சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

19 June 2014


திருப்பதியும் நானும்

ஷா கொஞ்சம் திரும்பிப் பாரு என்றான் அவன்.

நானும் நம்பி திரும்பிப் பார்த்தேன். திடீரென ஒரு திகில் பற்றிக்கொண்டது. சுற்றிலும் இருட்டு. ஒரே ஒரு பாதை. அதில் முழுவதுமாய் இருட்டு பரவியிருந்தது. ஒரு தெருவிளக்கு என்ற பெயரில் கூட ஒன்றுமேயில்லை. அந்த கும்மிருட்டில் நெற்காற்றின் ஈர வாசத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு வண்டி பறந்துகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு நிலவு கருமேகத்தின் பின் ஒளிந்துகொண்டு மெல்ல எட்டிப்பார்த்தது. தடாவிலிருந்து காளஹஸ்தி நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.
நேராக சென்றுகொண்டிருந்த சாலையில் இருபுறமும் நெற்பயிர் விளைந்திருக்க சாலையின் பக்கவாட்டில் நாற்பத்தியைந்து டிகிரியில் இருந்து இருநூறடி தூரத்தில் ஒரு மஞ்சள் விளக்கு ஒளித்தது. அரண்டு போய் நிற்கையில், அது சாலையின் வளைவில் எதிரில் வரும் லாரியென ஆசுவாசமடைந்தோம். அவ்வளவு மோசமான சாலை அது.

**

”யே லோக் சப் பீச்மே குஸ்கேயே” என்றார் அந்த ஹிந்திக்காரர். ஹிந்திக்காரர் என்று சொல்வதை அவமானமாக நினைக்கிறேன். மக்களை மொழிவாரியாக அடையாளப்படுத்தினாலும் இது எனக்கு வழூஉச் சொல்லெனப்படுகிறது. வடநாட்டைச்சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க அவரை சமாளித்து ஒருவழியாக நீண்ட வரிசையில் நுழைந்தோம்.
கையிலிருந்த தமிழ் செய்தித்தாளைப் பார்த்த அவர் எங்களிடம் மெல்ல பேச்சுக் கொடுக்கலானார். அவர் ஹிந்தியில் பேச பதிலுக்கு நான் ஆங்கிலத்தில் பேச என பேச்சு கோவிலில் தொடங்கி கால்பந்து வரை வந்தது. பின்னாலிருந்து என் மச்சான் கேட்டான். ‘நெசமாவே உனக்கு ஹிந்தி தெரியுமாடா?’

**

திருப்பதி என்றதும் நினைவுக்கு வருவது லட்டு, இயக்குனர் திருப்பதிசாமி மற்றும் தலயின் திருப்பதி. இம்மூன்றையும் நினைவில் கடந்து திருப்பதி நோக்கி செல்கையில், கும்மிடிப்பூண்டி தாண்டியதும் ஒருவித சிலிர்ப்பு உண்டாகியதை கவனித்தேன். ஆந்திர மண்ணில் முதல் முதலாக காலடி, மன்னிக்க பைக் டயரை வைத்த தருணம் அது. என் பைக்கில் இதுவரை அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்திலிருந்து குன்னூர் வரை சென்றிருக்கிறேன். திருப்பதிக்கு பைக்கில் பயணம் அதுவும் இரவில் என்றால் ரகளையாகிவிடும் என சொல்லாமல் கொள்ளாமல் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் திருப்பதி நோக்கி புறப்பட்டோம்.
எட்டாவதாக ஒரு எழுத்தாளனை இழுத்து வண்டியில் போட நினைத்தேன். களப்பணி பலவுண்டெனத் தப்பித்துவிட்டார். (ஒருநாள் நீ மாட்டுவ அப்ப வெச்சுக்கறேன் உனக்கு)

**

புஷ்கரிணி என்னும் அந்தக் கோவில் தடாகத்தில், குளிர் கலந்த நடுக்கத்துடன் ஆண் பெண் பேதமின்றி நீராடிக் கொண்டிருந்தோர் மத்தியில் குளித்துமுடித்து காலை உணவை எடுத்துக்கொண்டு தரிசன வரிசையில் நின்றபொழுது மணி ஏழு.

எப்படியும் இந்தக் க்யூவில நின்னா இன்னைக்குள்ள பாக்கமுடியாது. லீவு போட்டு நாளைக்குதான் பாக்கணும் என்றான் ஒருவன்.

நள்ளிரவுக்குள் திருப்பதியை அடைந்துவிட்டால் காலையில் எளிதாக தரிசனம் கிட்டிவிடும் என்ற திட்டத்துடன் வந்தவர்களுக்கு காளஹஸ்தி தாண்டி திருப்பதி நெடுஞ்சாலையில் ஒரு வண்டியின் செயின் அறுந்துவிழுந்தது பெரும் தடையாகிப்போனது. ஒருவழியாக தாங்கிப்பிடித்து மெக்கானிக் ஷெட்டை அடைந்தோம். அங்கே பஞ்சரான லாரிக்கு ஸ்டெப்னியை மாட்டிக்கொண்டிருந்த மெக்கானிக்கிடம் பேசியதிலிருந்து அவர் ஈரோட்டைச்சேர்ந்தவர் எனக் கண்டேன். (எங்கூர்க்காரய்ங்க வேர்ல்டு பூராவும் இருக்கறமுங்க…)

நள்ளிரவின் ஆரம்பத்தில் கீழ்த்திருப்பதியை அடைந்து அங்கிருந்த புல்வெளியில் படுத்துறங்கினோம்.

**

இதுவரை எத்தனையோ கேள்விகளை எதிர்க்கொண்டிருக்கிறேன். என்னால் பதில் சொல்ல முடியாமல் போன கேள்வி என்று எதுவுமே இருந்ததில்லை. தெரியாது என்பதும்கூட ஒரு பதிலாக இருந்திருக்கிறது. ஆனால் என்ன சொல்வதென்றே தெரியாமல் முழித்த கேள்வி ஒன்றை சந்திக்க நேர்ந்தது.

அது: நீ எதுக்கு திருப்பதி போன?

**

சாலையில் பேயைப்போல் வெள்ளை உருவமொன்று புகை மண்டலத்துடன் கடக்கும். நெருங்கிச் சென்று பார்த்தால் வெள்ளைச் சட்டையிட்ட கிழவர் புகைபிடித்தபடி சென்றுகொண்டிருப்பார். இது போதாதென வழியில் திடீரென அனைத்து விளைக்கும் அணைத்து கும்மிருட்டை ரசிப்போம். அதீத வேகத்தில் குண்டும் குழியிலும் விட்டபடி சென்ற நண்பரின் தம்பியிடம் ‘தம்பி நீ நல்லா ஓட்டுற ஆனா இப்படியே போனா அல்ப ஆயுசுல போயிடுவ’ என்று சொல்ல நினைத்தேன். அபசகுனமாக வேண்டாமென ‘தம்பி ஸ்பீட விட சேஃப்டி முக்கியம்ப்பா’ என்று மட்டும் சொன்னேன்.

**

எட்டு மணிநேர வரிசையில் நின்று எட்டு நொடி தரிசனத்திற்குப்பிறகு லட்டு வாங்கி வந்த பொழுது மணி ஐந்தரை ஆகிவிட்டிருந்தது. இந்த வரிசையில் நிற்க முடியாது என்று மறுத்து சென்றுவிட்ட மூவரும் காளஹஸ்தி கோவிலில் இருந்து அழைத்தார்கள். இரண்டு வண்டியில் மிகுந்த அசதியுடனும் அரைத் தூக்கத்துடனும் நூற்றியறுபது கிலோமீட்டர் தூரம் பயணிக்கவேண்டும். அதுவும் தடா வழிப்பயணம் என்பதால் கூடுதல் கவனத்துடன் பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் கிளம்பினோன். இருட்டுவதற்குள் காளஹஸ்தி அடைந்தால் போதுமென நினைத்தால் கீழ்த்திருப்பதியின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நெடுஞ்சாலையை அடையவே மணி ஏழரையைத்தொட்டது.

**

அதீத பக்தியுடன் நாள் கணக்கில் நிற்கும் ஒரு சாரார், குறைந்த பணம் செலுத்தி காலையிலிருந்து நிற்கும் இன்னொரு சாரார், பெரும்பணம் செலுத்தி வரும் இன்னொரு சாரார் என முவ்வகை மக்கள் இருந்தாலும் திருப்பதி திருமலையில் எனக்கு மிகப்பிடித்திருந்த ஒன்று அங்கு புகை பிடிக்கவோ மது அருந்தவோ மாமிசம் உண்ணவோ கூடாது என்பதே. அதுபோக லட்சக்கணக்கானோர் புழங்கும் இடத்தில் குப்பை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதையும் மீறி போடப்படும் குப்பைகளை அடுத்தடுத்த நிமிடங்களில் சுத்தம் செய்துவிட பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இது போக சேவை அடிப்படையில் பலரும் இருந்து நெறிபடுத்திக்கொண்டிருந்தது ஆச்சரியம். குறிப்பாக மலையில் இருந்து திருப்பதி நகரைப் பார்த்த நொடிகள் அட்டகாசம் என்பேன்.

**

காளஹஸ்தியை எட்டரைக்கு தொடுகையில் நால்வரும் நொந்துவிட்டிருந்தோம். அங்கேயே இரவு உணவு முடித்துவிட்டு முழுமனதுடன் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஒரே அமுக்காக வண்டியை விரட்டினோம். நாற்பது நிமிடங்களில் நாற்பத்தியெட்டு கிலோமீட்டரைக் கடந்து தடா நெருங்க. அடுத்த ஐம்பது நிமிடத்தில் சென்னைக்குள் நுழைந்தோம்.

கும்மிடிப்பூண்டியிலிருந்து ஆந்திரா நுழையும் பொழுது என் வண்டி நூற்றியைந்து கிமீ வேகத்தில் சென்றது. அதே போல் ஆந்திராவிலிருந்து திரும்புகையில் அதே கும்மிடிப்பூண்டியை கடந்த போது நூற்றிப்பத்து கீமீ வேகத்தைக் காட்டியது.

**

தரிசன வரிசையின் ஆரம்பம், உணவு கொடுத்த இடம், தண்ணிர்ப் பந்தல், மண்டப அறை, கோவில் வளாகம் என வெவ்வேறு இடங்களில் பார்த்த அதே வடநாட்டு முதியவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைச் சொன்னார். ஆனால் கடைசி வரை அவர் பெயரை நான் கேட்கவேயில்லை. என் பெயரையும் அவர் கேட்கவில்லை.

**

ஆந்திர மக்கள் ஒவ்வொரு கோவில் வாசலில் அல்லது ஏதேனும் ஒரு வீட்டின் வாசலில் குழுமமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அக்கிராமங்களைக் கடந்த போது கண்டோம்.
இம்முறையும் என் மச்சான் ”ஷா திரும்பு” என்றான்.
முடியாது என்று சிரித்தபடியே வண்டியை முறுக்கினேன்.


-                       நான் - ஷா

3 comments:

  1. அந்த மனிதருக்கு கர்வம் தலைக்கு மேல் இருக்கிறது. தான்தான் உலகிலேயே மிக நன்றாக எழுதுவதாக நினைப்பு.மற்றவர்களை மட்டம் தட்டுவதில் சப்தொமோ சத்தம். அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம். நீங்கள் உங்கள் எழுத்து பணியை தொடருங்கள்.

    ReplyDelete
  2. //அது: நீ எதுக்கு திருப்பதி போன?// சும்மாதான் :)


    உங்க எழுத்து நடையை விமர்சனம் செய்யுற அளவுக்கெல்லாம் எனக்கு தெரியாது.ஆனால் துண்டு துண்டாக இருப்பதினாலும், தொடர்ச்சி அறுபடுவதாலும், நடையில் விருவிருப்பு துளி குறைவது போல உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஷா,
    பயண.தரிசன அனுபவம் நன்றாக்கஃ கொடுத்துள்ளீர்கள்.அயர்ச்சி வேண்டாம். தொடரட்டும்
    உங்கள் எழுத்துப் பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன