சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

23 July 2015

அவளது மூன்று கண்கள்

அவளுக்கு
மூன்று கண்கள் இருந்திருக்கலாம்
மூன்று கைகள்
அல்லது
ஆறு கால்கள் இருந்திருக்கலாம்

அவள் படித்திருந்தாள்
அழகுற்று அறிவுற்றிருந்தாள்

நாணிச் சமையும்
தேனிலவு முகமுடையாள் என்றாலும்

அவளுக்கு
இரண்டு தலையாவது இருந்திருக்கலாம்.
அதனால்
அவளை நிராகரித்திருக்கலாம்.

நூறு பவுன் போடமுடியாத
குடும்பத்துப் பொண்ணு
என்ற
நிராகரிப்பை விட
இது நன்றாக இருந்திருக்கும்

-  ஷா

புதுப் பூனை

இந்த
நள்ளிரவில் தனியாக
ஒரு நாற்காலியில்
அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும்
எனக்கு

ஒரு சிகரெட்
கொஞ்சம் பிராந்தி
ஒரு சாம்பல் தட்டு
பேசுவதற்கு ஒருவன்
போதும்
அவன் போனால்
இன்னொருவன்

அவர்களுடன்
நழுவிச் செல்லும்
நினைவுகளைக் காண
துரத்திக்கொண்டே செல்கிறேன்

இன்னும் வெகுதூரம்
சென்று
யாருமற்றவனாய்
திரும்பி வந்து
என்னை விட்டு விலகக்
காத்திருக்கிறேன்

காலுக்கடியில் சாவகாசமாய்
அமர்ந்திருக்கும்
பூனை மெல்ல
எட்டிப் பார்க்கிறது...

-  ஷா

22 July 2015

தூயவெளிப் புன்னகை

ஒற்றயைறை வீ்ட்டுத் தொட்டிலில் எதையோ நினைத்து
தூக்கத்தில் சிரிக்கிறது
குழந்தை

கனவில் வந்த
கடவுளாக இருக்கலாம் என்றாள்
அவள்

அவனோ
அதெல்லாம் ஒன்றுமில்லை வா என்றான்

குழந்தையின் உறக்கம்
உறுதியாகும்வரை
காத்திருந்தவர்களது
முதல் முத்தலிலேயே
மீண்டும்
சிரித்தது குழந்தை!

- ஷா