ரமேஷ்
விதானகே இயக்கிய With you
Without you படத்தைக் காண வாய்ப்பு கிடைத்தது.
வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டூடியோவில் திரையிட்டார்கள். பல்வேறுவிதமான சமூக ஆர்வலர்கள்
இயக்க/இலக்கியவாதிகளுடன் நாங்களும் பார்த்தோம்.
இப்படம்
போருக்குப் பின்னான இலங்கையை சித்தரிக்கிறது என இயக்குனர் கூறுகிறார். இப்படத்தை இரண்டு
கோணத்தில் அணுகலாம்.
முதலாவது
கலைநோக்குப் பார்வை.
கதை
சுருக்கம்: இலங்கையில் ஒரு மலைக்கிராமத்தில் அடகுக்கடை வைத்திருக்கும் நாயகன் அந்த
கடைக்கு அடிக்கடி வரும் நாயகியின் மீது காதல் கொள்கிறான். யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாய்
வந்து தன் இனத்தவருடன் தங்கியிருக்கும் நாயகியின் துயரம் கண்டு கழிவிரக்கத்தின்பால்
அவளையே மணமுடிக்கிறான். அதற்குப் பின்னான மணவாழ்க்கையின் இனிப்பு கசப்புகளை அடுக்குகிறது
இப்படம்.
நாயகன்
ஷ்யாம் ஃபெர்னாண்டஸ் இறுக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருகிறார். ரெஸ்லிங் குத்துச்சண்டையை
அதிக சத்தத்தில் வைத்து பார்க்கிறார். அடகுக்கடைக்கு வரும் ஏழை எளியோரிடம் கறாராக இருக்கிறார்.
தேயிலைத் தோட்டத்தில் ஒருபகுதியை வாங்க நினைக்கிறார். கல்யாண ஃபோட்டோவில் கூட இறுக்கமாகவே
இருக்கிறார். அவரது இறுக்கமான மனநிலைக்கு என்ன காரணம் என்பதை பிற்பகுதியில் விளக்கியிருப்பது
அழகு.
நாயகி
அஞ்சலி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கண்களாலேயே உணர்ச்சிகளைக் கொட்டி
இவர் கவர்ந்துவிடுகிறார். காதலாகட்டும், மணாளனிடம் ஆசையை சொல்வதாகட்டும், மனப்பிறழ்வு
உண்டாகும் காட்சியாகட்டும் அனைத்திலும் கண்களைக்கொண்டே வென்றிருக்கிறார். தான் தங்கியிருக்கும்
இடத்தில் கீழ்த்தரமாய் நடத்தப்படும் நாயகியின் நிலை ‘போருக்குப்பின் அகதி’யாய் வந்தவர்களின்
நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.
இன்னொரு
நுணுக்கம் இசை. பெரும்பாலான இடத்தில் மௌனத்தையே இசையாக அளித்திருக்கிறார். நல்லபடியாக
சென்றுகொண்டிருக்கும் இவர்களது மணவாழ்வில் நாயகனின் நண்பர் மூலம், நாயகன் இலங்கை ராணுவத்தில்
இருந்தவர் பின் அதிலிருந்து விலகியவர் எனத் தெரிய வருகிறது. தன் இனத்தையே அழித்த படையில்
இருந்தவனை தன் காதலாக கணவனாக நாயகியால் ஏற்கமுடியவில்லை. இதனால் ஏற்படும் விரிசல்களும்
இன்னபிறவும் திரையில் காண்க.
இந்த
ஏற்புடைமையை இசையாலும் மௌனத்தாலும் நிரப்பி பல்வேறுவிதமான காட்சியமைப்பைக் கொண்டு அழகாக
சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
தாலியை
அடகு வைக்கும் வயோதிகப் பெண், சமையற்கார லட்சுமி, நண்பர் காமினி என வெகுசில கதாபாத்திரங்களே
வந்தாலும் அவை முழுமையாக மனதில் தங்கிவிடுகிறது. மொத்தத்தில் ரசிக்கவேண்டிய திரைப்படம்.
தஸ்தாயெவ்ஸ்கியின்
குறுநாவலைத் தழுவிய கதை அமைப்பு என்றாலும் நாயகன் நாயகியின் நடிப்பு இசை போன்ற தனிச்சிறப்புகள்
கதையை வேறுதளத்தில் அட்டகாசமாக வாழ்வியலை பிரதிபலிக்கின்றன.
அரசியல்
பார்வையில் அணுகினால் இப்படம் தடைசெய்யப்படும் அளவுக்குச் சென்றதில் இருக்கும் நியாயங்கள்
புலப்படுகின்றன.
நாயகனின்
படைக்குழு வீரர்கள் ஒரு தமிழ்ப்பெண்ணை கற்பழிக்கிறார்கள். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட,
நாயகன் பொய்சாட்சி சொல்லி அவர்களைத் தப்பிக்க வைக்கிறார். அந்தக் குற்ற உணர்வில் நாயகன்
ராணுவத்தை விட்டு வெளியேறுவதாய் வருகிறது கதை. நாயகன் இல்லையென்றால் நாங்கள் தண்டிக்கப்பட்டிருப்போம்
என நண்பர் புலம்புவது வேடிக்கையாக இருக்கிறது.
அளவிற்கதிகமான
கொடூரங்களை அரங்கேற்றிய ராணுவ வீரர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதன் ஆதாரமே இல்லாத
நிலையில், அவர்கள் தண்டிக்கப்படுவதன் சாத்தியக்கூறுகள் இருந்ததாகக் காண்பித்திருப்பது
முற்றிலும் தவறு.
நாயகனின்
பின்புலத்தை அறிந்தபின் நாயகியுடன் ஏற்படும் விவாதம் ஒன்றில் நாயகி ‘என் இரு சகோதரர்களை
நீங்கள் தான் கொன்றீர்கள். எத்தனை பெண்களை நீங்கள் கற்பழித்தீர்கள். எத்தனை பேரை கொன்றீர்கள்.
எத்தனை பேரிடம் கொள்ளையடித்தீர்கள்” என்று கேட்க, ‘நான் என் கடமையைத்தான் செய்தேன்’
எனவும் ‘உன் சகோதரர்கள் தமிழ் தீவிரவாதிகளாக இருந்திருக்கலாம்’ என்றும் பதிலளிக்கிறார்.
படம்
முடிந்தபின் நடந்த விவாதத்தில் சிலர் இந்த தமிழ் தீவிரவாதி என்ற வார்த்தையை அகற்றும்படி
வலியுறுத்தினர். இதனால் என்ன பயன் எனத்தெரியவில்லை. அங்கே அவர்கள் தீவிரவாதிகளாகத்தானே
பார்க்கப்படுகிறார்கள். வடஇந்தியாவில் கூட பலர் புலிகளை தீவிரவாதிகள் என்றே அழைக்கின்றனர்.
இந்த உண்மையை மறைத்து என்ன ஆகப்போகிறதென்று தெரியவில்லை. தமிழ் செண்டிமெண்ட் என்று
சொல்வதையெல்லாம் ஏற்கமுடியவில்லை.
மேலும்
அப்படை வீரர்கள் குற்ற உணர்வுடனே இருப்பதாகச் சொல்கிறார்கள். இது நியாயமாகப்பட்டாலும்
அவர்களின் பாத்திரங்கள் கட்டமைப்பு அப்படியல்ல என்றே காட்டுகிறது. இதுகுறித்த விவாதத்தில்
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்த தகவல்கள் அதிபயங்கரமானது. கற்பழித்த வீரனே
எவ்விதக் குற்ற உணர்வும் கவலையுமின்றித் திரியும் பட்சத்தில் பொய்சாட்சி நாயகன் குற்ற
உணர்வில் குமுறுவது எடுபடவில்லை.
தமிழர்கள்
தமிழில் பேசியும் இவர்கள் சிங்களத்திலேயே பதில் அளிப்பது, நடனமாடியே உணவு பரிமாறுவது,
மலைகளை வெறிக்க வெறிக்க பார்ப்பது போன்ற குறியீடுகள் சிங்களப் போக்கை காட்டுகிறது.
படம் முழுக்க பின்னணியில் ஒலிக்கும் தமிழ்ப்பாடல்கள், நாயகனின் திடீர் மனமாற்றம், காணாமல்போகும்
துப்பாக்கி என சில வெற்றிடங்கள் குறையாக உள்ளன.
விவாதம்
முடிந்து அரங்கை விட்டு வெளிவரும்பொழுது ஒரு ஈழப்பெண் சொன்னார். ‘உணர்வுகளை விட்டுவிட்டு
புத்தியையும் கொஞ்சம் உபயோகிக்கவும்’. உண்மை.
ஒன்றரை
மணிநேர சினிமாவால் ஒருவனது தர்க்கமும் நிலைப்பாடும் மாறவோ உடையவோ செய்யும் என்றிருந்தால்
இப்படத்தை தடை செய்வதில் தவறில்லை. மற்றபடி உழைப்பு, கதையின் அழகு, படமாக்கப்பட்ட விதம்
என்பதற்காக நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு உலகப்படம்.
- ஷா
- ஷா

படித்தேன்.. படத்தை நான் பார்க்க வில்லை.. இருப்பினும் படத்தின் நோக்கம் என்ன என்பதை திரு.ஷா அவர்கள் அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பது மகிழ்ச்சியே.. உலகம் முழுக்க விடுதலைப்போராட்ட அமைப்புகள் திவீரவாதிகள் என்ற பெயரில் ஒடுக்கப்படுவதை நாம் அறிவோம்.. உலக நாடுகளில் தமிழர் பிரநிதிகளான புலிகளை தடை செய்யவும், ஆதரவு போக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் இனப்படுகொலையில் பங்கு கொண்ட சர்வதேசமும், சிங்கள அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏராளம்.. அதன் ஒரு பகுதியாகவே இந்திய அரசும் இதுவரை எந்த ஒரு இயக்கத்துக்கு தரப்படாத அடுத்த 5 அண்டுகளுக்கான தடையை விதித்துள்ளதை கவனிக்கவும்.. புலிகள் தீவிரவாதிகள் என்பதை படத்தில் அவர் பதிவு செய்வதோடு நிறுத்தாமல், நியாயமான அவர்களின் விடுதலை கோரிக்கையையும் தமிழீழ அரசின் இயங்குதலையும், அதனை சிறப்பாக வழி நடத்திய புலிகளையும் பற்றிய எந்த ஒன்றும் பதிவுசெய்யப்படவிலை என்றே நினைக்கிறேன்.. ஆக இது எவ்வாறு நடுநிலையான பதிவாக முடியும் என்ற நோக்கத்தில் அதனை நீக்க சொல்லி எதிர்ப்பு குரல் எழுப்பபட்டிருக்க வேண்டும்..
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை ஒரு கலைப்படைப்பு உண்மைகளை படம்பிடிக்காமல், பக்க சார்ப்பு நிலைப்பாட்டோடு ஒடுக்குபவர்களின் குரலாக மட்டும் ஒலிக்குமாயின் அதன் கலை நுணுக்கம் உலகின் தலைச்சிறந்ததாக இருந்தாலும்,, அது காறித்துப்புவதற்கு கூட லாயக்கற்றது.. அதன் கலைத்தன்மை ரசிப்புகுறியதன்று..அது வித்தவுட் யு வாக இருந்தாலும் சரி விஸ்வரூபமாக இருந்தாலும் சரி..
ReplyDeletehttp://kalakam1987.blogspot.in/2014/06/with-youwith-out-you-ngo.html
ReplyDeleteWITH YOU, WITHOUT YOU ” : இன அழிப்புக்கு “வெள்ளை”யடிக்கிறது..
ReplyDeleteவிளையாட்டை விளையாட்டாக பார், சினிமாவை சினிமாவாக பார் அதில் அரசியல் கலக்காதே என்று அவ்வப்போது குரல்கள் எழும், ஆனால் இந்த குரல்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக எழாது. ஆதிக்கத்தில் உள்ளவனை காப்பாற்ற நடுநிலை எடுக்கும் அறிவுசீவிகள் எடுக்கும் நிலை தான் இது.
With-You-Withut-You
With You, Without You என்ற படமும் அப்படித் தான். ஆதிக்கத்தில் உள்ள சிங்களவனுக்கு இந்த படம் புத்தி சொல்லலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனையை பதிவு செய்ய தவறி இருக்கிறது. இது சிங்களவர்களுக்கான படம். தற்போது நடந்து வரும் போலி “மறுவாழ்வு” திட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என்றே இதை காண வேண்டியுள்ளது. சிங்களவர்களுக்கு வலி உள்ளது என்று படம் சொல்கிறது. இது தான் போருக்கு பின்னர் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் சிங்களம் செய்து வரும் பிரச்சாரம். அதை திறம் பட செய்திருக்கிறது இந்தப் படம். ஒரு கலை நேர்மையாக இருக்கும் போது மட்டுமே அது சிறந்த படைப்பாக மாறுகிறது. இந்த படத்தில் அந்த நேர்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். திரைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.
1. படத்தின் களம் குறிப்பாக காலம் தெளிவாக இல்லை. 2009 ஈழ போருக்கு முந்தையதா? அதற்கு பின்னானதா? கதை சொல்லவில்லை
2. திரிகோண மலையில் ஒரு ராணுவ முகாமில் தமிழ் பெண் சில சிங்கள ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது, திரிகோணமலையில் கடந்த பத்தாண்டுகளாக தமிழர் படைகளுக்கும் – சிங்கள இராணுவத்திற்கும் மோதல் நடந்ததா என்ற கேள்வி எழுகிறது? பதில் இல்லை
3. படத்தின் நாயகி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறார், எப்படி? யாழ்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பேசுவது இலகுவானதா?
4. சிங்களவர்களால் பிரச்சனை என்று நம்பும் ஒரு பெண், சிங்களப் படைகளால் தனது சகோதரர்களை பலிகொடுத்த ஒரு பெண், பெற்றோர்களை தொலைத்து தனியாக இருக்கும் ஒரு தமிழ் பெண், ஒரு சிங்கள ஆணைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா? போர் காயங்களை தமிழர்கள் மறக்கத்துவங்கி விட்டார்கள் என்று இயக்குனர் நிறுவ முயல்கிறாரா?
5. யாழ்பாணத்தில் உள்ள திரையரங்குகளில் போர் காட்சிகளை மட்டுமே திரையிடுவார்கள் என்று அந்த தமிழ் பெண் கூறுகிறார்.
6. ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ விரனை திருமணம் செய்த அப்பெண், அவன் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் காப்பாற்றியவன் என்று தெரிந்தவுடம் அதிர்ச்சிக்குள்ளாகுவதாக கதை சொல்கிறது. ஆனால் அவனை மன்னித்து மீண்டும் அவனுடன் வாழ முனைகிறாள். தொடர்ந்து மனச்சிதைவுக்குள்ளாகும் அவள், உன்னைக் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடு என்றவாறே தற்கொலை செய்து கொள்கிறார். இது தமிழர்கள் சிங்களவர்கள் அன்பு செலுத்தினால், அவன் பல கொலைகளை செய்த ராணுவ வீரனாகவும் இருந்தாலும் மன்னிக்கிறார்கள் என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ இனப்படுகொலை மறந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது இது.
ஒரு படத்தின் திரைக்கதை, படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாமும் உலகத் தரத்துடன் இருந்தாலும் அது சொல்ல வரும் நியாயம் என்பது மிக முக்கியம், குறிப்பாக அரசியல் சார்ந்த படங்கள். அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக அரசியல் நியாயத்தை மழுப்பும் செயலையே செய்திருக்கிறது.
- சரவணன் குமரேசன்.
இப்படத்தை ஆர்கேவி ஸ்டூடியோவில் திரையிட்ட போது இப்படத்தையும் படத்திற்கு பிந்தைய சலசலப்புகளையும் நேரில் பார்த்தவன் என்கிற முறையில் நானும் என் கருத்துகளை முன் வைக்கிறேன்.
ReplyDeleteமுதலில் அங்கு வந்திருந்த இயக்கத் தோழர்கள் படத்தை அணுகிய விதமும் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் பலவும் எனக்கு உடன்பாடனவை அல்ல. இயக்கத் தோழர்கள் ஒரு தேர்வுத் தாளை திருத்தும் கண்டிப்புடனும் கூர்மையுடனும் படத்தை நோக்கினர். இதன் மூலம் அத்தனை படைப்பாளிகள், இயக்கத் தோழர்கள், கலை நோக்கர்கள் நிரம்பிய அந்த அரங்கில் கடைசிவரை ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நிகழ்த்த வாய்ப்பிலாமல் செய்துவிட்டனர்.
பல இடங்களில் படத்தில் மறைமுகமாக சிங்கள ஆதரவு அரசியலை முன்னிறுத்துவதாக இயக்கத் தோழர்கள் வாதிடுகிறார்கள். நான் அந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.
என்னை பொறுத்தவரை அங்கு நிலவும் யதார்த்தமான சூழலை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள இம்மாதிரி படைப்புகள் பலவும் வர வேண்டும் என்றே நினைக்கிறேன். இங்கு எழுப்பப்படும் வெற்று கூச்சல்கள் மூலமாகவோ அல்லது இந்திய/இலங்கை அரசுகளின் கண்துடைப்பு அறிக்கைகளின் மூலமாகவோ அங்கு நிலவும் சூழலை அறிய முடியாது.
ஒரு எளியவனின் பார்வையில் அந்த படத்தில் நான் கண்ட சில எளிய உண்மைகள்:
1. அங்கு வாழும் தமிழ் பெண்கள் பாதுகப்பற்ற உணர்வுடனே வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் கற்பை காப்பாற்றி கொள்ளவேனும் ஏதோ ஒரு ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
2. நாயகியின் மொத குடும்பமும் போரில் கொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவளின் சகோதரர்கள் இருவரும் பள்ளி செல்லும் அப்பாவிக் குழந்தைகள்.
3. ராணுவ வீரர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தமிழ் பெண்களை கற்ப்பழித்துள்ளனர். அவர்கள் அதை கிட்டத்தட்ட தங்கள் உரிமை போலவே நிலைநாட்டியுள்ளனர்.
4. ராணுவ வீரர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு ( இதுகுறித்து, பின்பு சொல்கிறேன் ) சக ராணுவ வீரர்களின் சாட்சியங்களே போதுமானதாக கருதப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நடைபெற்ற ஒருசில விசாரனைகளும் (ஒருவேளை நடைபெற்றால்) வெறும் கண்துடைப்பாக இருந்திருக்கலாம்.
5. சிங்களவர்களிடம் தங்கள் தாலி முதற்கொண்டு அடகு வைத்து பணம் பெறும் நிலையிலேயே தமிழர்களின் பொருளாதார நிலை இருக்கிறது.
6. தன் கணவன் நல்லவனாகவே இருப்பினும் அவனிடம் தற்போது எஞ்சியிருப்பது வெறும் அன்பு மட்டுமே என்ற போதிலும் தன் இனத்தை அழித்த சிங்கள ராணுவத்தின் பிரிதிநிதியாக இருப்பவனிடம் சேர்ந்து வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். இதன் மூலம் போருக்கு பின்னர் சிங்களர் தமிழரிடையே இனக்கமான உறவு ஏற்படுவது மிகப்பெரிய கேள்விக்குறியே என்றே அர்த்தப்படுகிறது.
ராணுவ விசாரனை பற்றிய கேள்விக்கு இயக்குனர் அளித்த பதில்,
கேள்வி: கற்ப்பழிப்புகளுக்காக இதுவரை இந்த ராணுவ வீரரும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. படத்தில் தாங்கள் அவ்வாறு சித்தரித்து உள்ளீர்களே?
இயக்குனர்: விசாரனை நடந்தது இறுதி போருக்கு முந்தைய காலகட்டம். அனைத்து சம்பவங்களும் விசாரனைக்கு உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஒருசில சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன (பெயரளவிலேனும்). அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மேலும் தமிழ் பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டது குறித்து சிங்கள ஏடுகளிலேயே புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
என் தரப்பு : கற்பழிப்புகள் குறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் உலக நாடுகள் கவனமும் இதில் இருப்பதால் ஒரு சில விசாரனைகள் (நேர்மையாக அல்ல, கண்துடைப்புகள்) நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன்.
இயக்குனரை நடத்திய விதம்:
ReplyDeleteபடத்திற்கு பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்வு வெற்று கூச்சலாக முடிந்தது. இயக்கத் தோழர்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கேள்விகளை எழுப்பினர். அவற்றுள் பல இயக்குனரை மிரட்டும் தொனியில் இருந்தன.
அங்கு வந்திருந்த மே 17 இயக்கத்தை சேர்ந்த தோழர் ஒருவர் "அங்கு எத்தனை பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டுள்ளார்கள் தெரியுமா? என்னிடம் பல நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் உள்ளன!" என்று கையில் இருக்கும் தரவுகளை காட்டி இயக்குனரை மிரட்டுகிறார். இன்னொருவர், " அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இவற்றுக்கும் படத்தின் பேசுபொருளுக்கும் என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை.
இன்னொரு பக்கம் படத்தில் வரும் 'Tamil Terrorists' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கூச்சல். அந்த வார்த்தையை நீக்கிவிடுவதால் எந்த உண்மையை மறைக்க போகிறார்கள்? இலங்கையில் உள்ள சிங்கள ராணுவ வீரன் அவ்வாறு சொல்வது தானே யதார்த்தம். இந்த எளிய உண்மையை கூட மறைத்துவிட்டு என்ன நேர்மையான படைப்பை கொடுத்துவிட முடியும்?
ஒருவேளை தமிழ் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் குண்டு வெடிப்பதையும், தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படும் போது எழுப்பும் ஓலக் குரலையும் பதிவு செய்திருந்தால் அது நேர்மையான படம் என்று கொண்டாடுவார்கள். அதை விடுத்து போருக்கு பிந்தைய வாழ்வியல் சிக்கல்களை படம்பிடித்தால் அது சமாதனம் பேச முற்படும் படம், தமிழர்களின் துயரத்தை பதிவு செய்யாத படம், படத்தை தடை செய் என்று கூச்சலிடுவது. இப்போக்கு இருக்கும் வரை அங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவே முடியாது. மேலும் இத்தளத்தில் படம் எடுக்க முன்வரும் ஒருசில படைப்பாளிகளும் இனி முன்வரத் தயங்குவார்கள்.
இலங்கையில் என்ன நடந்தது என்பதை இன்னும் இந்தயாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களே புரிந்து கொள்ளாத நிலையில் இம்மாதிரி படங்கள் மிகவும் அவசியமானது என்றே கருதுகிறேன். இம்மாதிரி வலுவான படைப்புகளே இலங்கையில் என்ன நடந்தது என்பதை ஓரளவேனும் உலகிற்கு எடுத்து செல்லும். அதை விடுத்து இதற்கு எதிராக கூச்சலிடுவது நம் நோக்கங்களை நாமே முடக்குவது போன்றதாகும்.