வித் யூ வித்தவுட் யூ பதிவிற்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருந்தன. ஃபோனிலும் நேரிலும் பேசியதிலிருந்து
சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.
முதலில்
எனது பதிவு நடுநிலையானது – விமர்சனம் அர்த்தமற்றது என்ற கேள்விக்கு பதில் சொல்ல கடவுகிறேன்.
இப்படத்தில்
நாயகனின் குற்றவுணர்வும் காதலுமே எனக்கு ஒட்டவில்லை. அதாவது அவரது குற்றவுணர்வுக்கும்
சரியான காட்சி அமைப்புகள் இல்லை காதலுக்கும் எவ்வித புனைவும் இல்லை. முதல் படியே இப்படி
ஒவ்வாமையாய் இருக்க நான் எப்படி மேற்கொண்டு அரசியல் விழுமியங்களை அலச முடியும்? அதையும்
மீறி அலச நினைத்ததால் சொதப்பிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இனி
எதிர்வினைகள்.
முதலாவது,
தோழர் தமிழானந்தன் எழுதியது.
படத்தை
நான் பார்க்க வில்லை.. இருப்பினும் படத்தின் நோக்கம் என்ன என்பதை திரு.ஷா அவர்கள் அறிந்தும்
புரிந்தும் வைத்திருப்பது மகிழ்ச்சியே.. உலகம் முழுக்க விடுதலைப்போராட்ட அமைப்புகள்
திவீரவாதிகள் என்ற பெயரில் ஒடுக்கப்படுவதை நாம் அறிவோம்.. உலக நாடுகளில் தமிழர் பிரநிதிகளான
புலிகளை தடை செய்யவும், ஆதரவு போக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் இனப்படுகொலையில்
பங்கு கொண்ட சர்வதேசமும், சிங்கள அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏராளம்.. அதன்
ஒரு பகுதியாகவே இந்திய அரசும் இதுவரை எந்த ஒரு இயக்கத்துக்கு தரப்படாத அடுத்த 5 அண்டுகளுக்கான
தடையை விதித்துள்ளதை கவனிக்கவும்.. புலிகள் தீவிரவாதிகள் என்பதை படத்தில் அவர் பதிவு
செய்வதோடு நிறுத்தாமல், நியாயமான அவர்களின் விடுதலை கோரிக்கையையும் தமிழீழ அரசின் இயங்குதலையும்,
அதனை சிறப்பாக வழி நடத்திய புலிகளையும் பற்றிய எந்த ஒன்றும் பதிவுசெய்யப்படவிலை என்றே
நினைக்கிறேன்.. ஆக இது எவ்வாறு நடுநிலையான பதிவாக முடியும் என்ற நோக்கத்தில் அதனை நீக்க
சொல்லி எதிர்ப்பு குரல் எழுப்பபட்டிருக்க வேண்டும்.
என்னை
பொறுத்தவரை ஒரு கலைப்படைப்பு உண்மைகளை படம்பிடிக்காமல், பக்க சார்ப்பு நிலைப்பாட்டோடு
ஒடுக்குபவர்களின் குரலாக மட்டும் ஒலிக்குமாயின் அதன் கலை நுணுக்கம் உலகின் தலைச்சிறந்ததாக
இருந்தாலும்,, அது காறித்துப்புவதற்கு கூட லாயக்கற்றது.. அதன் கலைத்தன்மை ரசிப்புகுறியதன்று..அது
வித்தவுட் யு வாக இருந்தாலும் சரி விஸ்வரூபமாக இருந்தாலும் சரி.
-
- தமிழ் ஆனந்த்
இரண்டாவதாக, படத்திற்கு
முழு ஆதரவை தெரிவித்து நண்பர் பாரி எழுதியது.
இப்படத்தை ஆர்கேவி ஸ்டூடியோவில் திரையிட்ட போது இப்படத்தையும் படத்திற்கு பிந்தைய சலசலப்புகளையும் நேரில் பார்த்தவன் என்கிற முறையில் நானும் என் கருத்துகளை முன் வைக்கிறேன்.
முதலில் அங்கு வந்திருந்த இயக்கத் தோழர்கள் படத்தை அணுகிய விதமும் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் பலவும் எனக்கு உடன்பாடனவை அல்ல. இயக்கத் தோழர்கள் ஒரு தேர்வுத் தாளை திருத்தும் கண்டிப்புடனும் கூர்மையுடனும் படத்தை நோக்கினர். இதன் மூலம் அத்தனை படைப்பாளிகள், இயக்கத் தோழர்கள், கலை நோக்கர்கள் நிரம்பிய அந்த அரங்கில் கடைசிவரை ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நிகழ்த்த வாய்ப்பிலாமல் செய்துவிட்டனர்.
பல இடங்களில் படத்தில் மறைமுகமாக சிங்கள ஆதரவு அரசியலை முன்னிறுத்துவதாக இயக்கத் தோழர்கள் வாதிடுகிறார்கள். நான் அந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அங்கு நிலவும் யதார்த்தமான சூழலை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள இம்மாதிரி படைப்புகள் பலவும் வர வேண்டும் என்றே நினைக்கிறேன். இங்கு எழுப்பப்படும் வெற்று கூச்சல்கள் மூலமாகவோ அல்லது இந்திய/இலங்கை அரசுகளின் கண்துடைப்பு அறிக்கைகளின் மூலமாகவோ அங்கு நிலவும் சூழலை அறிய முடியாது.
ஒரு எளியவனின் பார்வையில் அந்த படத்தில் நான் கண்ட சில எளிய உண்மைகள்:
1. அங்கு வாழும் தமிழ் பெண்கள் பாதுகப்பற்ற உணர்வுடனே வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் கற்பை காப்பாற்றி கொள்ளவேனும் ஏதோ ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
2. நாயகியின் மொத குடும்பமும் போரில் கொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவளின் சகோதரர்கள் இருவரும் பள்ளி செல்லும் அப்பாவிக் குழந்தைகள்.
3. ராணுவ வீரர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தமிழ் பெண்களை கற்ப்பழித்துள்ளனர். அவர்கள் அதை கிட்டத்தட்ட தங்கள் உரிமை போலவே நிலைநாட்டியுள்ளனர்.
4. ராணுவ வீரர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு ( இதுகுறித்து, பின்பு சொல்கிறேன் ) சக ராணுவ வீரர்களின் சாட்சியங்களே போதுமானதாக கருதப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நடைபெற்ற ஒருசில விசாரனைகளும் (ஒருவேளை நடைபெற்றால்) வெறும் கண்துடைப்பாக இருந்திருக்கலாம்.
5. சிங்களவர்களிடம் தங்கள் தாலி முதற்கொண்டு அடகு வைத்து பணம் பெறும் நிலையிலேயே தமிழர்களின் பொருளாதார நிலை இருக்கிறது.
6. தன் கணவன் நல்லவனாகவே இருப்பினும் அவனிடம் தற்போது எஞ்சியிருப்பது வெறும் அன்பு மட்டுமே என்ற போதிலும் தன் இனத்தை அழித்த சிங்கள ராணுவத்தின் பிரிதிநிதியாக இருப்பவனிடம் சேர்ந்து வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். இதன் மூலம் போருக்கு பின்னர் சிங்களர் தமிழரிடையே இனக்கமான உறவு ஏற்படுவது மிகப்பெரிய கேள்விக்குறியே என்றே அர்த்தப்படுகிறது.
ராணுவ விசாரனை பற்றிய கேள்விக்கு இயக்குனர் அளித்த பதில்,
கேள்வி: கற்ப்பழிப்புகளுக்காக இதுவரை இந்த ராணுவ வீரரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. படத்தில் தாங்கள் அவ்வாறு சித்தரித்து உள்ளீர்களே?
இயக்குனர்: விசாரனை நடந்தது இறுதி போருக்கு முந்தைய காலகட்டம். அனைத்து சம்பவங்களும் விசாரனைக்கு உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஒருசில சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன (பெயரளவிலேனும்). அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மேலும் தமிழ் பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டது குறித்து சிங்கள ஏடுகளிலேயே புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
என் தரப்பு : கற்பழிப்புகள் குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் உலக நாடுகள் கவனமும் இதில் இருப்பதால் ஒரு சில விசாரனைகள் (நேர்மையாக அல்ல, கண்துடைப்புகள்) நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன்.
இயக்குனரை நடத்திய விதம்:
படத்திற்கு பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்வு வெற்று கூச்சலாக முடிந்தது. இயக்கத் தோழர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கேள்விகளை எழுப்பினர். அவற்றுள் பல இயக்குனரை மிரட்டும் தொனியில் இருந்தன.
அங்கு வந்திருந்த மே 17 இயக்கத்தை சேர்ந்த தோழர் ஒருவர் "அங்கு எத்தனை பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா? என்னிடம் பல நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளன!" என்று கையில் இருக்கும் தரவுகளை காட்டி இயக்குனரை மிரட்டுகிறார். இன்னொருவர், " அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இவற்றுக்கும் படத்தின் பேசுபொருளுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம் படத்தில் வரும் 'Tamil Terrorists' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கூச்சல். அந்த வார்த்தையை நீக்கிவிடுவதால் எந்த உண்மையை மறைக்க போகிறார்கள்? இலங்கையில் உள்ள சிங்கள ராணுவ வீரன் அவ்வாறு சொல்வது தானே யதார்த்தம். இந்த எளிய உண்மையை கூட மறைத்துவிட்டு என்ன நேர்மையான படைப்பை கொடுத்துவிட முடியும்?
ஒருவேளை தமிழ் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் குண்டு வெடிப்பதையும், தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படும் போது எழுப்பும் ஓலக் குரலையும் பதிவு செய்திருந்தால் அது நேர்மையான படம் என்று கொண்டாடுவார்கள். அதை விடுத்து போருக்கு பிந்தைய வாழ்வியல் சிக்கல்களை படம்பிடித்தால் அது சமாதனம் பேச முற்படும் படம், தமிழர்களின் துயரத்தை பதிவு செய்யாத படம், படத்தை தடை செய் என்று கூச்சலிடுவது. இப்போக்கு இருக்கும் வரை அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவே முடியாது. மேலும் இத்தளத்தில் படம் எடுக்க முன்வரும் ஒருசில படைப்பாளிகளும் இனி முன்வரத் தயங்குவார்கள்.
இலங்கையில் என்ன நடந்தது என்பதை இன்னும் இந்தயாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களே புரிந்து கொள்ளாத நிலையில் இம்மாதிரி படங்கள் மிகவும் அவசியமானது என்றே கருதுகிறேன். இம்மாதிரி வலுவான படைப்புகளே இலங்கையில் என்ன நடந்தது என்பதை ஓரளவேனும் உலகிற்கு எடுத்து செல்லும். அதை விடுத்து இதற்கு எதிராக கூச்சலிடுவது நம் நோக்கங்களை நாமே முடக்குவது போன்றதாகும்.
- - பாரி
நன்றி.
இலங்கை இனப்படுகொலை அரசியாலாக்கப் பட்ட ஒன்று. அதைப் பற்றி பேசுவதோ, படங்கள் எடுப்பதோ, பரிதாபப்படுவதோ, போராடுவதோ எல்லாமே வீண் என்பது என் எண்ணம். மிச்சமிருக்கும் உயிர்களை காப்பாற்ற முடிந்தால் ஒரு வேளை பயன் அளிக்கலாம். அதுவும் சாத்தியம் என்று தோன்றவில்லை. தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளின் நிலமையை பற்றிய செய்திகளைப் படிக்கும் பொழுதெல்லாம், இவர்களின் வாழ்வுக்கு போராடாதவர்கள் இலங்கையிலிருக்கும் மக்களுக்கு என்ன செய்து விடப் போகிறார்கள் என்று தோன்றும். ஆயுதம் ஏந்திய போராட்டம் எப்பொழுதும் அழிவைத் தரும்.. இங்கு நான் பொதுவான கருத்தைப் பதிவு செய்கிறேன். அங்கு நடந்தது சரி, தவறு என்று பேசவில்லை.
ReplyDeleteஅடுத்து உங்கள் பதிவினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் "கற்பழிப்பு" என்கிற வார்த்தையைக் கடுமையாக எதிர்க்கிறேன். பெண்ணை அவள் உடல் ரீதியாக
அடிமைப் படுத்த பயன்படுதும் வார்த்தைகளில் "கற்பு" ம் ஒன்று. பெரியார், ஆண்கள் ஆசை நாயகிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். நாம் வன்புணர்ச்சியை இன்றும் கற்பழிப்பு என்று கூறுகிறோம். இந்த கற்பினால் ஆயிரமாயிரம் கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன. வன்புணரும் ஆணின் கற்பே அழிகிறது. .