சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

23 August 2016


[பயணம்] தொடக்கத்தின் முடிவுரைகள்

இன்று…

”என்ன சொல்லி என்ன சார். அடுத்த வருசம் இந்நேரம் வந்தீங்கண்ணாக்க இங்க இந்த வேனு த்ரில்லுன்னு ஒன்னுமே இருக்காது நாங்க கூட இருக்கமாட்டோம்” என்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டிருந்தது.

ஒரு நெடும்பயணம். நெடுநாளாக எழுதவேண்டும் என நினைத்த பயணம். டிசம்பர் 30, 2015-ல் இருந்து ஜனவரி 2, 2016 வரை, கோவையிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி சுற்றி பின்னர் ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி பார்த்து பின் கன்னியாகுமரி நாகர்கோவில் முடித்து திருநெல்வேலி மதுரை திருப்பூர் வழியாக கோபிச்செட்டிப்பாளையம் வர ஆயிரத்து நானூறு கிலோமீட்டர். பஸ் பயணம்.
தனியாக!

நான் சென்று வந்த பாதை:



சுற்றித் திரிந்த இடங்கள்:

நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி, ஏர்வாடி, தனுஷ்கோடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை.

மேற்சொன்னதல்லாத, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்த ஊர்கள்:
திருச்சி, நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர்.

பார்த்த நதிகள்:
காவேரி, வைகை, தாமிரபரணி

சந்தித்த கடல்கள்:
வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல்

பயணத்தின் போது எழுதிய டைரிக் குறிப்புகள் இனி..

டிசம்பர் 30, 2015, இரவு, 20:48 மணி கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம்.

என்ன எண்ணத்தில் இப்பயணத்தை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை. வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்றுவிடும் இரு பெரிய தர்ஹாக்கள், இரண்டு பெரிய கடல் சங்கமங்கள், அறியாத ஊரில் அன்னியமாய்த்திரிதல் எனத் திட்டமிட்டு புறப்பட்டிருக்கிறேன். பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. நாகப்பட்டிணம் நோக்கி தனியாக பைக்கில் பயணிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. முதற்கட்டமாக பேருந்தில் கிளம்புகிறேன். அதற்கு புல்லட் வேண்டும். எனது யுனிகார்ன் சென்னையிலிருந்து கோபி வருவதற்கே அழுதுவிட்டது. புல்லட்டில் குழுவாக பயணிப்பவர்கள் எனது பொறாமைக்குள்ளானவர்கள். புல்லட் பொறுமையாக வாங்கிக்கொள்ளலாம். இப்போதைக்கு பேருந்து! இடையிடையே நேரம் கிடைக்கும்போது நேரடியாக எழுதும் எண்ணத்தில் இதை இப்போது எழுதி வைத்துக்கொள்கிறேன். இப்பயணத்தின் நோக்கம், ஊர் சுற்றலோ தேடலோ குறிப்புகளுக்காகவோ அல்ல. அப்படியாக இருக்கும்பட்சத்தில் அதைவிட சுயநலம் வேறு இருக்கமுடியாது. பயணத்தின் நோக்கம் பயணித்தலே.

டிசம்பர் 31, 2015 இரவு 02:14 திருச்சி மத்திய பேருந்து நிலையம்.

திருச்சி - மிகவும் பழக்கப்பட்ட ஊர். இங்கு இரவும் பகலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட மதுரைக்கு நிகரான இரவினைக் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். சென்ற முறை வந்தபோது இப்படியிருக்கவில்லை. நான்கரை மணி நேரம் பயணித்திருக்கிறேன். விழித்தே இருந்தேன். ஜே ஜே சில குறிப்புகளில் சில அத்தியாயங்களும் இசையும் துணை. இரவு என்பது தனி போதை. இது பேரின்பத்தின் ஒளிவடிவம். இனி நாகப்பட்டிணத்தில் விடியும். மிக நெருங்கிய நண்ப நண்பிகளுக்கு ஏன் தனிமைப்பயணம் என்று விளக்கமுடியாமல் போனது இப்போது சரியெனப்படுகிறது. இந்த நொடியில் இந்த இரவின் நீட்சியில் ஏதோ ஒரு ஊரின் வழியே செல்லும் நான் எனது ஒழுங்கற்ற வரிசையில் அமரிந்திருக்கும் எண்ணச் சித்திரங்கள் ஒரு நூலினை ஏந்தி தாமாக வந்து வரிசையில் அமர்வதைக் காண முடிகிறது. இந்த நெடும் பயணத்தினூடே நான் கடக்கும் மனிதர்கள்தான் இச்சமூகத்தின் பிரதிபலிப்பு. அவர்களுடனான உரையாடல் எனக்கான படிப்பினைகள், இந்நிகழ்வுகளே எனது வரலாறு. இந்நிகழ்த்தலில் ஆக்கம் பிறக்கிறது. அந்த ஆக்கத்துக்காகவே இப்பயணம். இதைச்சொன்னால் ”அரைக்கிறுக்கன்” எனச்சொல்வார்கள். எனினும் இதனை மனதிற்கினிய நினைவுகளாக்குகிறது காலம். இந்த போதைக்கு எழுத்து வடிவம் மட்டுமே தர வேண்டும். அது ஒன்றே என் வேலை.

டிசம்பர் 31, 2015, காலை 8.34, நாகூர் கடற்கரை

இந்த இளவெயிலில் கடற்கரைக்கு நான் மட்டுமே வந்திருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். இங்கே ஈரக்கூந்தல் மற்றும் உடல் வடிவினை ஒட்டிய ஈர ஆடைகளுடனும் இளம் பெண்கள் கடலாடிக்கொண்டும் நடமாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆண்களைப்பற்றிய பேச்சு எனக்கெதற்கு. அமைதியாக ரசிக்கலாம். அவ்வளவே.

காலை 9.15, அதே இடம்.

தூரத்தில் மிகப்பெரிய கப்பலொன்று மிதக்கிறது. அதைச் சுற்றி சில குட்டிப்படகுகள். கரையில் அவை மூன்று நான்கு யானையளவு இருக்கும். தூரத்தால் துளியாய்த் தெரிகிறது இடதுபக்கம் காரைக்கால் படகுத்துறை வாசல். அழகான அமைதியான கடல். இப்போதைக்கு வேறொன்றும் தேவையில்லை என்கிறது மனம். எழ மனமில்லாத சூழல். மிதமான வெயில். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக வருடம் ஒருமுறையேனும் நிச்சயம் வரும் இடம். அப்போதும் இதே கடல் ஆனால் நான் அதே நான் இல்லை. அதுதான் இந்நிகழ்வின் சாராம்சம். விடிந்ததும் திறக்கப்பட்ட தர்ஹா நடையை சாத்தும் முன்பே வழிபாடெல்லாம் முடித்துவிட்டேன். இனி கடல் மட்டுமே மிச்சம். இங்கே ஒரு பெண். புது மனைவியாக இருக்கக்கூடும். அழகாக ஓடியாடிக்கொண்டிருக்கிறார். பின்னே ரயிலோசை. அந்த ரயில்ப்பாதையைக் கடந்து தான் கடலுக்கு வரவேண்டும். 2004 ஆழியலையில் தர்ஹாவுக்குள் வெள்ளம் புகாமலிருக்க உதவியது இங்கு நின்றிருந்த ரயில் தானாம். இந்தச் சாலையும் கடலும் என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. மீண்டுவந்தால் எழுதலாம். மன நிகழ்வின் உன்னத தருணத்தில் டைரியும் தேவையில்லை எழுத்தும் தேவையில்லை. நான் மட்டும் போதும்.

டிசம்பர் 31, காலை 11.55, வேளாங்கண்ணி மாதா தேவாலயம் வாசல்.

காரைக்காலுக்கு எதற்கு போனேன் என்று தெரியவில்லை. நாகூரிலிருந்து பத்தே நிமிடம் தான். எங்கு போவது என்ன செய்வது என்றறியாமல் பேருந்து நிலையத்தைச் சுற்றியிருந்த பஜாரில் ஒரு சுற்று. அதுவும் தமிழ்நாடு போலத்தான். வித்தியாசம் - இங்கு டாஸ்மாக் அங்கே ஒயின்ஸ் மற்றும் அதன் விலை. எங்கு போவதென அறியாமல் சுற்றிவிட்டு பழக்கப்பட்ட இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்திருக்கிறேன். இது நான்காவது முறை. மிகக் கூட்டமான இடம். ஆனாலும் ஆலயத்துக்குள்ளான அமைதி அலாதியானது. இங்கிருக்கும் கடற்கரையில் உட்கார இடமே இல்லை. விடிந்தால் புத்தாண்டு சிறப்பு வழிபாடு உள்ளதால் கூட்டம் வெகுவாய் உள்ளது. அழகாய் இருக்கிறது. இப்பயணத்தில் ஒரு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது என்றிருந்த நிலைப்பாட்டை இக்கோவிலின் அழகியல் சாய்த்துவிட்டது.



ஜனவரி 1, 2016, நள்ளிரவு 12.23 மணி, ஏர்வாடி

ஏர்வாடிக்கு நான் போகிறேன் என்றாலே என்ன மச்சி ட்ரீட்மெண்ட்டா என்பார்கள். அதனால் நான் இங்கு வருவதைப் பற்றி யாரிடமுமே சொல்லவில்லை. புத்தாண்டுக்கு வாழ்த்திய அண்ணன் கூட ஒக்காந்திருக்கியா இல்ல ஆடிக்கிட்டிருக்கியா என்றான். இங்கே வியாழன் இரவு மனநோயாளிகள், பில்லி சூனிய ஏவல் பாதிப்பானவர்கள் மற்றும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவர்கள் உக்கிரமாக உச்சம் பெற்று ஆடிக்கொண்டிருப்பார்கள். எங்கே நானும் ஆடிவிடுவேனோ என்று பயம் வேறு. தனியாக வேறு வந்திருக்கிறேன். பயந்து வெளியே வந்துவிட்டேன்.

இன்று புது ஆண்டு பிறந்திருக்கிறது. இசை லயிப்பில் நகர்வுகள் தர்ஹாவில் குலுங்கி குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்த மலையாளப் பெண் பெட்ரோல் வாசனை காலியான ரோடு வெடித்து சிதறிய பட்டாசுகள் அதற்குப்பின் நிசப்தத்தின் எதிரொலி நட்பாராயும் பூனைக்குட்டி சில்லறைகளை எண்ணிக்கொண்டிருக்கும் கண்டக்டர் சம்மனங்கால் போட்ட கிழவி அணையாத தெருவிளக்கு மேஜையின் மீதிருந்த காய்ந்த பூ ஒடுங்கிப்போன சிகரெட் டப்பா மங்கிய கண்ணாடி பாத்ரூமின் மஞ்சள் விளக்கு பைத்தியக்காரியின் கிழிந்த சட்டை தீ மிதிக்கும் நண்பன் வேப்பமர நிழல் வாய்க்காலில் குளித்த பெண்ணின் ஈரப்பாவாடை கடைசி பீடியை வலிக்கும் கிழவன் ஒற்றை மரம் மொட்டை மாடி அகல்விளக்கு என எல்லாம் கடந்தும் கூடவே வந்துகொண்டிருக்கிறது நீல நிற மேகங்களும் அதன் அலைகளும். பயணம் தொடரும்.

ஜனவரி 1, 2016 இரவு 20:10

இதயத்துடிப்பு வெகுவாக உள்ளது. கைகள் நடுங்குகின்றன. இப்போதைக்கு எதுவும் எழுத முடியாது. இடம் தனுஷ்கோடி. கடைசியாக எனது ஃபோனில் டவர் இருந்த இடம்.

ஜனவரி 2, காலை 5. 51 கன்னியாகுமரி முக்கூடற்சங்கமம்.

அழகான காலைப்பொழுது. சூரிய உதயம். பேரின்பத்தின் இருப்பிடம்.




காலை 10.25, நாகர்கோவில் பேருந்து நிலையம்.

இன்றுதான் முதல் முதலாக நான் சூரிய உதயத்தைப் பார்த்தேன். நெடுங்கடலில் நீண்டிருக்கும் வெளியின் இருள் மெல்ல விலகிச்செல்லும்போது எதிரே வீற்றிருந்த திருவள்ளுவரின் கம்பீரம் வெளித்தோன்ற ஆரம்பித்தது. உடலை மட்டும் விட்டுவைத்து மனதையும் எண்ணத்தையும் இழுத்துச்சென்றுகொண்டிருந்த காற்றின் லயிப்பில் நீல வண்ணம் பூசிய வானும் வெண்மை படர்ந்த கடலும் இதயத்தின் கதவை உடைத்த நொடியில், இளமஞ்சள் நிறத்துப் புடவையை கீழ்வானமும் கடலும் உடுத்திக்கொண்டு தன்னுள் ஒளித்து வைத்திருந்த உருண்டையான பந்து ஒன்றை மெல்ல வெளிக்காண்பித்தது. அப்பந்து அழகாக எட்டிப்பார்த்தது. ஒரிரு கணத்தில் முழுவதுமாய் வெளிவந்த வானேறிய அந்தப்பந்திற்கு சூரியன் என்று பெயர். இதற்கு முன் சூரியனை இவ்வளவு அழகாகப் பார்த்ததில்லை. கடலையும் கூட.

நாகர்கோவில் பாஷை என்பது எனக்கு மிக மிக நெருக்கமானது. அலாதியானதும் கூட. ஜெமோ வழியிலும் இன்னும் சில நெருக்கத்தாலும் உண்டான இக்காதலை அடிக்கடி நாகர்கோவில் நண்பர்கள் சஜன் சாமுவேல் மற்றும் டான் குட்டி அவர்களை பேசச்சொல்லி மணிக்கணக்கில் கேட்டு சொக்கிக்கொண்டிருப்பேன். பாஷை கேட்க வேண்டியே சிலரிடம் வழி கேட்டேன். அவர்கள் பேச்சும் மரியாதையும் தன்னிகரற்றது. அழகுத்தமிழில் வழிமொழியும் நொடிகளைப்பற்றி சிரித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கும் என்னைக் கண்டு கடந்து சென்ற கன்னியர்க்கூட்டம் சிரித்துக்கொண்டிருக்கலாம். அழகின் உச்சம் இப்பூமி!

ஜனவரி 2, 2016. மதுரை மாட்டுத்தாவணி. மாலை 4.10 மணி. சொந்த ஊரை நோக்கிப் புறப்பாடு.

திருநெல்வேலியில் இருட்டுக்கடைக்கெல்லாம் காத்திருக்க நேரமில்லை இருந்தாலும் அதே போல் அல்வா வாங்க பாரி சொன்ன அடையாளங்களைப் பின்பற்றிச்சென்றேன். அன்று பவர் ஹாலிடே என்றனர். ஏடிஎம் இல்லை. இருந்தாலும் அதில் காசு இல்லை. ஒரு ஆட்டோக்காரர் சார் எங்க என்றார். சொன்னேன். 

வழியில் ”இது தாமிரபரணியா” என்றேன். “ஆமா. கத்தி படம் பாத்துக்கியலா, விசய் நடிச்சது. அதுல கோலா கம்பேனி பத்தி சொல்லுவாவளே. அதுலுள்ளது இதுதான். பூரா தண்ணியவும் எடுத்துக்குறானுவள்வ. படம் பேரு தான் கத்தி அருவான்னு வெச்சிருக்கானுவ ஆன அதுலுள்ளது பூராவும் நல்ல கருத்து” என்றார். சிரித்தேன். நானூறு ரூபாய் ஆகும் அல்வா வாங்க. ஆட்டோவுக்கு மட்டுமே காசிருந்த நான் ஏடிஎம்மைத்தேடியலைவதை உண்ர்ந்த அவர், “இன்னிக்கு கரண்ட்டு இருக்காதே” என்ற பின் “எவ்வளவு அல்வா” என்றார். சொன்னேன். சட்டைப்பையில்ருந்து ஐநூறை நீட்டி வாங்கிக்கங்க என்றார். தர்ம சங்கடமாக இருந்தது. “இது ஒன்வே சார். போனாக்க திரும்ப வரமுடியாது. போயி வாங்கிக்கங்க. அங்கிட்டுப்பக்கம் ஏடிஎம்முல எடுத்தாக்க திருப்பி குடுங்க. இதுலென்ன இருக்கு” என்றார். அல்வா வாங்கி அரைமணிநேரம் சுற்றி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொடுத்து இறங்கும் போது பேசிய ஆட்டோக்கூலியில் ஒரு ரூபாய்கூட அதிகம் கேட்காத அவரிடம் “எந்த நம்பிக்கையில என்கிட்ட பணம் குடுத்தீங்க” என்றேன். “மனுஷன மனுஷன் நம்பலைன்னா எப்படி சார்” என்று சொல்வார் என நினைத்தேன். வாய்விட்டு சிரித்து “வுடுங்க சார்”. இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியால் இன்பம் நிறைந்திருக்கும் இவ்வுலகில் இன்னும் என் கண்ணில் படக் காத்திருப்பவை எவை எவையோ அவ்வனைத்தையும் காணக் கடவும் அருள்புரிவாராக. அவர் பெயர் மாணிக்கம். மறுபடியும் தின்னவ்வேலிக்கு வந்தாக் கூப்புடுங்க, ஊரச்சுத்திப்ப்பாக்க நெறய கெடக்குல்லா என்றார்.

வருவேன். வரவேண்டும். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரும் வழிநெடுக இதையே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்க நல்லவனைப்போல் இருக்கிறேன் என்பதாலா? இல்லை அவரே அப்படித்தானா? என்னிடம் பணம் இருக்கும் என எதை வைத்து நம்பினார். உடைகளை வைத்தா? பேச்சை வைத்தா? முகத்தை வைத்தா? பாதி களைத்த முகத்தில் என்ன தெரிந்திருக்கும், எது எப்படியோ தமிழ்நாட்டில் ஒருவருக்கேனும் நான் நல்லவனாய் நாணயமானவாய் தெரிந்திருக்கிறேன். அதுவரை போதும்!

ஜனவரி 2, இரவு 11.10 மணி, கோபிச்செட்டிபாளையம். வீடு. இட்லி கோழிக்குழம்பு...

***************

இன்று…

ஜூலை 23, 2016. [எழுதப்படும் தேதி]

இடம் தனுஷ்கோடி.


வானுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் மிகச்சிறிய புள்ளிதான் மனிதன் என்பதை உணர்ந்தேன். 1964-ல் அழிந்து போன – “வாழத்தகுதியற்ற ஊர்” என அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தனுஷ்கோடி என்னும் மயானத்தை தரிசிக்க இப்போது இருக்கும் ஒரே வழி, கடல்வழிப்பாதை மட்டுமே. சாலை முடியும் இடத்திலிருந்து வேன் ஒன்று கடலுக்குள் போகும். மணல் மூடி அழிந்து போனதால் அரை கிலோமீட்டருக்கு முழங்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருக்குமாம். அதில்தான் இந்த வேன் போகும்.

வேனுக்குள்ளிருந்து நான் எடுத்தவை.




நின்றால் என் நெஞ்சு வரை மட்டுமே தண்ணீர் இருக்கும் இக்கடலின் சாராம்சமே அதன் வடிவம்தான். பாறைகள் இருக்கலாம். வேனை ஓட்டிச்செல்பவருக்கு எது எங்கே இருக்கும் என அத்துப்படி போலும். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலை முடியும் இடத்தில் தொடங்கும் இந்த வேன் பயணம் கடலில் கரையில் எனக் கலந்து தனுஷ்கோடியை – தனுஷ்கோடி இருந்த இடத்தை – அடைய அரைமணி நேரமானது. எவ்வளவே கெஞ்சியும் “மணி அஞ்சுங்க. இதுக்கு மேல போனா இருட்டிடும்ங்க” என்ற அவர்களிடம் “வடநாட்ல இருந்து வந்திருக்காங்க. இதுக்காண்டி இன்னொரு தடவ வரமுடியுமாங்கறாங்க” என்று மொழிபெயர்த்தேன். உடன் மலையாளிக் குடும்பம் மற்றும் நான்.

தனுஷ்கோடியில் எடுத்தவை.


இது ரயில் நிலையத்தின் மிச்சமாக இருப்பது. இங்கெயே இருட்டிவிட்டதால் மேற்கொண்டு எதுவுமே எடுக்கவில்லை. நான் இறுதியாக நின்ற இடம் ராம சேது பாயிண்ட் எனப்படும் சங்கமம்.

இந்திய எல்லை என்றுகூட சொல்லலாம். அவ்விடத்தின் மையப்பகுதியில் நின்று கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரவில் தலைமன்னார் கலங்கரை ஒளி தெரியும் கூட தெரியும் என்றார்கள். சுற்றிலும் கடல். என்னைத்தவிர வேறெதையும் உணரவில்லை. என் எண்ணச்சித்திரத்தில் கடலின் நிழல் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகள் எனது மூளை முழுவதுமாக பரப்பிக்கிடக்கிறது. இன்னும் அங்கே சில குடிசைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஓரிடத்தில் மட்டும் வேலியிருந்தது. அதனருகே சென்றபோது ஊர்க்காரரைப்போலிருந்தவர் ஒருவர் வேண்டாமென்றார். ஏனென்றால் புயலில் இறந்த ஆயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்ட இடமாம் அது. புயலில் தப்பி நீந்திக்கரையேறிய நீச்சல் காளி என்பவருக்கு பேனர் வைத்திருந்தனர். அப்புயலிலும் வானொலியை இயக்கி செய்தி அனுப்பி பின்னர் அலையால் அடிக்கப்பட்டு பாலத்தில் தொங்கி பின் காப்பாற்றப்பட்டு ‘வீரத்திற்கு’ தேசிய விருது பெற்ற நால்வரின் கதையைச் சொல்லும் பேனரும் இருந்தது.



இதுக்குத்தான் சொன்னேன் வரமாட்டேன்னு என்று ட்ரைவர் சொன்னது நியாயம் தான். திரும்பும்போது முழுவதுமாய் இருட்டிவிட்டது. மேலே வானம் கீழே கடல் ஒரு திசையின் தூரத்தில் ராமேஸ்வரத்து விளக்குகள் இன்னொரு திசையில் யாதுமற்ற பெருவெளியைக் கொண்ட கடற்பரப்பு. வண்டியின் விளக்கு இரண்டடி தூரம் மட்டுமே காட்டியது ஒரு பெரிய டார்ச்சை என் கையில் கொடுத்தார் – நான் ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்து சீட்டில் இருந்தேன் – குத்து மதிப்பாக கரையை நோக்கி அடிக்கச்சொன்னார். அடித்தேன். அதை வைத்து எவ்வளவு தூரம் கடலுக்குள் இருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு வந்தார். எனக்கும் அவருக்கும் தவிர யாவருக்கும் தமிழ் தெரியாது. ”கரையிலபோனா வண்டிக்கு நல்லது கடல்ல போனா உங்களுக்கு நல்லது” என்றார். வண்டி நல்லாருந்தாத்தானே நாம போகமுடியும் என்றேன். வண்டி நின்னா என்ன சார் முட்டி அளவு தண்ணியில நடந்தே போயிடலாம் என்றார்.

அவர் மேலும் சொன்னவைகளின் தொகுப்பு:

“வெளியூராளுக்கு தண்ணிய நெனைச்சு பயம் உள்ளூரானுக்கு பேய நெனைச்சு பயம்”

“அடுத்த வருஷம் வந்திங்கன்னா இந்த வேன் எல்லாம் இருக்காதுங்க. சேது வரைக்குமே ரோடு போடுறானுங்க”

“இந்தக்கரையில தான் ஒரு பள்ளம் இருக்கு. போனா மாசம் இங்க ஒரு வேன் விழுந்துச்சு. அப்பறம் யாருக்கும் அடி படல. பகல்ன்னால சிரமமில்லாம எடுத்தாச்சு. இப்ப நைட்டு வேற”

“தாயி.. மேரி இந்த மேட்ட மட்டும் ஏறிட்டா போதும்”

”ஊராளுக எல்லாம் எங்கெங்கயோ போயிட்டாங்க. இங்க உள்ளவங்க மட்டும் இன்னும் மீன்பிடி வேன் தொழில்ன்னு இங்கயே இருக்கோம்.”

“போன வண்டியக்காணமேன்னு எவனாச்சும் வாரானா பாருங்க. சில்றக்….”

கரை ஏறும் வரை இரண்டு முறை குடைசாயப்பார்த்த வண்டியில் எனக்கு தோன்றியவை ஒன்றே ஒன்றுதான். மரணபயம். இதுவரை நான் சந்தித்திராத ஒன்று.

“இன்சூரன்ஸ் இருக்கு. கார்ட்க்கு இப்பதான் பணம் கட்டுனேன். கடன்னு பெருசா இல்ல. இருக்கற ஒன்னும் இன்சூர்ட் லோன் தான். டெத் சர்டிஃபிகட் காமிச்சா போதும். கல்யாணமும் ஆகல. செத்தா பிரச்சனையில்ல. ஆனா செத்துட்டேன்னு ஊருக்கு யாரு தகவல் சொல்லுவா? போனவன காணம்ன்னு தேடுவாங்களா? பாடி கரை ஒதுங்குமா? பாடி கெடைக்காம டெத் சர்டிஃபிகட் தருவாங்களா? வேன்ல இருந்து எறங்கிடவா? ஆழமா இருந்தா? நீந்தி கரைக்கு போவனா? நீச்சல் தெரியாது. உயிர் போற நேரத்துல தண்ணிய தப்பி தப்பி கரைக்கு வருவனா? கரை சேர்ந்து பேய் அடிச்சிருச்சுன்னா? அப்படியே கரைக்குபோனாலும் ஊருக்கு போக காசு? ஃபோன் பண்ணா யாரும் வருவாங்களா? நாளைக்கு காசு போடுவாங்களா? அப்படியே போட்டாலும் நைட்டு என்ன பண்றது? பொழைப்பனா? ஆண்டவன் விட்ட வழி.."

ஒரு மணிநேரத்துக்குப்பிறகு கரை ஏறினோம்.

வாழ்ந்தது போதும் சாகப்போகிறேன் என்ற பீதியில் எல்லாம் மறந்து நடுங்கிப்போன நிமிடங்களைக் கடந்து மீண்டு வந்த நொடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. இன்று மீண்டும் சென்றேன். இம்முறை பகலில்..! அன்று அவர் சொன்னதுபோல் வேன்கள் வெகு குறைவாகவே இருந்தன. சேதுவரை சென்ற ரோட்டில் கடைகளும் கடற்கரையில் குப்பைகளும் இருந்தன. அன்று இருந்த இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. தனுஷ்கோடி மீண்டும் அழியத்தொடங்கியிருக்கிறது.

- ஷா

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன