சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

18 December 2014

[சிறுகதை] சடலம்

சூரியக் கதிரில் மின்னும் கற்கள் பதித்த தரைகள் கொண்ட தெரு செங்குத்தாக சரிந்த வண்ணம் இருந்தது. மரங்கள், கட்டிடங்கள், மனிதர்கள் என எல்லாம் செங்குத்தாக இயங்கிக்கொண்டிருந்தது. யாரும் எதுவும் பேசிக் கொண்டது போல் தெரியவில்லை. மயான அமைதி. இவ்வளவு அழகான வண்ணமயமான இடத்தில் ஏன் இந்தப் பேரமைதி என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லோரும் அழகாக இருக்கின்றார்கள். சந்தோஷமாகவும். அந்தத் தெருவினூடாக நடந்து செல்கிறேன். இது போன்ற ஒரு கிராமத்தில் என் வாழ்நாள் தொடராதா என்ற ஏக்கம் மேலிடுகின்றது.

எதிரில் தென்படுபவர்களிடம் 'இந்தத் திரைப்படத்தை இயக்கியது யார்?' என்று கேட்கிறேன். ஏதோ புரியாத பெயரைச் சொல்கிறார்கள். தலையில் கூடை வைத்தபடி செல்லும் சிறுமியிடமும் அதே கேள்வியைக் கேட்கிறேன். கொத்து கொத்தாகக் கிடக்கும் பிரண்டைச் செடியினை நோக்கி கை நீட்டுகிறாள். அடர்ந்த பிரண்டைச் செடிகளுக்கிடையில் அந்த இயக்குனரின் பச்சைப் பெயர் சிக்கிக் கிடக்கின்றது. அந்தப் பெயரை ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் எடுத்து ஒரு தேவாலயத்தினை நோக்கிச் செல்கிறேன். தேவாலயத்திற்குள் நுழைந்த அடுத்த நொடியில் அந்த செங்குத்தான கட்டிடம் கிடைமட்டமாக மாறியதை வியந்து நெஞ்சில் சிலுவை போட்டுக் கொள்கிறேன். திடீரென கையிலிருந்த இயக்குனரின் பெயர் ஒரு பாம்பாக மாறியிருப்பதைக் கண்டு பயத்தில் தூக்கி எறிகிறேன். அங்கிருந்தவர்கள் எல்லோரும் கலைந்து ஓடுகிறார்கள். இப்போது அங்கே பேரிரைச்சல். அந்தப் பாம்பை அடித்துக் கொன்ற பிறகே அந்த இடம் மீண்டும் அமைதி பெறுகின்றது. இந்தக் குழப்பத்திற்கு காரணம் நான் என்று ஏதேனும் என்னை செய்துவிடுவார்களோ என்ற பயம் விலகி பெருமூச்சு விடுகிறேன். குனிந்து கீழே பார்க்கையில் எண்ணற்ற பாம்புகள் என்னைச் சுற்றி இருக்கின்றது. அதில் ஒன்று என் வலது கையின் பெருவிரலுக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையே இருக்கும் சதையைக் கவ்வுகின்றது.

மகளே, தினமும் கொடுங்கனவினால் ஆட்கொள்ளப்படுகிறேன். நன்றாக உறங்கிய நாளை என் நினைவில் கொண்டுவரமுடியவில்லை. உறங்கவில்லை என்றால் உயிர் வாழ முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உறங்கச் செல்கிறேன். எது என் உறக்கத்திற்கு தடையாக இருக்கின்றது என்பதை இன்றளவும் கண்டுகொள்ள முடியவில்லை மகளே. பல நேரங்களில் இது கனவு தானா என்ற குழப்பமுமிருக்கின்றது.

என் கனவில் பாம்புகள் அதிகமாக வருகின்றது. விதவிதமான பாம்புகள். மஞ்சள் நிறத்தில் நீண்டு தடித்த பாம்பு. தளிர்விட்ட இலையை விட அழகிய பச்சை நிறத்தில் பாம்பு. விரலை விட சிறிய தேன் நிறத்தில் பாம்பு. முடியின் அடர்த்தியில் வேகமாக ஓடும் பாம்பு. தலை மட்டும் தடித்த பாம்பு. இன்னும் வித விதமாக. ஏதோ ஒரு பாம்பு என்னைக் கொத்தும் வேளையில் விழித்துவிடுகிறேன் மகளே. விழிக்கையில் என் அறையெங்கும் பாம்புகள் நிறைந்திருக்கின்றது. அவற்றின் மேல் என் கால்கள் படாமல் எட்டு வைத்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் அதே போல் நடந்து வந்து படுத்துக்கொள்கிறேன். அதன் பின்பு தூக்கம் நன்றாக வருகின்றது. இப்போதும் தூக்கம் வருவது போல் தோன்றுகிறது. உறங்கச் செல்கிறேன் மகளே. நாளை எழுதுகிறேன்.

·

உன் முகம் என் நினைவில் இல்லை மகளே. பிறந்து சில நிமிடங்களில் உன்னை என்னிடமிருந்து பிரித்து சென்றுவிட்டார்கள். நீ எப்படி இருப்பாய் என்று நானே கற்பனையில் வரைந்து வைத்திருக்கிறேன். ஒரு கவிஞனான என்னை ஓவியனாக மாற்றியது நீ தான் மகளே. இப்பொழுதெல்லாம் கவிதை எழுதுவதில்லை. இணையம் வந்த பின்பு கவிதைக்கான மதிப்பு மலிந்துவிட்டது. கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே கவிதை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல கவிதைகளை உணர்ந்துகொள்ள முடியாதவர்களே தங்களைக் கவிஞன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஒரு கவிஞனாக என்னைக் காட்டிக்கொள்ள துளியும் விருப்பமில்லை. தீவிரவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் மத்தியில் சுகவாசியாக வாழ்ந்து கொண்டு கவிதை எழுதி என்ன சாதித்து விடப் போகிறேன்.

நான் வரைந்த உன் ஓவியமும் கவிதை போல் தான் இருக்கின்றது என்கிறார்கள் நண்பர்கள். உன்னை வரைந்தால் பின் அதை கவிதையென்று அழைக்காமல் வேறென்னவென்று அழைப்பது? அவர்களுக்கு அது கவிதையென்று தோன்றலாம். எனக்கு உயிர். உயிர் எங்கே இருக்கிறதென்று யாரேனும் காட்ட இயலுமா மகளே? என் உயிர் நீ என்பதை நீ அறிவாயா மகளே? உன் வயதை நாட்களில் எண்ணினால் அதை விட அதிகமான எண்ணிக்கையில் உன் ஓவியம் என்னிடம் இருக்கின்றது. எப்போது இதைப் பார்க்க வருவாய்? இப்போது நண்பர்கள் யாரும் என்னைத் தேடி வருவதில்லை. எதனால் என்னை விட்டு விலகிப் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

உன் பெயர் என்னவென்று கூட எனக்குத் தெரியாது. உனக்கு நான் என்ன பெயர் வைத்திருக்கிறேன் தெரியுமா? இது வரை யாரும் அப்படி ஒரு பெயரை வைத்ததில்லை. மகள்! உன்னை மகளே என்று ஒவ்வொரு முறை அழைக்கும் போது தான் என் இதயம் இயல்பாகத் துடித்துக் கொண்டிருக்கின்றது. என் மகளைத் தான் நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். நீ எப்படி இருப்பாய்? உன் முகம் என் நினைவில் இல்லை மகளே. நீ எப்படி இருப்பாய்? இம்முறையேனும் ஏமாற்றாமல் ஒரு புகைப்படம் அனுப்பித் தருவாயா?

·

உன்னை இனி என் வாழ்வில் பார்க்கவே முடியாது என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. இந்த சிந்தனை வரும் போதெல்லாம் என்னை நானே துன்புறுத்திக்கொண்டு அச்சிந்தனை மேலும் வர விடாமல் தவிற்க முயற்சிக்கிறேன். விடாமல் என் தூக்கம் கலைக்கும் கொடுங்கனவினைப் போல இந்த நினைவும் என்னை வாட்டி எடுக்கின்றது மகளே. எனினும் உன்னைப் பார்த்து விடுவேன் எனும் ஒரு துளி நம்பிக்கையில் தான் இன்னும் இந்தக் கொடிய நரகத்தில் இருக்கிறேன்.

நேற்று இன்னொரு மகள் வேண்டுமென்று உன் அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன் மகளே. உன்னை என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். உன்னை என் மடியில் கிடத்தி என் முகம் பார்த்து நீ சிரிப்பதைப் பார்க்க வேண்டுமென்று பேராசை மகளே. உன்னைப் போன்றே இன்னொரு மகளைப் பெற்றுக் கொடு என்று கெஞ்சினேன். துப்பாக்கி முனையில் உயிருக்காக இறைஞ்சுபவனைப் போல கெஞ்சினேன். சில வாரங்கள் உணவருந்தாமல் கையேந்துபவனைப் போல கெஞ்சினேன். இன்னொரு மகளைப் பெற்றுக் கொடு.

இது நாள் வரை பேசாமல் தான் இருந்தாள். உன்னை என்னிடமிருந்து பிரித்துச் சென்ற அந்த நாள் முதல் அவள் என்னிடம் பேசியதில்லை மகளே. நாளை எப்படியும் பேசிவிடுவாள் என்ற நம்பிக்கையிலேயே என் இரவு விடிகிறது. இன்னொரு மகள் பெற்றுக் கொடு என்று கேட்ட பின் என்னைப் பார்ப்பதைக் கூட தவிர்க்கிறாள் மகளே.

உன்னைப் பெற்றெடுப்பதில் உன் அன்னைக்கு துளியும் விருப்பமில்லை. நீ வேண்டாம் என்ற எண்ணத்தில் இல்லை. குழந்தை பிறப்பதை எண்ணிய பயம். நீ அவள் வயிற்றில் கருவுற்ற பின்னும் கூட அதை கலைத்திடத் துணிந்தாள். எவ்வளவு பேசியிருப்பேன். நான் பேசிய வார்த்தைகளையெல்லாம் சேர்த்தால் இந்த உலகத்தை நான்கு தடவை சுற்றி விடலாம். பிரசவ வலி எடுக்கும் வரை என் பேச்சில் நம்பி வாழ்ந்திருந்தாள். பிரசவ நேரத்தில் பதுங்கியிருந்த பயம் மீண்டும் எட்டிப் பார்க்க நான் ஏதோ வன்கொடுமை செய்தது போல் அலறினாள். அன்று என் முகத்தை பார்க்க கூட அவள் விரும்பவில்லை.

எனக்கென்று இங்கு யாருமில்லை என்ற எண்ணத்தை விதைக்கிறாள் மகளே. இவ்வெண்ணம் வளர்ந்து நான் நலிந்து போகும் முன் என்னைக் காண வருவாயா? நீ என்னுடனிருந்தால் உன் முகம் பார்த்தே என் வாழ்க்கையை நகர்த்திவிடுவேன். பிறந்த குழந்தையைக் கையில் வைத்து தாங்கும் அதே உற்சாகத்துடன் என் வாழ் நாள் முழுதும் உன்னைப் பேணிப் பாதுகாப்பேன் மகளே. உன் அம்மாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இனி இது போன்று இன்னொரு மகள் வேண்டும் என்று அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன். என்னிடம் பேசச் சொல்வாயா?

·

தூக்கம் வராமல் நள்ளிரவில் உலாவிக்கொண்டிருக்கும் வேளையில் யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்ட திசையை நோக்கிச் சென்றேன். மெர்குரி விளக்கு கம்பத்தின் கீழ் ஒரு பெண்ணை நான்கைந்து பேர் சிதைத்துக் கொண்டிருந்தனர். நான் இருப்பதை யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் வேலையை சாவகாசமாக முடித்துவிட்டு இருளில் மறைந்தனர். நானும் அங்கிருந்து நகர்ந்துவிடவே எத்தனித்தேன். திடீரென மீண்டும் அவள் அலறும் ஓசை, என்னை அவளை நோக்கி நகர்த்தியது.

வயிறு பெருத்திருந்தது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். வன்புணர்ந்து கொண்டிருக்கும் போது எழுப்பிய சத்தத்தைக் கூட சகித்துக்கொள்ளலாம் போல. இப்போது அவள் அலறலில் பூமி ஒரு முறை குலுங்கி சமநிலைக்குத் திரும்பியது. மீண்டும் அங்கிருந்து நகர்ந்துவிட எத்தனிக்கும் வேளையில் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்திருந்தாள். ஈன்ற மறு நொடி சிரித்த வண்ணம் குழந்தை என்னை நோக்கி தவழ்ந்து வந்தது. நானும் வாரி அணைத்துக் கொண்டேன். நான் அக்குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி பேரானந்தத்தில் நடந்தேன்.

·

      உன் தங்கை அழகாக சிரிக்கிறாள் மகளே. உன் தங்கைக்கும் மகள் என்றே பெயர் வைக்கவிருக்கிறேன். உனக்கேதும் ஆட்சேபனை இல்லையே? என் ஓவியங்களில் இருக்கும் முகத்தோற்றத்தை அப்படியே உரித்து வைத்திருக்கிறாள் மகளே. அவளை சரியாக பார்த்துக்கொள்ள தெரியவில்லை. தன் குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்பதை ஒரு அன்னை அறிந்து கொள்ளும் வித்தையை எப்படி நான் கற்றுக்கொள்வது? ஒரு பெண்ணாகப் பிறக்காமல் போய்விட்டதை எண்ணி வருந்துகிறேன் மகளே. நீ இப்போது வளர்ந்துவிட்டாய். உன் தங்கையைப் பார்த்துக் கொள்ளவேனும் நீ வருவாயா?

இன்றோடு நீயும் உன் அம்மாவும் இறந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாம். வருடா வருடம் தீபம் ஏற்ற வந்துவிடுகிறார்கள். நினைவு நாளை நினைவு கூர்ந்து உங்கள் நினைவுகளை அழிக்க விரும்புகிறார்கள் மகளே. நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இந்தப் பைத்தியங்களுக்கு எப்படி புரிய வைப்பது?

- த.ராஜன் 

பின்குறிப்பு: ரமேஷ் பிரேதன் எழுதிய 'அவன் பெயர் சொல்' என்னும் நாவல் வாசித்தேன். பேரனுபவமாக இருந்தது. அதே போன்று எனக்கொரு மகள் இருந்தால்’ என்று ரமேஷ் பிரேதனாக வாழ்ந்து பார்க்க நினைத்ததன் விளைவே இந்த சிறுகதை.