்டா. மேலதான் வந்து நிக்கறா என்றேன்.

மேலயா?

ம்ம்ம்ம் இப்பதான் வந்தா என்பதற்குள் மீண்டும் அலைபேசி ஒலித்தது. தனா என்ற பெயரைக்காட்டியது.

என்ன அவசரம் இவளுக்கு’ என்றெண்ணியபடியே ஃபோனை எடுத்தேன்.

டேய். எக்மோர் வந்துட்டேண்டா. லோக்கல் ட்ரெயின் ஏறப்போறேன். ஸ்டேஷனுக்கு வந்துடு எனக்கேட்டது தனலட்சுமியின் குரல்.

மெல்ல என் கைகள் நடுங்கத் தொடங்கியது.