சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

17 September 2012


அணுசக்தி வேண்டாம் - சுஜாதா!

அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது)
(Taken From :- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? &
பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா? Facebook Page)


 

6 comments:

  1. It's amazing why we are not accepting the words of Abdul Kalam while accepting the points of some foreign Scientists, do we think, APJ is not an eligible person comparing to that foreigner?

    ReplyDelete
    Replies
    1. இதையும் படித்து விடுங்களேன்... http://teamtttk.blogspot.in/2012/03/blog-post_127.html

      Delete
    2. Yes. ABJ is not at all scantiest. He is just a technocrat. It is not at all a matter whether you are an Indian or not but one should be sincere to humanity and science.

      Delete
  2. facebook ல் இணையுங்கள் . இன்னும் பரவலாக்கம் செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் முகபுத்தகப்பக்கம்...

      http://www.facebook.com/Teamtttk

      நன்றி... பகிருங்கள்...

      Delete
    2. உங்கள் இந்த பதிவிற்கு நன்றி. அனால் ஒரு சிறிய வேண்டுகோள். தயவுசெய்து facebook-கை பேஸ்புக் என்றே பயன்படுத்துங்கள். ஆறுமுகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் sixface என்றுதான் அலைப்பார்களா என்ன?

      Delete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன