சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9 September 2014

கானகன் - லக்‌ஷ்மி சரவணக்குமார்


சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அருகில் என்று சொல்லக்கூடிய முழுத்தகுதியும் பெற்ற ஊரில் பிறந்து வளர்ந்த (இன்னமும் வளர்ந்து கொண்டிருப்பவன்) நான். ஊர் பெயர் கோபிச்செட்டிபாளையம். இங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு நண்பர்கள் குழுவாக பலமுறை சென்றிருக்கிறோம். சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் நுழைந்து ஒரு மலைகிராமத்தின் வழியாக சிறு சிறு பள்ளத்தாக்குகளைக் கடந்து குண்டேரிப்பள்ளம் அணையின் பின்பகுதியை அடைவது வழக்கம்.(அணையின் முன் பகுதிக்கு பத்து கீமி ரோட்டுப்பயணமே போதுமானது) மலையில் இறங்கி வருவது சற்று ஆபத்தானதென்றாலும் பக்கபலமான ஏற்பாடுகளுடன் செல்வது வழக்கம். காட்டு யானைகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட பாதை இது. அதன் பிளிறல் ஒரு மைல் தூரத்தையும் தாண்டி எதிரொலிப்பதை வயிறு கலங்க கேட்கலாம். குண்டேரிப்பள்ளம் என்பது பாசனத்திற்காக கட்டப்பட்ட ஒரு சிறிய அணை. மலையையும் வனத்தை ஊரிலிருந்து பிரித்துவைக்கும் (சொல்லப்போனால் ஊரை வனத்திலிருந்து பிரித்துவைக்கும்) அடையாளமாக இதைப் பார்க்கலாம்.

இதே போல் இன்னொரு வனமான தெங்குமரஹடா பயணத்தில் ஒருநாள் யானையின் எலும்புகளைக் காண நேர்ந்தது. உடன்வந்த அதிகாரி ஒருவர் இது வேட்டையாடப் பட்டிருக்கலாம் என்றார். எலும்புகளை வைத்துப்பார்த்ததில் அவை சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டது என அறியமுடிந்தது. கடம்பூர் பகுதியின் மலைச்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு சிறுத்தை குறுக்கே ஓடியது இன்னும் நினைவிருக்கிறது. ஒரு உயிரை வேட்டையாடிப் பிழைப்பதெல்லாம் என்ன மாதிரியான வாழ்க்கை என எண்ணியிருக்கிறேன். இதே தெங்குமரஹடா பயணத்தில் மான்கள் கொல்லப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அங்கிருந்து தலைமலைக்கு செல்லும் பாதையில் ஒரு வேட்டைக்காரன் இருப்பதாகவும் அவ்வப்போது அவன் ஊருக்குள் வருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

என்னுடய கேள்வியெல்லாம் யார் இந்த வேட்டைக்காரர்கள்? ஒரு உயிரைக் கொன்று பிழைப்பு நடத்தும் அவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? இவர்களெல்லாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் போன்றவை. வழக்கம்போல் இந்த கேள்விகளுக்கும் இலக்கியமே பதில் அளித்திருக்கிறது. இம்முறை பதில் சொல்லியிருப்பவர் லக்‌ஷ்மி சரவணக்குமார்.

சகோதரி ஒருவர் மூலம் அறிமுகமான நூல்/எழுத்தாளர். இவரது படைப்புகளில் நான் முதலில் படித்தது மலைச்சொல் பதிப்பில் வெளியாகியிருக்கும் கானகன் நாவல் தான். மிக அருமையான களம். ஒரு வேட்டைக்காரனின் வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சி வரையிலாக அவனது வாழ்வை எழுத்துக்களால் அலங்கரிப்பட்டிருக்கும் கதை. தகப்பனாக தங்கப்பனுக்கும் வாரிசான ’வாசி’க்கும் இடையிலான யுத்தமாக இந்த நாவல் விரிகிறது.

நாவல் பெயர் ‘கானகன்’ – மலைச்சொல் பதிப்பகம். இந்த புத்தகத்தைப்பற்றி பேசும் முன்பாக, சைதாப்பேட்டையிலுள்ள அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெற்ற இப்புத்தக அறிமுக விழாவின் பொழுது பதிப்பாளரிடம் இரண்டு கேள்விகளை முன்வைத்தேன். முதலாவது ஏன் இவ்வளவு அச்சுப்பிழைகள்? இரண்டாவது ‘இந்நாவலின் பின்னட்டையில் மொத்தக்கதையினை சுருக்கி ஒரே வரியில் சொல்லப்பட்டிருக்கிறதே இதை ஏன் அனுமதித்தீர்கள்?’. என் கன்னத்தைப் பிடித்துக்கொண்டார். “இது நான் பதிப்பிக்கும் முதல் நாவல் அதன் பரவசத்தில் பலவற்றை கவனிக்க முடியவில்லை. நிச்சயம் அடுத்தமுறை அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன்” என்றார். பின்பு நான் கையில் வைத்திருந்த (அந்நேரத்தில் எங்குமே கிடைக்காத) ‘உப்பு நாய்கள்’ நாவலின் ஒரு காப்பியை வாங்கிக்கொண்டார். ”பப்ளிஷருக்கே புக்க வித்தவன்டா நானு” என்று ஒருவாரம் பீற்றிக்கொண்டிருந்தேன்.

சொல்லப்பட்டதுபோல், இது தகப்பன் மகன் போராக இருக்கிறது. இந்த நாவலில் அநேக இடங்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கின்றன. உதாரணமாக, ஜமீன் வேட்டை, யானை விரட்டும் சடையனின் சாகசங்கள் என விரிகிறது. இயக்குநராகப் போகிறவர் என்பதாலோ என்னவோ, ஒரு சண்டைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப்போல் அமைந்திருக்கும் யானை வேட்டை வெகு உக்கிரமாக இருக்கிறது.

அறிமுக விழாவில் எழுத்தாளர் இதனை அவசரமாக எழுதியதாகச் சொன்னார். அது பல இடங்களில் தெரிகிறது. இன்னும் நிறைய அல்லது விரிவாக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை. காடு குறித்து எனக்கிருந்த அனுபவங்களுடன் அணுகும்பொழுது சில முடிவுகளும் சில துணிபுகளும் உண்டாகின்றன.

அறிமுகவிழாவில் விவாதிக்கப்பட்ட - எனக்கு உடன்பாடில்லாத – விஷயங்களுள் சில:

முதலாவது, சாரு நிவேதிதா இந்நாவலை ’பேரின்பத்தின் தரிசனம்’ என்று குறிப்பிட்டார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘ஏழாம் உலகம்’, ’காடு’, ’பட்டு’ (இவை சில உதாரணங்கள் மட்டுமே) போன்ற நாவல்களை என்னளவில் பேரின்ப தரிசனமாக காண்பதால் இதனை என்னால் அவற்றின் வரிசையில் இணைக்க முடியவில்லை. (பி.கு: தாஸ்தாவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ இதில் இல்லை என்பதும் வருத்தமே)

இரண்டாவது, சினிமாத்தனமான முடிவு. ஒரு திட்டமிடப்பட்ட பழிவாங்குதல் எங்கு நிகழ்ந்தாலும் (அதன் காரணிகள் மிகத்துல்லியமாக இருந்தாலும் கூட) அதை சினிமாத்தனமாக பார்க்கும் மனநிலையை நாம் முதலில் கடக்கவேண்டும். இப்புத்தகத்தை வாசித்தவர்களுள் பலர் இதையே சொல்வது வருத்தம். இதனை எழுத்தாளர் சற்று கவனிக்க வேண்டும். நிகழப்போகும் கொலைக்கு முன்பாகவே குறியீடுகளின் மூலம் அதனை உணர்த்த முயன்றிருப்பது பக்கபலமாக இருக்கிறது. இந்நாவலில் வரும் புலியினை ஒரு மெடஃபராக பார்க்கவேண்டும். நாவலின் இறுதியில் புலியைக்கொண்டு நடத்தப்படும் கொலை நியாயமானது என்றாலும் அதற்குப்பிறகு ‘வாசி’யை முழுப்பளியன் என சொல்லியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாவலை முடித்தவர்கள் யாரேனும் இருந்தால் ஒரு விவாதம். சலிப்பூட்டும் க்ளிஷே வசனங்களைத் தாண்டி, காட்டின் மீது ஆர்வமுள்ளவர்களால் அவசியம் படிக்கப்பட வேண்டிய நாவல்.