சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

13 June 2014


கருவறை நோக்கி

இரண்டு மகன் - நான்கு மகள் - எட்டு பேத்தி - ஐந்து பேரன் - இரண்டு கொல்லு பேத்தி - நான்கு கொல்லு பேரன் – இவர்களையெல்லாம் இந்த பூமிக்கு தந்து விட்டு இன்று இந்த பூமியை விட்டு வெளிநடப்பு செய்கிறாள். கடந்த எட்டு மாதங்களாக படுத்த படுக்கையில் கிடந்து 'இவள் உயிரோடு இருப்பதை விட இறந்து போவதே நிம்மதி' என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு படாத பாடு பட்டுவிட்டாள். படாத பாடு படுத்தியும்விட்டாள்.

இவளது இறப்பைக் கொண்டாடுவதற்கு பெரும் கூட்டமே ஆச்சியின் மூத்த மகனின் வீட்டில் கூடியிருந்தது. ஆச்சியின் மகள்களில் சிலரின் கண்களிலும் பேத்திகள் சிலரின் கண்களிலும் நிஜமான சோகத்தின் சுவடும் சில பெண்களின் கண்களில் போலியான கண்ணீரும் வழிந்துகொண்டிருந்தது. ஆச்சியின் வயதை ஒத்த சிலர் மூக்கை சேலை நுனியில் சிந்தியபடி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தனர். ஆண்கள் வீட்டின் முன்னே கிடந்த மரப்பெஞ்சுகளிலும் சிலர் ப்ளாஸ்டிக் நாற்காலியிலும் சிலர் தரையிலும் அமர்ந்து கார சாரமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே அழு குரலும் அதற்கு ஈடாக வீட்டின் வெளியே சிரிப்பொலியும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே 'ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க' என்று ஆணையிடுவதும், சிலர் அதை செயல் படுத்துவதுமாக இருந்தார்கள்.

ஆச்சியை அழகாகக் குளிக்க வைத்து, புதுப் புடவையெல்லாம் கட்டி நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள். அவள் உயிரோடு இருந்த பொழுது இவ்வளவு உறவுகளில் யாரேனும் இதில் கொஞ்சம் செய்திருந்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பாள். இல்லை பாசமாக இருப்பது போல கொஞ்சம் நடித்திருந்தால் கூட நிம்மதியாக இறந்திருப்பாள்.

மூத்த மகனின் வீட்டில் தான் ஆச்சி தனது கடைசி காலத்தைக் கழித்தாள். கணவன் இருந்த இடத்தில் அவள் உயிர் பிரிய வேண்டுமென்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். ஐந்து வருடங்களுக்கு முன்பே அவள் விதவையாகிவிட்டாள். மூத்த மகன் வேலை விஷயமாக வெளியூரில் இருக்கிறான். கீரியும் பாம்பையும் போல தினமும் மருமகளுக்கும் மாமியாருக்கும் சண்டை தான். மூச்சு திணறுவது போல உணரும் சமயங்களில் தன் கடைகுட்டி மகனின் வீட்டிலோ அல்லது மகள்களின் வீட்டிலோ அல்லது பேத்திகளின் வீட்டிலோ போய் சில காலம் இருப்பாள். நான்கு நாட்கள் கூட இருக்க முடியாது. உடனே கணவனின் வீட்டைத் தேடி விடும். வாய் ஓயாது ஆச்சி எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பாள் தன் கணவர் இறந்த பின்பு. நிற்கதியாக போய்விடுவோமோ என்ற எண்ணம் அடிக்கடி தலை தூக்குவதால் அதை நிலைநாட்டிக் கொள்ள அவ்வப்போது தன் இருப்பை இவ்வழியில் காட்டிக் கொள்வாள்.

ஒரு முறை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சோற்றுப் பானைக்குள் கையை விட்டு எடுத்துவிட்டாள். அதை மருமகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் தினமும் தனியே தட்டில் வைத்து பரிமாறிவிடுவாள். அதை ஆச்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'என்ன பிச்சைக்காரின்னு நினச்சிட்டாளா' என்று சாப்பிடுவதைத் தவிர்த்தாள். ஒரு கட்டத்தில் அவளுக்கென்று தனியாக உலை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். உன்னை நம்பி வாழத் தேவையில்லை என் மகன் சம்பாத்தியத்தில் நான் வாழ்கிறேன் என்ற வீராப்பு. எப்படியோ போனால் சரி என்பது போல மருமகளும் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

யாராவது ஆச்சியைப் பார்ப்பதற்கு வந்தால் போதும், தனி உற்சாகம் பிறந்து விடும். குசு குசுவென மருமகளைப் பற்றி குறையும் ஊர் கதையும் பேச ஆரம்பித்துவிடுவாள். அவளுக்கு வேண்டியது கொஞ்சம் பாசம் - கொஞ்சம் அக்கறை - அவள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர்.

ஒரு முறை பேரன்களில் ஒருவன் ஆச்சியைப் பார்க்க வந்திருந்தான்.

“ஆச்சி எப்டியிருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்யா"

"ஆச்சிக்கு உன்ன யாருன்னு அடையாளம் தெரியல" என்றாள் சித்தி.

"யாருன்னு தெரியலயோ"

தெரியவில்லை என்பது போல கையை விரித்தாள்.

"ஆச்சி, நான் தான் லட்சுமி பையன்"

"லட்சுமி பையனா? கண்ணு மங்கி போச்சுயா. எப்டி இருக்க? அவ வரலயா. என் ஞாபகம் இருந்தா தான?"

"அப்டிலாம் இல்ல ஆச்சி. வர சொல்லுதேன்"

"நீ எங்கயா இருக்க இப்போ? படிக்கியா வேல பாக்கியா?"

"சென்னைல இருக்கேன் ஆச்சி. வேல பாக்குதேன்"

"சந்தோசம்யா. என்ன சம்பளம் வாங்குத?"

"பிடித்தம் போவ இருபதாயிரம் கிடைக்கும் ஆச்சி"

"ரெண்டாயிரமா? நல்ல சம்பளம் தான்"

சிரித்தான்.

மெதுவான குரலில், "சீனிவாசன் மக இருக்கால. அவள நீ கெட்டிக்கோ. நல்ல நகை போட சொல்லுதேன். என்ன?" என்று கேட்டாள்.

சீனிவாசன் மகள் ஆச்சியின் பக்கத்து வீட்டுப் பெண். அவள் முன்பே ஆச்சி கேட்டவுடன் வெட்கம் கலந்து சிரித்தான்.

அவன் குடிப்பதற்காக சித்தி டீ போட்டுக் கொடுத்தாள்.

"நீ எங்கயா இருக்க இப்போ? படிக்கியா வேல பாக்கியா?"

"சொன்னதையே சொல்லிட்டு இருப்பாவ, நீ பாட்டுக்கு பதில் சொல்லாம குடி" என்றாள் சித்தி.

அவனால் ஆச்சிக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

"சென்னைல இருக்கேன் ஆச்சி."

“படிக்கியா வேல பாக்கியா?"

“வேல பாக்குதேன் ஆச்சி."

"சந்தோசம்யா. என்ன சம்பளம் வாங்குத?"

"ரெண்டாயிரம் ஆச்சி"

"ரெண்டாயிரமா? நல்ல சம்பளம் தான்"

அதே தொனியில் மெதுவான குரலில், "சீனிவாசன் மக இருக்கால. அவள நீ கெட்டிக்கோ. நல்ல நகை போட சொல்லுதேன். என்ன?" என்று கேட்டாள்.

"சரி ஆச்சி" என்றான் சிரித்தவாறே.

டீயைக் குடி என்பது போல சித்தி சைகை காண்பித்தாள்.

"நீ எங்கயா இருக்க இப்போ?”

"சரி ஆச்சி நேரமாவுது. நான் வரேன்" என்று சொல்லி ஆச்சியின் கையில் ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

வாயில் பல் இருந்திருந்தால் முப்பத்தியிரண்டும் தெரிந்திருக்கும். ஒரு வாரத்திற்கு அவன் வந்து போனதைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

எந்த விஷயம் ஞாபகத்தில் இருக்க வேண்டும் எந்த விஷயத்தை மறந்து போக வேண்டுமென அவளால் முடிவு செய்ய முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதையெல்லாம் பேசுவாள். ஆனால் பத்து நிமிடத்திற்கு முன்பு சொன்னது நினைவில் இருக்காது.

தன் பேரன் என்றால் உயிர். பள்ளி விட்டு வருவதற்காக காத்திருப்பாள். எதையாவது அவனிடம் பேசிக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டும் இருப்பாள். பாசத்தை அவளால் எப்படியெல்லாம் காட்ட முடியுமோ அதையெல்லாம் முயற்சி செய்வாள். அவனுக்கோ அவளின் பாசம் வெறுப்பையே தரும். "நான் போன அப்புறம் என்ன தேடுவியா ராசா?" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பாள். அதற்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் இருக்காது. ஆச்சி இறந்த பின் அவளைத் தேடுவோம் என்று அவன் ஒரு போதும் நினைத்ததும் கிடையாது.

பேரனுக்கு நாய் என்றால் கொள்ளைப் பிரியம். ஆச்சிக்கோ நாயைக் கண்டாலே பிடிக்காது. "பேரப் புள்ளைக்கு நல்லது பொல்லத செய்வோம்னு இல்லாம நாய்க்கு ஏழு வேளை பாலு வாழுது" என்று அந்த நாயைப் பார்க்கும் போதெல்லாம் மருமகளுக்கு திட்டு விழும். நாய் ஆச்சியின் காலைப் பாசத்தோடு நக்க வரும். பதிலுக்கு கையில் இருக்கும் தடியால் பலத்த அடி கிடைக்கும். அதன் பின் ஆச்சி அருகில் செல்வதேயில்லை. தொலைவிலிருந்து கம்பை ஓங்கினாலே தன் உடலைப் பாதியாகக் குறுக்கிக் கொண்டு ஓடி விடும்.

"ஏலே எம் பையன் அங்க ரத்தம் சிந்தி சம்பாதிக்கான், இந்த நாய்க்கு பிஸ்கோத்தும் பாலும் வாங்கி செலவு பண்ணுதியே" என்றாள் ஆதங்கம் தாங்காமல். "ஆங் நீ மட்டும் தினமும் வெத்திலை போடுத?" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு "ஒரு நாளைக்கு ஒரு ரூவானா இத்தன வருஷம் எத்தன ரூவா ஆயிருக்கும்" என்று கணக்கு போட ஆரம்பித்தான். ‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாது’ என்று அவன் அம்மா கையசைத்தாள். 'என் பேரன் இப்படி சொல்லிட்டானே. என் பேரன் இப்படி சொல்லிட்டானே' என்று பொலம்பிக் கொண்டே இருந்தாள். ஒவ்வொரு முறை வெற்றிலையைக் கையில் எடுக்கும் போதும் பேரன் சொன்னது நெரிஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்தும். வெற்றிலை போடுவதை நிறுத்த இயலவில்லை என்றாலும் குறைத்துக் கொண்டாள்.

வயதாக ஆக உடலில் ஒவ்வொன்றாக வேலை செய்ய மறுத்தது. என்ன தான் மனதில் வைராக்கியம் இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே. வீட்டில் பெரிய வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் ஆச்சிக்கு விருப்பம் இல்லை. இல்லை இல்லை மருத்துவமனைக்கு செல்லவே விருப்பம் இல்லை. ஒரு நாள் மருத்துவமனை சென்று தங்கிய அன்றே ‘நாளையே நாம் இறந்து போய் விடுவோமோ?’ என்ற எண்ணம் வந்துவிட்டது. மறு நாளே வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று பிடிவாதம். ஆனால் நாள் தவறாமல் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரையை எடுத்துக் கொள்வாள். 'நான் ஏன் உசுரோட இருக்கணும். யார் யாரலாமோ கொண்டு போறான். என்ன கூப்ட மாட்டேங்கானே' என்று வாய் ஓயாமல் சொன்னாலும் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருந்தது. அன்று டாக்டர் எழுதி கொடுத்த அதே மாத்திரை தான் சாகும் வரை எடுத்து வந்தாள்.

ஆச்சிக்காக அறையின் ஓரத்தில் சிறு இடம் ஒதுக்கப்பட்டது. சேலையைப் பொட்டலம் போல் பொதிந்து தலைக்கடியில் வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்தே கிடப்பாள். கண்களின் ஓரங்களில் கண்ணீரும் பீளையும் எப்போதும் கசிந்து கொண்டே இருக்கும். ஆச்சியைப் பார்க்கும் போது தர்மம் எடுக்கும் யானையின் கண்களில் இருக்கும் சோகத்தை உணர முடியும்.

ஆச்சி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். பள்ளி விட்டு வந்த பேரனிடம் டீயைக் கொடுத்து ஆச்சியை எழுப்பி கொடுக்கச் சொன்னாள். ஆச்சியால் தனியே எழுந்திருக்க முடியாது. பேரன் டம்ளரை ஆச்சியின் அருகில் வைத்துவிட்டு தூக்கி அமர வைத்தான். துர்நாற்றம் அடித்தது. பேரனின் கையில் பிசுபிசுப்பது போல இருந்தது. ஆச்சியின் மலம். படுக்கையிலேயே மலம் கழித்து விட்டாள். "யம்மா. ஆச்சியைப் பாரு. பேண்டு வச்சிட்டா" என்று சிணுங்கியவாறே வெளியே ஓடினான். ஆச்சியின் முகம் வாடிவிட்டது. அம்மாவின் கையில் வைத்திருந்த சோற்றுத் தட்டைத் தெரியாமல் தட்டிவிட்டு திரு திருவென விழிக்கும் குழந்தையின் முகத்தைப் போல இருந்தது ஆச்சியின் முகம். ஆத்திரத்துடன் வந்த மருமகளுக்கு அவள் முகத்தைப் பார்த்ததும் எதுவும் சொல்லவேண்டுமென்று தோன்றவில்லை. அதோடு நிற்கவில்லையே. பீத்துணியைத் துவைக்க வேண்டும். ஆச்சியே துவைப்பதாக சொல்லி வாளியில் சேலையை முக்கி விடுவாள். அதனால் மருமகளோ சேலையைத் தூக்கி குப்பையில் எறிந்து விடுவாள்.

அடிக்கடி படுக்கையிலே மலம் கழிப்பது நடந்தது. பார்ப்பவர்களெல்லாம் “ரொம்ப நாள் தாங்காது சீக்கிரம் போய்டும்" என்றே சொன்னார்கள்.

பேரன் மீது ஆச்சிக்கு அலாதி பிரியம் ஆயிற்றே. யாரேனும் ஆச்சிக்காக எதுவும் கொடுத்தாலும் அதை மடியில் முடிந்து வைத்து பேரன் வந்ததும் தருவாள். ஆனால் பேரனோ இந்த சம்பவங்களுக்குப் பிறகு ஆச்சி எது கொடுத்தாலும் வாங்குவதில்லை. அதை அவளால் அவ்வளவு எளிதாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

படுக்கையிலே மலம் கழிக்க ஆரம்பித்த பின் எப்போதுமே வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும். எதை ஊற்றிக் கழுவினாலும் அந்த வாடை அறையை விட்டு போவதாக இல்லை. வாடை இல்லாவிட்டால் கூட வாடை இருப்பது போன்ற பிரம்மை இருந்து கொண்டே இருந்தது. அண்டை வீட்டிலிருந்து ஆச்சியைப் பார்க்க வருவதெல்லாம் குறைந்து போனது. வீட்டிலும் பேரன் கூட அருகில் நெருங்குவதில்லை. பல மாதங்களாக படுக்கையில் கிடப்பதால் பார்க்க வரும் சொந்த பந்தங்களும் அதிகம் இல்லை. தனித்து விடப்பட்டாள். யாருடனும் பேசுவதில்லை. ஆச்சியைத் தேடி வருபவர்களை அடையாளம் தெரிந்தால் கூட யாரென்று தெரியாதது போல் இருந்து கொண்டாள். அவளுக்குள்ளேயே பேசி கொண்டு இருப்பாள். ஏதோ முனகிக் கொண்டு இருப்பது போல் தோன்றும்.

தான் தனித்து விடப்பட்டோம், தனக்கென்று யாரும் இல்லை என்று உணர்ந்த சமயத்தில் அவள் வேண்டிய ஆண்டவன் அவளை அழைத்துக் கொண்டான்.

அவள் தன் கடைசி காலத்தில் எதிர் பார்த்ததெல்லாம் அரவணைப்பான ஒரு சின்ன இடம். ஒரு குழந்தையைப் போல அவளையறியாமலே மாறியிருந்தாள். அக்குழந்தையை யாரும் கருவறையில் சுமக்கத் தயாராகயில்லை. கல்லறை தான் தன் கருவறை என்பதை ஒரு வழியாக உணர்ந்துகொண்டாள்!

வெடி வெடித்து பரை அடித்து கூடி ஆடி எரித்தாகிவிட்டது. காரியமெல்லாம் முடித்து அவளது உடைமைகளையும் எரித்து அவள் இருந்த இடத்தைத் துடைத்து சுத்தம் செய்தாகிவிட்டது. அந்த வீட்டில் அவள் இருந்ததற்கான சுவடேயில்லை. அவள் சந்ததிகளின் மனதில் ஒரு ஓரத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறாள். இன்னும் கொஞ்ச காலம் தான் அதுவும்.

- த.ராஜன்

1 comment:

  1. anubava manam vimmalodu azhukirathu.all are past days ninaivugal

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன