சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8 June 2015

பைசாசங்களின் சகவாசம் [பேய்களும் நானும்]

நெடுநாள் கழித்து எழுதுகிறேன்.

நண்பர் சங்கருக்கு ( https://jaambavaan.blogspot.com ) நன்றிகள்…

எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது. அதனால் தொடர்கதைகளை    படிப்பதில்லை.  'வெண்முரசு' கூட ஜெமோ ஒரு நூலைத்  தாண்டிப்போன பிறகே நான் அதில் கை வைப்பேன். (வெண்முரசு ஆரம்பிச்சதுமே படிச்சயா என்றெல்லாம் கேட்காதீர்கள். இப்பொழுது மழைப்பாடல் வந்திருக்கிறேன் -  திருதராஷ்ட்ரன் காந்தாரி திருமணம்.) அதீத சஸ்பென்ஸ் சென்சிடிவிடி காரணமாக நிறைய இடங்களில் அணுக்கமான நிகழ்வுகளைக்கூட இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என எதிர்பார்த்து எதிர்பார்த்தே நிறைவு செய்துகொள்வேன்.கிரிக்கெட் மேட்சுகள் என்றால் நான் காலி.

இங்குதான் பேய் வருகிறது.

நள்ளிரவு பைக் பயணங்களில் பின்னால் அமருவதை அடியோடு வெறுப்பவன் நான்.  திரும்பிப்பாரு ஷா என்றால் எனக்கு நட்டு கழண்டுவிடும். பேயைவிட பேய் இருப்பதாக இருக்கும் நினைப்புதான் கொடூரமானது, மூளையில் உண்டாகும் எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு.

பேய் பிசாசு என்பதெலாம் சினிமாவில் பார்த்ததுதான் அதிகம். நேரில் கூட ஓரிருமுறைதான் உணர்ந்திருக்கிறேன். அவையாவும் சூழ்நிலையின் மூலம் எனக்குள் நிகழும் படபடப்பின் உச்சம் என உணர்ந்து சிரித்துவிட்டு வருவதுதான் வழக்கம்.

கோவையிலிருந்து சத்தி வழியாக கோபி செல்லும் பொழுதுகளில் இரவு பதினொன்று தாண்டுகையிலேயே சாலைகள் வெறிச்சோடி விடும். தொண்ணூறு நூறு என காற்றை கிழிக்கும் நொடி, நூறடி தூரத்தில் வெள்ளையான உருவம் சாலையோரம் தெரியும். அருகில் செல்ல செல்ல உருவத்தைச் சுற்றி ஒரு புகைமண்டலம் உருவாவது தெரியும்.

இதைப்போல் மேட்டுப்பாளையம் சத்தி சாலை குறிப்பாக பவானிசாகர் அணையின் மேல்புறம் என்பது கர்ணகொடூரமான ஒன்று. ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் என்பதால் செல்ஃபோன் டவர் இருக்காது. தெருவிளக்கும் கிடையாது. வளைந்து வளைந்து மேடுகளும் இறக்கங்களுமாக செல்லும் சாலையில் எதிரே வரும் வாகனமும் தெரியாது. இந்த மாதிரியான சாலையில் வெள்ளை உருவம் தெரிந்தால் என்ன ஆவது. மேட்டுப்பாளையம் சத்தி சாலையிலாவது ஏதாவது யானை அல்லது கரடி வந்திருக்கும் என நினைத்துக்கொள்ளலாம். கோவை சத்தி சாலையில்? பயந்து பயந்து கடக்கும்போதுதான் அது ரோட்டோர மதகின் மீதமர்ந்து பீடி வலிக்கும் வேட்டி போர்த்திய கிழவன் எனத்தெரியும்.

இதே சாலைப் பயணத்தில் ஒரு அதிவேக நொடியில் ஹெல்மெட் அணிந்த பின்மண்டையில் சட்டென ஒரு அடி விழுந்தது.

மெல்லிய அடிதான். டொக் என்ற சத்தம். முன்னால் அடித்தால் ஏதோ குப்பை அல்லது பூச்சி காற்றில் வந்து அடித்தது எனலாம் அனால் அடித்தது பின்மண்டையில்! நடுங்கிப்போய் வண்டியை நிறுத்தி திரும்பிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டும் தூரம்வரை இருட்டு. ஆண்டவா காப்பாத்து என வேண்டிவிட்டு வண்டியை மெதுவாக ஓட்டுவேன். அப்போது மெல்ல காதுகளுக்கு கீழ் டொக் டொக் என சத்தம் கேட்கும்.ஹெல்மெட் போட்டு அதன் கழுத்துக் கொக்கியை மாட்டாமல் தொங்கவிட்டுக்கொண்டு போனால் அது காற்றாடி பின்னால் தட்டாமல் என்ன செய்யும்?

இன்னும் கொடூரமாக, பைக்கில் தனியாக, ஒரு பேருந்துக்குப்பின் செல்லுகையில், இரண்டு கார்கள் என்னை முந்த முயலும்போது எனது இரு நிழல் பேருந்தில் விழும். அதைப்பார்க்க 'நானும் என் பின்னால் ஒருவனும் ஒன்றாக உட்கார்ந்துவருவது போல் இருக்கும்'.

இப்படி பட்டும்படாமல் பேய் நினைப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் எனக்கு பேய்ப்படங்கள் அலாதி பிரியம்.  கொலை செய்யப்பட்டு பின் "விடமாஆஆஆஆட்டேன்" என்று பழி வாங்குவதை விட, முதற்பாதியில் பேயின் இருப்பு குறித்த காட்சிகள் பிரியம்.  தமிழ் சினிமா ‘சரக் சரக்’ என்று பேய் கடந்து போவதிலிருந்து வெளியே வரமறுப்பது சோகம்.

இப்படியான சூழலில் சமீபத்திய பேய் படமான 'டிமாண்டி காலனி' மிரட்டிவிட்டது. வெலவெலத்துப்போனது உண்மை.  'யாமிருக்க பயமே' சிரிப்பு கலந்த பேய்ப்படம் என்பதால் தப்பித்துவிட்டேன். இங்கு தியேட்டரில் எனது மச்சானுடன் அமர்ந்திருந்தேன். இரவுக்காட்சி. குசும்புக்கார அவன் பேய்வரும் காட்சியில் மெல்ல பின் தலையை வருடிவிட்டான். தடாரென எழுந்து பின்னை பார்த்ததில் பின் சீட்டில் இருந்தவர்களெல்லாம் மிரண்டுவிட்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு அதே குசும்பனுடன் முன்பு சேதுக்கரசி-பூபதி திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன். கணநொடியில் ஒரே ஒரு சாலை மாறியதால் ரெசார்ட்டுக்குள் புகவேண்டியிருந்த நாங்கள் ஒரு வயல்வெளி சுற்றிய காட்டுக்குள் புகுந்துவிட்டோம். அங்கும் அவன் டிமான்ட்டியை ஞாகப்படுத்தினான். ஒரு மணிநேரம் தாமதமாக வரவேற்புக்கு சென்றோம். வீடு திரும்ப ஆயத்தமானபோது மணி ஒன்பதரை. என்ன நினைத்தானோ என்னவோ தெரியவில்லை ஊட்டி போலாம் என்றான்.  மேட்டுப்பாளையம் கடந்தபோது மணி பதினொன்றாகிவிட்டது.

மலையடிவார ரெசார்ட் ஒன்றில் உபாதை கழித்து, மலையேறும்போது மணி பதினொன்றரை. சரியாக பன்னிரெண்டுக்கு பர்லியாறு கடந்தோம். இருண்ட சாலை. மழைக்குளிர். கண் தெரியாத மலைப்பள்ளங்கள். வெறும் பைக் ஹெட்லிட்டில் ஒட்டிக்கொண்டிருந்த என்னிடம் பின்னாலிருந்து "மணி பன்னெண்டு. உன் பின்னாடி ஒக்காந்திட்டிருக்கறது அர்ஜுன்னு நெனைச்சியா. ஹஹா" என்று தோள்பட்டையை கப்பென்று ஒரு அழுத்து அழுத்தினான். அங்கே நின்றது தான் வண்டி.

டிமாண்டி காலனி ஒரு வித்தியாசமான பேய்ப்படம்.  அடுத்து என்ன நடக்கும் என்று சின்ன கெஸ் ஒன்று கொடுத்து நாம் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடக்கிறது கதை. மிரட்டல். பின்னணி இசையும் வெறித்தனம்.

முதல் வரியில் சங்கருக்கு நன்றி சொல்லியாகவேண்டிய கட்டாயம், காரணம் இதோ: டிமாண்டி காலனியில் ஒரு காட்சி, ஓஜா போர்டு எரிந்து அம்புக்குறியாக மாறி சுற்றும். அது எவனைக்காட்டுகிறதோ அவன் முதலில் சாவான். நடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பார்கள். அது சுற்றிக்கொண்டே இருக்கும். மெல்ல சுற்றி நின்றபோது சட்டென கரண்ட் போய்விட்டது.

எங்கள் ஊரில் இது வழக்கம்தான். சரி ஜெனரேட்டார் போட்டு போடுவான் என்றால், பத்து நிமிடமாகியும் போடவில்லை. பீதியில் அமர்ந்திருந்த எங்களுக்கு வந்த சோதனை அது. திடீரென ஒருவன் மேலே வந்து "ஏங்க படம் முடிஞ்சிருச்சுங்கலாமா எந்திரிச்சு போச்சொல்றான், ஃபுல் தண்ணி" என்றான்.

கீழே சென்று பார்த்ததில் ஆபரேட்டர்  முழு சரக்கில் மிதந்து கொண்டிருந்தான். போதையில் எதன்மீதோ விழ படம் நின்றுவிட்டது. போலீஸ், பணம் திருப்பிக்குடு, படம்போடு என்ற அலப்பறை தாண்டி தியேட்டர் மேனேஜர் வந்து ஆபரேட்டரை ஏறிமிதித்து "பாதியில ஆப் பண்ணிட்டான். பார்வர்ட் பண்ணமுடியாதுங்க" என்று மீண்டும் இடைவேளையிலிருந்து போட்டார். மணி நள்ளிரவு ஒன்றரை.

இந்த குட்டி கேப்பில் தான் சங்கருக்கு ஃபோன் செய்து என்னங்க இவ்வளவுதான் படமா என்றேன் இன்னும் இருக்கு நல்லாருக்கும்  பாருங்க என்றவரிடம் கெஞ்சி கூத்தாடி கதையை கேட்டுக்கொண்டேன். பிறகு நிம்மதியாக பார்த்தேன். இல்லையென்றால் அவ்வளவுதான். சங்கருக்கு நன்றி.

குறிப்பு: அன்றிரவு தியேட்டரில் மூப்பது பேர் இருந்திருப்போம். ஆங்காங்கே அமர்ந்திருந்த முப்பது பேரும் இரண்டாம் முறை திரையிட்டபோது ஒரே கூட்டமாக அமர்ந்துகொண்டோம்.

***

ஒரு குட்டி உரையாடல். (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது - என் பெயர் மட்டும் அப்படியே இருக்கும்).

நெடுநாள் முன்பொரு நள்ளிரவு வாட்சப்பில் நிகழ்ந்த கூத்து இது.

பேய் வீடியோ பற்றி பேசுகையில். அது புரணி என்ற மறுத்துக்கொண்டிருக்கும் போது

…பாதியிலிருந்து…

ஷா: ஆமாங்க நைட் கோவை சத்தி இருட்ல நூறுல பைக் ஓட்டினு வருவேன். லாங் சைட்ல வெள்ள உருவம் பொகையும் மெர்சலாயி போனா கெழவன் பீடி வலிச்சிட்டிருப்பான்

கோமதி நாயகம்: எனக்கு பைசாசங்கள் சிலதோட பழக்கம் உண்டு.

லெஜண்டு:  கோமதி இந்த ஓஜா போர்டு செஞ்சு பாத்திருக்கீங்களா

கோமதி நாயகம்: அதெல்லாம் தேவையில்ல. நார்மலாவே பேசுவேன்

லெஜண்டு: எப்புடி?

கோமதி நாயகம்: அதுக சொல்ல வர்றது புரியும்

தலைவர்:  இந்த க்ரூப்ல கல்யாணம் ஆனது கோமதி நாயகம்க்கு மட்டும்னு நினைவுப்படுத்துறேன்.

கோமதி நாயகம்: நிறைய மரணங்கள் எனக்கு அணுக்கமா நடந்திருக்கு

ஷா: நெசமா சொல்றீங்களா இல்ல நடுராத்திரியில பச்ச புள்ளைங்களுக்கு பீதிய கௌப்புறீங்களா கோமதி

லெஜண்டு: பைசாசங்கள்னு புலுரல் சொல்லிருக்காரு.. அப்ப ஒய்ஃப்பா இருக்காது

கோமதி நாயகம்: எல்லாம் என் கிட்ட தன்ன காட்டிக்க டிரை பண்ணும்

தலைவர்: அட அவன் எதோ சொந்தப்பிரச்சினைய அரசியலோட மிக்ஸ் பண்ணி பேசிட்டு இருக்கான்பா மொமண்ட்

கோமதி நாயகம்: அட விளையாட்டில்ல. சீரியசாதான் சொல்றேன்

லெஜண்டு: சாமி மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க கோமதி

தலைவர்: அணுக்கமான மரணம்னா என்ன கோமதி? பிலீச் எக்ஸ்பிளயின்.

கோமதி நாயகம்: அது இப்ப வேணாம்

தலைவர்: ஓ. அந்த மரணம். மைல்டா நியாபகம் இருக்கு.

ஷா: ஒன்னு கூடிட்டாய்ங்க

தலைவர்: சரி. விட்ருவம். எப்ப எப்படி உணர்ந்தீங்க?

கோமதி நாயகம்: தனியா இருக்கும்போது வந்துடும். இதால ரெண்டு வருசம் பக்கமா தூக்கமே கெட்டுப்போய் இன்சோம்னியால திரிஞ்சேன். அப்பறம் பழகிடுச். பயமுறுத்தறதெல்லாம் அதுகளோட வேலை கிடையாது. அதுக பேச வரும்

லெஜண்டு: ஓ

கோமதி நாயகம்: அத கேக்க நாம தயாரா இருந்தா போதும்

தலைவர்: அதாவது ஒருத்தர் மொழி ஒருத்தருக்கு புரியாத ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி. என்னமோ பேசிட்டு இருக்கறமாதிரி இருக்கும். ஒண்ணும் நியாபகத்துக்கு வராது அப்றம்

*  *

லெஜண்டு: இப்பமும் பேய் வருமா

கோமதி நாயகம்: பேய்கள் அப்டியில்ல. மொழி பிரச்சனையில்ல. தூரம் தான் பிரச்சனை. பயமில்லாம அத நெருங்கினாதான் புரியும் அதோட மொழி

தலைவர்: ஓ.

ஷா: பேய்வேற ஆவிவேறயா

கோமதி நாயகம்: எல்லாம் ஒண்ணுதான்

தலைவர்: நான் பேசுன, எங்கிட்ட பேசுன யட்சிகளொட நான் சந்திச்ச பிரச்சினை இதுதான்

லெஜண்டு: பேய் இல்லன்னே நம்பி பழகிட்டேன். அப்டியே இருந்துடுறேன் கோமதி நாயகம். அதான் comfortableஆ இருக்கு

ஷா: // நான் சந்திச்ச பிரச்சினை இதுதான் // ??

தலைவர்: மொழி இடைவெளி

ஷா: எனக்கும் இது நடந்திருக்கு

கோமதி நாயகம்: கேரளா போய் கொஞ்ச நாள் இருந்தேன் சோட்டானிக்கரைல. கருட மந்திரம் சொல்லித்தந்தார் ஒரு மாந்திரீகர்

தலைவர்: ஓஜா போர்டு, மீடியேட்டர் வச்சா யட்சிக வர்றதில்ல... ஆனா தனியா இருந்தா வருதுக

லெஜண்டு: யட்சின்னா?

கோமதி நாயகம்: பெண் பேய்

ஷா: அதே

தலைவர்: சோட்டாணிக்கரை எங்க இருக்கு கோமதி நாயகம்? கேரளாவுல இடம் ப்ளிஸ் ;)

கோமதி நாயகம்: அதிரம்பள்ளி சாவக்காடு

தலைவர்: அந்த ஏரியாகிட்டதான். கருட மந்திரம் என்ன? வெளிய சொன்னா சக்தி போய்டும்னு அடிச்சு விடாத. ;))

கோமதி நாயகம்: தட் பாவிகளுக்கு சொல்ல கூடாது சொல்லியிருக்கிறார் மொமொண்ட். அதிரம்பள்ளி சாவக்காடு ஒரு அமானுஷ்யமான எடம். அந்த பகவதி தேவி சிலை ரொம்ப அழகா இருக்கும். தங்கத்துலயே இருக்கும். பெரிய சைஸ்ல ஆனா பயமா இருக்கும்

ஷா: என்னங்க கோபிநாத் மாதிரி பேசறீங்க

தலைவர்: மெயின் ரோட்டுக்கு பக்கத்துல பஸ்டாண்ட ஒட்டி

கோமதி நாயகம்: கூகுள் பண்ணி சொல்ல எவ்ளோ நேரமாகும். விசயம் அதில்ல

லெஜண்டு: எங்கப்பா சொல்லிர்க்கார்.. கொல்கத்தா காளி செல அதி பயங்கரமா இருக்குமாம். நேர்ல பாக்க எவனுக்கும் தில்லு வராதாம்

கோமதி நாயகம்: என்னைய கொண்டு போய் உட்டுட்டு வந்தாங்க. அம்புட்டுத்தான் சோட்டாணிக்கரை பகவதி.

ஷா: என்னைய ஏர்வாடில உட்டமாதிரி

கோமதி நாயகம்: எனக்கு பழக்கமில்லாத பைசாசங்கள் இறங்கினா அனுமன பிரதிட்சை பண்ணி விட்டுர்வேன். அவர் பாத்துப்பார்

லெஜண்டு: எவ்ளோ பெரிய பேயாருந்தாலும் நம்ம சாமி பெர்சுன்னு எங்கப்பா சொல்ட்டாரு.. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.. உங்க பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்

தலைவர்: கல்கத்தா காளியும் அதேதான்னு நினைக்கிறேன். ஆனா பிரத்யங்கராவையும், பகவதியும் பாத்துட்டேன். கல்கத்தா பாத்ததில்ல

கோமதி நாயகம்: கல்கத்தா காளி?? திருநாகேஸ்வரம் பக்கத்துல ஒரு வனபத்திரகாளி கோயில் இருக்கு. செலய பாத்தாலே பேண்டுருவீங்க. அப்பிடி ஒரு கோர ரூபிணி

தலைவர்: சோட்டாணிக்கரை பகவதி மாதிரி, நாகர்கோவில் வட்டாரத்துல இன்னொன்னு இருக்கு முண்டைக்காடு பகவதி

ஷா: போவோமா கோமதி

கோமதி நாயகம்: போலாம். சீக்கிரமே போகணுதான் போலருக்கு

தலைவர்: சோட்டாணிக்கரைய விட முண்டைக்காடு மை பேவ்

ஷா: நாளைக்கு??

கோமதி நாயகம்: நாளைக்கா. நாள் சரியில்ல

ஷா: அப்ப ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்க. எல்லாரும் போவோம்

தலைவர்: அமாவாசைல போங்க

ஷா: சக்தியோட உச்சம் அமாவாசையா பௌர்ணமியா

கோமதி நாயகம்: பெளர்ணமி. பெளர்ணமில போவோம்

*****

செல்வோமா?

*****

பைசாசங்களின் சகவாசம்.

அணுக்கமானவரது/ நெருங்கியவரது மரணங்கள் கொடுமையானவை. அப்படியான மரணமொன்று என்னில் குறுக்கே வந்தது. பைசாசங்களை அணுகவேண்டுமென்பது ஆசையைத்தாண்டிய தேவையானது.  நள்ளிரவுகளில் மயான வாசலில் நின்றிருக்கிறேன். குறிப்பான நோக்கம் ஏதுமற்ற ரேண்டம் எண்ணங்கள் தோன்றும். பின்னொரு பொழுதில் அவற்றை ஒருநிலைப்படுத்திப் பார்க்க முயல்வேன். அவை ஒரு உரையாடலாய் இருக்கும். பெரும்பாலும் அர்த்தமற்ற உடைந்த உரையாடல்தான். ஒரு கனவிலிருந்து மீண்டு அதை நினைவுக்கு கொண்டுவர முயல்வது போலத்தான் எதுவுமே நினைவுக்கு வராது. ஏர்வாடியில் மனநோயாளிகள் பேசிக்கொண்டிருப்பது போலத்தான். ஒரு கோர்வையற்ற உரை. முன்பொருநாள் ஏர்வாடியில் அமர்ந்திருந்தேன்.  வேகமாக கத்திக்கொண்டு ஓடி வந்த ஒருவன் கண்முன்னே வந்து விழுந்தான். சுற்றிலும் கூட்டம் கூடியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இடம் சுத்தம் செய்யப்பட்டது. மரணச்செய்தி வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. நம் கண்முன்/நம் கண்ணைப்பார்த்துக்கொண்டே ஒருவன் இறப்பானாயின் அதைவிட  ரணம் என்ன இருக்கமுடியும். அவன் யார் ஏன் என்று துளைத்தெடுக்கும் எண்ணங்களுடன் அலைகையில் தான் அவ்வகைப் பைசாசங்களுடனான சகவாசங்கள் தொடங்குகிறது. இவை நடந்து முடிந்து ஆறேழு ஆண்டுகள் இருக்கும். இன்றும் நள்ளிரவு பால்கனியில் அமர்ந்திருக்கும்போது உணர்வதுண்டு.  எனது அறையில் பெட்ரூம் விளக்கு கிடையாது. கும்மிருட்டுதான். அதுவும் நல்லதுதான். பெரும்பாலான எனது இரவுலாக்கள் பெளர்ணமியில் தான்...

-          ஷா