சென்னையின் மணல் இரவுகள்...
சுமார் பதினொன்றரை மணியளவில் அனைத்து கடைகளையும் ஏரைக்கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒன்றிரண்டு கடைகளில் மட்டும் கடைசிக் கட்ட வியாபாரங்கள் அவசரகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில்தான் நான் மெரினாவை அடைவேன்.
ஆண் பெண் பேதமின்றி புகைபிடித்துக் கொண்டிருக்கும் குழுவினூடே கலங்கரை விளக்கச் சாலை வழியாக நுழைந்தால் மெரினாவின் தெற்கு எல்லையை அடையலாம். இங்கு திருவல்லிக்கேணி பட்டினப்பாக்கம் பகுதியிலிருக்கும் சாமானிய மக்கள் கூட்டமொன்று பாய் தலையணை மற்றும் போர்வையுடன் கடலை நோக்கி படையெடுப்பதைக் காணமுடியும். குறைந்தது இருநூறு பேராவது கடற்கரையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எவ்வித பயமோ தயக்கமோ இருப்பதில்லை. சொந்த ஊரில் அமைந்திருக்கும் ஒரு அழகிய சூழலை அனுபவிக்க யார்தான் தயக்கப்படுவார்கள். கடைகளை மூடச்சொல்லியும் பொதுமக்களை கிளம்பச்சொல்லியும் காவலர்கள் செய்கின்ற அறிவிப்பை கண்டும்காணாமல் ஒரு கூட்டம் ஐஸ்கிரீமையும் பானிபூரியையும் சுவைத்தபடி தத்தமது பிள்ளைகள் ஸ்கேட்டிங் செய்வதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். இக்கூட்டத்தில் பலர் பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள். எவ்விதக் கவலையுமின்றி எதையோ கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களும் அதே திருவல்லிக்கேணி மற்றும் அடையார் சாந்தோம் பகுதி மக்கள்தான்.
ஒரு குல்ஃபி ஐஸ் விற்பவரிடம் பேசியதிலிருந்து, “இங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். வெளிநாட்டு வர்த்தகம் சார்ந்திருப்பவர்கள் வெள்ளிக்கிழமையை விடுமுறையாகப் பெற்று அதனைக் கொண்டாட இங்கு குழுமியிருக்கிறார்கள்” என்ற தகவல் கிடைத்தது.
இந்த இருவேறு நிலைப்பாடுகள் கொண்ட மக்களை ஒரு சேரக் காணமுடியும் நிகழ்வு சாதாரணமாதென்றாலும் இவ்விரு வகை வாழ்க்கையையும் வாழ்ந்துவிட நினைக்கும் உன்னத நிலை மெரினாவில் எனக்கு கிட்டியதுண்டு. அழகழான பெண்கள் ஒருபுறம், கவலையை மறந்து உல்லாசமாய் கடல் மணலில் தூங்குபவர்கள் மறுபுரம் என இருவகைக் கூட்டத்தில் மூன்றாவதாய் இருப்பது கடற்கரைப் பூங்கா பெஞ்சுகளில் தூங்கும் பெரியவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் தான். இவர்கள் எதையோ எதிர்நோக்கிய வண்ணம் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பர்.
ஒருமுறை தடைகளை மீறி கடலில் கால் நனைக்கச் சென்றதில் புதுமணத்தம்பதிகள் பலரைக் கடலோரத்தில் காணமுடிந்தது. இதுபோக கடைசி சவாரி பேரம் பேசும் ஆட்டோக்காரர்கள், இரவுணவை முடிக்கும் ஹோட்டல் வேலையாட்கள், பணி முடிந்து திரும்பும் பரத்தைகள், காவலர்கள், இரவுப் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என பல்வேறு மக்களின் சங்கமத்தினிடையில் மெரினாவை விட்டுக் கிளம்பி பெசண்ட் நகரை அடைவேன்.
பணக்காரர்களின் கடற்கரை என ஒற்றை வரியில் பெசண்ட் நகரை சொல்லிவிட முடியும். இங்கு வந்து சேர்கையில் மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். இங்கு நடைபெற்ற ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டு வாழ்த்திவிட்டு வந்திருக்கிறேன். பெசண்ட் நகர் கடலின் தெற்கு மூலையில் மீன்க் கடைகளும் கருவாட்டுக் கடைகளும் இரவென்பதை மறந்துவிட்டு அனல்பறந்து கொண்டிருக்கும். மெரினாவிலிருந்து பெசண்ட் நகரை அடைய நான் தேர்தெடுக்கும் வழி பட்டினப்பாக்கம் சாந்தோம் அடையாறு.
பட்டினப்பாக்கத்தில் பொட்டிப் பொட்டியாக வீடுகள், மூடப்பட்டிருக்கும் மீன்க்கடைகள், மாதா கோவில்களைத் தாண்டினால் கடல் மிக அருகில் வரும். ஜெயமோகன் எழுதிய இரவு நாவல் பின்னட்டைப் படத்தில் இருக்கும் ’நீலக்கடல் மேல் வெண்ணிலா’ தரிசனத்தை நேரில் கண்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறேன். மிக அழகான தருணமது. அதனை ஃபோட்டோவாலும் எழுத்துக்களாலும் படம்பிடிக்க முயன்று தோற்றுப்போய் இறுதியில் மனதில் படம்பிடித்து வைத்திருக்கிறேன். யாருமில்லாக் கடற்கரையின் மெல்லிய அலைகளுக்கு மத்தியில் தன்னை மட்டுமே பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருக்கும் நிலாவை தரிசிப்பது மகோன்னத நிலை என்பது என் துணிபு. காணவொன்னா வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் பகுதிகளைத் தாண்டிய உடனே மிகப் பிரம்மாண்டமான ஐடி பார்க்குகள் வருவது சென்னையின் சாபக்கேடு.
பழவந்தாங்கலிலிருந்து கிளம்பி மவுண்ட் ரோடு வழியாக ஸ்பென்சர் ப்ளாசாவைக் கடந்து ஓமந்தூரார் சட்டமன்றம் (இப்போது அரசு பல்கலை மருத்துவமனை) வழியாக பீச் ரோடு கடந்து ராயபுரத்தை அடைவதுதான் முதல் இலக்கு. பயணப் புறப்பாட்டின் முதற்கட்டமாக எங்களது குலதெய்வம் கோவில் எனப்படும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரவுருவ தரிசனம் இருக்கும். எதற்காகச் செல்கிறேன் எதைத்தேடிச் செல்கிறேன் இருபத்தி நான்கு வயதே ஆன எனக்கு ஏன் இந்த வாழ்வின் மீது இவ்வளவு ஆர்வம் என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருந்ததேயில்லை. வெவ்வேறு விதமான நண்பர்களுடன் பல்முறை சென்றிருக்கிறேன். சென்னை இரவுகளைக் குறித்தும் எனது இரவுலாவைக் குறித்தும் அவர்களது எண்ணங்கள் என்னை வியக்க வைக்கத் தவறியதில்லை.
ராயபுரம் பாலத்திலிருந்து சென்னை துறைமுகத்தின் அம்பேத்கர் கப்பற்துறையின் சுமையேற்ற இடங்களைப் பார்வையிடுவதில் எனது இரவுலா தொடங்குகிறது. சென்னை கடற்கரை ரயில்நிலைய வாசற்கடைக் காபியுடன் மெரினா பெசண்ட் நகர் கடந்து நான் அடையும் இடம் திருவான்மியூர்.
பகலின் இயலாமையை இரவில் தீர்த்துக்கொள்ளும் பணிகளில் மிகமுக்கிய ஒன்று காலியான மவுண்ட் ரோட்டில் பயணிப்பது; இரவுக்காற்றைக் கிழித்துக் கொண்டு அந்தரங்கம் பேசியபடி நண்பனுடன் செல்வது அலாதிசுகம். மவுண்ட் ரோட்டில் பல்வேறு வகை மனிதர்கள் வாழ்க்கைகள் வழக்கங்களைத் தாண்டி சிந்ததிரிப்பேட்டைக்கு அருகிலிருக்கும் ஒரு குப்பத்து முனையில் ஓரங்கட்டி டீ, புகை சாக்கில் அம்மக்களது பேச்சுக்களை ரசித்திருக்கிறேன். கலப்படமற்ற சென்னைத் தமிழ் விளையாடிக் கொண்டிருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
திருவான்மியூரில் தொடங்கும் ராஜீவ் காந்தி சாலையில் என் சகாக்களைக் காண்பேன். இவர்கள் ஐடிகார்டு ஹெல்மெட்டுடன் பைக்கை விரட்டிக்கொண்டு செல்லும் மென்பொருள் அலுவலர்கள். ஏதோ ஒரு ஏக்கம் இவர்கள் முகத்தில் குடியிருக்கும். இதுபோக அரைடவுசருடன் பெண்களும் ஆண்களும் ஒன்றாக வீடு திரும்பிக்கொண்டிருப்பார்கள். ஐடி மக்களுக்கே உரிய வெள்ளியிரவின் சிறப்பம்சமான இரண்டாமாட்டம் சினிமாவைக் களித்து திரும்பிவரும் பலரும் இதே பாணியில் உடைகளை அணிந்திருப்பார்கள். நைட் ஷிஃப்டில் வேலை பார்க்கும் மக்களும் இதில் அடக்கம். டீ, புகை வியாபாரம் விளாசிக்கொண்டிருக்கும் இடங்களைத்தாண்டியதும் காலியான ஓயெம்மார் சாலையில் நூறு கிமீ வேகத்தில் வண்டியை செலுத்துவது எனது பொழுதுபோக்கு.
துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சாலையில் திரும்பும்போது துணைக்கு நிறைபேர் வந்துவிடுவார்கள். டீக்கு நிறுத்தும்போது வடநாட்டு கட்டிடப் பணியாளர்கள், நூறு கிமீ வேகத்துக்கு சக மென்பொருளாளர்கள், ரோட்டோர குற்றோய்வின் நிறுத்தத்தில் பரத்தைகள், சந்திச் சாலை சமிக்ஞைகளில் காவலர்கள் என வேளச்சேரி ரயில் நிலையம் வரையிலும் துணைக்கு பஞ்சமே இருக்காது. வேளச்சேரி கிண்டி உள்வட்டச்சாலையில் நான் தினம் இரவில் தேநீர் பருகும் சைக்கிள்காரரின் கடையை அடைய எனக்கு சில நிமிடங்களே ஆகும்.
அவர் பெயர் தினகரன். நள்ளிரவு பனிரெண்டு முதல் அதிகாலை நான்கு மணிவரையிலும் கால்கடுக்க சைக்கிளில் நின்று வியாபாரம் செய்பவர் எனக்கு (எங்களுக்கு) குறுகிய காலத்திற்குள்ளாக தோஸ்த்தாகிப் போனார். இறுதியாக விமான நிலையம். இரண்டரை மணியளவில் விமான நிலையம் அடைந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மக்களைக் காண்பதில் அலாதி பிரியம் எனக்கு. இதுவும் ஒருவித போதை தான்.
சென்னை சென்ட்ரல், ராயபுரம் பாலம், எல்ஐசி கட்டிடம், ஓமந்தூரார் தோட்ட சட்டமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சாலை, திருவான்மியூர் ரயில் நிலையம், பள்ளிக்கரணை ஏரி – இவைகளின் மீது தேவையான அளவு மட்டும் நிலவொளியை வீசி அதில் பாதியை பிரதிபலித்துவிடும் அழகை ரசிகப்பதற்காகவே சென்னை இரவுகளை தரிசிக்கவேண்டும்.
ப்ளாட்ஃபாரத்தில் உறையுள் கொண்ட மக்கள், இரவு பாராது உழைக்கும் மெட்ரோ மற்றும் கட்டிட பணியாளர்கள், உடலின் ஒரு பகுதியான வயிற்றுக்காக உடலையே விற்கும் பரத்தைகள், வியாபாரிகள், சரக்கு கப்பல் பணியாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், நைட் வாட்ச்மேன்கள், பணக்காரப் பெண்கள், டிநகர் கேண்டி க்ளப்பின் வாசலில் துணைக்காக காத்துக்கிடக்கும் யுவ யுவதிகள் என அனைவரிடமும் பேசிவிட்டு அவரவர்களின் வாழ்வைத் தாண்டி நள்ளிரவு மூன்று மணியளவில் மயான அமைதியில் தூங்கும் பழவந்தாங்கல் வீடுவந்து சேர்ந்து கொஞ்சம் கதைபேசி அதிகாலையில் உறங்கப்போகும் போது உற்சாகமும் மனநிறைவும் மட்டுமே மிஞ்சியிருக்கும்.
சென்னை இரவுகள் பேரின்பத்தின் தரிசனங்கள்.
- ஷா
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன