சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 August 2014


ஞாயிறு மாலைகளின் சமதர்மங்கள்


சில ஞாயிறுகளின் மாலையில் பழவந்தாங்கலிலிருந்து சென்னை கடற்கரை ரயில்நிலையம் வரையிலும் போய் வருவேன். சமீபத்திய ஒரு ஞாயிறும் அப்படித்தான். அறையிலும் யாருமே இல்லை. புத்தகமும் இசையும் தவிர 11 மணிநேரம் யாருடனும் பேசவில்லை. ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்குமென எண்ணி ரயிலில் ஏறியமர்ந்தேன். வழக்கம்போலவே கடற்கரை ரயில்நிலையத்தின் காபி சுவை திரும்பி வரும்வரை  நாவில் இருந்தது.

ஞாயிறு மாலையின் வெறுமையைப் போக்கும் இந்த ரயில் பயணத்தில்தான் அவரைக் கண்டேன். சாலைக்கு மேல் காற்றைக் கிழிக்கும் வேகத்தில் செல்லும் ரயிலின் வாசலில் நின்றபடியே பயமுறுத்தும் ஆழத்தில் செல்லும் பேருந்துகளில் மேல்பகுதியை ரசித்தபோது அவரது குரல் கேட்டது. பாதி அழுக்கில் கசங்கிய அரைக்கை சட்டை இரண்டு பொத்தான் கழட்டப்பட்டு காற்றாடிக் கொண்டிருந்தது. அதற்கேற்ற ஒரு கால்சராய் ரப்பர் செருப்பும் மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தார்.

ஐந்து ரூபாய்க்கு ஆசீர்வாதம் செய்யும் திருநங்கைகள், பழம் விற்கும் சிறுவர்கள், தர்மத்தின் புகழ்பாடிப் பிச்சையெடுப்பவர்கள், பார்வையற்ற வியாபாரிகள், காதடைத்து இசையிலும் காணொளியிலும் மூழ்கிய இளைஞர்கள், செய்தித்தாள்/ வாரப்பத்திரிக்கை படிக்கும் நடுத்தர வயதினர், சிரித்துக்குலுங்கும் நங்கைகள், வாசற்கம்பி பிடித்து தொங்கிக்கொண்டு வரும் வாலிபர்களுக்கு மத்தியில் அவர் சற்று வித்தியாசமாய்த் தான் தெரிந்தார்.

என்னை நெருங்கியபோது வீசிய வியர்வை வாசம் சைதாப்பேட்டையின் ஆற்றுப்பாலத்தைத் தாண்டிய நாற்றத்தையும் எதிர்க்காற்றையும் கடந்து வந்தது. அவரை இதற்குமுன் எங்கோ பார்த்த ஞாபகம் ஒரு மூலையில் உண்டானது. இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருக்கலாம் அல்லது சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்தபோது அல்லது கடற்கரையில் அல்லது சமுதாயக் கூடங்களில்  அல்லது.

இவரைப் போன்றவர்கள் சென்னை முழுக்க உண்டு. பாதி மார்மறைத்த மாடர்ன் பெண்ணொருத்தி வீசிச் சென்ற ஏளனப்பபார்வை அவரை ஒன்றுமே செய்யவில்லை. சுற்றியிருந்த யாவரும் அவரை பஸ்சுக்கு காசில்லையென கேட்கும் மனிதராகத்தான் பார்த்தனர்.

சுமார் நாற்பது வயதையொத்த அவர் தன் தோல் சுருங்கிய முகத்தில் ஒரு சிரிப்பைக் கொணர்ந்து முதல் வார்த்தையை உதிர்த்தார். பாதி நரைத்த தலை கலைந்திருந்தது. இறங்குவோரும் ஏறுவோரும் அவரை மேலிருந்து கீழாக பார்த்துச் சென்றனர். எதையுமே கண்டுகொள்ளாத அவர் சற்று தொய்ந்த குரலில் 'தாம்பரமா?' என்றார்.

என்னைப் பார்க்க அவருக்கு எப்படி இருந்தது எனத்தெரியவில்லை. ரயில் பரங்கிமலையைத்தான் தாண்டியிருந்தது. தாம்பரத்திற்கு இன்னும் தூரம் இருந்தது. அவரைப் பார்க்கையில் தாம்பரத்திற்கு வழி கேட்பவர் அல்லது தாம்பரம் வந்தா சொல்லுங்க என்பவரைப் போலத்தெரியவில்லை. இவ்வளவு சுற்றத்திலும் அவர் என்னிடம் ஏன் கேட்டார்?
ஒன்று மட்டும் நிச்சயம். அவரைப் பார்க்கையில், அவர் கடந்த கால நானாக இருந்திருக்கலாம் அல்லது நான் எதிர்கால அவராக ஆகலாம்.

மாதம் இருபத்தி ஐந்தாயிரம் சம்பாதிக்கும் என் நண்பனொருவன் சனிக்கிழமைகளில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு செல்வான். அருகிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் சாப்பிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்த அவனிடம் ‘தம்பி சாப்பாடு எதுவும் வேணுமா?’ என்று அருகில் உணவருந்திய குடும்பம் கேட்டிருக்கிறது. கலைந்த தலையும் வியர்வை உடலும் சாதாரணச் சட்டையும்தான் ஒரு மனிதனை தீர்மானிக்கிறதா?

அந்த ரயிலில் இருந்த பகட்டு இளைஞர்களின் பார்வையும் என் நண்பனைப் பார்த்த குடும்பத்தின் பார்வையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஞாயிறு மாலைகளில் வெறுமையைப் போக்கவும் வாழ்வைத் தேடியும் பலர் இப்படி பலர் அலைவதுண்டு. சென்னை என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு அடையாளம். இங்கு இவர்களைப் போன்றவர்கள் ஏராளம். இவர்கள் சராசரிகள், சாமானியர்கள், சிலபல சம்தர்மங்களும் எட்டாதவர்கள், அடிப்படைவாதிகள் எந்த ஆடம்பரமும் தேவைப்படாதவர்கள். மிக முக்கியமாக மனிதர்கள். நானும் அப்படி ஒருவனாகத்தான் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் லௌகீகம் யாரைத்தான் விட்டது.    

தாம்பரம் வரை சென்றிருந்தாலோ அல்லது அவருடன் பேசியிருந்தாலோ அது ஒரு சாதாரண நிகழ்வாகவே அமைந்திருக்கும். (அந்த உரையாடல் யார் நீங்க என்ன எப்படிசொந்த சோகத்தைத் தாண்டி உச்சம் பெறாமல் இருக்கும் பட்சத்தில்) இதில் ஒரு பிரமிப்பு இருக்கிறது. என்னிடம் மட்டும் ஏன் பேசினார் என்ற பிரமிப்பு. அதை ஒருபொழுதும் இழந்துவிடக்கூடாது.

தாம்பரமா என்றவரிடம்பழவந்தாங்கல் சார்’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு இறங்கினேன். இறங்கியும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

-             -   ஷா

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன