“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.
இருக்கற அவசரத்துல இது வேறயா என்று நினைத்துக்கொண்டு “Yep…. On d way” என பதில் அனுப்பிவிட்டு மணியை பார்த்தேன்.
மணி 10.23 உச்சகட்ட சாலை நெரிசலில் இருந்து தப்பி ஒடிய வண்டிகளில் எங்களுடையதும் ஒன்று. என் நண்பன் மேலும் மேலும் வண்டியை முறுக்க, இன்னும் கடுப்புதான் வந்தது! ஒரு காரில் சிறு குழந்தை ஒன்று எங்களை பார்த்து சிரித்தது. அவசரத்தில் ஒரு டாட்டா காட்டிவிட்டு ஓடத்தொடங்கினோம். ரயில் நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது எங்கள் வண்டி. வானில் சூரியனும் மேகங்களுக்கு இடையில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது.
மழை வரும் அறிகுறி!
பார்க்கிங், டோக்கன், டிக்கெட் இதையெல்லாம் தாண்டி நாங்கள் ஈரோடு ரயில் நடைமேடைக்கு வருகையில் மணி 10.35.
10.30 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன் வந்தது. போதாக்குறைக்கு மூன்று மொழிகளில் அறிவிப்பு வேறு. அறிவிக்கப்படாத ஓட்டப்பந்தயமாக இருந்தது சீட் பிடிக்கும் பணி. ஈரோட்டில் இஞ்சின் மாற்றப்படும் - அதற்கு ஒரு பத்து நிமிடம் ரயில் நிற்கும் என்பதால் எப்படியும் இடம் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு.
இந்த ஓட்டத்தில் நான் படியை நெருங்கியதும் ஒரு மாற்றுத்திறனாளி வந்தார். அவரை ஒரு முதியவர் ஏற்றிவிட, அவரை முதலில் தாங்கிப்பிடித்து ஏற்றிவிட்டு, பிறகு அந்த முதியவர் ஏறும்போதும் தடுமாறிவிட, அவரையும் பிடித்து ஏற்றி விடுவதற்குள் சீட்டுகள் நிரம்பிவிட்டன. நான் ஏற்றிவிட்டிருந்த பெரியவர் திரும்பி நன்றி என்றார். வழிய விடுங்க பெரியவரே என்று நினைத்துக்கொண்டு உள்ளே ஏறினேன்…
ரயில் முழுவதும் கூட்டம் நம்பி வழிந்ததால் படியிலேயே நின்று கொண்டோம். எங்கள் பைகளை ஒரு ஓரமாக வைக்க, அங்கு அப்பா-அம்மா-மகன்-மருமகள்-பேரன் என்ற வடிவமைப்பில் ஒரு குடும்பத்துடனும் அவர்களின் கதைகளுடனும் இடத்தை பகிர்ந்தோம். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில், பக்கத்தில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். பாதி இடம் போனது. "இது ஆவறதில்ல மச்சி" என்று படியில் இருந்த முதியவரிடம் இடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் எழுந்து நின்று, இருக்கின்ற கடுப்பில் எல்லாம் பொறுத்து, பின் ஐபாட் எடுத்து காதை அடைத்துக்கொண்டால் அதில் நேற்று பாதியில் நிறுத்திய ‘பச்சைகிளிகள் தோளோடு’ பாடியது. இருந்த கடுப்பில் இது வேறா என்ற போது ஃபோன் துடித்தது. வைப்ரஷன். மீண்டும் அவள்….
“Hows going da” என்றாள்…
“It’s a terrible trip” என்று டைப் செய்தேன்….
அதை கவனித்த நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…
“ஏண்டா டேய்...” என்று சலித்துக்கொண்டேன்.
ஒரு நிமிடம்…. இது இப்படி முடியவேண்டியதா என்ன? ச்சே ச்சே!
******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஒரு அலறலுடன் ரயில் புறப்பட்டதும் படியில் அமர்ந்து மழை பெய்யக்காத்திருக்கும் காலநிலை காணும் வேலையில்...
******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
பாலக்காடு-திருச்சி பாசஞர் ரயில் ஒரு ஹை டெசிபல் அலறல் சத்ததுடன்...
******** ரீவைண்ட்… ரீவைண்ட்… ரீவைண்ட்…. *******
“Have u started……” ஒரு அழகான குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.
மழைபெய்யக்காத்திருக்கும் வானத்திலும் அழகாக என் பதிலுக்காக காத்திருப்பவளுக்கு பதில் அனுப்பிவிட்டு திரும்பிப்பார்க்கையில் ஒரு குழந்தை என்னை நோக்கி சிறு புன்னகையை உதிர்த்தது. அழகு! அவசரமென ரயில் பிடிக்கபோனாலும் சாலை நெரிசலில் சிக்கியிருந்தாலும் அந்தச் சிரிப்பு அப்போட்தைக்கு தேவையாகவே இருந்தது. திரும்பி சிரித்துவிட்டு கிளம்பினேன்.
உச்சபட்ச கூட்டாத்திலும் விடா முயற்சியாய் கால்கள் இல்லாவிட்டால் என்ன எனக்கு கைகள் இருக்கிறதே என்று ஒரு மாற்றுத்திறனாளி ஏற முயன்றார். அவருக்கு ஒரு முதியவர் உதவ, நானும் உதவினேன். பின் அந்த முதியவர் தடுமாறுகையில் நான் தாங்கிப்பிடித்தற்காக நன்றி சொல்லத்திரும்பினார். எவ்வளவு நிறைவு அவர் கண்களில்…
ரயில் புறப்பட்ட பின், இடம் இல்லாததால் படியில் அமர்திட, அந்த ஊரின் அழகு புலப்பட்டது! படியில் அமர்ந்த்து ஊரை ரசித்தேன். அப்போது ஒரு பெரியவர் வந்து படியில் அமர்ந்தார். கால்களில்லாமல் ஒருவர் நடக்கும்போது நல்ல கால்கள் கொண்ட நான் தாரளமாக நிற்கலாம் என்று அவருக்கு முழு இடத்தையும் கொடுக்க எழுந்தேன். பின்னால் திரும்பி பார்க்கையில் ஒரு தந்தை தன் மகனுக்கு நல்ல கதை சொல்லிக்கொண்டிருந்தார். குடும்பம் என்றாலே தனி அழகுதானே! நான் நிற்பதை தாங்காத முதியவர் எனக்கும் ஒரு இடம் கொடுத்தார். சந்தோஷம் என்பது ஒருவருக்குள் செலுத்துவதல்ல ஒருவர் அவராகவே உணர்வது என்று நினைத்துக்கொண்டு ஐபாடை ஆன் செய்தேன்…
அதில் “அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம்” என்று பாடியது… உண்மைதான்! ஆனந்தம் எங்கும் உள்ளது! எனக்கு பிடித்த பாடல்… என்னை சுற்றிலும் ஆனந்தம் பரவுவதாய் உணர்கையில் என்னவளின் குறுஞ்செய்தி வந்தது….
“Hows going da” என்றாள் அவள்….
”Fantastic dear…” என்று பதில் அனுப்பினேன்…
நண்பன் என்னைப்பார்த்து சிரித்தான்…
பதிலுக்கு நானும் புன்னகைத்தேன்…
ஆம்! "Happiness Exists Everywhere" என்பார்கள்!
அது எங்கோ எதிலோ வேறு உலகில் இருப்பதல்ல.... என்னைச்சுற்றியே இருக்கிறது!
"ஆனந்தம், அழகு" என்பதெல்லாம் உலகை பார்க்கும் விதம் பொருத்தே அமைகிறது!
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன